மகளுக்காக ஒரு பொய்!
சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை நோக்கிச் சென்றது. வேனில், சிறைவாசிகள் எட்டு பேர் இருந்தனர்; அனைவரும் ஆயுள்தண்டனை கைதிகள். சில நிமிட கோபப் பிடியில் சிக்கி சீரழிந்தவர்கள். ஆயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தியவர்கள்; இன்று நிராயுதபாணியாய், கண்களில் வேதனையும், வெறுமையும், உடலிலும் ஏதோ ஒரு வியாதியை சுமந்து, சூன்யமான சிந்தனையோடு சென்று கொண்டிருந்தனர்.
அந்த எட்டு பேரில் ஒருவனாய், ஜன்னல் ஓரமாக அமர்ந்து, சாலையை வெறித்தபடி, சலனமில்லாமல் இருந்தான் தனசேகரன். நான்கு ஆண்டுகளாக சிறையிலிருக்கிறான். கடந்த ஓராண்டாக, முதுகு வலியால் அவதிப்பட்ட அவன், இன்று தான் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறான். இவர்களையெல்லாம் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல, 12 காவலர்கள், மூன்று ஏட்டு, ஒரு எஸ்.ஐ., என, மொத்தம் பதினாறு பேர்; ஆயுதங்களுடன்.
இதோ, மருத்துவமனையை நெருங்கி விட்டது வேன். வண்டியை ஓரமாக நிறுத்தி, முதலில் எஸ்.ஐ., இறங்கினார். பின், ஒவ்வொரு சிறைவாசி கைகளுடன், ஒரு காவலரின் கையை இணைத்து, கைவிலங்கு போடப்பட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு மருத்துவ பிரிவை நோக்கிச் சென்றனர்.
தனசேகரனும் விலங்கிடப்பட்டு, மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டான். ஒரு மணி நேரம் சென்றது. எல்லாரும் சிகிச்சை முடிந்து வந்தவுடன், வந்திருந்த எட்டுபேரில், காசி என்ற சிறைவாசியை காண, அவனுடைய கூட்டாளிகள் நான்கு பேர், எப்படியோ தகவல் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
அவர்கள், காசியிடம் பேச எஸ்.ஐ.,யிடம் அனுமதி கேட்டனர். முதலில் மறுத்த எஸ்.ஐ., பின் ஒப்புக் கொண்டார். காசியிடம் பல விஷயங்களைப் பேசினர்.
வந்திருந்த நான்கு பேரும், வசதி படைத்தவர்கள் என்பதை, அவர்களது <உடையும், நகைகளும் காட்டிக் கொடுத்தன. பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்களில் ஒருவன், யாருக்கோ மொபைலில் ஏதோ வாங்கி வர தகவல் கொடுத்தான்.
சிறிது நேரத்தில், அனைவருக்கும் சூடான மட்டன் பிரியாணியும், பழங்களும், குளிர்பானமும் ஒருவன் கொண்டு வந்தான். காவலர்கள், சிறைவாசிகள் என, அனைவருக்கும் வழங்கப்பட்டது. தனசேகரன் பிடிவாதமாக வேண்டாமென மறுத்தான்; பின், காசி மிகவும் வற்புறுத்த, வாங்கிக் கொண்டான். எஸ்.ஐ., மட்டும், தனக்கு வேண்டாமென கண்டிப்பாகக் கூறி விட்டார்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், வந்திருந்த நான்கு பேரும், காசியிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.
“”வண்டியை எடுக்கலாமா…” என, வேன் டிரைவர், எஸ்.ஐ.,யை கேட்டார். அப்போது, எஸ்.ஐ.,யின் மொபைல் ஒலித்தது; அவர் நம்பரை பார்த்து முகம் மலர்ந்தார்; பட்டனை அழுத்திப் பேசத் துவங்கினார். “”ஹலோ… குட்டிசெல்லம்… அப்பா மேல இன்னும் கோபமா… அப்பா நேத்து மறந்திட்டேன்மா… இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது, கண்டிப்பா நீ கேட்டத வாங்கி வருவேன்; சரியா… அது வரைக்கும், பாட்டிய தொல்ல பண்ணாம சமத்தா இருக்கணும்…”
இவர் பேசிக் கொண்டிருப்பதை, பரிதவிப்போடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான், தனசேகரன்.
