மச்சக்காரரின் மர்மம்





திருமங்கலம் காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டர் நுழைந்த போது காலை பத்து மணி. 2016 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அந்த ஆண்டிற்கான குற்ற விவர ரிப்போர்டுகளை தயார் செய்வதில் காவல் நிலைய ஊழியர்கள் அனைவரும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வரவேற்பறையின் ஒரு மூலையில் ஒரு வயதான மனிதர் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கவனித்தார் இன்ஸ்பெக்டர். அந்த மனிதரின் நெற்றியில் ஒரு பெரிய மச்சம் இருந்தது. முகத்தில் வெறித்த பார்வை.

இன்ஸ்பெக்டர் தனது அலுவலகத்திற்குள் சென்றதும், சப் இன்ஸ்பெக்டரை அழைத்து, “யாரைய்யா அந்த மச்சக்காரர்? என்ன வேண்டுமாம் அவருக்கு?” என்று கேட்டார்.
“அவர் யார் என்று இன்னும் தெரியவில்லை சார்,” என்றார் சப் இன்ஸ்பெக்டர். “ஒரு வாரத்திற்கு முன்பு அவரை எங்களிடம் கொண்டு வந்தார்கள். அவரிடம் அடையாள அட்டை இல்லை. அவர் பெயர் கேட்டால் ஒரு நம்பரை சொல்கிறார். எந்த ஊர் என்று கேட்டால் வாயில் நுழையாத ஒரு பேரை சொல்கிறார். அப்படி பேருள்ள ஒரு ஊர் எங்குமே இல்லை. கொஞ்சம் மரை கழண்ட ஆசாமியாக இருப்பார் போல தெரிகிறது.”
“அவரது உடல் தோற்றத்துடன் பொருந்தும் காணாமல் போன நபர் பற்றிய புகார் ஏதேனும் உள்ளதா?”
“அப்படி எந்தப் புகாரும் இல்லை, சார். நாங்கள் அவரது புகைப்படத்தை செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் வெளியிட்டோம், அவரது குடும்பத்தினர் அதைப் பார்த்து விட்டு முன் வருவர்கள் என்று எதிர் பார்த்தோம். ஆனால் இதுவரை யாரும் அவரை தேடி வரவில்லை.”
“நல்ல கேஸ்யா இது. ஒருவேளை அவரது மனைவிக்கு அவர் இனி மேல் வேண்டாம் போல் இருக்கிறது,” என்று சிரித்தார் இன்ஸ்பெக்டர்.
இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் மூத்தோர் பராமரிப்பு மையத்திற்கு வந்த போது, மையத்தின் டாக்டர் அவனுக்காக காத்திருந்தார். இளைஞன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான், “வணக்கம் டாக்டர். நான் Go Far நிறுவனத்தில் காலப்பயண இயந்திரங்களை பழுது பார்க்கும் இன்ஜினியராக இருக்கிறேன். உங்களுடைய அவசர மெசேஜைப் பார்த்ததும் விரைந்து வந்தேன்.”
டாக்டர் இளைஞனை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கதவை மூடினார். “நான் உங்களிடம் சொல்லப் போவது ஒரு சென்சிட்டிவான விஷயம் – இது கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.”
“புரிகிறது, டாக்டர். என்ன பிரச்சனை?”
“நாங்கள் மறதியினால் அவதிப்படும் வயதான நோயாளிகளுக்கு புரட்சிகரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்த சிகிச்சைக்கு நாங்கள் உங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கால இந்திர மாடல் PX190ஐ பயன்படுத்துகிறோம். அவர்களின் நினைவுகளைத் தூண்ட நாங்கள் அவர்களை சில ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறோம். நோயாளிகள் தங்கள் கடந்த காலத்தை மூன்றாம் நபராகப் பார்ப்பது அவர்களை குணப்படுத்துவதாகத் தெரிகிறது.”
“கால இயந்திரத்தின் சுவாரஸ்யமான பயன்பாடு.”
“ஆம். நேற்று நாங்கள் ஒரு நோயாளியை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றோம். நாங்கள் அவரை 3016 ஆம் ஆண்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் எங்கள் ஊழியர் ஒருவர் செய்த தவறால், அவர் 2016 ஆம் ஆண்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முப்பது நிமிடங்களில் திரும்பி வர வேண்டிய நோயாளி இன்னும் திரும்பி வரவில்லை.”
“ஓ மை காட்!”
“PX190 கையேட்டில் உள்ள பொதுவான பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளின் படி நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம், ஆனால் எதுவும் உதவவில்லை. எங்களால் நோயாளியை திரும்பப் பெற முடியவில்லை. அவரை திரும்பப் பெறுவது மிகவும் அவசியம். நாங்கள் அவரது குடும்பத்தினருக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”
“நான் என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். உங்களிடம் அந்த நோயாளியின் புகைப்படம் உள்ளதா?”
டாக்டர் இளைஞனிடம் ஒரு கோப்பை நீட்டினார். அதில் நோயாளியின் விவரங்களும், நோயாளியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமும் இருந்தன.
இளைஞன் அந்த பாஸ்போர்ட் புகைப்படத்தை கையிலெடுத்த போது அவன் முதலில் கவனித்தது நோயாளியின் நெற்றியில் இருந்த பெரிய மச்சத்தை.