பெறுமதியற்ற ஓவியங்கள்
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 81
(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொழுது இன்னமும் நன்றாகப் புலரவில்லை.
ஜெகதீசன் இரவு முழுவதும் உறக்கமின்றிக் கட்டிலில் புரண்டு கொண்டு கிடந்து விட்டுக் கண்ணயர நினைத்த போதும் விடியற்புறத்தின் கலகலப்பொலி அவனது கண் ணயர்வைத் தடுத்தது. அணிற் குஞ்சுகள் “டிறிக் டிறிக்” என எழுப்பும் கீச்சிடலும், இப்போதே தொடங்கியிருக்கும் காகங்களின் கரைதலும் அவன் மனத்திற்கு மனோகரமான சங்கீதமாக இதமளிப்பது போன்ற உணர்வைக் கொடுத்தன.
இது வேடிக்கைதான். அதுவும் இரவு முழுவதும் கண் உறக்கமின் றிக் கிடந்தவனுக்கு கண்ணயரப்போகும் வேளை யில் மனதைக் குழப்பம் செய்யக்கூடிய இந்த ஒலிகளெல் லாம் சுகமான கீதமாயிருப்பது சிரிக்கத்தக்க அதிசயம் தான். ஜெகதீசன் மனத்திற்குள் புன்னகை செய்தான். தொலைவில் விடியற்காலை ஆறு மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் ரயிலின் இரைச்சல் கேட்டது. இவையெல்லாம் இந்த சூழல்களெல்லாம் ஐந்து வருடங்களாக அவனால் பிரியப்பட்டிருந்தவை.
ஐந்து வருடங்கள்; இந்த ஐந்து வருடங்களை இங்கிலாந் திலே கழித்துவிட்டு வந்திருக்கும் அவனுக்கு, தன்னுடைய கிராமத்தை இவ்வளவிற்கு மூர்க்கமாக ரசிப்பதற்கு ஐந்து வருடங்கள் பிரிந்திருந்ததுதான் காரணமாக இருக்க வேண்டும். இங்கிலாந்திலிருந்து விமானம் புறப்பட்ட திலிருந்து இலங்கை மண்ணில் அது இறங்கும் வரை தன் னுடைய கிராம நினைவுகளிலேயே அவன் மூழ்கி இருந்தான். விமானத்திலிருந்து இலங்கை நெருங்கியதும் அவன் யன்னல் வழியாகப் பரபரப்புடன் தரையைப் பார்த்தான்.
என்ன அழகான காட்சி நீல அலைகளெறியும் சமுத் திரத்தின் நடுவே பச்சைச் சோலையாய் இலங்கையின் ஒரு கரை தெரிந்தது. மனம் எல்லாம் மகிழ்வு பொங்கிற்று. அவ்வேளையும் தன் சின்னஞ்சிறு கிராமத்தை அவன் கண்கள் தேடின. பிறகு குழந்தைத் தனமான தனது யோசனைக்காக தன்னைத்தானே தன்னுள் கேலி செய்து கொண்டான்.
அவன் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் இங்கிலாந் திலிருந்து இலங்கைக்குத் திரும்பியிருந்தான். அதுவும் முதல்நாள் கொழும்பிலே நின்றுவிட்டு, நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திற்கு வந்து இருந்தான். அவனைப் பார்ப் பதற்குப் பகல் முழுவதும் அவனுக்குத் தெரிந்தவர்கள் வந்து போனபடி இருந்தார்கள். அவர்களுக்கு மிகவும் பொறுமை யாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அகம்பாவமற்ற ஜெகதீசனுக்கு விசால அறிவற்ற கிராமத்தின் இருதயம் புரியுமாதலால், அதில் சிக்கல் இருக்கவில்லை. அவன் போன தன் பின் அங்கு நடந்த திருமண, மரணப் புதினங்களைச் சிலர் தெரியப்படுத்தினார்கள். போகும்போது ஒற்றையாய்ப் போய், வரும்போது இரட்டையாக வராதேஎன்று சொன்ன சிலர், ஜெகதீசனைப் பார்த்துவிட்டு மனதுக்குள் வெறுமை யோடு போனார்கள். ஜெகதீசன் தனியாகத்தான் வந்திருந் தான்
அவன் பலரைச் சந்திக்க நினைத்திருந்தான். இங்கிலாந் தில் இருக்கும் போது பிரிவின் தாபத்திலே நினைத்த பலரை அவன் இன்னமும் பார்க்கவில்லை. இனி, இனித்தான் அவர் களைக் காண வேண்டும்.
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும்இடையில் ஏறக்குறைய ஐந்து மணி இருபது நிமிஷங்கள் நேர வித்தியாசம் இருக் கின்றது. இங்கிலாந்துக்குப் போன புதிதில், தனது விடு தியில் இருந்து கொண்டே, இப்பொழுது இலங்கையில் தனது கிராமத்தில் எத்தனை மணியாயிருக்கும் என அவன் கணக்கிடுவான். அது போலவேதான் தனது ஊருக்கு வந்த சில மணி நேரத்திற்குள் இங்கிலாந்தைப் பற்றி நினைத் தான்.
இப்போது விடியற்புறம் ஆறுமணியாக இங்கு இருந்தால் இங்கிலாந்தில் ஏறக்குறைய நடுச்சாமம் ஆகியிருக்கும். அங்கே நடுச்சாமம் கழிந்துதான் அவன் படுக்கைக்குப் போவான். கட்டிடத்துறையில் விசேஷ உபசாரச் சம்பளம் பெற்று இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்ற அவன், தன்னால் எவ்வளவிற்குக் கடுமையாக உழைத்துப் படிக்க முடியுமோ அவ்வளவிற்குப் படித்தான். அதற்குப் பிரதான காரணமான மொன்றும் இருந்தது. படிப்பதையும் ஏதாவது சிறு வேலை செய்து சம்பாதிப்பதையும் தவிர வேறு நிம்மதி தரக்கூடிய எதுவும் இங்கிலாந்தில் அவனுக்கு இருக்கவில்லை. அதுவும் அவன் தேம்ஸ் நதிக்கரையின் ஒதுக்குப்புறமொன்றில் கறுப்பர்களுக்கான விடுதி ஒன்றில் வசித்தவன். மத்தியதர வாழ்க்கையை வாழும் ஆங்கிலேயர்களே வாழ்க்கைச் செலவு களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், பிறதேசத்திலிருந்து அங்கு போனவர்கள் அங்கே சௌகரிய மாக வாழ்வதென்பது சாத்தியமற்ற விஷயம்தான்.
ஜெகதீசன் இலங்கையில் இருக்கையில் இங்கிலாந்தைப் பற்றி ஆயிரம் கனவுகளினைக் கண்டிருந்தான். திரைப்படங் களில் ஆங்கிலேயக் கதாநாயகர்களும் நாயகிகளும் சௌந் தரியமான மாளிகையில் சுகபோகம் அணுவளவும் குறை யாது வாழ்ந்தார்கள். தேம்ஸ் நதிக்கரையின் வாழ்வு எப்படி யெல்லாம் சொர்க்கலோக வாழ்வாக சித்திரிக்கப்பட்டதை அவன் கண்டு, ஆகா வாழ்ந்தால் இந்த மண்ணிலல்லவா வாழ்ந்து மடியவேண்டும் என்று பெருமூச்செறிந்தான். அந்த மன ஏக்கம் திடீரென்று பலித்தது; அவன் இங்கிலாந் துக்குப் போனபோது. அதுவும் தேம்ஸ் நதிக்கரையோர விடுதியில் போய்ச் சேர்ந்தபோது…
இலையுதிர்காலத்தின் போதுதான் அவன் இங்கிலாந்தில் காலடி எடுத்துவைத்தான். இலை உதிர்த்தி மொட்டை யாக நிற்கும் பசுமையற்ற மரங்களைக் கண்டால் அவனுக்கு முற்றாகவே பிடிக்காது. வாழ்க்கையிலே விரக்தியைத் தரும் ஒரு குறியீடாக அம்மொட்டை மரங்கள் தெரியும் – அந்தக் கசப்புணர்ச்சி மாற முதல் அவனை அவனது மற்ற நண்பர்கள் நிஜ உலகத்திற்குக் கொண்டுவந்தபோது அவனுக்கு மனதில் குதூகலம் அமுங்கிப் போய்விட்டது.
இங்கிலாந்தில் படிக்கப்போய் சிலநாட்களுக்குள்ளேயே பட்றிக்ஸ் என்ற நீக்கிரோஅவனுக்கு சிநேகிதமாகிவிட்டான். கம்பீரத்தின் உருவமாக பட்றிக்ஸ் விளங்கினான். சத்தியத்தின் குரல்போல அவனது கணீரென்று குரல் ஒலிக்கும் ஜெகதீசனும் இங்கிலாந்துக்குப் போகு முன் நீக்கிரோக்களைப் பற்றி மிகக்குறைவான அபிப்பிராயம் கொண்டிருந்தான். ஆனால் இங்கிலாந்துக்குப் போனதின் பின்புதான் தானும் ஒரு கறுப்பன் என்ற உணர்வு அவனுக்குக் கிட்டிற்று உலகின் சிறந்த புதல்வர்களில், நீக்கிரோக்கள் முன்னிருக்கும் தகுதி பெற்றவர்கள் என்ற உண்மையை பட்றிக்ஸ் மூலம் அவன் அறிந்தான்.
பட்றிக்ஸ் என்றும் கனன்றெரியும் தீப்பிழம்பாகவே இருந்தான்.
தேம்ஸ் நதிக்கரையோரமாக பட்றிக்சோடு அவன் ஒரு நாள் நடந்து போய்க்கொண்டு இருந்தான். தேம்ஸ் நதிக் கரையோரம் பார்ப்பதற்கு மிகவும் அருமையானது. மிகவும் ரம்மியமானது. எங்கும் தெரியும் மின்சார விளக்குகள் நீருக்குள் நிழலாய் விழுந்து தங்கப் பூச்சிட்டு தளுமபிக் கொண்டிருந்தன. நிறநிறமான விளம்பர மின் விளக்குகள் ஒளிப்பொறிகளாய் எங்கும் தெரிந்துகொண்டிருந்தன. ஒரு தொழில் நகரம் என்ற வகையில் அதன் முழு இயக்கமும் இருந்தது.
என்னவோ தெரியாது, போன புதிதில் மங்கலான மாலைப் பொழுதில் தேம்ஸ் நதிக்கரையோரமாக நடந்து கொண்டிருக்கையில் பாதையிலிருக்கும் இரவுவிடுதியிலிருந்து மெல்லிய சங்கீதம் எழுகையில் ஜெகதீசனுடைய மனம் அவனுடைய கிராமத்துக்கு வந்துவிடும். அங்கும் அதி காலையின் போது அவனை மயக்கும் இனிய கீதம் கேட்கும் அந்தக் கீதத்துக்குரியவன் சிதம்பரம். வசீகரிக்கும் அவனின் இனிய கீதம் தன் நினைவோடு இவ்வளவு அழுத்தமாகப் பின்னியதை இங்கிலாந்திலே தான் ஜெகதீசன் உணர்ந்து கொண்டான்.
பட்றிக்ஸ் ஜெகதீசனைப் போல எதையாவது நினைத்துக் கொண்டு வந்திருக்கவேண்டும், மௌனமாகவே நடந்து வந்தான். ஜெகதீசன் தன்னை மீறி ஆங்கிலத்தில் சொன்னான்.
”ஆகா! தேம்ஸ் நதிக்கரையோரம்தான் என்ன அழகாய் இருக்கிறது.” அவன் குரலில் சிந்தனை கலைந்த பட்றிக்ஸ் அவனை மேலுங் கீழுமாக பார்த்தான்.
“ஜெகா, அழகென்றால் என்ன?”
ஜெகதீசன் சிரித்தான், “அழகென்றால் அழகுதான்.’ ஜெகதீசன் சொல்லிய பதிலுக்கு பட்றிக்ஸ் தனக்குரிய கோபத்தோடு வெகு நிதானமாகப் பதில் சொன்னான்:
“எதையும் ஆழமாகச் சிந்திக்க மறுப்பவனுக்கு எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கும். ஆனால் விசித்திரம் என்னவென்றால் அதையே, அந்தக் குழப்பத்தையே அவன் உண்மையென நினைத்துக் கொள்ளுகின்றான். இந்தத் தேம்ஸ் நதிக்கரையோரம் அழகானது என்று சொல்லும் நீ, நல்ல நீக்கிரோவை அழகனென்று சொல்வாயா?… அழகென்பது உடையிலோ உடல் உறுப்புக்களிலோ இல்லை. படித்துப் பட்டம் பெற்றுத் தனக்குச் சமமான மனிதனை அடக்கு பவனை நீ அழகென்று சொல்லுவாய்! மனிதனை அடக்கிப் பிழியும் ஆலைகளின் வெளித்தோற்றம் மிகவும் ரம்மியமான தென்று நீ சொல்லுவாய்! ஆனால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். அழகான உடை உடுத்தியவர்களோடு அழுக்குப் பிடித்த உடையுடுத்திய நேர்மையான உழைப் பாளிகளை ஒப்பிட்டு நான் உழைப்பாளிகளை அழகர்களாகக் காண்பேன்.” அவன் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான்:
“அவர்களின் கைகள் அழுக்கு அடைந்தும், கால்கள் சாணம் படிந்து இருந்தாலும் அவர்கள் இதயம் நேர்மையாலும் சத்தியத்தாலும் நிரம்பியிருப்பதால் அவர்களையே நான் மிகவும் பரிசுத்தமாகக் காண்பேன்… கறுப்பர்களை மனிதர்களாக மதிக்கத் தயங்கும் ஹோட்டல்கள் நிரம்பி வழியும் செல்வந்தப் பூதங்களின் களிப்பிடத்தை, தேம்ஸ் நதிக்கரையோரத்தை என் கண்கள் அழகானவையென்று மதிக்காது.”
ஜெகதீசன் அவனை இடைமறித்தான்.
“அப்படியானால் எதைத்தான் அழகென்று மதிப்பது?”
ஜெகதீசனின் அப்பாவித்தனமான கேள்விக்கு பட்றிக்ஸ் சிரித்த முகத்துடன் சொன்னான்:
“நேர்மையோடு இருட்டில் கிடக்கும் மக்களுக்காக எவன் உழைக்கிறானோ அவன் அழகன். யாரையும் கழுத்தறுக் காமல் உழைப்பை எவன் மதிக்கிறானோ அவன் சத்தியவான். தன்னுடைய படிப்பையும் உழைப்பையும் மனித குலத்தின் சமத்துவ வாழ்விற்காகக் கொடுக்க எவனுடைய இதயம் துணிகின்றதோ அவனுடைய தோற்றமே அழகானது… இவர்களெல்லாம் ஆடையால் அழுக்குப் படிந்தோ, நிறத் தால் மங்கலடைந்தோ இருந்தாலும் இவர்களே அழகான வர்கள். யாரையும் சுரண்டாத ஆலைகளும் மக்களுக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்து விற்கும் தொழிற் சாலைகளும், ஆடம்பரத்திற்காக அன்றி நிம்மதிக்காகப் பயன்படும் இயற்கைச் செல்வங்களும்தான் அழகானவை. இவற்றிற்கு மாறான யாவுமே கோரமானவை; அசிங்கமானவை.”
பட்றிக்ஸ் சொல்லி முடியவில்லை. மௌனமாக நடந்து கொண்டிருந்த ஜெகதீசனைப் பார்த்துவிட்டு மூக்கைக் கசக்கிக் கொண்டான். பட்றிக்ஸ் ஓயாத படிப்பாளி. அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கதைக்கும் வேளையில் அவனது கறுத்த அந்த முகத்தில் புதிய பிரகாசமொன்று சுடரிட்டுக் கண்கள் சிவப்பேறும். யாரையோ, தன்னை அமுக்கி வைத் திருக்கும் யாரையோ பெருவிரலால் நசித்து அழிக்கத் துடிக்கும் வீராவேசத்தவனாய் அவன் ஜெகதீசனின் முன்பு நிற்பான். அதே போலத்தான் இச்சந்தர்ப்பத்திலும் அவனது முகபாவம் விளங்கிற்று.
“ஜெகா, இன்னமும் நீ மடைத்தனமான கருத்துக்களை உன் மண்டைக்குள் வைத்திருக்கிறாய். ஏதோ நிறையப் படித்தவன் போலவும் புத்திஜீவி போலவும் உன்னை நினைக் கிறாய். ஆனால் இன்னமும் உலகத்தை பகுத்துணர உனக்குத் தெரியவில்லை. மத்திய தர வகுப்பின் அற்பத்தனமான குடும்ப உணர்வுகள் உனக்குத் தெரியாமல் உன்னில் நன்றாக ஊறியமையால்தான் நீ பல விஷயங்களைத் தெரியாமலே காவியாய் இருக்கிறாய்.’
அவன் எதையும் நேர்நேராகத்தான் பேசுவான். நல்ல மனிதனுக்கு அது அடையாளமென ஜெகதீசன் அறிவானாத லால் மௌனமாயிருந்த போதும் அவன் சொன்ன கருத்துக் கள் ஜெகதீசனின் நெஞ்சைத் துளைத்தன. மௌனமாகி நடந்து பட்றிக்ஸ் எதையோ கண்டுவிட்டுச் சட்டென்று நின்றான். அவன் கை, தேம்ஸ் நதியின் எதிர்ப்புறம் உள்ள வீதியின் முடக்கைத்தான் சுட்டிக் காட்டியது. அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான் ஜெகதீசன் கம்பீரமான பட்றிக்ஸின் பின் சென்றான்.
அந்த முடக்கின் ஒரு தரையிலே ஓவியங்கள் சில வைக் கப் பட்டிருந்தன ஓவியங்களுக்கு காவலாளிபோல மூலையி லிருந்த ஒரு ஆங்கிலேயன் எங்கோ லயித்த சிந்தனையில் இருந்தான்.
ஜெகதீசனுக்கு அதிசயமாக இருந்தது.
அவனுடைய உணர்ச்சிகளைக் கவனியாமலே பட்றிக்ஸ் சொன்னான்.
“ஒரு ஓவியத்தை எடுத்துப் பார்”
ஜெகதீசன் அந்த அடுக்கில் ஒரு ஓவியத்தை எடுத்தான். கட்டிடக் கலைஞன் என்ற வகையில் ஓவியத்துறையிலும் தனிப்பிரீதி உண்டென்பதை பட்றிக்ஸ் அறிவானாதலால் தான் தன்னை அங்கே அழைத்து வந்தான் என்பதை ஜெகதீசன் இப்போது அறிந்துகொண்டான்.
இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கும் மின்சார வெளிச் சத்தில் ஓவியமொன்றைப் பார்வையிடுவது அவ்வளவு புத்திசாலித்தனமானது அல்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தான் அந்த ஓவியத்தை ஜெகதீசன் கைகளில் எடுத்தபோதும், அந்த நினைவு படத்தைப் பார்த்த கணமே பக்கென்று மறைந்தது. ஜெகதீசன் படத்தோடு
ஒன்றி விட்டான். அந்தப் படத்தில் ஒரு சுரங்கத் தொழிலாளி வரையப்பட்டு இருந்தான். வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் தொழிலாளியின் கண்களிலே களைப்போடு கலந்த சந்தோஷத்தை, அந்த ஓவியன் என்ன அற்புதமாக வரைந் திருந்தான். ஜெகதீசன் பட்றிக்ஸ் சொல்லாமலே மற்ற ஓவியங்களை எடுத்துப் பார்த்தான். வெறும் வண்ணக்கோடு களல்ல; உயர்ந்த ரக வர்ணக் கலவைகளுமல்ல. வெகு சாதாரணமான மட்டரகமான வர்ணங்களால் அது வரையப் பட்டிருந்தபோதும், அவற்றிலே ததும்பும் ஜீவகளைக்கு ஈடிணை இருப்பதாய் தெரியவில்லை.
அதன் சிருஷ்டியாளன் ஒரு வீதியோர ஓவியன்.
“பார், சுதந்திரமான உலகத்திலே, நீ கூறும் சுதந்திர மான உலகத்திலே கலை எவ்விதமான மகிமையோடு கௌர விக்கப் படுகின்றது.” அவனின் கண்கள் சிவக்க, தேம்ஸ் நதிக்கரை வெளிச்சத்தைப் பார்த்தபடியே ஆவேசம் பொங்கச் சினந்தான்,
“கழுத்தறுப்பும், போட்டியும். சுயநலமும்தான் மனிதன் முன்னேற அத்தியாவசியமான குணங்களென்று கருதப் படும்அமைப்பில் பணமே யாவற்றிற்கும் அளவுகோலென்று, எல்லாமே விலைப்பொருளென்று இயங்கும் போலித்தன மான இயக்கத்திலே உண்மைச் கலைகள், மக்கள் கலைகள் இப்படித்தான் திக்கித் திணறுகின்றன.”
