பொய்யும் மெய்யானது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 8,021 
 
 

அலுவலகத்தில் தனக்குக்கொடுக்கப்பட்ட வேலையில் முழுமனதோடு ஈடுபட்டிருந்தாள் மகி.

உடன் வேலை செய்பவர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி அரட்டையடிப்பதைப்போல் தானும் செய்ய விரும்ப மாட்டாள். தன்னைச்சுற்றிலும் இருப்பவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் குறித்த நேரத்திற்கு வேலையை முடித்துக்கொடுத்து விட்டு வீட்டிற்குச்சென்று விடுவாள்.

“ஒரு பொய் சொன்னால் போதும் உன் வாழ்க்கையே வசந்தமாகி விடும். வாழ்நாள் முழுவதும் வேலைக்கு வர வேண்டியதில்லை. ‘நான் தான் மிகியின் மனைவி’ எனும் பொய்தான் அது. தொலைக்காட்சி நாடகத்தில் நடிப்பதாக கூட நினைத்துக்கொண்டு சொன்னால் அது பொய்யில்லை, நடிப்பு. அவ்வளவு தான் ரொம்ப சிம்பிள்….”  சொல்லி விட்டு ஒரு கண்ணைச்சிமிட்டி சகி சென்ற பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து வேலையில் நாட்டம் செலுத்த முடியாமல் போனது மகிக்கு.

மகி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத்தாயானவள். இப்படியிருக்க தனது மேனேஜர் இப்படியொரு நிலைக்கு தன்னை ஆளாக்குவாள் என கனவிலும் நினைக்கவில்லை. ‘மிகியின் மனைவி என சொல்வதும் ஒரு வகையில் பொய்யில்லை. அந்த மிகி எந்த மிகி?  என்பது முக்கியமல்லவா…. இன்னும் தன் மனதை விட்டு நீங்காத மிகியானால், வேறு ஒருவருக்கு மனதில் இடம் கொடுக்க விடாமல் ஆணி வேர் விட்டு ஆள் மனது வரை சென்று விட்ட மிகியானால் தயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது? ஆனால் யாரென்றே தெரியாத தனக்குப்பிடித்த அதே பெயர் கொண்ட வேறு நபருக்கு மனைவியென எப்படி சொல்வது…?’ இருதலைக்கொள்ளி எறும்பானாள்.

‘மேனேஜர் சகியும் பெண்தானே… தனது முதலாளிக்கு மனைவியாக அவளே நடித்து விட்டுப்போக வேண்டியது தானே. திருமணமாகாதவள். நம்மை விட அழகாக வேறு இருக்கிறாள். பேசாமால் வேலையை ராஜினாமா செய்து விடலாமா…? இதனால் நமது குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்குமே…?’ விளைவுகளை நினைக்க பயம் மேலோங்கியது.

வேலை செய்ய முடியாததால் உடல் நிலை சரியில்லையென கூறி அலுவலகத்துக்கு லீவு போட்டு சென்றவளுக்கு வீட்டிலும் வேலை செய்யத்தோன்றாமல் படுக்கையிலேயே முடங்கினாள். மனம் கெட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது, பசி இல்லாமல் போகிறது என்பதை தற்போதுதான் புரிந்து கொண்டாள். குழந்தைகள் தாய் மகியின் நிலை கண்டு வருந்தினர்.

‘பொய் சொல்வதற்க்கும் மிகுந்த துணிச்சல் வேண்டும். ஒரு பொய்யைச்சொல்லி விட்டால் அதை உண்மை என நிரூபிக்க ஆயிரம் பொய் சொல்ல வேண்டும். குற்ற உணவைப்போல மனதைப்பாதிப்பது எதுவும் கிடையாது. அதனால் தானோ என்னவோ குற்றம் செய்பவர்கள் எப்போதாவது ஒரு நாள் தம் குற்றத்தை ஒத்துக்கொள்கின்றனர். குற்றம் செய்து மறைப்பதால் வரும் மன உளைச்சல் ஏற்படுத்தும் கஷ்டத்தை விட சிறை தண்டனையே மேல் என நினைத்திருப்பார்கள். பொய் சொல்ல யோசிக்கும் போதே இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறோமென்றால், பொய் சொன்ன பின் எந்தளவு பாதிப்பைச்சந்திப்போம்?’ என நினைத்தவள் தனது அலைபேசியை எடுத்து சிறுகதைகளைத்தேடிப்படித்து மனதை உளைச்சலிலிருந்து மீட்டாள்.

மறுநாள் அலுவலகம் சென்ற போது எப்போதும் போல் இல்லாமல் அமைதியாக இருந்தது. யாரோடும் யாரும் பேசாமல் தங்களது வேலைகளில் மூழ்கியிருந்தனர். ஆனால் அவர்களது கண்கள் மட்டும் மகியை எப்போதும் போல் இல்லாமல் வித்தியாசமாகப்பார்த்தது. ஆச்சர்யமாகப்பார்த்தது.

வயதானவர்கள் இரண்டு பேர் முதலாளி அறைக்குள் நுழைந்தனர். அவர்களது முகம் இதுவரை பார்த்திராதது. சகி, மகியிடம் ஒரு பிளாஸ்க்கைக்கொடுத்து அதிலுள்ள காஃபியை உள்ளே இருப்பவர்களுக்கு கொடுக்குமாறு கூறிச்சென்றாள். 

‘அலுவலகத்துக்கென்றே கூட்டிப்பெறுக்குவதற்கும், காஃபி கொடுப்பதற்கும் தனியாக ஆள் நியமித்திருக்கும் போது உதவி மேனேஜர் பொறுப்பிலிருக்கும் நம்மை எதுக்கு காஃபி கொடுக்கச்சொல்கிறாள். இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ….? சகி அந்தளவுக்கு மோசமானவளும் கிடையாது. சரி காஃபி தானே…. கொடுத்தால்  கெட்ட பெயரெதுவும் வரப்போவதில்லையே…. ” யோசித்தவள் பிளாஸ்க் மூடியைக்கழட்டி மூன்று டம்ளர்களில் காஃபியை நிரப்பி முதலாளி அறையின் கதவைத்திறந்தவள் ஒரு நிமிடம் உறைந்து போனாள்.

ஐந்து வருடங்களுக்கு முன் வேலை எதுவும் இல்லாமல் தினமும் வாங்கிய கடனைத்திருப்பிக்கேட்க வருபவர்களிடமிருந்து வீட்டின் குளியறைக்குள்ளெல்லாம் மறைந்து, மனைவியான தம்மை பதில் சொல்ல வைத்ததால் வெறுத்துப்போய் விவாகரத்து செய்யப்பட்ட மிகி, இன்று முதலாளியாக ….’ தலை நிமிராமல் மேஜை மீது காஃபி டம்ளர்களை வைத்து விட்டுத்திரும்பியவளைப்பார்த்து “மகி இவங்க தான் என்னோட அப்பா, அம்மா” என மிகி அறிமுகப்படுத்த, அவர்களைப்பார்த்து கைகூப்பி வணங்கியவள் உடல் நடுக்கம் மேலோங்க தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

வேலையை ராஜினாமா செய்து விடலாம் என யோசித்தவள், ‘வேலை இல்லாவிட்டால் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாது. விவாகரத்து செய்த போது ஜீவனாம்சம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை விட, கொடுக்க அப்போதைய கணவனான மிகியிடம் ஒன்றுமில்லை. இந்த நிலையில் வேலையை விடுவது நல்லதல்ல’ என உள் மனம் சொல்ல சாந்தமானாள்.

கிராமத்திலிருந்து வேலை தேடி நகரத்துக்கு வந்த மிகி, தங்கள் வீட்டிலிருந்த ஒரு போர்சனில் வாடகைக்கு குடி வர, அவனது பேச்சில் மயங்கியவள் காதலித்து, பெற்றோரை எதிர்த்து கைபிடித்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள். மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் வாழ்வில் மிகியின் வேலை இழப்பு அவனை மாற்றி விட்டிருந்தது. இருந்த வேலை போனதால் கடன் வாங்கி குடிப்பதே வேலையாகி விட, இனி மிகியுடன் வாழவே முடியாது எனும் நிலையில் காதல் கணவனை விவாகரத்து செய்தவள், குழந்தைகளை தனி ஆளாக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தில் படிக்க வைத்து குடும்பச்செலவுகளையும் பார்த்துக்கொண்டாள்.

விவாகரத்துக்கு பின் வெளிநாடு சென்ற மிகி, இன்று தான் வேலை பார்க்கும் கம்பெனியை விலைக்கு வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறான் என்பதைக்கண்டு ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், மறுபக்கம் அவன் தற்போது தன் கணவன் இல்லை என நினைத்த போது மகிழ்ச்சியை ஏற்க இயலாமல் தவித்தாள்.

திருமணமாகி குழந்தைகள் பிறந்து விவாகரத்து செய்த நிலையில் இது வரை மிகியின் பெற்றோர் மகியைப்பார்த்ததில்லை. தவிர திருமணமானதையும், பின் விவாக ரத்து செய்ததையும் தன் பெற்றோருடன் கூறவில்லை மிகி. ஏனென்றால் பல வருடங்கள் அவர்களை சந்திக்காதது தான் காரணம். பெற்றோருக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவன் வாழ்வில் உயர் நிலைக்கு வராமல் சொந்த ஊருக்கு போகக்கூடாது என பிடிவாதமாக இருந்து விட்டு, தற்போது நூறு பேர் வேலை பார்க்கும் ஐடி கம்பெனியை விலைக்கு வாங்கிய பின்பே பெற்றோரை அழைத்து வந்துள்ளான் என்பதை சகி சொல்ல அறிந்தவள், மறுபடியும் அறைக்குள் சென்று மிகியின் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். “நான் தான் உங்கள் மருமகள், மிகியின் மனைவி மகி” என பொய் சொல்லாமல் உண்மையைச்சொன்னதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தான் மிகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *