பெரிய கங்காணி





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘எங்கப்பன் பெரியங் கங்காணி…
எங்கப்பனுக் கப்பனும்
ஏட்டு (Head) கங்காணி!’
பெருந்தோட்டங்களில் அந்தக் காலத்திலேயே பெரியங்கங்காணி குடும்பங்கள் மூன்று பரம்பரைகளைக் கொண்டவர்கள் என்று இந்த பாமரப் பாடல் சேதி சொல்கிறது………
தோட்டத் தொழில் துறையில் காவிய நாயகனாகப் பெரியங்கங்காணிகள்தான் பிரதம பாத்திரத்தை வகித்து வந்துள்ளார்கள்.

பெரியங் கங்காணிதான் சகலமும்……. பிரம்மனைப்போல படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாப் பொறுப்பும் கங்காணியிடமே இருந்தது. அவனின்றி ஓர் அணுவும் அந்த தோட்டத்தில் அசைந்தது கிடையாது!
அவர்தான் தோட்டத்துரையின் வலது கையாக இருந்தார். தொழிலாளிகளுக்கு தலையாகவும்……. தலைக் கிரீடமுமாகவும், குற்றம் சுமத்துபவாராகவும்……. வாதாடுகிறவராகவும் நீதி வழங்குபவராகவும் ……. சர்வமும் பெரியங்கங்காணியே என்ற அமைப்பு பாரம்பரியமாக வளர்ந்து வந்தது…….
பெரியங் கங்காணிகளுக்கும் உப கங்காணிகளும் இருந்தார்கள். இவர்கள்…….. பண்ணையில் மேயும் நோஞ்சான் குதிரைகளைப் போலவும் பந்தயத்தில் ஜெயிக்கும் பலசாலிக் குதிரைகளாகவும் இருந்தார்கள்! இவர்கள் ஒரு போதும் ஓர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கவில்லை……. ஒரு சாதியைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள்!
பெரியங்கங்காணி என்பவர் ஆயிரத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்குத் தலைவனாக இருப்பார்.
வீட்டுக்குரிய அத்தனை உடைமைப் பொருட்களோடும் தளபாடங்களோடும் சகல வசதிகளும் கொண்ட வீட்டில் வசித்தார். அவரது வீட்டை வட அமெரிக்கர் வசிக்கும் சொகுசுக் கூடாரம் என்றும் கூறுவார்கள்! அவரது வீட்டுக்குள் சபா மண்டபம….. காரியாலயம் பூஜை ஸ்தலம்…… படுக்கையறைகள், சமையலறைகள், குளியலறைகள்……. பெண்கள் தங்கும் ‘அந்தப்புரம்’ என்றெல்லாம் வசதிகள் அமைந்திருந்தன…….
அவரது சபா மண்டபத்தில் வெள்ளைத் தலைப்பாகை கணக்குபிள்ளைமார்களும் கருப்புக் கோட்டுக் கங்காணிமார்களும்…….. தொங்கு மீசைக் கிழடுகளும் குவிந்திருந்தனர்.
கங்காணியார் அவர்களையெல்லாம் ‘யாமிருக்க பயமேன்’ என்பது போல் கையசைத்தே வரவேற்பார். அரச சபையைப் போலக் கவிஞர்களும், பாடகர்களும், ஆட்டக்காரர்களும், செப்படி வித்தைக்காரர்களும் தங்கள் கை வரிசைகளைக் காட்டி கங்காணியை மகிழ்வித்து கௌரவித்தார்கள்.
அந்தக் காலத்தில் செய்தி தகவல் பரப்புவதற்கு பத்திரிக்கை இல்லாத படியால் அவரது பெயரைப் பட்டி தொட்டியெல்லாம் பரப்புவதற்கு நிறையப் பணம் கொடுத்து இவர்களைப் பாவித்தார்.
ஒரு நாள்……..ஒரு குளிர் இரவில்…… பெரியங்கங்காணி தன்னுடைய கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு மனநிலையிலிருந்தார். தனக்குக் கீழ் வேலை செய்தவர்களைப் பற்றி அவர்கள் பெற்ற நலன்களைப் பற்றி, அன்றைய, சுரண்டல்களைப் பற்றி அசைப்போட்டுப் பார்த்தார். மண் மேகமாய்த் தூசிப்பறக்கும் கட்டாந்தரைப் பாதையில் ஓடிய மாட்டு வண்டிகளின் ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இப்படியான எல்லாத் தீரச்செயல்களுக்கும் அன்று துரை மகன் தான் முன்நிற்பார். கங்காணி தனக்குள் நகைத்துக் கொண்டார். அவையெல்லாம் கடினமாக அற்புதமான காலங்கள்! துரைமார்களெல்லாம் உழைத்தார்கள். உண்மை பேசுவதில் உருக்கைப் போன்று உறுதியானவர்கள்.
மனம் அலைந்து திரிந்து ஓய்ந்தது……..
கங்காணியின் கடமைகள் பலவாறாக இருந்தன. அவர் தொழிலாளருக்கு லயக் காம்பிராக்களை ஒதுக்கிக் கொடுப்பார். அவர்களுக்கு அரிசி விநியோகித்தார். அவர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதைக் கவனித்தார். பிரட்டுக் கலைப்பதற்கு (Muster Brake) செல்வார். வேலைத் தலங்களுக்கு வேலைகளைக் கவனிக்கச் செல்வார். சம்பள வாசலில் துரையிடம் சம்பளத்தை வாங்கி தொழிலாளிகளிடம் கையளிப்பார். தொழிலாளிகள் சுகயீனமாகிவிட்டால் அவர்களைக் கவனிப்பார். தோட்டங்களில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளுக்கும் தலைமை வகிப்பார்.
தொழிலாளர்களைத் தனது டிவிசனுக்குள்ளேயே தனது எல்லைக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் அவர் சமர்த்தர். தனது கூலி……. ஆள் வெளி ஆட்களுடன் உறவு வைத்துக்கொள்ளவோ. ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளவோ… பொலிஸ்காரர்கள் பிடித்துச் செல்லவோ விடமாட்டார்.
கங்காணி, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் சாணக்கியம் அறிந்தவர்.
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை பின்னேரம்……. சம்பளம் போட்ட பிறகு நடந்த சம்பவம்…….
காத்தானுக்கும் முத்தானுக்கும் லயத்தில் மோசமான சண்டை நிகழ்ந்தது.
சண்டை நடந்துக்கொண்டிருக்கும் போதே தோட்டத்துப் பரியாரி நடந்த விசயங்களையெல்லாம் முழு விபரங்களோடு சுடச் சுட கங்காணியிடம் போய்ச் சொல்லிவிட்டான். பரியாரி தோட்டத்தில் முடி வெட்டுவது மட்டுமல்ல தகவல் பொறுப்பாளியாகவும் சேவகம் செய்ய வேண்டும்.
இரவு பத்து மணிக்கு முன்பு இது சம்பந்தமாக லயத்திலிருந்து ஒரு குழு கங்காணியைச் சந்திக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சபைக் கூடத்தின் கதவருகில் முறைப்பாட்டோடு காத்தான் வந்து நின்றான். பெரியவர் கணக்குப்பிள்ளைமார்களுக்கும் கங்காணிமார்களுக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். கவ்வாத்து காட்டிலும் மட்டத்து மலையிலும் ஒழுங்கில்லாமல் நடந்த வேலைகளைப் பற்றி கூறிக் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்தார்.
காத்தான் அவரது கடுகடுத்த முகத்தைக் கண்டு நம்பிக்கை இழந்தான். ‘பெரியவரை இன்னைக்கு சந்திக்க முடியாது’ என்று நழுவ முயன்றான்.
‘தெய்வம்’ கர்ஜித்தது……. ‘டேய்! குசுனிக்கு போய் (குசுனி சமையல்கட்டு) சாப்பிட்டுட்டு பண்டாரத்த கூட்டிக்கிட்டு வா! ஓடு!’ என்றார்.
காத்தானுக்கு நல்ல நேரம்! இரவு சாப்பாட்டை ரசித்து ருசித்து மெல்ல மெல்லச் சாப்பிட்டான். முத்தான் தன்னைப் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான். நல்ல சாப்பாடு…….. சண்டையைப் பற்றிய கோபாவேசத்தை மேலும் உக்கிரப்படுத்தியது.
பண்டாரத்திடம் கங்காணியார் சொன்ன தகவலைச் சொல்வதற்கு ஓடினான்.
வரும் வழியில் லயத்தில் நடந்த எல்லா விசயங்களையும் பண்டாரத்திடம் கூறிப் பெரியவரிடம் நல்ல முறையாக எடுத்துச் சொல்லுமாறு கெஞ்சினான்.
பண்டாரம் தன்னால் முடிந்ததை செய்வதாக உறுதி கூறினார். காத்தான் திருப்தியோடு வீட்டுக்குச் சென்றான்.
ஒரு வாரம் வரை எதுவும் நடக்கவில்லை.