பட்றிக்ஸின் ஆத்திரவசப்பட்ட, தன்னை ஆதரிக்கின்ற குரலிலே அந்த ஓவியன் கவனமடைந்து பட்றிக்ஸைப் பார்த் தான். நீக்ரோவென்றாலென்ன, ஆங்கிலேயனென்றாலென்ன சரியான நோக்கங்களும் கருத்துக்களும் வாழ்க்கை முறை களும் அவர்களை மிகவும் நெருங்கவைத்து விடுகின்றன. ஓவியன் பட்றிக்ஸைப் பார்த்து கனிவுமிழச் சிரித்தான்.
“ஆங்கிலேயனுக்கு மட்டுமல்ல இந்தச் சோதனை. கலைகள் விலைப் பொருளாகும் எல்லா நாட்டில் உள்ளவனுக்கும்தான் இந்த வேதனை. வியாபார நோக்கில் இயங்குகின்ற சமுதாயங்கள் நிலவும்வரை கலைநுகர்ச்சி சிலரின் இழிந்த போகப் பொருளாகவே இருக்கும். பணமுள்ளவனே எல்லா வாய்ப்பும் பெறுவான். சிறந்தகலைஞன் இதனால் தூரிகையை யும் பேனாவையும் வெறுத்தொதுக்கவும் கூடும். கிழக்கென்றா லென்ன மேற்கென்றாலென்ன இதுதான் விதியாயிருக்கின்றது.”
அந்த ஏழை ஆங்கில ஓவியனுடைய புருவங்கள் நெரிந்தன.
“நானும்தான் சில வேளைகளில் அப்படி நினைத்ததுண்டு, ஆனால் இந்தக் கேவலமான விதியைக் காலடியின் கீழ்ப் போட்டு நசித்து ஒரு புதிய உலகம் தோன்றுமென்ற நம் பிக்கையில் தான் நான் என் தூரிகையை எறியாமல் இருக் கிறேன்”- வீதியோர ஓவியனின் குரல் அழுத்தமாகக் கணீ ரிட்டது. அவன் பேசிக்கொண்டிருக்கும்போது ஜெகதீசனின் சிந்தனை எங்கெங்கோ தொட்டு தனது சொந்த ஊரிலே போய் நின்றது. விடியற்புறவேளையிலே தனது வீட்டடியால் பாடிக்கொண்டு போகும் சிதம்பரத்தை அப்போது அவன் நினைத்துக்கொண்டான். அந்த மெலிந்த கறுத்த பதின்மூன்று வயதுச் சிறுவன் சிதம்பரம் இங்கிலாந்தில் ஜெகதீசனுக்கு அடிக்கடி நினைவில்வந்த ஒருவன். நாட்டுக்கூத்தை பரம்பரை யாக ஆடி வந்த குடும்பத்தில் பிறந்த சிதம்பரம், எந்த ஒரு பாட்டைக் கேட்டாலும் அதை அப்படியே மனத்திலே பதித்துப் பாடும் கூர்மையான சங்கீத இதயமுள்ளவன். சிதம்பரத்தைப் பற்றி ஜெகதீஸன் பட்றிக்ஸுக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறான்.
“பட்றிக்ஸ், எனக்குச் சங்கீதத்தைப்பற்றி அதிகம் தெரி யாது. ஆனால் எனக்கு மனத்தை உருக்கும், உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் கீதங்களை விளங்கிக்கொள்ள முடியும். எனது வீட்டு ஒழுங்கையின் கடைசி வீட்டில்தான் அந்தப் பதின்மூன்று வயதுச் சிறுவனான சிதம்பரம் வாழ்ந்தான். அதிகாலையில், மெல்லிய தென்றல் வீசும் சத்தமடங்கிய அதிகாலையில் அவன் பாடும்போது, கேட்பவன் தன்னை மறந்து அந்த ஒலிக்காற்றோடு சேர்ந்து உலாவி வருவான். எங்கள் ஒழுங்கை முழுவதும் அவனின் அந்தப் பாடல்களுக் காகக் காதுகொடுத்துக் காத்திருக்கும்.’ ஜெகதீசன் சொல்லி முடியுமுன் பட்றிக்ஸ் ஜெகதீசனைப் பார்த்துத் துருவும் குரலிற் கேட்டான்.
