பூவுக்குக் கீழே
(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நகரம் ஒரு திசையில் முடிகின்ற இடத்திற்குச் சற்றுத் தள்ளி வந்ததும் சைக்கிளை விட்டு இறங்கினான். ஒரு மரத்தடியில் சைக்கிளை நிறுத்திப் பூட்டி வீட்டுக் கை யில் பையோடு சாலை ஓரமாக நடந்தான். முதல் நாள் திருச்சிக்குப் பஸ்ஸில் போகும் போது இந்த இடத்தில்தான் அந்தப் பூவைப் பார்த்திருந்தான். மேலே சிவப்பு கீழே மஞ்சள். ஒரே பூவில் இரண்டு நிறங்கள் சம பரிமாணத்தில். வேகமாய்ப் பறந்த பஸ்ஸில் அந்தப் பூவை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில்தான் பார்க்க முடிந்தது. பூ இன்னும் கண்ணிற்குள் அப்படியே நின்றது. இடத்தை. அப்போதே அடயாளமிட்டு மனதில் வைத்துக் கொண்டான்.
வலது ஒரமாய்ப் பாறை தெரிந்தது. பாறைக்கு பத்தடி தூரத்தில் போத்துப் போத்தாய்ப் புதர்கள் மண்டிய இடம் ஒன்றில்தான் பூவை பார்த்த ஞாபகம். பாறையை நோக்கி நடந்தான். சாலைக்கு இரு புறங்களிலும் வெளிர் பச்சை நிறத்தில் கடலைச் செடிகள் கொடி விட்டிருந்தன. அடர்ந்து படர்ந்து பரந்த கடலாய்க் கிடந்தன கடலைச் செடிகள். ஒருதரம் இவன் பக்கமாய்க் காற்றுக்குச் சரிந்து வளைந்தன கொடிகள். மறுதரம் கொஞ்சம் சாய்ந்து காற்றடித்தபோது திரும்பி வளைந்து கொடிமேல் காடி சாய்ந்து திசை மாறி ஆடின. செடிகளுக்கும் கொடிகளுக்கும் காற்றுத்தான் கேப்டன் என்று நினைப்பு வந்தது,
பாறையைத்தாண்டி நடந்த போது கண்களில் ஆவல் பறந்தது. பத்தடிக்கு அப்பால் நடந்தும் பூ கண்ணில் படவில்லை. இவனுக்குக்கொஞ்சம் பதட்டம் வந்தது. வரும்போதே சரியாகப் பார்க்கவில்லையோ என்று சந்தேகம். பார்வை கூர்மையில்லாமல் அகலப் பார்வையாயிருக்கிறதென்று எண்ணி வருத்தப்பட்டான். இவன் சுரத்தில்லாதவன் கணக்கில் கெட்டிக்காரர்கள் இப்படி எதையாவது தேடும்போது தன்னைப்போல் ஏமாற மாட்டார்கள் ; குறியாய்ப் பார்த்து விடுவார்கள் என்று எண்ணினான் பார்வையை வலியக் கூர்மைப்படுத்திக் கொண்டு மேலும் நடந்தான்.
ஒருபுதர் முனையில் பளீரென்று அந்தப்பூ தெரிந்தது இவனுக்குக் கை வேர்த்துவிட்டது. கண்கள் லேசாய் நடுங்கின. சாலையை விட்டுப் பள்ளத்தில் இறங்கி னான் காட்டுச் செடிகள் அடங்காமல் வளர்ந் திருந்தன புதருக்குள் நின்று பூவை அருகில் பார்த்தான். தள்ளி நின்று பார்த்தான். ஓரத்தில் ஒதுங்கி நின்று பார்த்தான் தொட்டான். பூ மிது மிது வென்றிருந்தது. நெஞ்சு தனியாய்ப் பறப்பது போலிருந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா வென்று று சுற்றி பார்த்தான் சாலையும் புளிய மரங்களும் கடலைகாடும் அனாமத்தாய்க்கிடந்தன.
பூவுக்குக் கீழ் செடியைப் பார்த்தான். அகலமாய் குட்டையாய் கத்திரிவெட்டில் இலைகள். குத்துச் செடி அளவிற்கு உயரம். பூக்காத காலத்தில் செடியும் அழகாயிருக்கும். அதே போன்ற செடியை அங்கும் இங்கும் தேடினான். கொஞ்சம் தள்ளி சின்னதாய் ஒரு செடி நீர்முள்ளிக் கொத்திற்கு பக்கத்தில் இருந்தது. வாளிப்பான செடி இரண்டு நாள் மழை யில் பூமி நனைந்து ஈரமாயிருந்தது அருகில் போய் பதமாய் அந்தச் சிறு செடியைப் பிடுங்கினான். செடியைப் பிடுங்கிய இடத்திலிருந்து ஈரமண்ணை அள்ளிப் பாதிப்பைக்கு நிரப்பிக் கொண்டான். பிடுங்கிய செடியைப் பைக்குள் போட்டான். பூத்த செடியை யும் பூவையும் ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு சாலைக்கு ஏறினான். ரொம்பக் குதூகலமாயிருக்கும் போது பாடும் பாட்டை அவன் உதடுகள் பாடியது அவனுக்குத் தெரியவில்லை.
சைக்கிளில் வீட்டிற்கு வரும்போது இருட்டத் தொடங்கிவிட்டது. பையிலிருந்து செடியை வெளியி லெடுத்ததும் மனைவி கேலி பேசினாள். ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ பேண்ட்டையும் சட்டையையும் களைந்து விட்டு லுங்கியை கட்டிக் கொண்டான். பாத்ரூமுக்கு பக்கத்தில் கிடந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான். விதவிதமாய் வளர்ந்த செடிகளுக்கு மத்தியில் புதிய நபருக்கேற்ற இடத்தைத் தேடினான். காம்பவுண்டு உள்சுவருக்குச் சற்றுத்தள்ளி வாசலுக்கு நேராய் கொஞ்ச இடம் இருந்தது.
மண்வெட்டியால் குழி வெட்டினான். வெளியில் போய்க் கொஞ்சம் மணல் கொண்டு வந்தான். குழிக்குள் மணலைப் பரப்பினான், அதன் மேல் தோண்டிய மண்ணில் கொஞ்சத்தைச் சிதறினான் மேலாகச் செடியைப் பிடுகிய இடத்தில் தோண்டிய மண்ணைப் பையிலிருந்து கொட்டினான்.
செடியைப் பதமாக குழியில் வைத்தான். வேர் மடிந்து விடாமல் நிறுத்தி, கட்டிக் கல் இல்லாமல் மண்ணை அள்ளி மெது மெதுவாய்ப் போட்டான் மீதியுள்ள மண்ணை செடிக்கு வட்டமாக உயர்த்தி அரண் கட்டினான். ஈர மண் எல்லா வேலைகளுக்கும் ரொம்பத் தோதாயிருந்தது. பூவாளியில் தண்ணீர் கொண்டு வந்து செடியின் தலை இலையிலிருந்து கீழ் இலைவரை குளிரக் குளிர ஊற்றினான். தண்ணீர் ஊற்றியதில் செடி கொஞ்சம் சாய்ந்ததை சரிப்படுத்தி தான். பூவாளியைப் பக்கத்தில் வைத்துவிட்டு வெகு நேரம் அந்தச் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.. மனைவி உள்ளே குழதைக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தாள். தொந்தரவில்லை இன்னும் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம், பொழுதுதான் நன்றாக இருட்டி விட்டது.
உள்ளே போனான்.
ஆபீஸ் சிநேகிதன் சீனிவாசன். இவனை தேடி வந்தான். பேசினான். மனைவி என்னென்னவோ கேட்டாள் பதில் சொன்னான். குழந்தைகாலை கட்டிக் கொண்டு சிரித்தது. இவனும் சிரித்தான். அரை மணி கழித்து வாசல் விளக்கைப் போட்டு விட்டு வந்து செடியை ஊன்றி கவனித்து பார்த்து விட்டுப் போனான்.
தேங்காயில்லையென்றாள். செடியைப் பார்த்துக் கொண்டே சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்குப் போனான். தேங்காய் வாங்கிக் கொண்டு திரும்பும் போது வேண்டுமென்றே செடியைப் பார்க்கவில்லை திரும்பி வந்து ஆற அமர பார்க்க வேண்டுமென்று அடக்கிக் கொண்டான்.
சாப்பிடும்போது. “மத்தியானம் தெருவில் இந்த அப்பளத்தை வாங்கினேன். எப்படி இருக்கு?” என்றாள். நல்லாயிருக்கு என்றான். அவளும் போட்டுக் கொண்டு சாப்பிடும்போது ‘ஐயய்யோ அப்பளத்திலே மடி அடிக்குதே. நல்லா ஏமாத்திப் புட்டான்’. ‘ஒங்களுக்கு நாக்கு செத்துப் போச்சா’ என்றாள். ‘விடு கழுதையை என்று சொல்லிக் கொண்டே கழுவிய கையை டவலில் அழுத்தி அழுத்தித் துடைத்தான் பாத்திரம் கழுவி முடியும் வரை தொந்தரவில்லை.
வாசல் விளக்கைப் போட்டான். வெளிச்சம் எடுத்துக் போதாதென்று பீரோவிலிருந்து டார்ச்சை கொண்டு செடியருகில் வந்தான். டார்ச் வெளிச்சத்தில் செடி மயங்கியது. அவன் கணக்குப் போட்டான் செடியை நட்டு மூன்று மனி நேரமாகிவிட்டது. செடி வாடவில்லை.
ஆனால் காட்டில் பிடுங்கிய போதிருந்த செழிப்பில் கொஞ்சம் குறைவிருந்தது.
செடி இப்போது தரைக்கு மேல் ஒருசாண் உயரத்தில் தானிருந்தது. இவன் மறுபடி கணக்குப் போட்டான் இது குத்துச் செடியாய் வளர எப்படியும் ஒரு மாத மாகலாம். அப்புறம் தான் பூக்கும். மஞ்சளும் சிவப்பும் சமபரிமாணத்தில் ஒரு சின்னப் பேழையைப் போல் கண்ணை அசத்தும். இந்தச் செடி பூக்கின்ற தினத்தில் இவள் வாசலுக்குக் கோலம் போட வேண்டியதில்லை. இந்த வீடும் வாசலும் தெருவும் ஒரு சின்ன அதிசயத்தைப் பார்க்கும். பூ பத்து நாட் களுக்கு வாடாது. அந்த இரவுகளிலும் பகல்களிலும் இந்தப் பூவிற்காக எந்தெந்த காட்டிலிருந்து என்னென்ன வண்டுகள் வருமோ?
”மணி பத்தாச்சு” உள்ளே இருந்து குரல் வந்தது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே போனான்.
இவன் உலகம் பூராவையும் சுற்றி வரவேண்டு மென்று அடிக்கடி நினைப்பான். உலகத் தெருக் களிலும் பூங்காக்களிலும் காடுகளிலும் வேர் விட்டுக் கிளைவிட்டுப் பூத்துச்சொரியும் எல்லா மரங்களையும் செடிகளையும் பார்த்துத் தீர்த்து விடவேண்டுமென்று கனவு கண்டு கொண்டேயிருந்தான். இங்கிலீஷ் சினிமாக்கள் பார்க்கும் போது காமிரா வீட்டைவிட்டு, ஸ்டுடியோவை விட்டு எப்போது சாலைகளுக்கு ஆற்றங்கரைகளுக்கு வரும் என்று கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்திருப்பான். இங்கேயெல்லாம் பார்க்க முடியாத செடிகளையும் மரங்களையும் பூக்களையும் பார்க்கத்தான்.
சின்ன வயதில் எல்லாப் பையன்களையும் போல் இவனும் பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மனப்பாடம் பண்ணவென்று று ஏரிக்கரை, காடு, மரத்தடி என்று போயிருக்கிறான். அப்படிப்போன ஒரு நாளிலாவது ஒரு வரியும் படித்ததில்லை. விரித்த புத்தகத்தை மூடிவிட்டு மரத்தையே பார்ப்பான்; செடிகளையே பார்ப்பான். காட்டு வாசனையில் சொக்கிப்போய் கனவு காண்பான்.
ஒரு நாள் உக்கிரமாய் வெயிலடித்துக் கொண்டிருந்த உச்சி வேளை. கையில் பாடப்புத்தகம். மரத்தடியில் குளு குளுவென்ற நிழலில் உட்கார்ந்திருந்தவனுக்கு திடீரென்று அந்த மரம் பரிதாபமாய்த் தெரிந்தது. இவ்வளவு வெயிலையும் தலையில் வாங்கிக் கொண் ஏமாளித்தனமாய் எனக்கு நிழலைக் கொடுக்கிறதே’ என்று எண்ணினான். அப்புறம் மரம் இவனுக்கு பதில் சொல்வதாய் நினைத்துத் தானே சொல்லிக கொண்டான்.
“நான் ஒன்றும் ஏமாளியல்ல. இப்போதுதான் சூரிய ஒளியை வாங்கி ஒளிச் சேர்க்கை செய்கிறேன். சுறு சுறுப்பாய் உணவு தயாரிக்கிறேன். நான் வேண்டா மென்று கீழே விட்ட நிழலில் நீதான் சோம்பேறித்தனமாய் விழுந்து கிடக்கிறாய்.”
இப்படி அவனும் மரமும் அவனும் செடிகளும் பரீட்சைக்கு படிக்க வேண்டிய அவசரமான நேரங்களில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
புராணக் கதைகளை நிறையப் படிப்பான். அவற்றில் வருகிற தபோவனம், பர்ணசாலை இதிலெல்லாம் இவனுக்கு ரொம்ப மயக்கம். கல்லூரியில் படிக்கும் போது மூன்றாம் வீட்டு நிரஜாவை அவளுக்குத் தெரிந்து விடாமல் வெகு நாளாய்க் காதலித்தான். நிரஜா இவனைப் பார்த்து எப்போது சிரித்தாலும் சரி அடுத்த பத்தாவது நிமிஷம் சைக்கிளில் ஏரி ஒரு தோப்பிற்குள் போய் உட்கார்ந்து கொள்வான். தன்னை ஒரு ரிஷியாக்குவான். நிரஜாவை ரிஷி பத்தினியாக்குவான். ஒரு அடர்ந்த கானகத்தை உண்டாக்குவான். ஜிலு ஜிலுவென்று ஒரு நதியை ஓடவிடுவான். நதிக்கரையில் சுத்தமாய் ஒரு பர்ண சாலையைக் கட்டுவான். வீட்டில் தொங்கிய ரவிவர்மா ஓவியங்களில் வருவதுபோல் நிரஜா நீராடி விட்டு குடத்தில் நீர் மொண்டு, வருவதைப் பார்ப் பான். நிரஜாவிற்காகக் காடெங்கும் போய் காய்கள் கனிகள் கிழங்குகள் பறித்து இப்படியே நினைத்துக் கிறங்கிக் கிடந்து வீடு சேர்ந்திருக்கிறான். அவள் ஒரு இஞ்சினியருக்கு மனைவியாகி பம்பாய் போனதும்தான் அந்தக் காடும் பர்ணசாலையும், கனவும் நின்றது.
பக்கத்து கிராமத்தில் அப்பாவின் நண்பர் ஒரு முஸ்லீம். அவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்குப் போகையில் அப்பா இவனையும் அழைத்துக்கொண்டு போனார். ட்ரவுசர் போட்ட சின்னப் பையன். கல்யாணம் ராத்திரியில். விடிய விடிய சாப்பாடு. விடிய விடிய, சினிமாப்பாட்டு, விடிய விடிய ஊர் வலம், சடங்குகள். மல்லிகைப்பூ மலேயா செண்ட் வாசனை ஊர் முழுவதும்.
வீட்டு வாசலில் ஒரு வேப்பமரம். ஒரு முருங்கை மரம். ஒவ்வொரு மரத்திற்குப் பக்கத்திலும் ஒரு மூங்கிற் கம்பத்தை நட்டு ஒவ்வொரு பெட்ரோமாக்ஸ் லைட்டைக் கட்டியிருந்தார்கள். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் வேப்ப இலைகளும் முருங்கை இலைகளும் கண்ணில் பால் ஊற்றிக் கொண்டிருந்தன. திண்ணையில் உட்கார்ந்து விடிய விடிய அந்த அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்கொள்ளாக் காட்சியென்றால் அது பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்திலாடும் வேப்பங்கிளைகளும் முருங்கை இலைகளும் தான் என்று இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
இவனும் பி.எஸ்.ஸி. பாட்டனியில் சீட் கிடைத்த போது வேண்டாமென்று பி ஏ வரலாறு எடுத்துப் படித்தான். அப்பாவுக்கு அதனால் இவன் மீது ஏகக் கோபம். இலைகளை வெட்டுவதும் பாடம் பண்ணு வதும் சகிக்க முடியாதவைகளாகத் தோன்றின எம்.ஏயிலும் வரலாறையே எடுத்துப் படித்தான்.
எங்காவது நாலைந்து மரங்களும் செடிகளும் அடர்ந்து இருளாயிருக்கும் இடம் தெரிந்தால் மனசு, துள்ளி பாயும். உள்ளே நுழைந்து சருகுகளை ஒதுக்குவான், பாம்பு பல்லிக்குப் பயப்படும் குணம் சிறு வயதிலிருந்தே இல்லை. அங்கே போய் உட் கார்ந்து கொண்டு ராஜாக்கள் காலம் மூதாதையர் காலம், சிம்பன்ஸி காலத்திற்கெல்லாம் போய் வருவான்.
மரங்கள் செடிகள் எதுவும் காற்றைத் தவிர வேறு கழிவுப் பொருள்களை வெளியிடுவதில்லை மனிதர்களும் மிருகங்களும் இதில் அதிகமாக வாழ்கிறார்கள் என்று அடிக்கடி நினைப்பான்.
வேலை கிடைக்காமல் திரிந்தபோதுதான் செடிகளைக் கொண்டு வந்துவாசலிலும் கொல்லையிலும் ஊன்றி வைக்க ஆரம்பித்தான். அப்பாவின் சிநேகிதர் கள் வீட்டிற்கு வரும்போது; பையன் வேலை தேடுறானா?; என்று கேட்கையில் அப்பா சொல்வார், அவர் வேலை ஒண்ணுந் தேடுறதாக் காணோம். செடிகளைத் தேடிக்கிட்டித் திரியிறார். ஒரு தடவை சிநேகிதனோடு ஊட்டிக்குப் போனான் அவ்வளவு செடிகளையும் பார்த்து விட்டுக் கண்கள் தொட்டிலாடின. சொப்பனங்களில் வந்த பல செடிகள் ஊட்டியில் இருந்தன்.
பங்களாக்களின் முன்னால் நூறு வகைச் செடிகள் மென்மையான நிறங்களில் முரட்டு நிறங்களில்பல வண்ணங்கள் ஒரே செடியில். கண்கள் அரை இஞ்ச் அகலமாகி விட்டன. பல பங்களா வாசல்களில் பிச்சைக்காரனைப்போல் நின்று செடிகளை யாசகம் கேட்டான். யாரும் தரவில்லை.
அப்புறம் அவன் எந்த பங்களா முன்பும் பாய் நிற்கவில்லை. யாரும் கவனிக்காத காட்டுப் பக்கம் ரம்மியான பூக்களைப் பார்த்து அந்தச் செடிகளை யும் காட்டுக் கொடிகளையும் கொண்டு வந்து வாசலில் வளர்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு செடியிலும் ஒரு வினோதம். ஒரு விசேடமிருப்பதாகப் பட்டது. அவன் வீட்டுவாசலும் கொல்லையும் ரொம்பச் சின்ன இடங்கள், அவன் ஆசைப்படி தோட்டம் வளர்க்க உலகம் போன்ற ஒரு பெரிய இடம் தேவைப்பட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
ஒரு நாள் கள்ளிச் செடியைக் கொண்டு வந்து குழி வெட்டி மணல் பரப்பி செடியை ஊன்றித் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நேரம் அப்பா வந்து விட்டார். கள்ளியைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நடலாமா! இதையெல்லாம் பைத்தியந் த ன் செய்யும் என்று சொல்லிக்கொண்டே பிடுங்கி வெகு தூரத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டு வந்தார்.
மரங்களும் செடிகளும் தாயைப் போல. அப்பாவை போல அரக்கத் தனமான ஆண் இனமே தாவரங் களில் இல்லை, எல்லாம் பெண் இனம்; வாஞ்சை மிகுந்த னம். அப்பா திவசம் முடிந்த மறுநாள் ஒரு அழகான கள்ளிச்செடியைக் கொண்டு வந்து வாசலில் நட்டான்.
