போலீஸ்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 7,300 
 
 

திருமங்கலம்.

ஒரு மாலைப்பொழுது.ஏறுபொழுதில் பிடித்த மழை மெல்ல வடிய ஆரம்பித்தது .

காலிங் பெல் ஒலி கேட்டதும் கோமதியம்மாள் கதவை நீக்கினாள்.

கம்பெனி வேலையிலிருந்து கண்ணனும் அமலாவும்- திரும்பியிருந்தார்கள்.

மகனும் மருமகளும்.

“என்னம்மா… யாராவது வந்தாங்களா… லெட்டர் ஏதாச்சும் வந்துச்சா?” என்று கேட்டான் கண்ணன்.

“ஆமாம்பா… ஒரு கொரியர் வந்திருக்கு..வேற யாரும் வரலே.. டிஃபன் பண்ணி வச்சிருக்கேன்…போய் பாருங்க” 

“அத்தை …. எதுக்கு இதெல்லாம்… ரெஸ்ட் எடுத்துக்கலாமில்லே..” என்றாள் அமலா.

“என்ன ரெஸ்ட்… எந்த வேலையும் செய்யலேன்னு வச்சுக்க.. அப்புறம் எல்லா உறுப்பிலியும் ரஸ்ட் ஏறிரும்!”

“இந்த வயசிலியும் இப்படி பிஸியா இருக்குறதுனாலதான் நீங்க நோய் நொடி இல்லாம நல்லா இருக்கிறீங்க” என்றான் கண்ணன்.

“யம்மா.. உம் புருஷன் ரொம்ப ஐஸ் வக்கறான்… அவனுக்கு ரெண்டு வடை சேத்திக் குடு!” என்று சிரித்தாள் கோமதியம்மாள்.

இப்படி ‘கல கல’ வென்று போய்க் கொண்டிருக்கும் போது- 

மீண்டும் காலிங் பெல் ஒலித்தது.வெளியே ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.சன்னல் திரையை விலக்கிப் பார்த்த கோமதியம்மாள் ஒரு நிமிடம் ஆடிப் போனாள்.

“கண்ணா! சீக்கிரம் வா.. போலீஸ் ஜீப் வந்திருக்கு…என்னன்னு தெரியலியே” 

கோமதியம்மாள் முகத்தில் திகில்.

உள்ளேயிருந்து இன்ஸ்பெக்டர் தயாளன் சாவகாசமாக இறங்கி, முற்றத்துக்கு வந்தான்.

என்னே மிடுக்கு! இந்தப் போலீஸ்காரனுக்கும் பிறக்கும்போதே அந்தத் தோரணை வந்து விடுவதில்லையே… 

பால்ய நண்பன் தயாளனைப் பார்த்தவுடன் ஓடிவந்து ஆதுரத்தோடு தழுவிக்கொண்டான் கண்ணன்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த கோமதியம்மாள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

“அட.. உள்ள வாப்பா.. என்ன திடீர்னு?”

கண்ணன் அவனை வரவேற்க….அமலா உபசரிக்க…கோமதியம்மாள் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கண்ணா…இது யாருப்பா…சிரஞ்சீவி மாதிரியே இருக்கு!” 

கோமதியம்மாளுக்கு அச்சம் நீங்க… முகத்தில் வியப்பு மேலிட்டது.

சிரஞ்சீவி வேறு யாரும் இல்லை.பல வருடங்களுக்கு முன்பு ஓடிப்போன கண்ணனின் தம்பிதான்!

தயாளனின் முகம் அலர்ந்தது.

“என்னம்மா அப்படிப் பாக்கறீங்க?”

அவள் நடுங்கும் கரங்களைப் பற்றிக் குலுக்கினான் தயாளன்.

கண்ணன் தெளிவு படுத்தினான்.

“என்னோட தம்பி சிரஞ்சீவி போலீஸ் ஆகப் போறேன்னு சொல்லீட்டு வீட்டைவிட்டு விருதுநகர் பக்கம் ஓடிட்டான்..போயி பல வருஷம் ஆயிருச்சு…எங்க இருக்கறான்…யார் வீட்ல இருக்கிறான் ங்கற விபரமெல்லாம் தெரிலே…ஆனா அம்மா அவனையே நெனைச்சுட்டு கவலைப் பட்டுட்டு இருக்குது…நீ போலீஸ்காரன்… உன்னைப் பார்த்ததும் அவன்தான் வந்துட்டான்னு நெனைச்சுருச்சு..!. ஏறக்குறைய அவனுக்கும் உனக்கும் ஒரே முகச்சாயல் வேறே!”

தயாளன் சொன்னான்:

“நான் டி.எஸ்.பி ஆயிட்டேன்… விருதுநகர்லேதான் போஸ்டிங்..உன் தம்பியைப் பத்தின முழு விவரம் கொடு…விசாரிச்சுப் பார்க்கலாம். எப்படியும் கண்டு பிடிச்சிறலாம்”

கோமதியம்மாளுக்கு நம்பிக்கை துளிர்த்தது.

‘என் மகன் கண்டிப்பாகப் போலீஸ் ஆகியிருப்பான்…!’

ஆறு மாதங்கள் கடந்தன.

ஒரு நாள் தயாளன், கண்ணன் வீட்டுக்கு ஜீப்பில் வந்திறங்கினான்.

கண்ணனும் அமலாவும் இன்னும் ஆஃபீஸிலிருந்து வரவில்லை.

கோமதியம்மாள் மட்டும் வீட்டில் இருந்தாள்.

“என்னம்மா எப்படியிருக்கீங்க…உங்க நம்பிக்கை வீண்போகலே..சிரஞ்சீவி வந்திருக்கான்!”

தயாளன் சொல்லச் சொல்ல…

அவளுக்கு ஒரே ஆச்சரியம்.

“வெளியே எட்டிப் பாருங்க…ஒரு போலீஸ்காரன் நிக்கறான் பாருங்க. அவன்தான் உங்க மகன் சிரஞ்சீவி!”

தயாளன் அவனை அழைத்த மறுகணம் –

சிரஞ்சீவி பரபரவென்று ஓடி வந்து அவள் முன்பு நின்று சல்யூட் அடிக்க…. கோமதியம்மாள் வியப்புடன் அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள்.

அவன் பிடரியை ஓர் ஆட்டுக்குட்டியைத் தடவுவது போல் தடவிப் பார்த்தாள்.

“என்னம்மா என்ன அப்படிப் பார்க்கறீங்க?” என்றான் தயாளன் 

கோமதியம்மாள் முகம் மலர்ந்து விகசித்தது.

“கழுத்துக்குக் கீழே ஒரு மச்சம் இருக்குதான்னு பார்த்தேன்..இவன் என் மகன் சிரஞ்சீவிதான்!” என்றவாறு அவனைத் தழுவி நெற்றியில் முத்தமிட்டாள். 

அன்று இரவு.

தயாளன்,கண்ணனை அலைபேசியில் அழைத்தான். 

“கண்ணன்! ஒரு இரகசியம்..உன் வீட்டுக்கு வந்தது உன் தம்பி சிரஞ்சீவி இல்லே! அவன் மாதிரியே இவனும் தோற்றத்தில் இருப்பான்..உன் தம்பி போலீசுக்கு செலக்சன் ஆனது உண்மைதான்..ட்ரெயினிங் பீரியட்லே ஒரு ஆக்சிடெண்ட்லே இறந்துட்டான்..இவனும் ட்ரான்ஸ்பெர்லே ஜார்கண்ட் போறான்..அம்மாகிட்ட இப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளி!” 

உள்ளறையில் முகம் அலர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருக்கிற  கோமதியம்மாளைப் பார்த்த கண்ணன் விழிகளில் நீர் கோர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *