நேற்றைய அடிமைகள்
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 84
(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளித்துக் கொண்டு நின்ற தாயின் முதுகையே பார்த் துக்கொண்டு நின்றாள் தங்கமணி. தாய் செல்லியின் முதுகில் நீண்ட ஆறிப்போன தழும்பு ஒன்று பெரிதாகத் தெரிந்தது. பொது நிறமான அவளது முதுகில் அந்த நீளமான வடு பளீச்சிட்டது. அந்தத் தழும்பின் வயது பதினாறு வருஷங்கள். பதினாறு வருஷங்கள்தான்; அவளின் தம்பி சூரியனின் வயதுதான் அந்தத் தழும்பிற்கும். சூரியன் செல்லியின் வயிற்றில் உருண்டு புரண்டு வெளிவரத் துடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற போதிலேதான் அவளுக் கும் அந்தக் காயம் உண்டானது. தங்கமணியின் நெஞ்சி னுள்ளே ஆத்திரம் மூண்டு ஜுவாலை எழுப்பிற்று. அவளுக்கு கலியாணமாகிப் புருஷனோடு வேற்றூரில் வாழப் போய் மூன்று ஆண்டுகள் போய்விட்டன அதன்பிறகு தாயையும் தம்பியையும் பார்க்க அவள் மீண்டும் வீட்டிற்கு வந்திருக் கிறாள். நேற்று மாலையிலேதான் வந்தாள்.
”மோனை,கொடியிலை காயிற அந்தச் சேலையை ஒருக் கால் எடுத்து தா”
தாயின் குரலைக் கேட்டதும் தங்கமணி மேற்புறத் தென்னைகளில் கட்டப்பட்டிருந்த கொடியிலே காய்ந்த சிவப்புச் சீலையை எடுத்து வந்து தாய் செல்லியிடம் கொடுத் தாள். தாய் உடலைத் துடைத்துக் கொண்டு, சீலையை உடுத்துக் குறுக்குக் கட்டாகக் கட்டிக் கொண்டாள். உள்ளே போய்த்தான் இறவிக்கைப் போடப் போகிறாள் போலும்,
“தம்பி எங்கை போயிட்டான்?”
செல்லி அந்தக் கேள்விக்கு நிறைவோடு பதில் சொன்னாள்: “உன்ரை அவரோடை சேர்ந்ததுக்குப் பிறகுதான் அவன் முற்றாக மாறிப் போட்டான் முந்தியென்றால் படவிசர். இப்ப அவனுக்குப் படமும் பிடிப்பில்லை. ஊருலாத் திறதும் விருப்பமில்லை. கூட்டமும் புத்தகங்களும்தான் அவனுக்கு இப்ப துணையாப் போச்சு”
மனங் குளிர தங்கமணி புன்னகை செய்தாள். சூரியன் மட்டுமென்ன, தானுங் கூட எவ்வளவு மாறிப் போய் விட்டாள். அதை நினைக்கும் போது அவளிற்கு வாழ்வு பூரண அர்த்தமுள்ளதாகத் தெரிகின்றது. அவளின் கணவன் கனகுதான் எல்லாவற்றிற்கும் காரணம். அவனைக் கணவ னாகக் கொண்டமையினால் வாழ்விலே புதிய பிரகாசத்தை யும் அவள் கண்டாள். எல்லாமே விதியென்றும் நியதியென் றும் நம்பிநம்பி வாழ்ந்த, கடந்துபோன வாழ்வின் நாட்களை யெல்லாம் அவள் மிகக் கசப்போடு நினைவு கூர்வாள். அந்த வாழ்வு பற்றிய எண்ணங்கள் அவள் போன்ற மிகச் சிலரின் நெஞ்சிலிருந்து நீங்கிப் போயிருக்கலாம். ஆனால் அறிவின், புதிய சிந்தனையின் ஒளியே புகமுடியாத பல கிராமங்களில் அது இன்னும் உயிர் வாழ்ந்து வருவதையும் அவள் நன்றாகவே அறிவாள்.
நேற்று மாலை அவள் தன்னுடைய தம்பி சூரியனோடு தான், வேற்றூரிலிருந்துதான் பிறந்த ஊருக்குத் திரும்பி வந்தாள். திருமணமாகிப் போனதன் பின்னர் மூன்றாண்டு கள் அவள் பிறந்த ஊருக்குத் திரும்பிய போது, ஊரின் முதல் அழைப்பாளி போலச் சடைத்து நிற்கும் ஆலமரத்தை மிகக் கூர்மையாகப் பார்த்தாள். ஆலமரத்தின் நெஞ்சிலே பெரிய நோட்டிஸ் ஒன்று ஒட்டப் பட்டிருந்தது. கூர்ந்து பார்க்கிறாள். “அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலயக் கதவுகள் திறக்கட்டும்” என்ற எழுத்துக்கள் அவளை எதிர்கொண்டன.
எதிர்கொண்டன. சூரியனை அவள் பார்த்தாள். அவன் அர்த்தபுஷ்டியோடு சிரித்தான்.
“என்ன நோட்டீசைக் கிழிக்காமல் விட்டிருக்கிறார் கள்…?” தங்கமணி அதிசயத்தோடு கேட்டாள்.
“இந்த ஆலமரத்திலை இவ்வளவு கெட்டித்தனமாய் ஏறி நோட்டீஸ் ஒட்ட நாங்கள் பட்டபாடு எவ்வளவு. இதிலை ஏறிக் கிழிக்கிறதெண்டால் லேசான வேலையில்லை? அப்படி ஆருந் துணிவு வந்து கிழிச்சாலும், அவன்ரை உடம்பைக் கிழிச்சு அந்த ரத்தத்தாலை இந்த ஆலமரத்திலை எழுதுவம். இது கிழிக்கிறவனுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும்.”
தங்கமணியின் உடல் சிலிர்த்தது. சூரியனைப் பார்த் தாள். பதினாறு வயதான அவனது நெஞ்சிலே எவ்வளவு துணிவும், பழிவாங்குமுணர்வும் மிகுந்து நிற்கிறது. தகப்பனைப் போலவே எவ்வளவு உறுதியாகச் சொல்கிறான்.
”அக்கா, முந்தியைப்போலை இல்லை இப்ப நிலைமை. காலம் மாறியிட்டுது. இரத்தக்கடனை இரத்தத்தால் தான் தீர்க்க முடியும் என்ற உண்மை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிட்டுது. ஒரு பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முந்தி நாங்கள் நாயிலும் கீழாயிருந்தம். இனி அப்படி இருக்கவே ஏலாது. இங்கை எனக்குப் பல கடனுகள் இருக்குது.”
தங்கமணி அவன் பிறந்த நாளை நினைவில் எடுத்தாள். அவன் இரத்தம் கசிந்த சீலையிலேதான் பிறந்தான். அதுவும் சாதிப் போராட்டம் ஒன்றின் முற்றிய நிலையிலே, அடக்கு முறையின் கொடிய நகங்கள் பெற்றவளைப்பற்றி பிறாண்டிய உணர்ச்சிப் பெருக்கான நேரத்திலே, தாயின் கோபம் ததும்பிய சபதத்தின் ஒலியிடையேதான் இரத்தப் படுக்கை யிலே அவன் விழுந்து தன் முதற்குரலை எழுப்பினான்.
தங்கமணிக்கு அப்போது ஆறுவயது. அவள் மொழு மொழுவென்று தோன்றுவாள். துணிந்த தாயின் நெஞ்சம் போலவே அவளுக்கும். தகப்பனைப் போலவே அடர்ந்த கூந்தல் அவளுக்கு. கூந்தலைப் பின்னி அழகோடு விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறிய பிஞ்சுக் குழந்தை அவள் தான். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள் அங்கே எல்லா விதத்திலும் உரிமை மறுக்கப்பட்டிருந்தார்கள். கிணற்றில் நீர் அள்ளக்கூடாது. கோயிலுக்குள்ளே போகமுடியாது. பெண்கள் மேற்சட்டை அணியக்கூடாது. பள்ளிக்கூடத்திற்கு அவர்களின் பிள்ளை களுக்கு அனுமதியில்லை. ஐயா அம்மாக்களுக்கு வழி வழி வேலை செய்யவேண்டியதே அவர்களுக் யாக அடிமை குள்ள கடமையும் உரிமையுமென அவர்கள் நம்பியிருந்தார் கள். அந்த நம்பிக்கையென்ற விலங்கினைத் தங்கள் கை களுக்கு தாங்களாகவே அவர்கள் பூட்டியிருந்தார்கள். செல்லியை கலியாணம் முடித்தவன் முருகன். முருகன் அந்த ஊரிலே பிறந்து வளர்ந்தவனல்ல. அந்த ஊர் மக்கள், ஐயாக்களின் நிலங்களிலே பிணைக்கப்பட்டவர்கள், காலங் காலமாக அவர்களுக்கு வாயை மூடிக்கொண்டு சேவகம் செய்வதற்கு அவர்களாலே பணிக்கப்பட்டவர்கள். முருகன் அந்தக் கிராமத்துக்கு தன்னுடைய வந்த புதிதிலே, கிராமத்தைவிட அங்கே கொடுமையான ஒடுக்கு முறைகள் கண்டான். இயல்பாகவே துணிவுள்ள நிலவுவதைக் முற்கோபி அவன். திருமணமாகி நாலைந்து வருஷங்களில் ஊரின் ஒதுக்குப்புறத்திலுள்ள காட்டுக் காணியில் பல எதிர்ப்புகளுக்கு நடுவே அவன் ஒரு குடிசை போட்டுக் கொண்டான். அவனது கையிலே எந்த நேரமும் பள பளத்துக் கொண்டிருக்கும் பாளை சீவும் கத்தி, பலரையும் அவனிடம் வாலாட்டாமற் செய்திருந்தது. முதன் முதலாகத் தன்னுடைய மனைவி செல்லியை அவன் இரவிக்கை அணியச் செய்தான். அங்கே அதுவரை ஒடுக்கப்பட்ட மக்கள் மேற் சட்டை போட்டதில்லை. போடவும் முடியாது. முருகனின் உடல்பலம் நம்பிக்கையளித்த துணிவிலே செல்லி அந்த இர விக்கையை அணிந்து கொண்டாள். அழகை அள்ளித் தெரியவைக்கும் அவளின் புதிய தோற்றம் முருகனை மட்டு மல்லாது, செல்லியைச் சேர்ந்த அனைவரையுமே கிறங்க வைத்தது. செல்லியைப்போல இரவிக்கை அணியப் பலரும் விரும்பினார்கள் துணிவுள்ள சிலரின் மனைவியரும் பிள்ளை களும் செல்லியைப் போலவே இரவிக்கையை அணியத் தொடங்கினார்கள். உழைத்து வனப்பேறிய அவர்களின் உடல்வாகிற்கு இரவிக்கை மிகவும் வசீகரமாகவேயிருந்தது. இவற்றையெல்லாம் கண்ணுற்ற உடையார் கருணாகரர், மணியகாரர் நடராசா போன்றவர்களுக்குச் சொல்லொணாத ஆத்திரமேற்பட உறக்கமின்றிப் படுக்கையிலே உழன்றார் கள். காலங்காலமாக முன்னோர்கள் கட்டிக்காத்து வந்த மரபுகளை இந்தக் கீழ்சாதிகள் நொறுக்கித் தள்ளுகிறார்களே என்று கொதித்தார், சமாதானநீதவான் கனகசபை. ‘இரவிக்கையோடு இன்று போவார்கள், நாளை எங்கள் வீட்டிற்குள் வந்து சம்பந்தஞ் செய்யக் கேட்பார்கள்” என்று துள்ளியடித்தார் அய்யாசாமி. “என்னுடைய அதிகாரமிருக்கேக்கை இப்பிடி நடக்கவேணும், இவர்களை வீடு பூந்து எலும்பெலும்பாய் நொறுக்கியெறிவன்” என்று மீசையை முறுக்கிக் கொண்டு அங்குமிங்கும் உலாவினார், இளைப்பாறிய பொலிஸ்காரரான மாணிக்கத் தம்பியர். கடைசியில் எல்லோரும் கூடியோசித்தனர். எல்லோருடைய ஆத்திரமும் முருகனின் மேலேயே பாய்ந்தது. அவன்தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஏதோ ஒரு விதத்தில் முயன்று அவனை முடித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் சந்திப்பின் முடிவாக இருந்தது. எதிலும் நசிந்து கதைப்பவ ரான தரகர் கனகையா ஒரு ஆலோசனை சொன்னார்:
“முருகனை முடிக்கிறதெண்டால் சுகமான வேலையில்லை. அவன்ரை கூட்டாளியளும் பயங்கரமானவங்கள். பிறகு கரைச்சல் தொடரும். முதலிலை முருகனைக் கூப்பிட்டு நய மாகச் சொல்லிப் பார்ப்பம். அவன் கேக்கையில்லை எண்டால் வேறை ஒரு வழியிருக்கு… அவங்கடை ஆக்களிலை ஒருத்த னோடை முருகனுக்கு வெட்டுப் பழியிருக்குது… அவனை நாங்கள் முடிச்சிட்டு முருகனிலை வலு சுகமாக் கொலையைத் திருப்பிவிடலாம். எல்லாத்துக்கும் பொலிசிலை கொஞ்சம் அணைவு வேணும்…”
கனகையாவின் உன்னதமான ஆலோசனையினால் மனம் பூரித்துப்போன உடையார் கருணாகரர் உற்சாகம் பொங்கச் சொன்னார்:
“அதுக்கு ஒண்டும் யோசியாதையுங்கோ. பொலிசிலை எல்லாத்தையும் வெண்டு தருவன். அவங்களை என்ன செய்து எப்பிடி வளைக்கிறதென்ற விஷயம் எனக்கு நல்லாகவே தெரியும்…”
செல்லிக்கு அப்போது வயிற்றில் ஏழுமாதம். சூரியனை வயிற்றுக்குள்ளே வைத்திருந்தாள். வெள்ளிக்கிழமை அதி காலைப் பொழுதொன்றின் போது முருகன் வீட்டின் முன் னால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. பொலிஸ்காரர் கள் தொப் தொப் என்று குதித்து உள்ளே ஓடிவந்து முரு கனைக் கைது செய்தனர். இரத்தம் தோய்ந்த கத்தியையும் சீலையையும் வீட்டின் பின்புறத்தில் பலத்த தேடுதலின் பின்னர் கைப்பற்றினர்.
முருகனுக்கு எதுவுமே புரியவில்லை.
மாணிக்கனைக் கொன்றதாக அவன்மீது சாட்டப்பெற்ற குற்றம் மூன்றுமாத வழக்குத் தவணைகளின் விசாரணையின் பின்னர் நிரூபணமாயிற்று. அவனுக்கு ஆயுட்காலத் தண்டனை.
செல்லி தலைதலையாய் அடித்துக்கொண்டு அலறினாள். கோர்ட்டடிக்கு ஆறுவயதான தங்கமணியோடு அவளும் சென்றிருந்தாள். இன்றோ நாளையோ பிரசவிக்கத் தயாராயிருந்த அவள், சொந்தக்காரர் மறிக்க மறிக்கக் கோர்ட்ட டிக்குச் சென்றிருந்தாள். முருகனின் முகம் திகைப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை. தரகர் கனகையா, உடையார் கருணாகரர், மணியகாரர் நடராசர் ஆகியோர் முருகனை மறியற் சாலைக்குக் கொண்டு செல்லும் வரையில் அங்கே நின்றனர்.
பட்டணத்தில் தரகர் கனகையாவுக்கு ஒரு பெரிய தண் ணிப்பார்ட்டி அன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோர்ட்டடியிலிருந்து திரும்பிய ஐவரில் தங்கமணியும், செல்லியுமிருந்தார்கள். புஸ்புஸ்ஸென்று இளைத்து இளைத்து நடந்து வந்துகொண்டிருந்தாள் செல்லி. அவளின் கண்களி லிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
பெரிய ஆலமரத்தைக் கடந்து மணியகாரர் முடக்கைத் தாண்டியபோது மாணிக்கத்தம்பியரின் வீட்டின் முன்னே ஒரு சிறிய கூட்டம் நிற்பதனைக் கண்டாள் செல்லி, அவ ளோடு வந்த சரவணனுக்கும் ராமனுக்கும், காந்திக்கும் கண்களிலே பீதி தெரிந்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதனை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். செல்லிக்கு அந்த நிலையிலும் தன்னை மீறியதோர் துணிவு வந்துவிட்டது. ‘ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. எதிலும் துணிந்து நிற்க வேணும்’ என்று முருகன் அவளுக்கு அடிக்கடி சொல்லியிருக்கின்றான்.
“ஒண்டும் பேசாமல் வாருங்கோ. என்ன நடக்குது பார்ப் பம்” என்று கூறிக்கொண்டு துணிவை வரவழைத்துக் கொண்டு அவள் முன்னே நடந்தாள்.
மாணிக்கத் தம்பியர் வீட்டு முன்புறம்.
“சீ நாயே …” சொற்களோடு அவள் முன்னே காறித் துப் பினாள் மாணிக்கத் தம்பியரின் இளைய மகள் கனகம்மா.
செல்லம்மாவோடு வேறு சிலர் செல்லிக்குக் குறுக்காக வந்தார்கள்.
“பெரிய ராசாத்தி வாறா, பெண்டுகள் வழிவிடுங்கோ” ஏளனமாகச் சொல்லியபடி செல்லியின் முன்னால் நின்று ஆத்திரம் பொங்கப் பார்த்தாள் கனகசபையின் மூன்றாந்தாரம்.
“ராசாவை எங்கை விட்டிட்டு வாறியள்.”
“இந்த ராசா போனால் என்ன? செல்லியின்ரை வடிவுக்கு இன்னொரு ராசாவைப் பிடிக்க முடியாதோ என்ன?’”
“ஓமோம்”
“கீழ்சாதி நாய்! நாங்க கதைக்கிறம், என்னடி பேசாமல் நிக்கிறாய்?- மெய்யடி தோறை”
கனகசபையின் மூன்றாந்தாரம் சீறியது.
செல்லிக்கு வயிறெல்லாம் ஒரே வலியாயும், வேதனை யாயுமிருந்தது. மனப்பாரம் மறுபுறம்.
“பிள்ளை,உங்களோடை எனக்கொரு கதையுமில்லை. வழியை விடுங்கோ. ஏன் வீண் கதையளை?”
செல்லி சொன்ன பதில் முடியுமுன் அவள் கன்னத்திலே பளீரென்று அடித்தாள் கனகம்மா.
“அக்காவிலை தொடப்படாது தெரியுமோ?”
சரவணன் முன்னே பாய்ந்தான். அவனை எதிர்பார்த் திருந்தவள் போலக் கையில் வைத்திருந்த கோடரிப்பிடியினால் அவனது பிடரியில் படாரென அடித்தாள் செல்லம்மா. சரவணனின் பிடரியிலிருந்து பச்சை இரத்தம் சீறிப்பாய, வீரிட்டு அலறியவாறே குப்புறச் சரிந்தான்.
”ஐயோ என்ரை ராசா”
செல்லி அலறினாள்; மூச்சிழுத்து அலறினாள்.
“ஏனடி இன்னும் உன்னோடை இருக்கிறவனோ?’
செல்லம்மாவின் கையிலிருந்த கோடரிப்பிடி செல்லியின் முதுகின்மீது பளீர் பளீரென்று தாவி அடித்தது. செல்லி முதுகை நெளிந்து நெளிந்து துடித்தாள். கனகம்மா கெக் கட்டம் விட்டுச் சிரித்தாள்.
தங்கமணி ஓவென்று அலற அவள் வயிற்றிலே யாரோ ஒருத்தி எட்டி உதைத்தாள். பிஞ்சுக்குழந்தை மல்லாக்காய்ச் சரிந்தாள்.
“இந்தத் தேவடியாளின்ரை சீலை சட்டையை உரிஞ்சு எறியுங்கோடி. நாறலி, உனக்கொரு ரவிக்கையோடி எளிய நாயே”
அய்யாசாமியின் மனைவி உரத்துக் கூவினாள்.
செல்லிக்கு உடலெல்லாம் நடுங்கியது. தன்னை பாதுகாத் துக்கொள்ள வழி தேடுபவள் போல மிரண்டு மிரண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். சாதாரண நிலையிலாயின் அவள் ஓடித் தப்பி விடுவாள். இப்போதோ வயிற்றினுள்ளே பிறக்கப் போகும் சிசு புரண்டு கொண்டிருக்கிறது.
இந்த எளிய நாயிலை தொடவோ போறியள். தொட் டால் துடக்கும் பாவமும் வந்திடும். பொறு வாறன்…” கனகம்மா கூறிக்கொண்டு மின்னலாய்ப் பாய்ந்தாள். போனவள் திரும்பி வரும்போது கொக்கைச் சத்தகம் ஒன்றைக் கைகளில் கொண்டு வந்தாள். நெஞ்சகத் தைக் கைகளால் பொத்திக் கொண்டு நின்ற செல்லி யின் முதுகுப்புறமாக வந்த கனகம்மா, செல்லியின் முதுகுப் புறத்துச் சட்டையில் கொக்கைச் சத்தகத்தை கொழுவிப் பறபறவென்று இழுத்தாள். செல்லி முதுகை நெளித்தாள். இற விக்கை முதுகுப்புறத்தால் கிழிய, மீண்டும் அவளின் சீலையிலை கொழுவி வலிமையோடு இழுத்தாள் கனகம்மா. செல்லி திணறி வளைந்தும் பயனில்லை. வயிற்றுள் பாரம் அழுத்தி, உடலைச் சுருக்கி இழுத்தது.
அவிழ்ந்த சீலையை இரு கைகளாலும் பரபரப்போடு இழுத்து உடலை மறைத்துக்கொண்டு குந்திய நிலையில் இருந்தாள் செல்லி, அவளது உடல் படபடப்போடு நடுங்கிக் கொண்டிருந்தது.
“இனி றவுக்கை போடவேணுமெண்டு கனவிலும் நினைக் காதேயுங்கோடி…இந்த அடையாளத்தை மனதிலை வைச்சிருங்கோ…”
எவ்வித தயக்கமுமின்றி கனகம்மா, திறந்திருந்த செல்லி யின் முதுகில் சதக்கென்று கொக்கைச் சத்தகத்தால் கொத்தி ஆழ இழுத்தாள். இரத்தம் சீறியடித்து முதுகில் வழிய “அம்மா” என்று ஈனஸ்வரமாக அலறியபடியே வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கால்களைக் குறாவி வலித்த படியே மல்லாக்காகச் சரிந்தாள் செல்லி. ஈரப்படுத்திய இரத்தம் கசகசத்துக் கிடக்கும் சீலையிலே கால்களை அகட்டி அவள் அவஸ்தைப்பட்ட சில கணங்களுள் “ம்மா ம்மா” என்ற குழந்தையின் முதற் குரல் சீறிக் கொண்டு எழுந்தது.
அவளின் இரத்தத்தில் நனைந்துகொண்டேஅந்தச் சிசு தன் முதற் குரலை ஒலித்தது.
அந்தச் சம்பவம் நடந்தொழிந்த பின்னர் இரவிக்கை அணிவதனைப் பலர் கைவிட்டபோதும், துணிவுள்ள சிலர் சில நாட்கள் கழிய மீண்டும் இரவிக்கை அணிந்தனர். செல்லியின் முதுகுத் தழும்பைக் காணக் காண அவர்களின் நெஞ்சிலே ஆத்திரம் கொழுந்துபற்றியெரிந்தது. பதினாறு வருஷங்களினுள் நடந்த பல மாறுதல்களின் விளைவின் பின்னே அவர்கள் இரவிக்கை அணிவது சர்வசாதாரணமான பழக்கமாக வந்துவிட்டது. எனினும் செல்லியின் வர லாறு யாவராலும் நினைவுகூரப்பட்டே வந்தது.
தங்கமணியின் மனதிலே அந்தச் சம்பவம்ஆழமாகப்பதிந்து விட்டது. அந்தக் கிராமத்தில் எழுந்த அந்த எழுச்சி நசுக்கப் பட்டதாயினும் உள்ளே கனன்று கொண்டுதானிருந்தது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பழிவாங்கித் தீரவேண்டுமென்ற எண்ணம் செல்லியின் மனதிலே நிறைந் திருக்கின்றது. குற்றமற்ற கணவன், மறியற்சாலையால் வந்ததும் அவள் எதையும் செய்யத் தயாராக இருந்தாள்.
முருகன் மறியலுக்குப் போனதின் பிறகு அவள் மிகவும் சிரமப்பட்டே தன்னுடைய வாழ்க்கையை நடத்தினாள். அவளை நிராதரவாக யாரும் விடவில்லை. தங்கள் கஷ்டத் தினிடையேயும் தங்களால் இயன்ற உதவியினை செல்லியின் குடும்பத்திற்கு செய்தார்கள். செல்லிக்குப் பல கவலைக ளிருந்தபோதும் பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் பெரிதாக இருந்தது! தங்கமணி திருமண வயதை எட்டிவிட்டாள். சூரியனோ சினிமாப்படம், ஊர் சுற்றல் என்று ஒரு கவலையு மில்லாமல் திரிந்து கொண்டிருந்தான்.
செல்லியின் உறவினர்களின் முயற்சியினால் தங்கமணிக்கு கனகு என்பவனைத் திருமணம் செய்து வைத்தார்கள். கனகு தங்கமணியோடு தன் மைத்துனனையும் தனது ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தான். ஆறு மாதங்கள் வரை சூரியன் கனகு வீட்டில் நின்றுவிட்டு ஊர் திரும்பினான்.
செல்லி அவனை மிக ஆச்சரியத்தோடு எதிர்கொண்டாள். அவன் வரும்போது ஒரு சின்னப்பெட்டிக்குள் பல சிவப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்தாள். அவைகளை ஒரு மூலை யிலிருந்து ஆழ்ந்து படித்தான். சுவரிலே மூன்று படங்களை ஒட்டியிருந்தான். முதற்படம் ஒரு பெண் துவக்கோடு எதனையோ சுடத் தயாராகி நின்றாள். இரண்டாவது படத்தில் பல நிற ஆட்கள் சிரித்தபடி கைகளில் ஒவ்வொரு புத்தகத்தை வைத்திருந்தனர். பின்னால் ஒரு சூரியன் செங்கதிர் பரப்பி நின்றது. கடைசிப் படத்தில் பரந்த நெற்றியுடைய சொண்டின் கீழே காய அடையாளம் உள்ள ஒருவர். செல்லிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் ஐந்து வரை கூடப் படிக்கவில்லை. படிப்பென்றால் கசந்து முகஞ் சுளித்தவன். இப்போதோ அவன் நிறையப் படிக்கின்றான். அவனிடம் அவனது வயதொத்தவர்கள் நிறையப் பேர் வருகின்றனர், கதைக்கின்றனர். இன்னும் பலர் அலுவல்கள் செய்கின்றனர் சூரியனின் வருகைக்குப் பின்னர் தங்கள் பிள்ளைகள் மிக ஒழுங்காகி விட்டார்கள் எனப் பல தாய்கள் கூறக்கேட்டு செல்லி மிகவும் மகிழ்ச்சியுற்றாள். நெஞ்சி னுள்ளே பெருமிதம் அவளுக்கு.
தங்கமணி கனகுவைத் திருமணம்செய்யும்வரை ஒடுக்கப் பட்ட தங்களின் வாழ்வு அப்படி அமைந்ததற்கு விதியே காரணம் என நம்பியிருந்தாள். முற்பிறப்பில் செய்த வினை களின் பயனாகவே தாங்கள் இப்படி பிறக்கவேண்டியிருந் தது என அவள் மனதினுள்ளே பழமையின் கருத்து விதைக்கப்பட்டிருந்தது. கனகுவோடு வாழப்போனதின் பின்னே கனகு அவளைப் பல கூட்டங்களிற்குக் கூட்டிச் சென்றான். அவனோடு அவள் சாதி அடக்குமுறைக்கு எதி ரான பல ஊர்வலங்களிலே பங்குகொண்டாள். வீட்டில் கனகு பல புத்தகங்களை வைத்திருந்தான். வியத்னாம் என்ற இடத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வியத்னாமிய மக்கள் நடத்தும் வீரப்போராட்டங்கள் பற்றி அவன் அவ ளுக்கு நிறையவே கூறுவான். துப்பாக்கி ஏந்தி நின்ற பெண்ணின் படமொன்றை அவள் ஒருநாள் பார்த்துவிட்டு மனஞ் சிலிர்த்தாள். தன் தாய்க்கும் உறவினருக்கும் நிக ழும் அவமானங்கள் அவளின் கண்களிலே வந்து நின்றன. தானும் வியத்னாமியப் போராளிகளைப் போல மாறவேண் மென்று கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்வாள். தன் எண்ணங்களைக் கணவனிடம் சொன்னபோது, அவன் கூறிய பதில் இன்னும் அவளின் நெஞ்சிலே மிகவும் பசுமை யாக நிற்கிறது.
“தங்கம். இந்தச் சாதிப் பிரச்சினை தனியாகத் தீர்க்கக் கூடிய ஒண்டில்லை. சமுதாயத்திலை புரட்சியாலை பெரிய மாற்றம் ஏற்பட்டு தொழிலாளியின்ரை அரசு ஏற்பட்டால் தான் இது முற்றாய் மாறும்.”மோதி ப்ருக்ரு+
தம்பியின் வரவை எதிர்பார்த்திருந்த தங்கமணி, மீண் டும் செல்லியின் குரல் கேட்டுச் சிந்தனை கலைந்தாள். :
“தம்பியை இன்னுங் காணயில்லை. காட்டுப் பக்கமாய்ப் போய்க் கொஞ்ச விறகு வெட்டிக் கொண்டு வரவேணும். எடி சின்னக்கிளீ”
செல்லி விபரத்தைக் கூறிக்கொண்டு அடுத்த வீட்டு சின்னக்கிளியைக் கூப்பிட்டாள்.
“ஒரே நாரிப்பிடிப்பும் முதுகுக் குத்துமாயிருக்கு. பிள்ளை, அந்த இறப்பிலை தயிலமிருக்கு. ஒருக்கா எடுத்துப் பூசிவிடு…”
”வாறன்…”
தங்கமணி தைலத்தை எடுத்துக்கொண்டு வரும்போது 強 இரவிக்கையைக் கழற்றி மேல்முதுகைக் குனிந்தபடியிருந்தாள் செல்லி.
திறந்திருந்த முதுகில் நீளமான ஆறிப்போன தழும்பை யே சில கணங்கள் அசையாமலே பார்த்துக்கொண்டு நின்றள் தங்கமணி. அந்தத் தழும்பின் வயது பதினாறு வருஷங்கள். மனதில் பதிந்த அந்தச் சம்பவம் தங்கமணியின் கண்களினுள்ளே பொங்கி வந்து தெரிந்தது.
மெதுவாகத் தாயின் முதுகைத் தொட்டு அந்தக் காயத் தைப் பார்த்தாள். தங்கமணி என்ன நினைப்பாளென்ப தனைச் செல்லி அறிவாள். இசைவாகக் குனிந்தபடியே “நடு முதுகில் உரஞ்சு பிள்ளை” என்றாள் செல்லி.
அடுத்த வீட்டிலிருந்து ஓடிவந்த சின்னக்கிளி மூசிக் கொண்டு கேட்டாள்:
“ஏன் அக்கை கூப்பிட்டனி?’
“விறகுக்குப் போகையில்லையோ?”
குடிசையைப் பார்த்தவண்ணம் கேட்டாள் சின்னக் கிளி.
“அண்ணை வரேல்லையோ?”
“இல்லையடி”
“ஆச்சி, நான் போட்டுவரட்டோ கிளியோடை…”
தங்கமணி கொஞ்சும் குரலிலே கேட்டாள்.
வாஞ்சையும் வாத்சல்யமும் குரலிலும் முகத்திலும் நெகிழ்ந்து ததும்ப மகளைப் பார்த்துச் சொன்னாள் செல்லி:
“நீ வாயிலும் வயித்திலுமாயிருக்கிறாய். என்னெண்டு போகப் போறாய்?”
தங்கமணி கலகலவென்று சிரித்தாள்.
“நாலு மாசந்தானே இப்ப, ஏன் உனக்குச் செய்த மாதிரி எனக்கேதும் செய்வாளவை எண்டு யோசிக்கிறியோ? என்னோடை ஆருங் கதைக்க வந்தால் அவளவயின்ரை எலும்பை முறிச்சுப்
முறிச்சுப் போட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பன்.’
செல்லி எதையோ யோசித்து வாய்க்குள் முணுமுணுத்தாள்.
“சரி, இறப்புக்குள்ளை கத்தி கிடக்குது. பெரிய கடகத் தையும் கயிறையும் எடுத்துக்கொண்டு போட்டு நேரத்தோடு வந்திடு.”
ஊரின் ஒதுக்குப் புறத்திலுள்ளது அந்த விறகு வெட் டும் பறட்டைக் காடு. காட்டின் முனைப்பிலே கோயிற் கிணறு. சின்னக்கிளியும், தங்கமணியும் தங்கள் பாட்டிற்கு எதனையோ கதைத்துக்கொண்டு மக்கி ஒழுங்கையினாற் போய்க்கொண்டிருந்தார்கள்.
கோயிற் கிணற்றடிக்குத் தண்ணீர் அள்ளுவதற்காக மூன்று பெண்கள் சென்று கொண்டிருந்த பாதையில் போய் மக்கி ஒழுங்கை ஏறியது. இடுப்பில் குடத்துடன் போன பெண்கள் திரும்பிச் சின்னக்கிளியையும், தங்கமணி யையும் ஒரு பார்வை பார்த்தனர்.
“இதாரு புதாள் ஒண்டு. ஆர்ரை பக்கம்?”
முன்னே போன மூன்று பெண்களில் இளைய ஒருத்தி மற்றவர்களைக் கேட்டது தங்கமணியின் காதிலும் தெளி வாக விழுந்தது.
முன்னே போய்க்கொண்டிருந்த மூவரும் ஏககாலத்தில் திரும்பித் தங்கமணியைக் குறுகுறுத்துப் பார்த்தார்கள்.
தங்கமணியின் பார்வை வன்மத்தோடு அவர்களின் பார்வையினை எதிர்கொண்டு கடைசியில் ஒருத்தியின் முகத் திலே குத்திட்டது.
தங்கமணிக்குத் திடீரென்று நரம்புகள் துடித்துப் பம்மின.
பதினாறு வருஷங்களுக்கு முன்னே தன் கண்களுக்கு முன் னாலே தன்னுடைய தாயை நிர்வாணமாக்கி, அவள் முதுகிலே கொக்கைச் சத்தகத்தால் கொத்தி ஆறாத தழு ஏற்படுத்திய கனகம்மா அவள்.
ஒரு இரவிக்கை போட்டமைக்காக பிரசவத்தாயென் றும் பாராது செல்லியைப் பதினாறு வருஷங்களுக்கு முன்னே கொடூரமாகத் தாக்கிய ஈவிரக்கமற்ற மனித ஜென்மம் கனகம்மா.
தன்னை மீறிய வெறுப்போடு அவர்களுக்கு எதிரே காறித் துப்பினாள் தங்கமணி.
”என்னடி நாயே ஆக்கள் நிக்கிறது தெரியேல்லையோ” தகைத்தங்கமணியை நோக்கி மூவர் குரலும் சீறின.TD “ஓமோம். இப்ப இவையள்தானே பெரியவை…”
“நல்ல கதை. இப்பிடி அடாதுடித்தனமாய் வெளிக்கிட் டுக் கொப்பனுக்கும் கோச்சிக்கும் என்ன நடந்ததெண்டு தெரியுமோடி…”
கனகம்மா நக்கல் கலந்த தொனியில் ஆறுதலாகச் சொல்லிவிட்டுக் குடத்தைக் கீழே வைத்தாள்.
“இவள் முருகன்ரை மோள்”
தாயின் பதினாறு வருஷங்களுக்கு முந்திய தீனமான வேதனையும், பரிதாபகரமாகத் தாக்கப்பட்ட முறையும் தங்க மணியின் கண்களினுள் அலை அலையாய் மூர்க்கத்தோடு விழுந்தன. அவள் உடலில் வேகம் ஏறிற்று.
“எங்களுக்கு முன்னாலை துப்பின துப்பலை மண்ணாலை மூடி விடடி…”
தங்கமணி கனகம்மாவை நோக்கி முன் வந்தாள்.
“மண்ணாலை மூடாட்டில் என்னடி செய்வாய்?”
“கோச்சிக்கு நடந்தது தெரியுமோ?… எடி அரியம் அந்தப் பனங்கருக்கை எடுத்தண்டு வாடி… எளிய நாயே என்னை எடியெண்டோ சொல்லிறாய்?”
கனகம்மா கைகளை ஓங்கிக்கொண்டு தங்கமணியின் மேலே பாய்ந்து விழுந்தாள்…மிருகவேகம்.
ஒரு கணம் தங்கமணியின் மூளையில் மின்னல் மின்னிற்று.
கடகத்தினுள் கிடந்த கத்தியை விசிறி எடுத்தாள் தங்கமணி.
“ஆச்சியை இந்தக் கையாலை தானடி வெட்டினனி”
ஆக்ரோஷம், தன்னிலை மறந்து வேகமாய் இயங்கிற்று.
சதக் சதக். “என்ரை ஐயோ…அம்மா என்ரை கை”
“பதினாறு வருசத்திற்கு முந்தி நீ செய்தனியடி”
தங்கமணி வெறிகொண்டவள் போல இரு பக்கத்திலும் வீசி வீசிக் கனகம்மாவைக் கத்தியால் கொத்திக் கொண் டிருந்தாள். தலைமயிர் குலைந்து தங்கமணியின் தோளோடு புரண்டு அலைந்தது.
விரல்களும், நரம்புகளும் துடித்து நிலத்தில் புரண்டன.
இரத்தம் சீறிச் சீறி அடித்தது…குடமொன்று இரத்தத் தால் மூழ்கியது….
தங்கமணி ஓயவில்லை.
– 1968
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரத்தத்தில் இல்லையே
இரா.துரைமாணிக்கம்
August 19, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 19, 2026
இரட்டைப் பின்னல் இந்திரா
இரா.கலைச்செல்வி
August 19, 2026