அவன் கண்களிலிருந்த ஏக்கத்தையும், கண்ணீரையும், மொபைலில் பேசிக் கொண்டிருந்த, எஸ்.ஐ., கவனிக்கத் தவறவில்லை.
எஸ்.ஐ., பேசி முடித்தவுடன், கம்மிய குரலில், நாக்கு தழதழக்க, தயக்கத்தோடு, “”ஐயா…” என்று இழுத்தான் தனசேகரன்.
“”என்னப்பா?”
“” ஐயா… எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்குதுய்யா… அதுக்கு அம்மா கிடையாது; அவங்க அத்தை வீட்ல தான் இப்ப இருக்குது…” என்று சொல்லும் போதே, அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.
“”சரிப்பா… இப்ப என்ன வேணும்?”
“”ஐயா… என் பொண்ணு கூட நான் கொஞ்சம் பேசணும்,” கலங்கினான் தனசேகர்.
அவன் முகத்தைப் பார்த்த, எஸ்.ஐ.,க்கு பாவமாக இருந்தது. இருந்தாலு<ம், சட்டச் சிக்கலை கருத்தில் கொண்டு, “”அதெல்லாம் தப்புப்பா… <உனக்கு நான் போன் கொடுக்கக் கூடாது,” என்று மறுத்தார்.
“”ஐயா… என் மகளை பார்த்து, ரெண்டு வருஷம் ஆகுதுய்யா… அவ குரலயாவது கேக்கறேன்யா…” என்றான் தனசேகரன்.
மனம் இளகிய எஸ்.ஐ., “”சரி, இந்தா… சீக்கிரம் பேசி முடி,” என்று, போனை அவனிடம் கொடுத்தார்.
போன் அவன் கைக்கு வந்தவுடனே, ஏதோ, உலக கோப்பையை ஜெயித்த உணர்வு, அவன் முகத்தில் தெரிந்தது.
நம்பரை போட்டு லைனில் காத்திருந்தான் தனசேகரன். எதிர் முனையில், குரலை கேட்டு, “”அக்கா… நான் தனசேகர் பேசுறேன்… போனை உடனே என் மகளிடம் குடு…” என்று படபடத்தான்.
சில வினாடிகளில், சந்தோஷமும், துக்கமும் ஒன்று சேர்ந்த முகத்துடன், “”ஹலோ… குட்டிம்மா… நான் அப்பாடா… எப்படிடா இருக்க?” என்றான்.
எதிர் முனையில், “”அப்பா… நல்லாயிருக்கேன்பா; நீங்க எப்படிப்பா இருக்கீங்க?”
“”நல்லாயிருக்கேன்ம்மா… அம்மாடி, நீ ஒண்ணும் கவலப்படாதே; அப்பா சீக்கிரம் வந்துடுவேன். அதுக்கான ஏற்பாடு எல்லாம் செய்துட்டேன். சுப்ரீம் கோர்ட்டில், எனக்கு பெயில் கிடைச்சுடும். அதுவரை, நீ தைரியமா இருக்கணும்; நல்லா படிக்கணும். அப்பாவுக்கு, இங்க ஒரு குறையும் இல்ல. அதனால, நீ என்ன பத்தி கவலப்படாதே…” என்றான்.
“”சரிப்பா… நான் நல்லா படிக்கிறேன்பா… நீங்க சாப்பிட்டீங்களாப்பா?”
“”சாப்பிட்டேம்மா.”
“”என்னப்பா சாப்பிட்டீங்க?”
“”ம்… ம்… அதுவாமா… நான் தயிர் சாதம் சாப்பிட்டேன்மா,” என்று தனசேகரன் கூறியதும், உடன் இருந்த கைதிகளும், காவலரும் அவனை, ஒரு மாதிரியாக பார்த்தனர்
காரணம், அவன் உட்பட அனைவரும் பிரியாணி சாப்பிட்டிருந்தனர்.
