பூக்களை பறிக்காதீர்கள்




ஏய்,இந்திரா, டிபன் ரெடியா?
மணி என்ன ஆச்சு? விடிகாலையிலே எழுந்த பின்னும் உன்னால் நேரத்திற்கு தயார் பண்ண முடியல இல்ல, என்னத்தான் பண்ணுகிறாயோ? நாங்க எல்லாம் வெளியே போனத்துக்கு அப்புறம் மத்த வேலையை பார்க்க வேண்டியதுதானே, என அங்கலாய்த்த படியே கையில் நாளிதழ் படித்தபடி அலுவலகத்துக்கு கிளம்ப தயாராய் இருந்தான் ஜனா என்கிற ஜனார்தன்.
என்னங்க, காலையிலே சாப்பிட டிபனும், உங்களுக்கு மதிய உணவும் சேர்த்து தயார் பண்ணனும்னா கொஞ்சம் லேட்டாத்தான் ஆகும்.
இதலே அவள் என்ன சாப்பிடுவாள், நீங்க என்ன சாப்பிடுவிங்கனு பார்த்து பார்த்து சமையலை முடிவு பண்ணுவதே பெரும் வேலையா இருக்கு,
நீங்க எதை வேணாலும் சாப்பிடுவீங்க, அவள் அப்படியே கொண்டு வந்திடுவாள். அப்புறம் செய்யறதிலேதான் என்ன அர்த்தம் இருக்கு.
இதை நினைச்சாலே எனக்கு சமைக்கவே பிடிக்க மாட்டேங்குது. என்ன செய்ய நான் வாங்கி வந்த வரம். அப்படி எனப் புலம்பினாள்,
அனைத்து காலை வேலையும் செய்து முடித்த இந்திரா,கல்லூரி படிப்பு முடித்தவள். கிராமத்தில் கட்டுக் கோப்பாய் வளர்க்கப் பட்டவள், வேலை நன்கு அறிந்தவள், பள்ளி இறுதியாண்டு படிக்கும் வயது பெண்ணுக்குத்தாய்.
நடுத்தரக் குடும்பத்தில்தான் எத்தனைப் பிரச்சினை.
தீட்டுக் கூட நல்லதுதான். கொஞ்சம் ஓய்வு கிடைப்பதால்.
மாத விடாய் காலங்களில் மட்டுமே சிறது ஓய்வு எடுக்கும். நவீன இயந்திரங்கள் இல்லத்தரசிகள்.
மற்ற நாட்களில் பதினெட்டு மணி நேர உழைப்பு, பொறுப்புகள், சலிப்புகள், சமாளிப்புகள்,வசவுகள், அவர்கள் எதிர் பார்க்கும் பாராட்டுகளைத் தவிர அனைத்தும் அனுபவமாகி கரையைத் தொட முயற்சி செய்யும் அலையாய், காற்றில் ஆடும் கட்டுமரமாய் இவர்களின் வாழ்க்கை.
அவளுக்குள்ளும் ஓர் ஆசை இருந்தது. இரு சக்கர வாகனம் ஒன்றை இயக்க வேண்டும் என்று.
பிறந்த வீட்டில், அப்பா கொடுத்த தைரியம் சைக்கிள் வரை ஓட்ட முடிந்தது. அம்மாவின் அக்கறையில் வாகனக் கனவு கலைந்து போனது.
அப்பா அறிவு திறன் மேம்பட யோசிப்பார்..அம்மா ஆயுள் மீது கவனம் வைப்பார்.
இப்பொழுது கணவனின் கையில் இவள் வாழ்க்கை, வாகனத்தை தொடுவது என்பது அதைத் துடைப்பதோடு நின்று போனது.
ஜனா, வாகனம் வாங்க இயலாமல் இல்லை, ஆனால் இவளுக்கு எதுக்கு வண்டி, ஓட்ட முடியாது, வயசாயிட்டு, ஏதாவது விபத்து நிகழ்ந்து விட்டால்?, வெளியே போகும் போது நம்மக் கூட வந்தா போதும், என்ற ஆணாதிக்கத்தை இவள் மீது அக்கறை என்ற நிலையில் திணித்து வைத்தான்.
