பூ நாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 352 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கணக்கு இயந்திரத்தோடு மாரடித்துக் கொண்டி ருந்தான் சிற்றரசு. இயந்திரத்திலுள்ள எண்களை அழுத்தி அழுத்தி அவன் விரல் மிளகாய்ப் பழம்போல் சிவந்திருந்தது. எந்திரத்தைப் போல் இயங்கிக் கொண்டிருந்த சிற்றரசு தன் கழுத்து நெட்டியை முறித்துவிட்டு கைகளை உயர்த்தி சாரைப்பாம்பு நெளிவதைப் போல் உடம்பை நெளித்தான். அவன் பார்வை எதிரில் இருந்த கவலையில்லாத மனிதன் எழிலன்மேல் விழுந்தது.

எழிலன் தூவலும் (பேனா) கையுமாக இருந்தான். தூவல் அவன் நினைத்தபடியெல்லாம் தலையை ஆட்டியது; அவன் பார்வை தூவல் தூரிச்செல்லும் எழுத்துக்களில் பதிந்திருந்தது. ஒரு கையை நெற்றியில் வைத்த படி தன்னையே மறந்து அலுவலில் ஆழ்ந்து கிடந்தான்.

ஒரு கனைப்புக் கனைத்தபடி, “என்ன இவ்வளவு நேரம் நெளிவு எடுத்துக்கொண்டிருந்தாயே! இப்போது என்ன வேலை உடம்மை நீட்டி நிமிர்க்கிறதா?” என்று சிற்றரசு குத்தலாகக் கேட்டான்.

பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த எழிலன், ஆமப்பா மூளையையே கசக்கிப் பிழிகிறது என்று சொல்லியபடி தூவலைத் தாள்மேல் வைத்தான். அவன் பார்வை சிற்றரசுமேல் இருந்தது.

சிற்றரசு வேலைசெய்து களைத்துப்போய் இருப்பது முகத்தில் தெரிந்தது. அதைப் பார்த்ததும், “என்ன நெல்லுக் குத்தி முடிந்ததா?” இது வழக்கமான கேள்வி தான். இருந்தாலும் எழிலன் வேண்டுமென்றே கேட்டான்.

சிற்றரசு புன்னகை சிந்தியபடி, “ம் .. ஒருவழியா முடித்துவிட்டேன். கையை வலிக்கிறது விரலைப்பார்..” என்று விரலை நீட்டினான். பிறகு சற்று சலிப்பு மேலிட, “நாம் ஏறக்குறைய இயந்திரத்தைப்போல்தான் பணி ஆற்றுகிறோம். காலை எட்டு மணிக்கெல்லாம் வேலைக்கு ஓடி வருகிறோம். ஐந்து மணிக்கு வீடுசெல்கிறோம் குளிக்கிறோம். சாப்பிடுகிறோம், படுக்கிறோம் எழுந்திருக்கிறோம், மீண்டும் வேலை வீடு பொழுது இப்படியே ஓடிக்கிட்டு இருக்கு இல்லையா?” என்றான் சிற்றரசு.

“ஆமாம் அதுக்குத்தான் இடையிடையே கடல் கரை காத்து ‘அது இது’ என்று போகவேண்டும் என்கிறேன்” என்றான் எழிலன்.

அவன் சொல்லிய இந்தப் பொன்மொழியில் ‘அது இது’ என்பதில் உட்பொருள் புதைந்து கிடந்தது.

“வந்துவிட்டாயே உன் வழிக்கு. டேய் நீ சொல்வது எனக்குப் புரிகிறது. குடியும் குடித்தனமுமாக இருந்தால் போதாது கடல்கரை, காத்து, மதுக்கடை, விடுதி ‘அப்படி இப்படி’ என்று உன்கூட சுத்தச்சொல்கிறாய் அப்படித் தானே” சிற்றரசு கேட்டான்.

அவன் சொல்லியதைச்செவிமடுத்ததும் எழிலனுக்கு ஒரே சிரிப்பு. “நீ உலகந்தெரியாதவன் தாண்டா. இந்த உலகத்தில் நாம் பிறந்தது ஏன். இன்பத்தை அள்ளி அள்ளி சுவைக்கத்தானே!”

“ஆமாம்”

“அதைவிட்டுவிட்டு ஏதேதோ சொல்லுகிறாயே. தேனைச் சுவைக்கத் துடிப்பவன் தேனீ கொட்டிவிடுமே என்று பயந்தால் தேனை எடுக்க முடியாது. அதைப்போல் பத்தாம் பசலித்தனத்திற்குப் பயந்து கூண்டுப்புலியாகக் கிடந்தால் முழு ஆடு கிடைக்காது. ம்.. இதெல்லாம் உனக்கெங்கே புரியப் போகிறது?” என்றான் எழிலன். அவன் பேச்சு சிற்றரசை மட்டந்தட்டுவதுபோல் இருந்தது.

