பூவே…. செம்பூவே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 3,480 
 
 

செம்பருத்திச் செடியருகிலேயே இருந்தது அந்த ஷெண்பகப் பூ மரம். உண்மையில் அது தாவர வர்கத்தில் அது மரம்தான்!. ஆனால் அந்த சமயத்தில் அது செடியாகவே வளர்ந்திருந்தது.

அதன் வளர்ச்சியை அவ்வப்போது பார்த்துவந்த அலமுவுக்கு அது ஒரு செய்தியைக் குறிப்பால் உணர்த்தியது. மொக்கு துளிர்க்க ஆரம்பித்ததை அதன் அரும்புகள் உணர்த்தின. ரெண்டொரு நாளில் சந்தனக்கலரில் ஊரே மணக்க பூத்துவிடும்!

பக்கத்தில் பூத்திருந்த செம்பருத்திச் செடியிலிருந்து ஒரு பூவைப்பறித்து ஷெண்பகப்பூச் செடியின் உச்சில் வைத்து அழகுபார்த்தாள். வெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள் அலமு!.

‘உனக்கென்ன பயித்தியமா ஷெண்பகப்பூச் செடி தலைமேல், யாராவது செம்பருத்திப்பூவைச் செருகி வைப்பார்களா?! நீ என்ன செய்கிறாய்?’ என்றார் ஏகாம்பரம்.

‘பெத்த புள்ள வயசுக்கு வந்துட்டா… பூப்பு நன்னீராட்டுக் கொண்டாடறது இல்லே..?! அதுமாதிரிதான். ஷெண்பகப் பூவும் பதப்பட்டுட்டுது! அதன் பருவ எட்டலை மகிழ்ந்து கொண்டாடவே நான் ஒரு தாயாய் அதன் தலையில் பூச்சூடி அதைக் கவுரவிக்கிறேன்!’ என்றாள் அலமு.

‘அடிப் பயித்தியம் … அதுக்கென்ன தெரியவா போகுது நீ கவுரப்படுத்தறது?!’ காட்டமாய்க் கேட்டார் ஏகாம்பரம்.

‘அதுக்குத் தெரியப்போகுதோ இல்லையோ நம்ம பிள்ளைங்களுக்குத் தெரியுணுங்க…! அந்தக் காலத்துல சங்க இலக்கியத்தில் நற்றிணையில் நூற்றி எழுபத்திரண்டாவது பாட்டில் புன்னை மரத்தை உன் சகோதரி என்று சொல்லி, தன் மகளுக்கு ஒரு தாய் அறிவூட்டுகிறாள். ‘உனக்குப் போலவே நெய்யும் பாலும் ஊட்டி வளர்த்தது., இது!’ என்று தாய் தன் மகளுக்குச் சொன்னதால், அந்தப் பெண் தன் தலைவனோடு அந்த மரத்துக்குப் பக்கத்தில் இருந்து பேசவும், தன் ஸ்கோதரி பார்க்கிறாள் என்று நாணப்பட்டாளாம்! சகோதரி இருக்கிறாள் என்று!’ அந்தக்காலத்தில் மரத்தை மக்கள் அப்படி ஒரு உயிரா உடன்பிறப்பா மதிச்சாங்க!. ஏன் ரொம்ப சிம்பிளாச் சொல்லணும்னா ‘வாடிய பயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடினேன்னு சொன்ன, வள்ளலார் நேயம் செடியும் ஒரு உயிர் எங்கிற நேயம் இன்னும் மறையாம தலைமுறைக்குக் கடத்த வேண்டியது நம்ம கடமை இல்லையா?’ என்றாள் அலமு.

‘வெறும் பூவைத் தலையில் சூடி அழகு பார்க்கும் போதெல்லாம்.. அதுவும் தன் சகோதரி என்ற நினைப்பு நம்ம பெண்ணுக்கும் வரட்டும்! அப்பத்தான் பூங்காக்கள் தோறும் “பூக்களைப் பறிக்காதீர்கள்!” என்று போர்டு வைக்க வேண்டிய அவசியம் வராது போகும்!’ என்றாள் அலமும்.

‘என்னமோ செய்! நல்லது நடந்தாச் சரிதான் ‘ என்றார் ஏகாம்பரம்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *