பொய்மான் கரடு





அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10
செம்பா மிகவும் கெட்டிக்காரப் பெண். அந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவுசெய்து கொண்டாள். வட கொரியர்களின் அறுபது டன் டாங்கிகளைக் கண்டு அமெரிக்கர்கள் செய்த காரியத்தையே அவளும் செய்யத் தீர்மானித்தாள். இச் சமயம் அவசரமாகப் பின் வாங்குவதுதான் முறை. வேறு வழியில்லை! செங்கோடன் காதில், “ஜாக்கிரதை நான் சொன்னதையெல்லாம் நினைவு வைத்துக்கொள்….” என்று சொல்லி விட்டுப் பின்புறம் திரும்பிச் சென்று வைக்கோற் கட்டின் பின்னால் மறைந்தாள்.

வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரனுடைய கவனத்தை நாயின் குரைப்புச் சத்தம் செங்கோடன் நின்ற பக்கம் திருப்பியது. சற்றுத் தூரத்துக்கு அப்பால் ஒரு பெண் உருவத்தின் நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது.
போலீஸ்காரன் தலைப்பாகையைக் கையில் எடுத்துத் தலையைச் சொறிந்து கொண்டான். தொண்டையை ஒரு தடவை பலமாகக் கனைத்தான். “சீ ராஸ்கல்! சும்மா இரு! உன் நாய்க் குணத்தைக் காட்டுகிறாயா? திருடனைக் கண்டால் பயந்து ஓடுவாய்! நம்ம ராஜா செங்கோடக் கவுண்டரைப் பார்த்துவிட்டுக் குரைக்கிறாயே” என்றான். நாயும் அவன் சொன்னதைத் தெரிந்து கொண்டது போல் குரைப்பதை நிறுத்தியது. போலீஸ்காரன் செங்கோடனை நெருங்கிக் கொண்டே, “நம்முடைய போலீஸ் டிபார்ட்மென்டிலும் நீ செய்கிற மாதிரிதான் வேலை செய்கிறார்கள். உன்னை எஸ்.பி.யாகவோ, டி.எஸ்.பி.யாகவோ போடவேண்டும்!” என்று முணு முணுத்தான். தன்னுடைய சாமர்த்தியத்தைப் போலீஸ் இலாக்கா சரியாகத் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறை அவனுடைய மனத்தில் நீண்ட காலமாகக் குடிகொண்டிருந்தது.
செங்கோடன் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். போலீஸ்காரன் அவன் அருகில் வந்ததும், “யார் அது? செங்கோடக் கவுண்டன் போல் இருக்கிறதே!” என்றான்.
சில நாளாகவே செங்கோடனுக்குப் பழைய சங்கோசம், பயம் எல்லாம் நீங்கிப் புதிய தைரியம் பிறந்திருந்தது.
“உங்களைப் பார்த்தால் போலீஸ்காரர்போல் இருக்கிறதே?” என்றான்.
“அடே அப்பா! கெட்டிக்காரனாயிருக்கிறாயே? நான் போலீஸ்காரன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்?”
“அது என்ன கஷ்டம்? உங்கள் உடுப்பைப் பார்த்தால் தெரிந்து போகிறது?”
“உடுப்பைப் பார்த்து நம்பிவிடக்கூடாது, அப்பனே! இந்தக் காலத்தில் திருடன் கூடப் போலீஸ்காரன் உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறான்!”
“திருடனா? திருடன் இங்கு எதற்காக வருகிறான்?”
“ஏதாவது அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போகிறதற்குத்தான்.”
“இங்கே சுருட்டுவதற்கு ஒன்றுமில்லையே! கிழிந்த கோரைப்பாய் ஒன்றுதான் இருக்கிறது!”
“என்ன, தம்பி, இப்படி ஒரே புளுகாய்ப் புளுகுகிறாய்? நீ நிறையப் பணம் சேர்த்து எங்கேயோ புதைத்து வைத்து இருக்கிறாய் என்று ஊரெல்லாம் சொல்லுகிறார்களே?”
செங்கோடன் திடுக்கிட்டுப் போனான். இதே மாதிரி வேறு யாரோ தன்னைக் கேட்டார்களே, சமீபத்தில்; யார் கேட்டார்கள்? அதற்குத் தான் சொன்ன பதில் என்ன?- இதை நினைத்து நினைத்துப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் ஞாபகத்துக்கு வரவில்லை.
“என்ன கவுண்டரே! ஏன் விழித்துக்கொண்டு நிற்கிறீர்? ஊரார் சொல்லுவது உண்மைதான்போல் இருக்கிறது. எத்தனை ரூபாய் புதைத்து வைத்திருக்கிறீர்?”
“அதெல்லாம் சுத்தப் பொய்! ஊராருக்கு என்ன? வாயில் வந்ததைச் சொல்லுவார்கள். ஏழைக் குடியானவனிடம் அவ்வளவு ரூபாய் ஏது? புதைத்து வைப்பதற்கு? யாரோ கதை கட்டிவிட்டிருக்கிறார்கள்!”