சிற்றரசுக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தபடி, “இன்பம் என்றால் என்ன குடிப்பதிலும் கூத்தி கூடச் சுற்றுவதிலுமா இருக்கிறது? வெம்பி வெம்பி மேல் விழுந்து தழுவினாலும் கூத்தி கூத்திதான் என்று அவ்வையாரும், பொருட் பெண்டீரிடம் கூடுவது பிணத்தைத் தழுவதற்கு ஒப்பாகும் என்று திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறாங்களே இதில் இருந்து நீ என்ன தெரிந்துகொள்கிறாய்? இல்லறத்தில் இருப்பதுதாண்டா இன்பம். அதன் முதிர்வு என்ன தெரியுமா? அதெல்லாம் உனக்கு வெகு தூரம்…” என்று ஓர் அடி அடித்தான் சிற்றரசு.

“குடும்பத்திலா இன்பம் இருக்கிறது. அதுதான் இல்லை. நகை துணி-மணி என்று மனைவியின் நச்செரிப்பும், அப்பா சட்டை, பொம்மை, புத்தகம், என்று பிள்ளைகளின் தொல்லையுந்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லை நோய்நொடி என்று வந்தா அது வேறே பெருந்தொல்லை. அப்பப்பா குடும்பம் என்றாலே துன்பம் நிறைந்த பாலை. இது நான் கண்ணால் கண்ட உண்மை.” என்று எழிலன் வெறுப்பு மேலிடச் சொன்னான்.

“நல்லா இருக்கிறதே உன் தத்துவம் அதுதான் திருமணம் வேண்டாம் என்று பிரமச்சாரியாக இருக்கிறாயா? தப்பாகச் சொல்லிவிட்டேண்டா. நீதான் நித்திய கல்யாணி பரம்பரையாச்சே” என்று சிரித்தபடி சொன்னான் சிற்றரசு.

“டேய் நானாகிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்பம் எங்கே கிடைக்கும் என்று சுத்துகிறேன். எத்தனைபேர் மனைவி மக்கள் இருந்தும் தொல்லை பொறுக்க முடியாமல் நான் போகிற இடங்களுக்குப் போகிறாங்க தெரியுமாடா. அது எங்கே உனக்குப் புரியப் போகிறது. நீதான் கூண்டுப் புலியாச்சே.” என்றான் எழிலன்.

“மண்ணால் உளி செய்து கல்லைக்கூட உடைத்துவிடலாம் போலிருக்கு ஆனால் இவனை…” முணுமுணுத்தான் சிற்றரசு.

அவன் முணுமுணுத்ததைக் கவனிக்காத எழிலன், “ஏண்டா பேசாமல் இருக்கிறாய்? இன்னுஞ் சொல்லுகிறேன் கேள். முன்னேறிக் கொண்டு போகும் இந்த நாகரிகக் காலத்தில் குடும்பங்களில் உள்ள நாரிமணிகள் எத்தனை பேரை அங்கே பார்க்க முடியும் தெரியுமா? கொஞ்சிக் குலாவித்திரியும் கோதையரைப்பற்ற உனக்குக் கொஞ்சமாகிலும் தெரியுமா? தெரியாது. கொண்டவனுக்கே இரண்டகம் செய்யும் காலம் இது” என்றான் எழிலன்.

சிற்றரசுக்கு அது புதுமையாக இருந்தது. எழுந்து எழிலன் மேசைக்கருகில் சென்றபடி, “ஏண்டா குடும்பப் பெண்கள் எனும் போர்வையில் சுற்றித்திரியும் தறுதலைக் கும்பலை எல்லாம் பெண்கள் கூடவும் ஒப்பிடுகிறாயே! இந்த நாகரிகக் காலத்திலும் கற்பைப் பொற்போல் காக்கும் பூவையரும் இருக்கத்தான் செய்கிறாங்க. நல்லவர்கள்கூட பழகினால் தானே இந்த உண்மை புரியும். அதை விட்டுவிட்டு நீ கீழ் மக்கள்…ம் அது ஏன் நமக்கு ? நீ இப்படியே கல்யாணம் காச்சி என்று ஒன்றுமில்லாமல் இருந்தால் பிறகு உன் வாழ்க்கை வீணாய் போய் விடும். அதற்குமேல் உனக்கு எதையும் சொல்ல என்னால் முடியாது நீ என்ன சிறுபிள்ளையா?” என்று நண்பனுக்கு அறிவுரை கூறினான். அவன் குரல் சற்று தழுதழுத்திருந்தது.

சிற்றரசன் இப்படிப் பேசுவான் என்று சற்றும் எதிர்பார்க்காத எழிலன், “டேய் நீ ஏண்டா அழுகிறாய்?” என்று இருந்தபடியே அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் நீர் சுரந்து புல்லில் அரும்பி நிற்கும் பனித்துளிபோல் கட்டிநின்றது.

“பிறகு என்னடா. ஒரே இடத்தில் நாம் வேலை செய்கிறோம். அண்ணன் தம்பிகளைப்போல் மனம் ஒன்றிப் பழகுகிறோம். போடா வாடா என்றுகூடப் பேசிக் கொள்கிறோம். அந்த அளவிற்குப் பழகும்போது நான் உன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமுடியுமா வாழ்நாளில் பெரும் பகுதியில் உன்னை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். நீயும் அப்படித் தான். நாம் இப்படி வாழ்நாளில் பெரும் பகுதியை வேலையிடத்தில் கழிக்கிறோம். இப்படி இருக்கும்போது உன் நல்வாழ்வில் எனக்கு அக்கரை கொஞ்சமாகிலும் இருக்கத்தானே செய்யும்” என்றான் சிற்றரசு.

எழிலன் மூளை வேகமாக வேலைசெய்யத் தொடங்கியது. அவன் மனக்கண் முன் உலகமே சுழன்றது.

திருமணஞ்செய்தால் சிறைப்பட்டதற்குச் சமம் என்பார்களே காலுக்குக் கட்டுப் போட்டால் பயல் சும்மா கிடப்பான் என்று பெரியவர்கள் சொல்வது கட்டுப்பாட்டைத் தானே குறிக்கிறது என்று ஒரு கோணத்திலும், கட்டுப்பாடு தேவைதான். இல்லா விட்டால் வாழ்க்கையில் பிடிப்பே இருக்காது. தேங்காமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரைப்போல் இறுதியில் உப்பு நீரில் போய் கலக்க வேண்டியதுதான். அந் நீரைத் தேக்கிவைத்தால் தானே நல்லது! திருமணஞ் செய்துகொள்வதே மேல் என்று மற்றொரு கோணத்திலும் எண்ணிப் பார்த்தான்.

இருமனத்தோடுதான் நடந்துவந்த பாதையைத் திரும்பிப்பார்க்கத் துடித்தான். அவன் மனம் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க விரைந்தது.


ஒரு நாள் மாலை கடற்கரைக்குச் சென்றான் எழிலன். உப்பங்காற்றில் உடலை நனைத்துக்கொண்டதால் சற்று குளிர்தட்டியது. நேராக மதுக்கடைக்குச் சென்றான்.

ஒரு கிண்ணத்தில் கறுப்பு-வெள்ளையும் (பிளேக் அண்டு ஒய்ட்டும்) கையுமாக ஒரு பருவச்சிட்டு பறந்து வந்தாள். பிடிப்பு உடையைப் பிய்த்துக்கொண்டுவரும் கட்டுடல் மேனி. கொவ்வைப் பழம்போல் அஞ்சண மிட்ட இதழ்கள். மாந்தளிர் கன்னங்கள். மையிட்ட கண்கள். மருண்ட பார்வை இத்தனையும் எழிலனைக் கிறுகிறுக்கச் செய்தன. அவளைப் பார்த்தபடியே மதுவை அருந்தினான். மதுவும், மங்கையின் அழகும் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியது. மங்கையைக் கட்டிப் பிடித்தான். இன்பம் இன்பம். இன்பத்தின் எல்லையைக் காண இருவரும் துடித்தனர். மணியும் பதினொன்றாகி விட்டது.

எழிலன் அவளிடம் பேரம் பேசினான். பேரம் என்று பெயர்தான். அவள் கேட்டதைக் கொடுக்க எழிலன் ஆயத்தமாக இருந்தான். அவள் ஏதோ கொஞ்சக் கூடவே கேட்டாள். எழிலனும் இணங்கினான். அவளும் அதற்கு இணங்கினாள்.

மணி பன்னிரண்டு அவளுக்கு மதுக்கடையில் வேலை முடிந்தது. அந்த நள்ளிரவில் நான்காவது மாடிக்கு மின் தூக்கியில் சென்றனர். நான்காம்மாடி நான்காவது அறையில் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். அவர்கள் அறைக்குள் ஏன் சென்றனர் என்பது கதவுக்குத் தெரிந்துவிட்டது. அது தானாகவே சாத்திக்கொண்டது. இருவரும் நான்கு சுவர்கட்கு மத்தியில் அன்றிரவுப் பொழுதைக் கழித்தனர்.

இதுதான் முப்பத்தைந்து வயதுக்குள் அவன் நடந்து வந்த பாதையில் ஒரு மைல் தொலைவு.

கடந்த காலச் சூழலிலிருந்து மனம் விடுபட்டதும் “குடும்பமெனும் சிறை வேண்டவே வேண்டாம்” என்று அவன் வாய் முணுமுணுத்தது.

சிற்றரசு எழுந்தபடி, “என்ன எழிலன் வயிற்றைப் பசிக்கவில்லையாம்.. கிளம்பு எனக்கு வயிற்றைக் கிள்ளுகிறது” என்றான்.

எழிலன் அதற்கு மறுமொழி கூறவில்லை.

சிற்றரசு அவன் அருகில் சென்று, “என்ன யோசனையா? ஒரு முடிவுக்கு வந்திருப்பாய் என்று நினைக்கிறேன்” என்றான்.

“ம்… வந்துவிட்டேன்” என்று சற்று இழுத்தாற் போல் சொன்னான் எழிலன்.

“என்ன முடிவு திருமணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்கவேண்டும். நாலு பேரைப் போல் நல்லா வாழவேண்டும். நான் நினைத்தேன் ஒரு நாள் நீ இந்த முடிவிற்குத்தான் வருவாய் என்று. ம்… நான் நினைத்தது சரியாப் போய்விட்டது” என்றான் சிற்றரசு.

“அதுதான் இல்லை. இனி எக்காரணத்தை முன்னிட்டும் நான் திருமணமே செய்துகொள்ளமாட்டேன்” அழுத்தந்திருத்தமாகச் சொன்னான் எழிலன்.

“நீ சொல்வது உண்மைதானா?”

“உண்மைதான். எனக்குக் குடும்பம் என்றாலே எட்டிக்கனியாகக் கசக்கிறது. அப்படியே திருமணஞ் செய்து கொள்ளலாம் காலப்போக்கில் சரியாய்போய்விடும் என் றாலும் எனக்கு நல்ல பெண் கிடைக்கவே மாட்டாள்” என்றான் எழிலன்.

சிற்றரசு மெல்ல புன்னகைத்தபடி, “நீ அதைப் பற்றிக் கவலைப் படாதே. உனக்கு நானே நல்ல பெண் ணாகப் பார்த்து கட்டிவைக்கிறேன். கணவனுக்கு அடங்கி ஒடுங்கி நடப்பவளாகப் பார்த்துத் திருமணஞ் செய்து வைக்கிறேன்” என்றான்.

சிற்றரசு சொல்லியதைப் பொருட்படுத்தாதவன் போல் எழிலன் “கக் கக்” என்றான்.

அவன் சிரிப்பதில் ஏதோ உண்மை மறைந்துகிடப் பது சிற்றரசு உள்ளத்தில் பட்டது.

“ஏன் சிரிக்கிறாய்?”

“ஒன்றுமில்லை நல்ல பெண் என்றாயே அதுதான் சிரித்தேன். நல்ல பெண் என்று சொல்லுகிறாயே நீ சொல்லும் அந்தப் பெண் நல்லவள்தான் என்று உனக்கு எப்படித் தெரியும். உன்னால் உறுதியாகச் சொல்ல முடியுமா?” என்று எழிலன் சற்று உணர்ச்சி மேலிடக் கேட்டான்.

சிற்றரசுக்குச் சற்று தயக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பேசினான்.

“என் மனைவியின் நல்ல குணத்தைப் பற்றி உன்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் இன்னொரு நிகழ்ச்சியைப் பற்றியும் உன்னிடம் சொல்லுகிறேன் கேளுடா. மாலை மணி ஐந்தாகிவிட்டதும் என் மனைவி வீட்டு வாசலிலேயே வந்து நிற்பாள். ஏன் தெரியுமா? எல்லாம் என் வரவை எதிர்நோக்கித்தான். வீட்டிற்குள் சென்று விசிப்பலகையில் நான் அமர்ந்ததும் உடனே சப்பாத்தைக் கழற்றுவாள். பிறகு விரைந்து சென்று கலக்கி வைத்திருக்கும் கோப்பியை எடுத்துவந்து கொடுப்பாள். நான் கோப்பியைக் குடித்தபடி அவள் செண்பகப்பூப்போல் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவள் தன் கீச்சுக் குரலில் கிளியைப்போல் பேசுவாள். கொஞ்சிப் பேசும் அந்தக் கிளிக்குரலைக் கேட்டு நானும் கிள்ளையாகிவிடுவேன். வேலை செய்து விட்டுப்போன களைப்பு பஞ்சாய்ப் பறந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் அவள் பத்தரை மாற்றுத் தங்கம். அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள்கூடச் சேர்ந்து ஊர் வம்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று உள்ளம் பூரிக்கத் மனைவியின் அருமை பெருமைகளை சொன்னான்

“உன் மனைவியைப்போல் எல்லாப் பெண்களும் இருப்பார்கள் என்று எப்படியப்பா சொல்ல முடியும்? அதுசரி உன் மனைவிக்கும் பெண்ணுக்கும்…”

“எல்லாப் பெண்களையும் எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் நான் சொல்லும் பெண், வேறுயாரும் இல்லை, என் கொழுந்தியாள். அவளும் என் மனைவியைப் போல் இருப்பாள் என்பதில் எனக்குக் கொஞ்சங்கூட ஐயமே இல்லை. என் மனைவியின் தங்கையை உனக்குத் திருமணஞ் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்கிறேன். என் மனைவி எனக்குப் பணிவிடை செய்வதைப் போல் என் கொழுந்தியாள் உனக்குப் பணிவிடை செய்து நல்ல பெயர் எடுப்பாள் என்பதில் எனக்கு கிஞ்சிற்றும் ஐயமில்லை” என்றான் சிற்றரசு.

“சில பெண்கள் நல்லவர்களைப்போல் நடிப்பதும் உண்டு. பெண்ணுள்ளமும் கடல் ஆழமும் ஒன்று. ம்… சரி சரி புறப்படு, சாப்பிட நேரமாச்சு. கும்பி காயும் போதும் குடித்தனத்தைப் பற்றிப் பேசவேண்டாம்” என்று இடையில் பேச்சைக் கத்தரித்துவிட்டான் எழிலன்.

இருந்தாலும் சிற்றரசு விடவில்லை. வசமாக மாட்டிக்கொண்டான் என்று உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு அதைப்பற்றி இடையிடையே சொன்னான். இருவரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டு சாப்பிடச் சென்றனர்.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வரும்போது இருவர் கைகளிலும் கடலைப் பொட்டலம் இருந்தது ஒரு கடலைப் பருப்பை எடுத்து வாயில் போட்டபடி, “எத்தனையா இருந்தாலும் குடும்பம் என்பதே நரகந்தான்” என்றான் எழிலன்.

“நீ சொல்லும் வழிதான் சொர்க்கமா?” என்று கேட்டுவிட்டு கடலையை நறுக்கென்று கடித்தான் சிற்றரசு.

“அதில் என்ன சந்தேகம்! அது சுவர்க்கமேதான். வேண்டுமானால் என்கூட ஒரு நாளைக்கு வா” என்றான் எழிலன் உமிழ் நீரும் கடலையும் ஒன்றறக் கலந்து வயிற்றுக்குள் செல்வது தொண்டையில் தெரிந்தது. சிற்றரசின் கருத்துக்களை எழிலன் அப்படித்தான் விழுங்கி விட்டு அவனையே திருப்பி தன் பேச்சால் மடக்கிவிட்டான்.

“என்னையே உன் வழிக்கு இழுக்கிறாயே. அதற்கும் நமக்கு வெகு தூரம் என்னை விட்டுவிடு” என்றான சிற்றரசு.

“ம்… நீ கொடுத்துவைத்தது அவ்வளவுதான். மாங் கனியைப் பார்த்துவிட்டால் மட்டும் போதாது. அதைச் சுவைத்துப் பார்க்கவேண்டும். அப்போத்தான் மாம்பழம் புளிப்பா இனிப்பா என்று தெரிந்து கொள்ள முடியும்.” என்றான் எழிலன் இருவரும் பேசிக்கொண்டே பணிமனையை அடைந்துவிட்டனர்.

நாட்கள் உருண்டன.

எழிலன் சிற்றரசை ஏறக்குறையத் தன் வழிக்கு இழுத்துவிட்டான். நன்மையைவிட தீமை விரைவில் கவரும் என்பது சிற்றரசைப் பொருத்தவரை சரியாக இருந்தது.

அன்று வேலை சற்று குறைவு. எழிலனும் சிற்றரசும் பேசிக்கொண்டிருந்தனர்.

“சோர்ந்துபோய் இருக்கிறாயே ஏன்? வேலைகூட அப்படி ஒன்றும் இல்லையே” என்று எழிலன் சிற்றரசைக் கேட்டான்.

“அதை ஏன் கேட்கிறாய்! இரவில் தூங்கவே முடிய வில்லை. ஒன்று கழுதை காம்போதி ராகத்தில் தொடங்கும். அதை என் மனைவி தட்டித் தூங்கப்போட்டதும் இன்னொன்று ஆந்தையைப்போல் அலறும். அதையடுத்து நரி ஊளையிடும். ஏன் கேட்கிறாய் தூங்கவே முடியாது. ம்… இந்தத் தொல்லையெல்லாம் உனக்கேது ? பிள்ளையா, குட்டியா?”

“இப்பவாகிலும் புரிகிறதா?”

“நல்லாப் புரிகிறது. நீ சொல்வதைப்போல் குடும்பம் சுவர்க்கமில்லை. அது நரகமேதான். விடிந்துவிட்டால் போதும் அதிலிருந்து படுத்துத் தூங்கும் வரைக்கும் காசு காசு என்று உயிரையே வாங்கிவிடுகிறாங்க” என்று சலித்துக்கொண்டான் சிற்றரசு.

“தொல்லை, கவலை எல்லாம் மறக்க வேண்டும் என்றால் அதற்கு என் வழிதான் சரி” என்றான் எழிலன்.

சிற்றரசு மனம் மாறியிருந்தாலும் உள்ளுக்குள் அச் சம். எழிலன் கட்டுப்பாடின்றி காட்டில் துள்ளித்திரியும் புள்ளிமானைப் போல் இருப்பதை நினைக்கும் போது சிற்றரசுக்கும் அவன் கூட ஒரு நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும் எனும் ஆசை பிறந்துவிட்டது. அவனுடைய தெளிந்த உள்ளத்தில் களங்கம் ஏற்படத் தொடங்கியது. மரத்தில் புல்லுருவி விரைந்து படர்வதுபோல் சிற்றரசு உள்ளத்தில் படர்ந்துவிட்டது.

மரத்தில் பரவிய புல்லுருவி மரத்தையே ஆட்சி செலுத்துவதைப்போல் எழிலன் கருத்து சிற்றரசு உள்ளத்தில் அரசோச்சத் தொடங்கிவிட்டது. “எழிலன் கூட ஒரு நாளைக்குப் போய்த்தான் பார்ப்போமே பார்ப்பதில் என்ன வந்துவிடப்போகிறது” சிற்றரசு வாய்தான் இப்படி முணுமுணுத்தது.

அப்பொழுது அங்கு வந்த தலைமையெழுத்தர் எழிலனையும், சிற்றரசையும் பார்த்தபடி, “நீங்கள் முந்தாநாள் ஐந்து மணிக்குமேல் வேலை செய்ததற்காக இன்று அரை நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்க. மத்தியானத்திற்கு வேலைக்கு வரவேண்டாம்” என்றார்.

இருவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அம் மகிழ்ச்சியில் இருவரும், “நன்றி ” என்றனர். “அதற் கென்ன” என்ற தலைமையெழுத்தர் மீண்டும் தன் இருக்கையை நோக்கி நடந்தார்.

மணி பன்னிரண்டு. எழிலனும், சிற்றரசும் தங்கள் திட்டப்படி முதலில் சாப்பிடச் சென்றனர். கோழிப் பிரியாணி சாப்பிட்டதும் எலிசபெத் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு சென்று ஒரு மரத்தடியில் அமர்நதனர். முழுக்கோழியை விழுங்கிய மலைப்பாம்பைப் போல் அங்கு இருந்த திணடில் சாய்ந்து உடம்பை நெளித்தனர். மர நிழலுக்கும் உப்பங்காற்றுக்கும் குளுகுளு வென்று இருந்தது. கோழிச்சோறும் குளுகுளுப்பும் சேர்ந்தா சொல்லவா வேண்டும்?

சற்று நேரம் அங்கு நெளிவெடுத்துவிட்டு வாடகை வண்டியில் மதுக்கடைக்கு விரைந்தனர்.

விடுதி வாசல். எழிலன் உள்ளே சென்றுவிட்டான். சிற்றரசு வாசலில் கால்கூட வைக்கவில்லை. அவனை அச்சம் தடுத்து நிறுத்தியது. இதுகாறும் செய்யாத குற்றத்தைச் செய்யப்போகிறேனே என்று அவன் பிதற்றினான். உள்ளே சென்ற எழிலன் விடுதியைவிட்டு வெளியே வந்தான். வந்ததும், “ம்! வா ஏன் கூச்சப்படுகிறாய். உள்ளே போய் ஒரு ‘பெக்’ வைத்தால் கூச்சமெல் லாம் பஞ்சாய்ப் பறந்துவிடும்” என்று சொல்லியபடி சிற்றரசின் கையைப்பற்றி இழுத்தான்.

ஒரு வழியாக உள்ளே சென்றனர். முதலில் கறுப்பு- வெள்ளை வந்தது. இருவரும் ஆளுக்கொரு ·பெக்’ குடித் தனர். அது உள்ளே சென்று என்ன செய்கிறது என் பதை அவர்கள் செய்கை காட்டியது.

சிற்றரசுக்குப் புதுப்பழக்கமா தலால் அவனுக்கு நிலாவிற்குச் சென்று அங்கிருந்து செவ்வாய் மண்டலச் சுற்று வட்டத்தைச் சுற்றிவிட்டு சுக்கிரனை நோக்கிப் பறப்பதைப்போல் இருந்தது. பக்கத்தில் இருந்த பாவை மீண்டும் கறுப்பு-வெள்ளையைக் கிண்ணத்தில் ஊற்றியபடி மற்றொரு கையால் அவன் முதுகை இதமாகத் தடவி விட்டாள். மங்கையின் மலர்க்கை பட்டதும் சிற்றரசு உள்ளம் குளிர்ந்தான். மல்லிகை மலரை மூக்கில் வைத்து நுகர்வதுபோல் அவள் கன்னத்தை நுகர்ந்து விட்டு அதே இடத்தில் ஒன்று அழுத்திப் பதித்தான். அவன் கணக்காக ஒன்று பதித்ததும் மங்கையும் அதற்கு இணையாக அவனுக்கு ஒன்று கொடுத்தாள். சிற்றரசு கன்னத்தில் அவள் கொடுத்தது செவ்வண்ண இதழ் முத்திரையாகப் பதிந்தது. அப்பொழுது ஒலிபெருக்கியில், “அனுபவம் புதுமை…” திரைப்படபாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஒருத்தி அரைகுறை ஆடையில் இடுப்பை வளைத்து வளைத்து ஆடுவது மங்கல் வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. பாம்பு நெளிவதைப்போல் நெளிந்தும், பம்பரம் சுழல்வதுபோல் சுழன்றும் அவள் ஆடினாள் அவள் ஆட்டத்திற்கு ஏற்ப சிற்றரசும் நோய்வந்த கோழி தலையை ஆட்டுவதுபோல் தன் தலையை ஆட்டிக்கொண்டான்.

அவனுக்கு அடுத்த மேசையில் அமர்ந்திருந்த எழிலன், “குடித்ததுபோதும் இன்னும் குடித்துவிட்டு ஆட் டத்தில் மயங்கிவிடாதே. மேலே உள்ள அறைக்குப்போ. அங்கே உனக்காக நான் ஒரு பச்சைக் கிளியை ஏற்பாடு செய்து வைக்கச் சொல்லியிருக்கிறேன். நல்ல பருவச் சிட்டாம். உனக்காகக் காத்திருக்கும் சிட்டிடம் போ. நான் அதற்கு அடுத்த அறைக்குப் போகப் போகிறேன்” என்றான்.

“நீ வேண்டுமானால் போ நான் இப்போது வரமாட்டேன்” என்று சிற்றரசு சொல்லியபடி அருகில் இருந்த மதுக்கடைப் பணிப்பெண்ணைப் பார்த்துச் சிரித்தான். அவன் சிரித்தது, கைகள் துவள சைகைகாட்டியது, நாத் தடுமாறச் சொல்லியது எல்லாம் மதுவின் மாய வேலை யை வெளிக்கொணர்ந்தன.

“உன்கூடப் பெரிய தொல்லையாய்ப் போச்சுடா. இந்த இடத்திற்கெல்லாம் வந்தா நாசுக்காக நடந்துக்கிற வேண்டும் தெரியுமா. இங்கே பெரும்பெரும் புள்ளிகள் வரக்கூடிய இடம். இருபது முப்பது காசுக்கு ‘லா லாந்தண்ணீ’ அடிக்கிற இடமில்லை தெரியுதா! ம்… கிளம்பு” என்று சொல்லியபடி சிற்றரசின் கையைப் பற்றினான் எழிலன். தூக்குவது சற்று சிரமமாகவே இருந்தது.

சிற்றரசின் கையைப்பற்றித் தன் தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு கையால் அவனை இடுப்போடு அணைத்துக்கொண்டு மின்தூக்கி அருகில் சென்றான். இருவரும் தள்ளாடித் தள்ளாடி நடப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு, “கொஞ்சம் கூடிப்போச்சு அதுதான்” என்று உதடுகள் பதினாறு கோணங்களில் நெளியச் சொன்னார்கள். அவர்கட்குத் தான் கூடிவிட்டது என்பது அவர்கட்குத் தெரியவில்லை.

மின்தூக்கி நான்காவது மாடிக்குச் சென்றதும், “இதில்தான் உன் சரக்கு இருக்கு, போ. போய் அந்தப் பூங்கொடியாளை… பூவை கசக்காமல் நுகரவேண்டும் என்பது உனக்குத் தெரிஞ்சதுதானே! ஐந்து பிள்ளை பெற்றவனுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்” என்று தள்ளாடிக்கொண்டே சொல்லியபடி தள்ளு கதவைச் சிறிது தள்ளினான் எழிலன்.

உள்ளே இருந்த பூவை எழிலனைப் பார்த்ததும் தன் முத்துப் பற்களைக் காட்டிச் சிரித்தாள். எழிலனும் மெல்லக் கண்ணடித்தான்.

“பாத்தியாடா கட்டுக்குழையா கட்டழகுப் பெட்டகத்தை. இந்த முல்லைமொட்டை தொட்டாலே இன்பம் கிட்டும்டா.” என்று சொல்லியபடி சற்று மறைவாக நின்று கொண்டிருந்த சிற்றரசை வாசலுக்கு நேராக இழுத்தான்.