தன் மகளிடம் பேசி முடித்ததும், போனை எஸ்.ஐ.,யிடம் நன்றி கூறி கொடுத்தான் தனசேகரன்.
வேன் கிளம்பியது.
சிறிது தூரம் சென்றதும், ஒரு சிறைவாசி, “”தனசேகர், உம் பொண்ணுகிட்ட ஏம்பா பச்சையா பொய் சொன்னே? நீ சாப்பிட்டதோ பிரியாணி; ஆனா, “தயிர் சாதம் சாப்பிட்டே’ன்னு சொல்றியே… உண்மைய சொன்னா என்னவாம்?”
“”அப்படியில்ல… என் மகள ரொம்ப செல்லமா வளர்த்தேன். அதுக்கு, தாய் இல்லாத குறை தெரியாம இருக்க, அது என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன். விதவிதமா சாப்பிட வாங்கி தருவேன். குறிப்பா, என் மகளுக்கு மட்டன் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும். இப்ப நானோ சிறையில இருக்கேன். அவ, எங்க அக்கா வீட்ல வளர்றா. எங்க அக்கா வீட்ல அவ்வளவு வசதி கிடையாது. இந்த சூழ்நிலையில, எம்மக அங்க என்ன சாப்பிட்டுச்சோ… நான் மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்னு சொன்னா, அவ மனசில சலனம் வந்துட கூடாதில்லையா… ” சோகத்தோடு கூறினான் தனசேகரன்.
அவன் கூறியதை கேட்டதும், எஸ்.ஐ.,யை தவிர, அனைவரின் முகத்திலும் கவலை என்ற கருமேகம் சூழ்ந்தது.
சிறை சாலை வரும் வரை யாருமே பேசிக் கொள்ளவில்லை.
வேன் சிறை வளாகத்தில் வந்து நின்றது. அனைவரும் இறங்கி <உள்ளே சென்றனர். தனசேகரன் இறங்கி, சிறை இரும்பு கதவு அருகில் போகும் வரை, காவலர்கள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் துளி வெளியே வர, அனுமதி கேட்டு காத்திருந்தது.
தன் மகள் கேட்டபடி, இறந்து போன தன் மனைவியின் லாமினேட் செய்யப்பட்ட பெரிய சைஸ் போட்டோவையும், சில விளையாட்டு பொருட்களையும் வாங்கி கொண்டு அன்று மாலை எஸ்.ஐ., வீட்டிற்கு போனார். அவருடைய மகள் ஆசையோடு ஓடிவந்து, அவரை கட்டித் தழுவினாள். விளையாட்டு பொருட்களை மகளிடம் கொடுத்து விட்டு, கொஞ்சி மகிழ்ந்தார்.
பிறகு, மனைவியின் போட்டோவை பெட்ரூமில் மாட்டினார்.
நாற்காலியில் சாய்ந்தபடி, மனைவியின் போட்டோவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.ஐ.,யின் கண்கள், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகள் பக்கம் வட்டமிட்டன.
அப்போது அவர் மனம், கைதி தனசேகரனை நினைத்துக் கொண்டது. தன் ஆழ் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பீதி உட்புகுவதை, மெல்ல உணர்ந்தார் எஸ்.ஐ., “நாளை என்பது நிச்சயமில்லை. ஒரு வேளை, நான் அந்த தனசேகரனாக இருந்திருந்தால், என் மகளுடைய நிலை?’ நினைத்த போது, அவர் மனம் விம்மிப் புடைத்தது. கண்ணீர் அருவியாகப் பாய்ந்து முகத்தைக் கழுவியது. அந்த முரட்டு <உடம்பு, பற்றுதலை தேடும் கொடிபோல தள்ளாடியது.
“ஓ இறைவா… சீக்கிரம் தனசேகரனை விடுதலை செய்…’ என, மனதார வேண்டிக் கொண்டார்.
– ஜூலை 2012