பொங்கல் சீர்!
“”லதா எழுந்திரு… எப்போதும், போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காதே… இன்றைக்கு போகி அல்லவா, எவ்வளவு வேலை கிடக்கிறது,” என்றான் சந்திரன்.
“”என்னை சற்று சும்மா இருக்க விடுங்கள். போகிப் பண்டிகை யாருக்கு… எனக்கு இல்லை. என் அண்ணாவின் உயிரைப் பறித்த நாளில்லையா அது… இனி யார் வந்து எனக்குப் பொங்கல் சீர் வைக்கப் போறாங்க… எந்த சகோதரனுக்காக, நான் கனுப்பிடி வைக்கப் போகிறேன்?”
மனதிலுள்ள ஆற்றாமையெல்லாம், வெடித்துவரப் பொங்கினாள் லதா.
“”ஆனாலும் என்ன செய்வது… நீ இப்படி அழுது கொண்டிருந்தால், உன் அம்மாவுக்கு எப்படி இருக்கும்… எழுந்து உன் தாயாரை கவனி. விடியற்காலையிலேயே விழித்திருப்பார். போய் காபி போட்டு, ஆக வேண்டிய வேலையைப் பார்…” சமாதானப்படுத்தும் விதமாகப் பேசினான் சந்திரன்.
லதாவுக்கு கணவர் மீது கோபம் தான் வந்தது.
“சமாதானமடைகிற துயரமா இது?’
போன வருடம் கார்த்திகை மாதம், அவள் திருமணம் நடந்தது. அண்ணா ராகவன், அவளுக்கு தன்னால் முடிந்த வரை எல்லாம் செய்தான். சிறுவயதிலேயே, அவன் தகப்பனார் மாரடைப்பில் காலமான போது, அவன்
பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தான். அவன், தாய் சுந்தரி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
“அம்மா… நான் வேலைக்குப் போய், உங்களையும், லதாவையும் காப்பாற்றுவேன்…’ என்று, பெரிய மனிதன் போல, ராகவன் தான் தைரியமளித்தான்.
படித்து டாக்டராக வேண்டும் என்ற, தன் கனவையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் சாதாரண வேலையில் சேர்ந்தான். அம்மாவை அன்புடன் கவனித்து, தங்கையை அரவணைத்துப் படிக்க வைத்தான். லதா படித்து முடித்து, ஆசிரியை வேலையில் அமர்ந்தாள்.
ராகவனை மணம் செய்து கொள்ளும்படி அம்மா வற்புறுத்தினாலும், “லதாவுக்கு முதலில் கல்யாணம் ஆகட்டும்…’ என்று கூறி, தன் சேமிப்பையெல்லாம் செலவழித்து, அவளுக்குத் திருமணம் செய்து வைத்தான். சாதாரண அந்தஸ்து உள்ளவனாக இருந்தாலும், சந்திரனின் குணம் அவனை வசீகரித்தது. லதாவும் தன் சகோதரனின் விருப்பப்படி, சந்திரனை மணக்க சம்மதித்தாள்.
திருமணம் நடந்து, ஒரு மாதம் ஆகியிருக்கும். தங்கைக்கு பொங்கல் சீர் செய்ய என, ஸ்கூட்டரில் வந்தவன், லாரியில் அடிப்பட்டான். மருந்துவ மனையில், அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
“அம்மா… சொல்ல வருத்தமாக இருக்கிறது. உங்கள் மகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது. அவர் இனி பிழைக்க மாட்டார். ஆனால், அவரது உறுப்புகளைத் தானம் செய்தால், பல பேர் பயன்பெறுவர்…’ என்று சுந்தரியிடம் கூறினார் தலைமை டாக்டர்.
சுந்தரிக்கு தன் மகன் உயிருடன் இருக்கும் போதே, அவன் உடலிலிருந்து உறுப்புகளை நீக்குவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. லதா தான் முடிவெடுத்தாள்.
“அம்மா… அண்ணாவுக்கு, எப்போதும் எல்லாருக்கும் உதவி செய்வது தான் வாழ்க்கையின் லட்சியம் என்று உனக்குத் தெரியாதா… பிறருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால், தன் சுகத்தை என்றுமே கவனிக்க மாட்டான்… இப்போது அவன் மறைந்தாலும், அவனால் பலர் பயனடைவர். அவனுடைய அவயவங்கள், தீயில் கருகிப் போகாமல், மற்றவர்கள் உடலில் செயல் புரியும். அதனால், அண்ணாவின் ஆத்மாவும் சாந்தியடையும்…’ என்று பலவாறு கூறி, தன் தாயை, அக்காரியத்திற்குச் சம்மதிக்க வைத்தாள்.
ராகவனது கண்கள், சிறுநீரகம், இதயம் பிறருக்குப் பயன்பட்டன என்று கூறினர்.
ராகவனின் உயிர் போன பின், அவன் தாய் நடைபிணம் தான். லதாவின் கணவன், தன் மாமியார், தங்களுடன் தான் இனி இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி, அழைத்து வந்து விட்டான்.
ராகவன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், லதாவால் தன் சகோதரனை மறக்க முடியுமா?
எனினும் கடமையைச் செய்ய எழுந்தாள்.
சுந்தரி மனமும், உடலும் சோர்ந்து கிடந்தாள்.
“”அம்மா… காபி சாப்பிடு.”
“”வயிற்றில் பிறந்த மகனை வாரிக் கொடுத்துவிட்டு… நான் இன்னும் எத்தனை நாட்கள் காபி சாப்பிட்டுக் கொண்டு, இருக்கப் போறேன் லதா?”
“”என்னம்மா செய்வது… உயிர் இருப்பதும், இல்லாததும்… நம் கையிலா இருக்கிறது… உயிர் இருக்கும் வரை சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.”
வாசலில் கார் சப்தம் கேட்டது. யாராவது பக்கத்து வீட்டுக்கு வந்திருப்பர் என நினைத்தாள் லதா. ஆனால் வந்தவர்கள், அவளைத் தேடித்தான் வந்தனர். அவர்கள் ஒரு நடுத்தர வயது தம்பதி.
“”இது தானே ராகவனின், மைத்துனர் சந்திரனின் வீடு?” என்று கேட்டார் வந்த மனிதர்.
“”ஆம்… உள்ளே வாருங்கள்.”
அவர்கள் உள்ளே வந்து அமர்ந்தனர். அந்த அம்மாள் தான் பேசினாள்…
“”எங்களுக்கு இத்தனை நாட்கள் ஆயிற்று உங்களைக் கண்டுபிடிக்க.”
“”நீங்கள் யார் என்று தெரியவில்லையே?”
“”எங்களை உங்களுக்குத் தெரியாது சார்… நான் பாஸ்கரன், பங்கஜா மில்லில் மேனேஜராக இருக்கிறேன்…”
லதாவும், சந்திரனும் இவர்கள் எதற்கு வந்திருக்கின்றனர் என்று தெரியாமல், அவர்களே சொல்லட்டும் என நினைத்து பேசாமல் இருந்தனர்.
அந்த அம்மாள் தன் கணவரிடம், “”நீங்கள் ரொம்ப எக்ஸர்ட் பண்ணிக் கொள்ள வேண்டாம்… நானே எல்லா விவரமும் சொல்றேன்,” எனக் கூறிவிட்டு லதாவிடம், “”என் கணவர்… ஒரு இதய நோயாளி, இதயம் மிகவும் பழுதுபட்ட நிலையில், எந்த நிமிடமும் முடிவை எதிர்பார்க்கும் நிலையில் இருந்தார்… அப்போது அவருக்கு, ஒருவருடைய இதயம் தானமாகக் கிடைத்தது…
“”உன் சகோதரனுக்கு லாரியில் அடிபட்டு, மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது என்றதும், நீயும் உன் தாயாரும் அவருடைய இதயத்தைக் கொடுக்க முன் வந்தீர்கள். உன் அண்ணாவின் இதயமும், இவருக்குப் பொருந்தியது. நீ, உன் அண்ணாவை இழந்து விட்டாய். ஆனால், இவருக்கு <உங்களால் மறுவாழ்வு கிடைத்து விட்டது,'' என்றாள் அந்த அம்மா.
""அப்படியானால், இவரிடம் இருப்பது என் அண்ணாவின் இதயமா?''
""ஆமாம்... அம்மா, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. தானம் செய்தவர் யார் என்பது, எங்களுக்குத் தெரியக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், இவருக்கு இதயம் பொருத்திய டாக்டர், எங்களது நெருங்கிய நண்பர். நாங்கள் வற்புறுத்தியதன் பேரில், பொருந்தப்பட்டது யாருடைய இதயம் என்று தெரிவித்து விட்டார். இன்று தான் உங்களைப் பார்க்க முடிந்தது.''
""அப்படியானால்... லதா, இவர்தான் உன்னுடைய அண்ணா,'' என்றான் சந்திரன் வேடிக்கையாக.
உடனே பாஸ்கரன், ""உண்மை அது தான்... என் இதயம் உன் அண்ணனுடையது. எனவே, நீ என் சகோதரி, உன் அம்மாதான் என்னுடைய தா#, இனிமேல் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு,'' என்றவர், ""இந்தா... அண்ணனின் சீர்,'' என்றார்.
அவர் மனைவி, தன் பையிலிருந்து ஒரு பட்டுப்புடவை எடுத்து வைத்தாள்.
""டிரைவர்...'' என்று அழைத்தார் பாஸ்கரன்.
டிரைவர் கார் டிக்கியிலிருந்து கூடை கூடையாகப் பழங்களும், பட்சணங்களும் எடுத்து வந்தார்.
""அம்மா நான் தான் உங்கள் மகன்,'' என்று சுந்தரியை வணங்கினார் பாஸ்கரன்.
""இனிமேல் வருடத்தோறும்... என் சகோதரனுக்காக கனுப்பிடி வைப்பேன்,'' என்றாள் லதா.
சுந்தரியின் கண்களில் நீர் துளிர்த்தது; அது, ஆனந்தக் கண்ணீர்!
- விஜய ஸ்ரீ (மே 2012)