இப்படிச் செங்கோடன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய மனத்துக்குள், ‘இந்தப் போலீஸ்காரருடன் வந்திருக்கும் நாயைப்போல் ஒரு நல்ல சாதி நாய் வளர்க்க வேண்டும்’ என்ற எண்ணம் உதயமாயிற்று.
“அது கிடக்கட்டும். தம்பி! ஊரார் என்ன சொன்னால் எனக்கு என்ன? அப்படியே உன்னிடம் நிறையப் பணம் இருந்தால் எனக்கு ஒரு தம்படி கொடுக்கப் போகிறாயா?” என்றான் போலீஸ்காரன்.
“அப்படிச் சொல்லாதீங்க, ஐயா! என்னிடம் பணம் இருந்தால், ஒரு தம்படி என்ன, இரண்டு தம்படி கூடக் கொடுப்பேன், கையில் இல்லாத தோஷந்தான்!”
“கையிலே இல்லை; பூமியிலே இருக்கிறது! அப்படித்தானே?”
“இது என்னடா வம்பு! நான் பணம் புதைத்து வைக்கவில்லை என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டீங்க போலிருக்கே?”
“அதைச் சொல்லவில்லை, அப்பா! நீ பயிர் செய்கிறாயே, இந்த வளமான பூமியிலே பாடுபட்டால் பணம் இருக்கிறது என்று சொன்னேன்.”
“அப்படிச் சொன்னீர்களா? அது கொஞ்சம் நிஜந்தான். ஆனால் இந்தப் பூமியிலிருந்து பணத்தை எடுப்பதற்குள்ளே வாய்ப் பிராணன் தலைக்கு வந்துவிடுகிறது. சுத்த வறண்ட பூமி!”
“என்ன அப்படிச் சொல்கிறாய்? உன் காட்டில் சோளப்பயிர் கருகருவென்று வளர்ந்திருக்கிறதே! ஆறு அடி உயர ஆள் புகுந்தால் கூடத் தெரியாது! அவ்வளவு உயரம்…!”
“ஐயோ! சாமி; கண்ணைப் போடுறீங்களே?”
“கண்ணைப் போடவில்லை! ஆனால் இந்த மூக்கை ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கவேணும்! வெங்காயக் குழம்பின் வாசனை ஜம் என்று வருகிறது!” என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் இரண்டு மூன்று தடவை பலமாக மூச்சை இழுத்து வாசனை பிடித்தான்.
“இருந்து சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்” என்றான் செங்கோடன்.
“இன்றைக்கு எனக்கு வேறு இடத்தில் சாப்பாடு. குடிசைக்குள்ளே வேறு யாராவது உண்டா? நீதான் சமைத்துக்கொள்கிறாயா?”
“என்னைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லை. நான் ஏகாங்கி.”
“அப்படி இருக்கக்கூடாது. சீக்கிரத்தில் யாராவது ஒரு பெண்ணைக் கட்டிப் போடவேண்டும். நான் வரும் போது இங்கே உன்னோடு நின்று யாரோ பேசிக்கொண்டு இருக்கவில்லை? அவசரமாய்ச் சோளக்கொல்லையில் புகுந்து போகவில்லை?”
“என்னங்க, கதையாயிருக்கிறது! இங்கே ஒருத்தரும் இல்லையே!”
“யாரோ சேலை கட்டிய பெண்பிள்ளை மாதிரி தோன்றியதே!”
“உங்களுக்கு ஏதோ சித்தப் பிரமை. இங்கே பெண் பிள்ளை யாரும் இல்லை.”
“ஆமாம், இருந்தாலும் இருக்கலாம். கொஞ்ச நாளாக எனக்கு எங்கே பார்த்தாலும் செம்பவளவல்லி நிற்கிறதாகவே பிரமை உண்டாகிறது. கொப்பனாம்பட்டி சிவராமக் கவுண்டர் மகள் செம்பா இல்லை? அவளை நான் கலியாணம் கட்டிக்கொள்ளப் போகிறேன். அப்புறம் பார்; 374-ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அதிகாரம் பண்ணிச் சாப்பிட மாட்டாரா?”
அந்தப் போலீஸ்காரனை அங்கேயே கழுத்தை முறித்துக் கொன்று போட்டுவிடலாமா என்று செங்கோடனுக்கு ஆத்திரம் வந்தது. செம்பாவின் மனசை அவன் நன்றாய் அறிந்து கொண்டிருந்தபடியால் பொறுமையைக் கடைப்பிடித்தான்.
“அதெல்லாம் இருக்கட்டும், போலீஸ் ஐயா! எதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு இங்கே வந்தீங்க? அதைச் சொல்லுங்க?” என்றான்.
“அடாடா! மறந்தே போய்விட்டேனே! உன்னோடு பேசுகிற சுவாரஸ்யத்திலே வந்த காரியம் மறந்து விட்டது” என்று சொல்லிவிட்டுச் சட்டைப் பையிலிருந்து எடுத்த தபாலைக் கொடுத்தான் போலீஸ்காரன்.
“இது ஏது தபால்? எனக்கு யார் தபால் போட்டு இருப்பார்கள்? அதிசயமாய் இருக்கிறதே!” என்றான் செங்கோடன்.
“கூடார சினிமாவிலே உன் கன்னத்திலே அறைந்தாளே, ஒரு பெண்பிள்ளை-குமாரி பங்கஜா-அவள் கொடுத்தாள். சாலையில் பொய்மான் கரடு சமீபமாய் நின்றாள். நான் கொப்பனாம்பட்டி போகிறேன் என்றேன். ‘இதை ராஜா செங்கோடக் கவுண்டரிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்’ என்றாள். பாவம்! ஒரு பெண்பிள்ளை கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது மாட்டேன் என்று எப்படிச் சொல்கிறது? ‘சரி’ என்று வாங்கிக் கொண்டு வந்தேன். நான் போகட்டுமா?”
“கொஞ்சம் இருங்க; இந்தக் கடுதாசை வாசித்துக் காட்டிவிட்டுப் போங்க!”
“என்ன தம்பி, உனக்குப் படிக்கத் தெரியாதா?”
“தெரியாமல் என்ன? மூன்றாம் வகுப்புவரை படித்திருக்கிறேன். அச்சு எழுத்துப் படிக்கத் தெரியும். கூட்டு எழுத்தாயிருந்தால் படிக்கிறது சிரமம். ஒருவேளை அந்த அம்மா இங்கிலீஸிலே எழுதியிருந்தாலும் எழுதியிருப்பாங்க. எனக்கு இங்கிலீஸ் தெரியாது.”
இப்படிச் சொல்லிக் கொண்டே செங்கோடன் குடிசை அருகில் சென்று வாசற்படிக்குப் பக்கத்தில் வைத்திருந்த ஹரிக்கன் லாந்தரை எடுத்துப் பெரிதாகத் தூண்டிவிட்டுக் கடிதத்தை வாசித்தான். எழுத்துப் புரியும்படியாகவே எழுதியிருந்தது. ஆகையால் எழுத்துக் கூட்டி இரைந்து வாசித்தான்:
“என் இதயத்தைக் கொள்ளை கொண்ட ராஜா செங்கோடக் கவுண்டர் அவர்களுக்கு,
நான் பெரிய சங்கடத்திலும் அபாயத்திலும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நாளைச் சாயங்காலம் கட்டாயம் வந்து என்னைச் சந்திக்கவும். நீங்கள் நாளைச் சாயங்காலம் வரத் தவறினால் அப்புறம் என்னை உயிரோடு காண முடியாது.
இப்படிக்கு,
குமாரி பங்கஜா,”
இதைப் படித்தபோது செங்கோடனுக்கு வியர்த்து விறுவிறுத்தது. படித்து முடித்துவிட்டுப் போலீஸ்காரனுடைய முகத்தைப் பார்த்தான். போலீஸ்காரன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, “பார்த்தாயா அதிர்ஷ்டம் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறது!” என்றான்.
“எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது? நீங்க ஒரு தடவை படித்து காட்டுங்க!”
“விளங்காமல் என்ன இருக்கிறது? அதுதான் வெட்ட வெளிச்சமாய் எழுதியிருக்கிறதே!” என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் ஒரு தடவை படித்துக் காட்டினான்.
“நீங்களே ஒரு யோசனை சொல்லுங்க. இது நிஜமாயிருக்குமா? நான் போக வேணுமா?”
“போய்த்தான் பாரேன், என்ன நடக்கிறது என்று? உன்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்?”
“சரி உங்கள் யோசனைப்படியே செய்கிறேன். ஆனால் உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன்.”
“என்னை நீ இரண்டு வேண்டுமானாலும் கேட்கலாம்.”
“ஒன்றுதான், அதற்கு மேலே இல்லை. இராத்திரி கொப்பனாம்பட்டி கவுண்டர் வீட்டில் சாப்பிடப் போறீங்க அல்லவா? அங்கே என்னையும் இந்தக் குமாரி பங்கஜாவையும் பற்றி ஏதாவது கன்னாபின்னாவென்று பேசி வைக்காதீங்க! பேசினால் காரியம் கெட்டுப் போய்விடும்.”
“அது என்ன? அப்படி என்ன காரியம் கெட்டுப்போய்விடும்?”
“உங்களிடம் சொல்லுகிறதற்கு என்ன? அந்த வீட்டுப் பெண் செம்பாவை நான் தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்!…”
“என்ன? என்ன? ஒரே போடாய்ப் போடுகிறாயே!”
“நான் போட்டாலே ஒரே போடாய்த்தான் போடுகிறது; இரண்டு மூன்று போடுகிறதில்லை. செம்பாவுக்கும் எனக்கும் குறுக்கே யார் வந்தாலும், அவன் தசகண்ட இராவணனாயிருந்தாலும் சரி. ஒன்று அவன் சாக வேணும்; அல்லது என் உயிர் போக வேணும். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்!”
“என் இஷ்டமும் இல்லை; உன் இஷ்டமும் இல்லை! அந்தப் பெண் இஷ்டப்பட்டு யாரை…”
“அதைப்பற்றிச் சந்தேகம் வேண்டாம்! செம்பாவுக்கு என்னைக் கட்டிக்கொள்ளத்தான் இஷ்டம். நீங்களே கேட்டுக் கொள்ளலாம்!”
“கவுண்டரே! இதை முன்னமே சொல்லித் தொலைக்கிறதுதானே? சொல்லியிருந்தால் நான் அந்தப் பெண் பேச்சையே எடுத்திருக்க மாட்டேனே! செம்பாவின் தகப்பனார் சொன்னார், மகளுக்கு இந்த வருஷம் அவசியம் கலியாணம் செய்துவிட வேண்டும் என்று. உனக்கு அவளைக் கட்டிக்கொள்ள இஷ்டம் இல்லையென்றும் தெரிவித்தார். நீயே கலியாணம் செய்து கொள்கிறதாயிருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று! இன்றைக்கு இராத்திரியே பெரிய கவுண்டரிடம் சொல்லி விடுகிறேன்.”
“போலீஸ்கார ஐயா! நீங்க ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்தால் அதுவே பெரிய உபகாரமாயிருக்கும். நாளைக் காலையில் நானே எல்லாம் சொல்லிக் கொள்வேன்” என்றான் செங்கோடன்.
போலீஸ்காரன் போன பிறகு குடிசைக்குள்ளே போய் லாந்தரை நன்றாய்த் தூண்டிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஓர் அடுப்பில் குழம்பு கொதித்து அடங்கியிருந்தது. இன்னும் ஓர் அடுப்பில் பழைய சாம்பல் குவிந்திருந்தது. அந்த அடுப்பை உற்றுப் பார்த்துவிட்டு, “எப்படிப்பட்ட, சித்திரகுப்தனாயிருந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நாம் பயப்படுவது அநாவசியம்” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
இராத்திரி பாயில் படுத்த பிறகு, செங்கோடனுடைய மனத்தில் பலவிதமான எண்ணங்கள் அலைமோதிக் குமுறின. அவற்றின் மத்தியில், ஏதோ ஒரு முக்கியமான விஷயம் மறந்துபோய்விட்டது. அதை எப்படியாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணிப் பெரும் பிரயத்தனம் செய்தான். எவ்வளவோ முயன்றும் அது ஞாபகத்துக்கு வராமலே தூங்கிப் போனான்.
அத்தியாயம் – 11
மறுநாள் காலையில் செங்கோடன் வழக்கம்போல் வீடு சுத்தம் செய்துவிட்டு, கேணியில் பாதித் தண்ணீர் இறைத்து விட்டு, குளித்து, வெள்ளை வேட்டி சொக்காய் தரித்துக் கொண்டு, கொப்பனாம்பட்டிக்குப் போனான். பெரியகவுண்டர் செங்கோடனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டது போல் பாவனை செய்து, “நீ எங்கே வந்தாய்?” என்று கேட்டார்.
“என்ன மாமா! அப்படிக் கேட்டீங்க ஒரு கேள்வி? நான் வரக்கூடாதா?” என்றான்.
“நன்றாய் வரலாம். வரக்கூடாது என்று யார் சொன்னது? ரொம்ப நாளாய் உன்னைக் காணுகிறதேயில்லையே, எங்களை அடியோடு மறந்துவிட்டாயோ என்று பார்த்தேன்.”
“அப்படியெல்லாம் மறப்பேனுங்களா? வெள்ளாமை வேலை அதிகமாயிருந்தது. உங்களுக்குத் தெரியாதா? மழையில்லாமல்…”
“அதெல்லாம் தெரியும்! அப்பா! ஆனால் நீ வெள்ளாமையிலே மட்டும் கவனாயிருந்ததாகத் தெரியவில்லையே? சின்னமநாயக்கன்பட்டிக்கு அடிக்கடி போகிறாயாம்? அங்கே யாரோ காவாலிகள் வந்திருக்கிறார்களாம். அவர்களோடு சேர்ந்துகொண்டு திரிகிறாயாம்! சாலையிலே போகிறபோதே ஏதேதோ பேத்திக்கொண்டு போகிறாயாம், குடிகாரனைப் போல…. அப்படியிருக்க…”
“அதெல்லாம் முந்தாநாளோட தீர்ந்தது மாமா! எனக்குத் தாயா, தகப்பனாரா, வீட்டிலே வேறு பெரியவர்களா, யார் இருக்கிறார்கள்? நான் அப்படியே தப்பு வழியில் போனாலும் நீங்கள் தானே புத்தி சொல்லித் திருத்த வேணும்?”
“புத்தி சொன்னால் நீ கேட்கிற நிலைமையிலே இல்லையே? அது போகட்டும்; இப்போது எதற்காக வந்தாய்? ஏதாவது யோசனை கேட்பதற்காக வந்தாயா?”
“ஆமாம், மாமா! ஒரு யோசனை கேட்கத்தான் வந்தேன். நம்ப செம்பாவைக் கலியாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வெகு நாளாக எனக்கு எண்ணம். அதைப் பற்றி இன்றைக்குப் பேசி…”
“வெகுநாளாக உனக்கு எண்ணம் என்றால், இத்தனை நாள் ஏன் சொல்லாமல் இருக்கவேணும்? இப்போது வந்து சொல்கிறாயே? நான் அந்தப் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே?”
“அது எப்படி நீங்கள் வாக்குக் கொடுக்கலாம்? செம்பா விஷயமாக என் மனசில் இருந்த உத்தேசம் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?”
“மறுபடியும் அதையே சொல்கிறாயே? மனசிலே உத்தேசம் இருந்தால் என்ன பிரயோசனம்? வாயை விட்டுச் சொல்கிறதுதானே? கடவுள் வாயை எதற்காகக் கொடுத்திருக்கிறார்?”
“சரி; இப்போதுதான் வாயைவிட்டுச் சொல்லியாகி விட்டதே? ஒரு மழை நல்லாப் பெய்து ஊரிலே கொஞ்சம் செழிப்பு உண்டாகட்டும், அப்புறம் உங்களிடம் வந்து கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்.”
“மழை பெய்யாவிட்டால் உனக்கு என்ன? மற்றவர்களுக்குக் கஷ்டம். உன் கேணியிலேதான் வற்றாமல் தண்ணீர் வருகிறது! சோளம், நெல் எல்லாம் நன்றாய் வந்திருக்கிறதே?”
“நான் மட்டும் நல்லாயிருந்தால் போதுமா? உங்கள் காட்டிலும் மழை பெய்து நல்லா விளைந்தால்தானே என் சோளம் எனக்குக் கிட்டும்! இல்லாவிட்டால் இந்த வீட்டுக் குழந்தைகள் வந்து சோளம் முற்றுகிறதற்குள்ளே பிடுங்கித் தின்றுவிடமாட்டார்களா?”
“தம்பி! நானும் பார்த்தாலும் பார்த்தேன். உன்னைப் போன்ற கருமியைப் பார்த்ததில்லை. செம்பாவுக்கு நீதான் சரியான புருஷன். அவள் பெரிய ஊதாரி…”
“அதெல்லாம் உங்கள் வீட்டிலே; என்னிடத்துக்கு வந்தால் சரியாய்ப் போய்விடும். குடும்பப் பொறுப்பு வந்துவிடும் அல்ல?”
இச்சமயம் செம்பாவின் தம்பி தான் படித்துக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு, “அப்பா! நம்ம அக்காளை அந்தப் போலீஸ்காரருக்கே கட்டிக் கொடுங்க! இந்த ஆளுக்குக் கொடுக்காதிங்க!” என்றான்.
“ஏண்டா அப்படிச் சொல்லுகிறாய்? நம்ம செங்கோடனுக்கு என்ன குறை வந்தது?”
“நேற்று அந்தப் போலீஸ்காரர் பெப்பர்மிண்ட் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் ஒருநாள் எங்களையெல்லாம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருமிக் கவுண்டர் என்னத்தைக் கொடுப்பார்?”
“தம்பி! நான் உனக்கு அன்றைக்குக் கொடுக்கவில்லை?” என்றான் பையன்.
“என்ன கொடுத்தீங்க? ஒன்றும் கொடுக்கவில்லை! சும்மாச் சொல்றீங்க” என்றான் பையன்.
“நினைச்சுப்பார், தம்பி! நீ அன்றைக்கு என் சோளக் கொல்லைக்கு வந்து சோளக் கொண்டையை ஒடித்த போது நான் ஓடிவந்து உன் முதுகில் நாலு அடி கொடுக்கவில்லை? ஒன்றுமே கொடுக்கவில்லை என்கிறாயே?”
உள்ளேயிருந்து ‘கலீர்’ என்று சிரிக்கும் சத்தம் கேட்டது.
பெரிய கவுண்டரும் புன்னகை பூத்தார். “சரி; இப்போது என்ன சொல்கிறாய்?” என்றார்.
“என்ன சொல்கிறது? கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்!” என்றான் செங்கோடன்.
“அடுத்த தை மாதத்திலே வைத்துக் கொள்ளலாமே!”
“அவ்வளவு நாள் ஏன் தள்ளிப் போடணும்? இந்த மாதத்திலேயே வைத்துவிடுங்க! இனிமேல் தாமதிக்கிறது உசிதமில்லை!”
“அது என்ன, அவ்வளவு அவசரப்படுகிறாய்! அந்தப் போலீஸ்காரருக்கு வேறு நான் சமாதானம் சொல்லியாக வேண்டும்.”
“அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் தான் செம்பாவைக் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று நேற்றே சொல்லிவிட்டேன்.”
“அப்படியென்றால், அடுத்த வாரத்திலே புதன்கிழமை ஒரு முகூர்த்தம் இருக்கிறது. கலியாணம் வைத்துக் கொள்ளலாமா?”
“அப்படியே வைத்துவிடுங்கள். இன்னும் சீக்கிரமாய் வைத்தாலும் சரிதான்!” என்றான் செங்கோடன்.
இந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து செம்பவளவல்லி அவசரமாக வந்தாள்.
“அப்பா! இவரிடம் ஒரு கேள்வி கேட்கவேணும் அதற்குச் சரியான பதில் சொன்னால்தான் கல்யாணம்!”
“கேட்டுக்கொள்! நன்றாய்ச் சந்தேகமற என்னென்ன கேட்கவேணுமோ எல்லாவற்றையும் இப்போதே கேட்டுக் கொள்! நீயும் இவனுந்தானே ஆயுள் முழுவதும் வாழ்க்கை நடத்தவேணும்?” என்றார் பெரிய கவுண்டர்.
“சினிமாக் கொட்டகையிலே ஒரு பெண்பிள்ளை இவரைக் கன்னத்திலே அடித்தது வாஸ்தவமா?” என்றாள்.
செங்கோடன் தலையைக் குனிந்துகொண்டு யோசித்தான்.
“ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாரு? என் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாரா, இல்லையா?”
செங்கோடன் தலை நிமிர்ந்து, “அது வாஸ்தவந்தான். அதற்கு என்ன செய்யவேணும்?” என்றான்.
“இவர் ஆண்பிள்ளைதானே? கன்னத்தில் பெண் பிள்ளை அறைந்தால் இவர் ஏன் சும்மா வரவேணும்? திருப்பி நாலு அறை கொடுப்பதற்கென்ன?”
“பெண் பிள்ளையாயிருந்தபடியால்தான் சும்மா விட்டு விட்டு வந்தேன். ஆண் பிள்ளையாயிருந்தால் அங்கேயே பொக்கையில் வைத்திருப்பேன்!”
“பெண் பிள்ளையாயிருந்தால் அதற்காகச் சும்மா விட்டு விடுவதா? அவள் தவடையில் இரண்டு அறை கொடுத்து விட்டு வரவேணும். இல்லாவிட்டால்…”
“இல்லாவிட்டால்…?”
“இல்லாவிட்டால் நான் போய் அவள் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு வருவேன். அதற்குப் பிறகுதான் கலியாணம்!” என்றாள் செம்பவளவல்லி.
அத்தியாயம் – 12
அன்று சாயங்காலம் செங்கோடன் சின்னமநாயக்கன்பட்டிக்குப் போனான். அங்கே எஸ்ராஜ், பங்காரு முதலியவர்கள் குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது.
பிறகு சினிமாக் கூடாரத்துக்குப் போனான். அவர்களைக் காணவில்லை.
“மானேஜர் எங்கே?” என்று கேட்டான். யாரோ ஒருவரைக் காட்டினார்கள். அவர் எஸ்ராஜும் அல்ல; பங்காருசாமியும் அல்ல. விசாரித்ததில் பழைய மானேஜர் ‘டிஸ்மிஸ்’ ஆகிப் புது மானேஜர் வந்துவிட்டார் என்று தெரியவந்தது!
பொய்மான் கரடுக்கு வந்தான். போலீஸ்காரன் நிற்கக் கண்டான்.
“அதுதான் சரி, தம்பி! கடிதத்தில் கண்டபடி வந்து விட்டாயே?” என்றான் போலீஸ்காரன்.
“வந்தேன். வந்து என்ன பிரயோஜனம்? ஆசாமிகளைக் காணோமே!”
“எந்த ஆசாமிகளைத் தேடுகிறாய்! உனக்குக் கடிதம் எழுதியவள் இந்தப் பொய்மான் கரடுக்குப் பின்புறம் காத்துக் கொண்டிருக்கிறாள்!…”
“ரொம்ப தூரம் பார்த்து வைத்திருக்கீங்களே? ஆனால் அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் எங்கே?” என்று கேட்டுவிட்டு, சினிமாக் கூடாரத்தில் தான் விசாரித்துத் தெரிந்து கொண்டதைச் சொன்னான்.
“அந்த ஆட்களைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். டிமிக்கி கொடுத்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது! அது போனால் போகட்டும். நீ இந்த மலைக்குப் பின்னால் போய் அந்தப் பெண்ணின் கதையைக் கேள்!”
“ஆகட்டும்; நீங்களும் பக்கத்திலே எங்கேயாவது இருங்கள்!”
“பயமாயிருக்கிறதா, தம்பி!”
“பயம் ஒன்றுமில்லை; பக்கத்தில் சாட்சிக்கு யாராவது இருக்கட்டுமே என்று பார்க்கிறேன்!”
இப்படிச் சொல்லிவிட்டுச் செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்புறமாகப் போனான். அங்கே ஒரு தனியான இடத்தில் மொட்டைப் பாறை ஒன்றின் மீது குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்தாள். அசோகவனத்துச் சீதையைப் போலவும் காட்டில் தனியாக விடப்பட்ட தமயந்தி போலவும் அவள் சோகமே உருவம் எடுத்தவளாய்த் தோன்றினாள்.
“இது என்ன? இங்கே தனியாக வந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறாய்? உன்னைப் பார்த்தால், லோகிதாசனை பறிகொடுத்த சந்திரமதி மாதிரி இருக்கிறதே?” என்றான் செங்கோடன்.
அப்போதுதான் செங்கோடன் வந்ததைத் தெரிந்து கொண்டவள்போல் குமாரி பங்கஜா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக்கொண்டு விசித்து விசித்து அழுதாள்.
செங்கோடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு அவளைச் சமாதனப்படுத்த முயன்றான். பாவம்! அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவனுக்குச் சோகத்தில் ஆழ்ந்த கதாநாயகியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது என்னமாய்த் தெரியும்? தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றான். பிறகு, இப்பேர்ப்பட்ட நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்று செம்பா சொல்லிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது.
அந்தப்படி செய்வதற்கு எண்ணி அந்தப் பெண்ணின் மோவாய்க் கட்டையைத் தொட்டான்.
உடனே குமாரி பங்கஜா இரண்டாவது தடவையாகப் ‘பளீர்’ என்று செங்கோடன் கன்னத்தில் அறைந்தாள் பாவம்! செங்கோடன் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.
சற்றுப் பொறுத்து, “சரி, அப்படி என்றால் நான் போகட்டுமா? ஏதோ ஆபத்து என்று கடுதாசி எழுதினாயே என்று வந்தேன்!” என்று எழுந்திருக்க முயன்றான்.
உடனே குமாரி பங்கஜா அவனுடைய கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். “என்னை நீயும் கைவிட்டு விட்டால் நான் இந்தப் பாறையிலிருந்து விழுந்து சாக வேண்டியதுதான்!” என்று சொல்லிவிட்டு அவனுடைய தோளில் முகத்தை வைத்துக்கொண்டு விம்மினாள்.
செங்கோடன் கஷ்டப்பட்டுத் தன்னுடைய கைகளையும் தோளையும் விடுவித்துக் கொண்டான். அந்தப் பெண் பூசிக்கொண்டிருந்த ‘ஸெண்டு’ அவனுடைய மூக்கைத் துளைத்துத் தலைவலியை உண்டு பண்ணிற்று!
“அப்படியானால், உனக்கு என்ன கஷ்டம் என்று சொல்! என்னால் முடிந்த உதவி செய்கிறேன். அந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் எங்கே?” என்று கேட்டான்.
“அவர்கள் பேச்சையே எடுக்காதே! துரோகிகள்! பாதகர்கள்! சண்டாளர்கள்! என்னை ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்து என் நகைகளையெல்லாம் பிடுங்கிக்கொண்டு பணத்தையும் பறித்துக்கொண்டு…”
“ஐயோ! இது என்ன அநியாயம்! உன் சொந்தத் தமையனா அப்படிச் செய்துவிட்டான்?”
“உன்னிடம் நிஜத்தைச் சொல்வதற்கென்ன! அவன் என்னுடைய தமையன் அல்ல; அவன் எனக்கு எந்தவித உறவும் இல்லை.”
“இன்னொருவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றானே?”
“அதுவும் பொய்!”
“பின் ஏன் அவர்களுடன் வந்தாய்?”
“என்னை சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்தார்கள், பாவிகள்! அவர்கள் நாசமாய்ப் போகவேணும்!”
“வீணாக அலட்டி என்ன பிரயோஜனம்? அவர்கள் இப்போது எங்கே சொல்? செம்மையாகத் தீட்டிவிடுகிறேன். ஒரு பெண்பிள்ளையை இப்படியா மோசம் செய்வது? அவர்கள் இப்போது எங்கே?” என்று மறுபடியும் கேட்டான்.
“யாருக்குத் தெரியும்? இத்தனை நேரம் ரெயில் ஏறி இருப்பார்கள்! கையிலே ரெயில் சார்ஜுக்குக் கூடப் பணம் இல்லாமல் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நீதான் என்னைக் காப்பாற்ற வேணும். உன்னைத் தான் நம்பி இருக்கிறேன்.”
“எதற்காக இப்படி உன்னை விட்டுவிட்டு அவர்கள் போனார்கள்? ஏதாவது சண்டை வந்துவிட்டதா என்ன?”
“அதையும் சொல்லிவிடுகிறேன். உன்னை ஏமாற்றி உன்னிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் கூடாது என்றேன். அதனால்…”
“என்னிடம் இருக்கும் பணமா? என்னிடம் பணம் ஏது?”
“நீ பணம் சேர்த்துப் புதைத்து வைத்திருக்கிறாய் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். நீ கூடக் கஞ்சா மயக்கத்திலே இரண்டொரு தடவை சொல்லிவிட்டாய்…!”
செங்கோடன் ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளப் பார்த்தான் அல்லவா? அது இப்போது பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. கஞ்சா மயக்கத்தில் அந்தத் திருட்டுப் பயல்களிடம் சொல்லக் கூடாத இரகசியத்தைச் சொல்லிவிட்டதாக நினைவு வந்தது. உடனே செங்கோடன் அளவில்லாத பரபரப்பு அடைந்து எழுந்து நின்றான்.
“எங்கே போகிறாய்?” என்று சொல்லி அவன் கையைப் பற்றிக் குமாரி பங்கஜா இழுத்து உட்காரவைக்க முயன்றாள்.
“வெறுமனே இங்கே உட்கார்ந்திருந்து என்ன லாபம்? அந்தத் திருட்டுப் பயல்களை உடனே கண்டுபிடிக்க வேண்டாமா? இந்தக் காட்டுக்கு அந்தப் புறத்தில் போலீஸ்காரர் இருக்கிறார். வா, போய்ச் சொல்லலாம்!”
“ஐயோ! போலீஸ்காரா? எனக்குப் பயமாயிருக்கிறதே!”
“பயம் என்ன? நீ நேற்று அவரிடந்தானே எனக்குக் கடுதாசி கொடுத்து அனுப்பினாய்?”
“ஆமாம்; வேறு யாரும் இல்லாதபடியால் அவரிடம் கொடுத்து அனுப்பினேன். கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் அவருக்குத் தெரிந்து போச்சோ?”
“தெரியாமல் எப்படி இருக்கும்? அவர்தான் கடிதத்தைப் படித்தார்!”
“ஐயையோ! அதனாலேதான் அவர் இங்கேயே வட்டமிடுகிறார்போல் இருக்கிறது! கவுண்டரே! எனக்குப் பயமாய் இருக்கிறது. அந்தப் போலீஸ்காரப் பாவி என்மேல் மோகம் கொண்டிருக்கிறான்!”
“அப்படியிருந்தால், அவனையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். வா, போகலாம்!” என்று சொல்லிச் செங்கோடன் மளமளவென்று மலைமீது தாவி ஏறினான். குமாரி பங்கஜாவும் மூச்சு வாங்க, அவனைத் தொடர்ந்து ஏறினாள்.
இருவரும் பொய்மான் கரடின் உச்சியை அடைந்தார்கள்.
நிலவின் வெளிச்சம் குமாரி பங்கஜாவின் முகத்தில் விழுந்தது. செங்கோடன் அசப்பில் அவள் முகத்தைப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. அவள் அழவும் இல்லை, கண்ணீர் விடவும் இல்லை! அவ்வளவும் பாசாங்கு! வேஷம்! நடிப்பு!
செங்கோடன் அந்தப் பாறையின் உச்சியிலிருந்து சாலையைப் பார்த்தான். சாலையில் ஜன நடமாட்டமே இல்லை. போலீஸ்காரரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்! அடாடா! சாட்சி இல்லாமல் போய் விட்டதே!
செங்கோடனுடைய பார்வை மேலும் கிழக்கு நோக்கிச் சென்றது. அவனுடைய கேணியும் குடிசையும் இருந்த இடத்துக்குச் சென்று நின்றது, ஆகா! அது என்ன? அவனுடைய குடிசைக்குள்ளே என்ன வெளிச்சம்? எப்படி வந்தது? யாராவது…!
உடனே அவன் ஒரு நிச்சயத்துக்கு வந்தான். “இதோ பார்! என்னுடைய குடிசையில் ஏதோ வெளிச்சமாய் இருக்கிறது. நெருப்புப் பிடித்துக் கொண்டது போல் தோன்றுகிறது. நான் உடனே போய்ப் பார்க்கவேணும். நாளைக்கு மறுபடி வருகிறேன். மற்ற விஷயங்கள்…” என்று அவன் சொல்வதற்குள் குமாரி பங்கஜா, “ஐயோ! என்னை நீயும் விட்டு விட்டுப் போய்விட்டால் என் கதி என்ன?” என்று கூச்சலிட்டு, அவனுடைய சட்டைத் துணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
செங்கோடன் கையை ஓங்கினான்! பளீர் பளீர் என்று அவளுடைய ஒரு கன்னத்தில் இரண்டு அறை அறைந்தான். சுளீர் சுளீர் என்று இன்னொரு கன்னத்தில் இன்னும் இரண்டு அறை கொடுத்தான்!
“இதோ பார்; நான் போவதைத் தடுத்தாயோ உன்னை நானே இந்தப் பாறையிலிருந்து தள்ளிக் கொன்று விடுவேன்!” என்றான்.
குமாரி பங்கஜா விம்மிக்கொண்டே, “உன்னை நான் தடுக்கவில்லை. ஆனால் நீ என்னைக் கொன்றாலும் சரி, உன்னோடு நானும் வருவேன். எனக்கு வேறு நாதியில்லை!” என்றாள்.
செங்கோடன் முன்னால் விரைந்தோட, குமாரி பங்கஜாவும் இரைக்க இரைக்க அவனோடு ஓடினாள்.
– தொடரும்…
– பொய்மான் கரடு (குறுநாவல்), முதற் பதிப்பு: 1951.