ஆனாலும் வண்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தான் பெண் பள்ளி செல்வதற்கு.
ஏதாவது நிகழ்ந்து விட்டால் , இன்னும் படிக்க வேண்டியது இருக்கு, திருமணம் பாதிக்கும் என முன்னெச்சரிக்கை பயம்.
வாகனத்தை இயக்க அவளையும் விடுவதில்லை.
இருவருக்குமே தனது தந்தையின் பாசத்தால் ஓட்டும் ஆசை, வாகனம் வாங்கியதோடு முடங்கிப் போனது.
நல்ல சந்தர்ப்பம்..
ஜனா ஊரில் இல்லாத நாள்.
இன்றைக்கு ஓட்டிப் பார்த்துவிட வேண்டும். என தீர்மானித்தாள்.
நான் என் தாய் போல் சொல்லப் போவது இல்லை. என் மகளையும் ஓட்ட வைப்பேன் எனும் முடிவோடு இருந்தாள்.
மெதுவாக கீழிறக்கி, அதைத் துடைத்து, சாவியிட்டு, தானியங்கியின் பொத்தானை அமுக்கிட,.
டப்..டப்..டப்…டப்.. என சப்தமிட்டு மெல்ல நகர்ந்தது, அதன் முட்கள் மேலே ஏற ஏற,, இவள் வயது குறைந்து குழந்தையானாள்.
சுதந்திரக் காற்றை நன்கு சுவாசித்தபடி, அப்படியே வாகனத்திலேயே பறந்துக் கொண்டு இருந்தால், மகிழ்ச்சியாகத்தானிருக்கும்.
தன் இருபது வருட வாழ்க்கை சிறையில் இருந்து விடுதலை பெற்ற கிளியைப் போல் பறந்தாள்.
அவளை சுமந்து அலுங்காமல் சென்றது வாகனம், ஆணாதிக்கத்தின் தலையைத் ஆக்ஸலேட்டரை திருகுவதாக நினைத்து திருகினாள்.
ஒரு திருப்பம் வந்ததில் அங்கே திருப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வாகனத்தில் இருந்து இறங்கிவிட்டாள்.மகிழ்ச்சி மட்டும் மனத்தில் இருந்த இறங்கவில்லை.
தான் அனுபவித்ததை தன் மகளும் அனுபவிக்கட்டும், என்று அவளையும் வாகனம் ஓட்டிப் போகச்சொன்னாள், வேண்டாம்மா, ஏதாவது ஆச்சுன்னா அப்பா திட்டுவாரு…
இன்றைக்கு பயந்தாயானால் என்றைக்குமே பயந்து வாழும் படியாகிவிடும்.
சந்தர்ப்பம் வரும் போது உன்னை நீ நிருபித்துவிடு.
அது உனக்கே சில பாடங்களைப் புகட்டும். அதனைக் கற்றுக்கொள் என தைரியம் கொடுத்தாள்.
“பூக்களைப் பறிக்காதீர்கள்”
பூக்கள் அனைத்தும் பூஜைக்குறியதுதான்.. பெண்களுக்கும் ,பூக்களுக்கும் மறு பிறப்பில்லை,
ஒரு நாளில் பூத்து ஒரே நாளில் வாடும் பூக்களை அதன் இயல்பிலே செடியிலேயே மலர விடுங்கள்” .
மதித்துப் போற்ற வேண்டியது பூக்களை மட்டுமல்ல, மறுப்பிறப்பில்லா வீட்டுப் பெண்களும்தான்,என்ற வரிகள்..ஜனாவை பேரூந்தில் வாசிக்க வைத்தது மட்டுமல்ல, அவர்கள் இல்லத்தையும் ரசித்து வாழ வைத்தது.
உங்கள் வாழ்க்கை??
உலக மகளீர் தின வாழ்த்துகள்!!