ஒரு நாள் காத்தான் திரும்பவும் சபைக்கூடத்துக்கு அருகே வந்தப்போது பெரியவர் நல்ல மனநிலையில் சந்தோசமாக இருப்பதைக் கண்டான். பெரியவர் அவனைப் பாயில் உட்காரும்படி சொன்னார். வேலைக்காரப் பையனைக் கூப்பிட்டு மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமான வனவாசம் புத்தகத்தைக் காத்தானிடம் கொடுக்கும்படி சொன்னார்.
காத்தான் ராக லயத்தோடு நடுச்சாமம் வரை கதையைப் படித்தான்…..
லயத்துச் சண்டையைப் பற்றி காத்தான் வாயைத் திறப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் கொடுக்கவில்லை.
வாரங்கள்……… மாதங்களெனக் கழிந்தன……..
நல்ல நேரம்…….. வந்தது…….
ஒரு பெருநாளில் காத்தானும் முத்தானும் சந்தித்தார்கள். ஒரு போத்தலோடு அவர்களுக்குள்ள முரண்பாடுகள் முடிவடைந்தன. நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுவோம் என்று எழும்பினார்கள்.
அன்றைக்கே அந்தியில் பெரியவர் இரண்டு பேரையும் வீட்டுக்கு வரும்படி அழைத்திருந்தார்.
அவர்கள் இருவரும் ஒருவருக்குப்பின் ஒருவராய்த் தலையைச் சொறிந்து கொண்டு கங்காணியை நோக்கி நகர்ந்தார்கள்.
‘நல்லம்!’ இடி போல் பெரியவர் முழங்கினார்.
‘லயத்துல பெரிய சண்டை நடந்ததாக கேள்விப்பட்டேன் …….? ‘அது……. கொஞ்ச நாளைக்கு முன்னே…….. சாமீ!…’ காத்தான் மறைக்காமல் சொன்னான்.
ஙொப்பனாலத்தாண்டா…….. இந்த நாசமா போன எடத்துல நான் இருக்கேன். எல்லா கர்மமும் எனக்கிட்ட சொல்லியாகணும்டா……!
‘நான் இதுப்பத்தி சொல்றதுக்கு ஐயாகிட்ட வந்தேனுங்க…..!’ அருவருப்பாக பல்லைக் காட்டினான் முத்தான்.
‘நீ எப்படா வந்த…….?
‘பாம்ப பாம்பு கடிச்சா வெஷம் இருக்காதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க…….’
‘எங்கடா பாம்பு கடிக்குது…….?’
‘லயத்துல எந்த கருமாதியும் நடக்கக் கூடாது! வௌங்குதா…… மடையன்…….? கங்காணி நற நறவென்று பற்களைக் கடித்தார். பின்னர் சாந்தமாகினார். சொந்தக்காரனுங்க இப்படி நடந்துக்கலாமா? ஓடுங்கடா!’
இரண்டு பேரும் தலையைச் சொறிந்துக் கொண்டு செல்லமாக ஓடினார்கள்…….
இன்னொரு நாள் இன்னொரு சம்பவம் நடந்தது.
பழனியாண்டி தொழிற்சாலையில் ஒரு பிடித் தூளை திருடிவிட்டான். இந்த சங்கதி துரை வரை எட்டிவிட்டது.
கங்காணி பழனியாண்டியை ஆப்பிசில் கொண்டுவந்து நிறுத்தினார். தோட்டத் துரை சிவப்பேறிய முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.
பழனியாண்டி மரத்தடியில் நடுங்கிக்கொண்டு நின்றான்.
அவனுக்கு இன்று கெட்ட நாள்………
‘இன்னையோட பழனியாண்டி சரி தொரை பத்துச்சீட்டு குடுத்துடுவாரு’ என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள்.
திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. துரையையும் நாற்காலியிலிருந்து தூக்கிவாரிப்போட்டது.
துரை அதிர்ச்சி அடைந்தார்.
‘நீ பண்டீ……. நீ ஊத்தப் பண்டீ! எப்படி ஒனக்கு நம்ம தூளை தொடுறதுக்கு துணிச்சல் வந்திச்சு? பெரியங்கங்காணி கைத் தடியால் ஓங்கி ஓங்கி அடித்தார்.
‘நல்லா வாங்கிக்கோ திருட்டு நாயே!’
நீண்ட கைத்தடி மேலும் கீழும் பல தடவை சுழன்றது. பழனியாண்டியின் தலை பல தடைவ தப்பித் தப்பிப் பிழைத்தது.
‘ஐயோ சாமீ…….! ஐயோ சாமீ…….!’ என்று கூக்குரலிட்டுப் பழனியாண்டி அங்குமிங்கும் பாய்ந்தான்.
துரை திருப்தி அடைந்தார். இருந்தாலும் அடிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பழனியாண்டியை விட்டு விட்டு உள்ளே வரும்படி கங்காணியைக் கூப்பிட்டார்.
கங்காணி பெரு மூச்சோடு ஆப்பிசுக்குள் நுழைந்தார்.
‘தொரை மகன் தோட்டத்துல எனக்கு இப்படியொரு களவானிப்பயல் வேண்டியதில்லை சார்.’
‘இது போதும்……..!’
‘கிளாக்! அவனைப் போகச் சொல்லு’
பழனியாண்டிக்கு அடி விழுந்த சங்கதி ஒரு மாதத்துக்கு மேலாகச் சவரம் பண்ணும் பாபர் மடுவத்தில் கதைப் பரப்பப்பட்டது. இதுவும் ஒரு வகை ஆபத்தான சவரம் தான்! பி.பி.சீ வானொலிக்கு முன்னமே இந்த மாதிரி வானொலி ஒலிப்பரப்பைக் கண்டுப்பிடித்த கங்காணி பெருமைக்குரியவர்தான்!
ஒரு நாள் ஒரு சம்பள தினத்தில் கங்காணியார் ஒரு குட்டிச்சாக்கு நிறைய மடமடப்பான நோட்டுக்கட்டுக்களோடும் வெள்ளிக் காசுகளோடும் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அவரது வீட்டருகே பத்துப் பன்னிரண்டு பேர் கடன் வாங்குவதற்காகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுள் மாயாண்டியும் ஒருத்தன். சுத்த சோம்பேறியான ‘அவரும்’ கடன் வாங்க வந்திருந்தார்! பெரியவர் அவனை முறைத்துப் பார்த்தார்! அவ்வளவுதான்……. அவன் அப்படியே உருகிப்போனான். இருந்தும் மாயாண்டி லேசில் எதையும் விடமாட்டான். அவன் கடன் வாங்குவதில் உறுதியாக இருந்தான். ஆனால் கங்காணி அவனை அலட்சியம் செய்தார்.
தொடர்ந்து சில நாட்கள் சரியான நேரத்தோடு கங்காணி வீட்டில் வந்து நிற்பான்.
‘ஏன்டா மாயாண்டி காத்திக்கிட்டு இருக்கே’
‘ஐயா எனக்கு கடன் வேணுங்க …….?
பெரியவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவும் இல்லை. ஒழுங்கான பதிலும் சொல்லவில்லை. மரக்கறித் தோட்டத்தில் போய்த் தோட்டக்காரனுக்குக் கை உதவி செய் என்று அனுப்பிவிட்டார். தொடர்ந்து சில நாட்கள் மரக்கறி தோட்டத்தில் மாயாண்டிக்கு வேலை!
ஒரு நாள் பெரியவர் மாயாண்டியைக் கூப்பிட்டுப் பல விசயங்களைக் கதைத்தார். மரக்கறி தோட்டத்தில் நன்றாக வேலை செய்ததற்காகப் பாராட்டினார்.
கடைசியில் மாயாண்டி கடனைப் பற்றி அவர் ஒன்றும் கதைக்கவில்லை.
‘ஐயா……..எனக்கு நூத்தி அம்பது ரூவா கடன் வேணுங்க……. உடனேயே பெரியவர் ஒரு துண்டு கொடுத்தார். போற வழியிலேயே அந்தத் துண்டைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தான். துண்டிலே 150 ரூபாய் எழுதப்பட்டிருந்ததை வாசித்துத் திருப்தி அடைந்தான். ஆனால் அந்த முதலாளி 45 ரூபாய் மட்டுமே கொடுத்து இடத்தைக் காலி பண்ணும்படி சொல்லிவிட்டான்.
‘இன்னும் 25 ரூபா தாங்க!’ என்று தயவாய்க் கேட்டான்.
நீண்ட நேரக் கரைச்சலுக்குப் பிறகு முதலாளி ஐந்து ரூபாவைக் கொடுத்து இந்தப் பக்கம் இன்னொரு தடவை தலைக் காட்ட வேண்டாம் என்று விரட்டினான்.
யார் கண்டது…….! கங்காணிக்கும் கடைக்கார முதலாளிக்கும் ஏதாவது இருக்கும்…….! எப்படியோ வாங்கிய கடனை மாயாண்டி ஒரு போதும் கட்டியதே கிடையாது.
அந்தத் தோட்டத்தில் பெரியங்கங்காணிதான் முதலாவது சங்கத் தலைவர். சகலமும் சர்வமும் அவர்தான். இருந்தாலும் அவரது காலத்துக்கு முன்னால் சாதியை மட்டும் கடைசி வரை அழிக்க முடியாமல் போய்விட்டது…….
– ஆங்கில தொகுதி: The Head Kangany, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.