***
பால்காரன் மணியடிக்கிற ஓசை தூக்க நடுவில் கேட்டது. அவள் எழுந்து போய் சதவைத் திறக்கும் ஓசையும் தொடர்ந்து கேட்டது. சுரீலென்று ஞாபகம் வந்து எழுந்தான். முகத்தைக் கழுவிக்கொண்டு வாசலுக்கு வந்தான். பொழுது விடிந்து கொண்டிருந்தது. காம்பவுண்டுக்கப்பால் லேசாய் பனி மூட்டம்.
இவன் செடியருகில் போய்க் குத்துக் காலிட்டு உட்கார்ந்தான். செடி வாடவில்லை. ரொம்பச் செழிப்பாகவும் இல்லை. அரணில் சிமெண்ட் பூசியது போல் ஈரமண் படிந்திருந்தது; நடுவில் ஒரு சின்னக் குழியுடன். உள்ளே போய்ப் பூ வாளியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினான். மறுபடியும் குத்துக்கால் வைத்துக் கொண்டு செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
காப்பியை எடுத்துக் கொண்டு அவள் செடியருகில் வந்தாள். காப்பியை உறிஞ்சிக்கொண்டே செடியைப் பார்த்தான். தண்டை, குழியை, ஈரச் சொத சொதப்பை, இலைகளில் ஒட்டியும் ஒட்டாமலும் உருண்ட நீர்த் திவலைகளைப் பார்த்துக் கொண்டே யிருந்தான். வெகு நேரங்கழித்து பூ வாளியை எடுத்துக் கொண்டு போய் நீர் எடுத்து மற்றச் செடிகளுக்கு ஊற்றினான்.
மார்க்கெட்டிற்குப் போகையில் ஒரு முறை, வரும் போது ஒரு முறை செடியைப் பார்த்தான். ஆபீஸுக் குக் கிளம்பையில் நின்று நன்றாய்ப் பார்த்தான். இந்தச் செடிக்கு சோதனை நேரம் இனிமேல்தான். பகல் முழுதும் அடிக்கப்போகிற வெயிலுக்கு தாக்குப் பிடித்து விட்டால் பிழைத்துக் கொள்ளும். மகளே உன் சமத்து’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். குழந்தை டாட்டா சொல்லியபோது இவன் செடிக்கும் சேர்த்து சொல்லிவிட்டு ஆபீஸூக்குப் புறப்பட்டான்.
அன்று பகல் முழுதும் ஆபீஸ் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரங்களில் மனசு சலனப்பட்டுக் கொண்டேயிருந்தது. கேண்ட்டீ னுக்குப் போக வெளியில் வந்தபோது சுள்ளென்று அடித்தது. இன்றைக்கென்று வெயில் ரொம்ப அதிகமாயிருக்கின்றதென்று நினைத்தான். மீதிப்பட்ட வேலைகளைக் கட்டிப் போட்டுவிட்டு ஐந்தரை மணிக்கு சைக்கிளில் பறந்து போனான். செடி லேசாய் வாடியிருந்தது. ஆனால் பிழைத்துக் கொள்ளும் என்று தோன்றியது. பக்கத்தில் உட்கார்ந்து வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்றாம் நாள் வாட்டமெல்லாம் போய் மத மத வென்று தெரிந்தது செடி. இலைகளில் பச்சை பிடிக்க ஆரம்பித்திருந்தது. காலை மாலை இரவு என்று செடி யருகில் உட்கார்ந்தான்.
ஒரு வாரங்கழித்து ஒரு நாள் இவன் ஆபீஸிலிருந்து வரும் பொழுது இரண்டு வீடு தள்ளி ஒரு ரு மாடு சாணி போட்டு விட்டுப்போனது. காஞ்சம் ஒரு மாதிரி யாகத் தானிருந்தது என்றாலும் குனிந்து ஒரு கையில் சாணத்தை அள்ளிக் கொண்டு மறு கையில் சைக்கிள் ஹேண்ட்பாரைத் தள்ளிக்கொண்டு வந்தான். தெரு வில் எத்தனை பேர் பார்த்தார்களோ?” என்று மனைவி கத்தி கோபித்தாள்.
சாணத்தைக் குழி நிறையப்போட்டுத் தண்ணீர் ஊற்றினான். பதினைந்து நாளில் செடி இவன் முழங் காலுக்கு வளர்ந்து விட்டது. தெருக்கோடியிலிருந்து ஒரு பையில் குப்பை அள்ளி வந்து செடிக்குக் கொட்டினான்.
ஒரு நாள் சாமத்தில் திடீரென்று பேய் மழை பெய்தது. காற்று மாறி மாறி அடித்தது. மனைவி அவச ரம் அவசரமாய் ஜன்னல் கதவுகளைச் சாத்தப் போனாள். இவன் வாசல் கதவைத் திறந்து காண்டு வராந்தாவிற்கு வந்தான். டார்ச்சை அடித்து செடியைப் பார்த்தான் வளைந்து கொடுக்கவும் முடியாமல் நிமிர்ந்து நிற்கவும் முடியாமல் பரிதாபமாகத் தள்ளாடியது. உள்ளே ஓடி கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு வந்து செடிக்கு சற்று தூரத்தில் ஊன்றினான். நனைந்து கொண்டே ஒரு கயிற்றால் கட்டி விட்டான். “பைத்தியம் பிடித்தது போதாதுன்னு ஜலதோஷமும் பிடிக்கப்போகுது” என்று அவள் திண்ணையில் நின்று கேலி பேசினாள்.
மறு நாள் காலையில் எழுந்து பார்த்தபோது செடி படு உ ற்சாகமாய் தலையை ஆட்டிக் கொண்டு நின்றது. கடப்பாரையை உருவி எடுத்து உள்ளே போட்டான் காலைக் காப்பியை தினமும் செடியிடம் உட்கார்ந்து தான் குடித்தான். குப்பை, சாணத்தால் பாதியும் இவன் பார்வையால் பாதியுமாய் செடி வளர்ந்து இவன்தொடை உயரத்திற்கு வந்தது.
ஒரு நாள் காலையில் வந்து உட்கார்ந்த போது செடியில் சின்னதாய் என்னவோ மாற்றம் தெரிவது போலிருந்தது உற்றுப் பார்த்தான். ஒரு மொட்டு. காப்பி அன்று ரொம்ப ருசியாயிருந்தது.
மொட்டு மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் வளர்ந்து கொண்டிருந்தது. காப்பியின் ருசியும் கூடிக்கொண்டே போனது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. அவள் குழந்தையுடன் முதல் நாள் அம்மா வீட்டிற்குப் போயிருந்தாள். சாவதானமாயெழுந்து முகம் கழுவிக் கொண்டு வாசலுக்கு வந்தான். பளீரென்று ஜொலித்தது பூ. மஞ்சளும் சிவப்பும் சம பரிமாணத்தில். கண் கூசியது. உடம்பு சற்று நடுங்கியது. அருகில் நின்று பார்க்கப் பார்க்கக் கண் குளிர்ந்து வந்தது. வெகுநேரம் நின்றான். பார்த்துக் கொண்டிருக்கும் போது இவனுக்குத் தோன்றியது, “இவ்வளவு நேரம் பார்த்தும் செடி கண்ணில் பட வில்லை. பூ தான் கண்ணுக்குத் தெரிந்தது; கண்ணில் நின்றது. பூவுக்குக் கீழே செடியும், செடிக்குக் கீழே நா னும் திடீரென்று காணாமற் போனோம்” பார்வையைத் திருப்பி உள்ளே போனான்.
சட்டையைப் போட்டுக் காண்டு சைக்கிளையும் பையையும் எடுத்து வெளியில் வைத்து வீட்டைப் பூட்டி னான். மனைவி அம்மா வீட்டிலிருந்து வருகிற நேரம். சாவியை அடுத்த வீட்டில் கொடுத்தான். தஞ்சாவூர் சாலையில் வெள்ளைப் பூச்செடி ஒன்றை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்து வைத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது சைக்கிளில் ஏறி பறந்தான். கனத்த வெயிலில் இவன் பையில் செடியோடும் செடி யிருந்த மண்ணோடும் சைக்கிளை விட்டு இறங்கையில் மனைவி கேலி பேசினாள். “அடுத்த விருந்தாளி வந்தாச்சா?”
– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
![]() |
கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 2,854