“அப்படியா எங்கேடா இருக்கிறாள் அந்த எழிலரசி காண்பிடா அந்தக் கோதையை” என்றான் சிற்றரசு. அவன் இப்படிச் சொல்லிவிட்டு வாசலுக்கு நேராக வருவதற்கும் உள்ளே இருந்தவள் சிற்றரசைப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் சிற்றரசைப் பார்த்ததும் பாம்பை மிதித்தவள் போல் பதறிப்போனாள். அந்தப் பூவையின் விழிகள் வியப்பால் அகல விரிந்தன. பால் போன்ற முகம் பாகற்காய் தோல் போல் மாறியது வானமே இடிந்து தன் தலையில் விழுந்ததுபோல் நிலை குழைந்து போனாள். குருதி ஓட்டம் திடீர் என்று தடை பட்டுவிட்டது. அவ்வுணர்வில் கற்சிலையானாள்.

அவளைப் பார்த்ததும் குடிமயக்கத்திலிருந்த சிற்றரசு கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். மீண்டும் நன்றாகக் கசக்கிவிட்டுக்கொண்டு ‘அவள்தானா’ என்று பார்த்தான். அவளேதான்! அவளேதான்! அவன் மனத்தில் எதிரொலித்தது. தன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறுவதைப்போல் இருந்தது. நெஞ்சத் துடிப்பு நின்று விட்டது போன்ற உணர்வு. “நீயா? கள்ளி நீயா? கள்ளங்கபடமற்றவள் போல் நடித்த நீயா? குடும்பப் பெண்கள் போர்வையில் உள்ள கூத்தியா நீ? இப்பூ…மானங்கெட்ட நாயே!”காரி உமிழ்ந்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு கதறினான்.

குடி வெறியோடு, தன்மான உணர்வும் சேர்ந்து கொண்டது. எகிறி குதித்தான். சிற்றரசைப் பிடித்திருந்த எழிலன் கை தளர்ந்தது. தள்ளுகதவையும் எழிலன் விட்டுவிட்டதால் தள்ளுகதவு வந்த வேகத்திற்கும், சிற்றரசு பாய்ந்த சுருக்கிற்கும் ‘படார்’ என்ற ஒலி கேட் டது. மறுநொடியே சிற்றரசு தாழ்வாரத் தடுப்புக் கம்பியில் போய் விழுந்தான். விழுந்த வேகத்தில் தடுப்புக் கம்பியும் வளைந்துவிட்டது. ‘ஆ…’ என்ற நீண்ட ஒலி. அதைத்தொடர்ந்து கட்டடத்தின் எதிரொலியும், தேங்காய் சிதறுவதுபோன்ற ஒலியும் கேட்டது.

நான்காவது மாடியில் நின்றவர்கள் எல்லாரும் பதற்றத்துடன் மின் தூக்கியிலும், படிக்கட்டுகளிலும் இறங்கி வந்தனர். சிற்றரசின் தலை சிதறுகாயைப்போல் சிதறிவிட்டதையும், குருதி வெண்ணிறச் சலவைக் கல்லை செந்நிறமாக்கியதையும் பார்த்துக் குருதிக்கண்ணீர் வடித்தனர். சிலர் ‘இச்.. இச் அய்யோ பாவம்’ என்றனர். மற்றுஞ்சிலர் “சுமாரான வயசுதான். ம்… விதி யாரைவிட்டது” என்றனர்.

நான்காம் அறையில் உள்ள ‘அவள்’ தடதடவென்று படிக்கட்டுகளில் ஓடி வந்தாள். வந்ததும் கூட்டத்தைத் தள்ளிவிட்டு சிற்றரசு நிலையைப் பார்த்தாள். “அத்தான். நான் நல்லவளைப்போல் நடித்து ஆடிய இந்த நாடகம் உங்கள் உயிரைப் பறித்துவிட்டதே அத்தான். நீங்கள் கட்டிய இந்தத் தாலியின் அருமை – பெருமை தெரியாது சிறுமை மனங்கொண்டவர்களுடன் சேர்ந்து சிறுமை செய்துவிட்டனே அத்தான். கூடாதவர்களிடம் கூடி இங்கே வந்த நான் உங்களுக்கே ஊறு விளைவித்து விட்டேனே அத்தான். ஓடுகாலிகளின் பேச்சைக் கேட்டதால் இன்று அறுதலி ஆகிவிட்டனே அத்தான்; அறுதலி ஆகிவிட்டேனே அத்தான்…” என்று தலையிலும் மார்பிலும் மாறிமாறி அடித்துக்கொண்டு அழுதாள்.

கவலையில்லாத மனிதன் எழிலனின் மது மயக்கம் சற்று தெளிந்திருந்தது. தன் நண்பனின் பிரிவை நினைத்து கவலையில் ஆழ்ந்தான். வாழ்நாளில் பெரும் பகுதியை நாம் இந்த அலுவலகத்தில்தான் கழிக்கப் போகிறோம் என்ற சிற்றரசு பிரிந்துவிட்டானே என்று உள்ளம் உருகினான். அவன் கண்கள் குருதிக் கண்ணீரை வடித்த வண்ணம் இருந்தன.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *