பெருமிதம் – ஒரு பக்க கதை






இரண்டு நாள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்துப் பேசிய சுந்தர், ஒரு முடிவுக்கு வந்தான்.
‘‘சாரிப்பா… இந்தப் பொண்ணு வேண்டாம்!’’
‘‘டேய்… அன்னிக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன? அதுவும் இல்லாம 40 பவுன் நகையும் ஐந்து லட்சம் ரொக்கமும் தர்றதா சொன்னாங்க. அப்புறம் ஏன் வேண்டாங்கற!’’ – புரியாமல் கேட்டார் அப்பா.
‘‘அப்பா… அண்ணனுக்கு போன வருஷம் திருமணம் பண்ணினப்போ, நாம எதுவும் கேக்கலைன்னாலும், முப்பது பவுன் நகை, மூணு லட்ச ரூபாய் ரொக்கம்னு அண்ணிக்கு சீர் செஞ்சாங்க. இப்ப இவங்க கூடுதலா சீர் செஞ்சு திருமணம் பண்ணி வச்சா, ரெண்டு மருமகள்கள்கிட்டயும் ஒரு ஏற்றத்தாழ்வு வரும்.
அதனால நேத்து அந்தப் பொண்ணோட வீட்டுக்குப் போய் ‘நீங்க முப்பது பவுன் நகை, மூணு லட்சம் ரூபாய் மட்டும் செய்தா போதும்’னு சொன்னேன்.
அந்தப் பொண்ணு கேக்கலை. ‘நான் மூத்த மருமகளவிட ஒருபடி மேல இருக்க விரும்பறேன்’னு பிடிவாதமா சொல்றா.
அப்படிப்பட்ட பொண்ணு எனக்குத் தேவை இல்லப்பா!’’சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்ட தனது மகனைக் கட்டி அணைத்தார் அவனது அப்பா.
அந்த அணைப்பில் பெருமிதம் நிரம்பி வழிந்தது.
– பெப்ரவரி 2014