பொய்வழக்காடிய அங்கமுத்து
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சேரனூர் என்னும் ஊரிலே அங்கமுத்து என்பவனும் தங்கமுத்து என்பவனும் ஆருயிர் நண்பர்களாக விளங் கினார்கள். நாளடைவில் நட்பு முதிர்ந்து பகையாக மாறிவிட்டது. இருவருக்குந் தொடங்கிய வாய்ப்போர் வளர்ந்து நாளடைவில் கைப்போராகவும் மாறிவிட்டது. அங்கமுத்து நல்ல உடற்கட்டும், ஆற்றலும் அமைந்தவன். தங்கமுத்துவைப் பிடித்து நன்றாக அடித்துவிட்டான். அவனுடைய கை முறிந்துவிட்டது.
அங்கமுத்து தானே தங்கமுத்துவின் மேல் வழக்குப் போட்டான். தன் வழக்குத் தோற்றுப் போகு மென்பதையுணர்ந்திருந்தும் தான் முந்திக்கொண்டால் தண்டனை சிறிது குறையாதா? என்று பார்த்தான். ஆனால், அங்கமுத்து எதிர்பார்த்தபடி தண்டனை குறையவில்லை. ஊரார்கள் அனைவரும் தங்கமுத்துவின் பக்கமாகவே சாட்சி கூறினார்கள். நீதிமன்றத் தலைவர் அங்கமுத்து தங்கமுத்துவை அடித்துக் கையை ஓடித்ததும் அல்லாமல் பொய் வழக்குந் தொடர்ந்ததாகச் சொல்லித் தண்டனையை இரட்டிப்பாக ஏற்படுத்தினார்.
தண்டனை மிகுதிப்பட்டதைக் கண்ட அங்கமுத்து, நமக்கு நாமே தொல்லையை மிகுதிப்படுத்திக்கொண்டோமே என்று கூறி வருந்தினான். ஆகையால் எவருந் தோல்வியடையக் கூடிய வழக்குகளிலே ஈடுபடக் கூடாது.
“தோற்பன தொடரேல்” (இ – ள்.) தோற்பன – தோல்வியடையக் கூடிய வழக்குகளிலே ; தொடரேல் – ஈடுபடாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,