“அவன் வசதியான குடும்பத்தில் உள்ளவனா?”
“இல்லை. ஆனால்அவன் தகப்பனார் தன்னால்இயன்றவரை அவனைப் படிப்பித்து தமிழில் பிரபல பாட்டுக்காரரான தியாகராஜா பாகவதர்போல ஆக்குவதாய் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். இப்படியொரு உற்சாகமே சிதம்பரத்தைப் பெரிய பாட்டுக்காரனாய் ஆக்கிவிடுமல்லவா எனக்கு அவன் எல்லோரும் புகழும் பாட்டுக்காரன் ஆவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு… உனக்கு?”
பட்றிக்ஸ் சட்டென்று சொன்னான். “நான் அப்படி நினைக்கவில்லை.”
அவன் சொன்னது ஜெகதீசனுக்கு முரட்டுத்தனமாகப் பட்டபோதிலும், ஜெகதீசன் அவனோடு தொடர்ந்து அதைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை.
எங்கொல்லாமோ போய்க்கொண்டிருந்த ஜெகதீசனின் சிந்தனை அவன் தங்கச்சி சாவித்திரியின் குரலால் மண்ணிற்கு வந்தது.
“அண்ணா கோப்பி குடியுங்கள்.”
ஜெகதீசன் சாவித்திரியைப் பார்த்தான். நேற்றும் பார்த்ததுதான். ஆனால் ஐந்து வருஷத்திற்குள்தான் அவள் எப்படி வளர்ந்துவிட்டாள். சட்டென்று நினைவு வந்தது. அவளும் சிதம்பரமும் ஒன்றாகத்தான் படித்தவர்கள். அவளை விசாரித்தால் சிதம்பரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
“சாவித்திரி, இப்போது சிதம்பரம் என்ன செய்கிறான்?”
சாவித்திரி பிடரியைத் தடவியவாறே அசிரத்தையாகவே கேட்டாள், “எந்தச் சிதம்பரம்?”
“தெரியாதா? நன்றாகப் பாட்டுப் பாடுகின்ற அந்தச் சிதம்பரம்.”
‘ஓ! அவனையா கேட்டீர்கள்?’ என்ற பாவனையில் வெகு அலட்சியமாகவே சாவித்திரி பதில் சொன்னாள்.
“அந்தச் சிதம்பரம் எங்கையோ கடையில் நிக்கிறதாக்கும்… மருந்துக் கடையிலை… இப்ப இரண்டு வருஷமாயிருக்கும் மருந்துக் கடையிலைப் போய்.”
அவள் ஏதோ தொடர்ந்து சொல்லிக் கொண்டு போன போதும் அவற்றை ஜெகதீசன் கேட்கவேயில்லை.
அவள் பதில் ஜெகதீசனை தூக்கி வாரியது! சிதம்பரம் மருந்துக் கடையிலா?
சிதம்பரம் உன் இனிய கீதம் மூச்சடங்கிப் போயிற் றாடா? உனக்குப் பாடுவதற்கு வாத்தியக் கருவிகள் தேவை யில்லையேடா? நீயேதான் பாட்டாயும், வாத்தியங்களுமாய் கீதத்தின் தலைவனாக இருந்தாயே…சீ! என்னடா உலகம் இது…
ஜெகதீசனுக்கு முன்னால் பட்றிக்ஸ் நின்று ஓங்காரமாகச் சிரித்தபடி கண்கள் சிவக்க முழங்குவதுபோல இருந்தது. இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கரையோரம், அந்த வீதியோர ஓவியன், இலங்கையின் கொழும்புத்துறை, கீதத்தின் கீதமான சிதம்பரம், இப்போது மருந்துக் கடையில் மருந்து வேர் விற்கும் கடைச் சிப்பந்தியான சிதம்பரம்…
– 1968
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026
எமன் அக்காள் கழுதை
நாகரத்தினம் கிருஷ்ணா
August 19, 2026
அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
August 16, 2026
