பெரியவர்களுக்கான ஒரு நீதிபோதனைக் கதை
கதையாசிரியர்: ஷாராஜ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 1,597
“நீதி, தர்மம், நியாயம், நேர்மை, கடமை என்று இருந்தால் இந்தக் காலத்தில் பிழைக்க முடியாது. இது அநீதி, அதர்மம், அநியாயம், லஞ்சம், ஊழல், ஏமாற்று ஆகியவற்றின் காலம்.
“நீங்கள் அந்த எதிர்மறைக் காரியங்களை, தவறுகளை, குற்றங்களை செய்யுங்கள் என நான் போதிக்கவில்லை. அதைச் செய்கிறவர்களுக்குக் குறுக்கே நிற்காதீர்கள். கதாநாயகனாகவோ, நீதிவானாகவோ உங்களை எண்ணிக்கொண்டு, அவர்களை எதிர்க்க முற்படாதீர்கள். நீங்களோ உங்கள் குடும்பமோ நேரடியாக பாதிக்கப்படாத வரை, தீமைகளிடமிருந்தும், தீயவர்களிடமிருந்தும் ஒதுங்கி இருப்பதே உங்களின் உயிர், உறவுகள், உடமைகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றைக் காத்துக்கொள்வதற்கான வழி.
“இதை அறிவுரையாக அல்ல; என் அனுபவ உரையாக சொல்கிறேன். அது உங்களுக்கே தெரிந்திருக்கும்…”
மேடையில் இடது கையால் மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்த சமூகப் போராளி முத்துலிங்கம், அரசியல்வாதிகளின் அடியாட்களால் வெட்டப்பட்டு, புஜப் பகுதியிலிருந்து இல்லாமல் போய்விட்ட, மூளியான தனது வலது கையை உயர்த்திக் காட்டிக்கொண்டே சொன்னார்.
மக்கள் கூட்டம் வேதனையோடும், அனுதாபத்தோடும், நமக்காகக் குரல் கொடுத்த ஒருவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையோடும் பார்த்துக்கொண்டிருந்தது.
– வாசகசாலை இணைய இதழ், 21-04-25.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |
