பூக்களுக்கும் போட்டி உண்டு




குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா?கண்டிப்பாக செய்திருப்பீர்கள்.
இப்படித்தான் ஒரு நாள் குழந்தைகள் கூட்டம் ஒன்று பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தது. அங்குள்ள மலர்களை பார்த்து ஒரே சந்தோச கூச்சலிட்டன.மலர்களுக்கும் குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. என்னைப்பார் என்னைப்பார், என்று காற்றில் தலை சாய்த்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தின.எல்லாம் பார்த்துவிட்டு செல்லும்போது ஒரு
குழந்தை எனக்கு ரோஜா பூக்கள் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றது.
இதை கேட்டவுடன் மற்ற பூக்களுக்கு வருத்தம் வந்து விட்டது.ரோஜா பூவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. பார்த்தீர்களா உங்களிலேயே நான் எவ்வளவு அழகானவன் என்று தெரிந்து கொண்டீர்களா? என்று மற்ற மலர்களை பார்த்து கேட்டது.மற்ற பூக்கள் தலை குனிந்து கொண்டன.
மறு நாள் இதே போல மற்றொரு குழந்தைகள் கூட்டம் ஒன்று அந்த பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தன. அவைகளும் அங்குள்ள மலர்களை கண்டு கழித்து விட்டு இங்குள்ள பூக்களிலே மல்லிகைப்பூக்கள் தான் அழகாக இருக்கின்றன. என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். இதை கேட்டதும் மல்லிகைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ரோஜா தலை குனிந்து கொண்டது.
அடுத்த நாள் வந்த கூட்டம் செவ்வந்தி மலர்கள் அழகு என்று சொல்லி சென்றது.
அடுத்த நாள் வந்த கூட்டம் குளத்தில் உள்ள தாமரை மலர்கள் தான் அழகு என்று சொல்லிவிட்டு சென்றது.இப்படி தினம் ஒரு கூட்டம் வந்து ஒவ்வொரு மலர்களை அழகு என்று சொல்லிவிட்டு சென்றது. இதனால் அங்குள்ள மலர்களுக்குள் ஒரு போட்டியே வந்துவிட்டது.
அங்குள்ள மலர் செடிகளை தினமும் பராமரித்து வருபவன் பெயர் முருகன். அவன் தினமும் ஒவ்வொரு செடிகளாய் கவனித்து அதற்கு மண் அணைத்து தண்ணீர் விட்டு பராமரித்து வந்தான். அவன் நாள்தோறும் இந்த மலர்களுடனே இருப்பதால் அதோடு பேச முடியாதே தவிர அதனுடைய் தோற்றத்தை வைத்து அந்த செடி எப்படி உள்ளது என்று கண்டு பிடித்து விடுவான். அப்படி இந்த ஒரு வாரமாய் பார்க்கும்பொழுது ஏதோ ஒரு மலர் செடி மட்டும் செழு செழுவெனவும், மற்ற மலர் செடிகள் வாடிப்போயும் இருப்பதாக அவன் மனதுக்கு தென்பட்டது.காரணம் புரியாமல் விழித்தான்.
ஒரு நாள் அந்த ஒரு மலர் செடிகளின் வேர்களுக்கு மண் அணைத்து தண்ணீர் விட்டு கொண்டிருக்கும்போது ஒரு கூட்டம் அந்த மலர் செடிகள் அருகே வந்து இரசித்து கொண்டிருந்தன.பின் அவைகள் போகும்போது சூரிய காந்தி மலர்கள் தான் இங்குள்ளதிலே அழகு என்று சொல்லி சென்றன.அது இவன் காதிலும் விழுந்தது.அவன் மண் அணைத்துக்கொண்டிருந்த அந்த மலர் செடி சட்டென வாடுவதை கவனித்தான். உட்கார்ந்திருந்தவன் எழுந்து மற்ற மலர் செடிகளை பார்க்க அவைகளும் வாடி இருப்பது போல் அவனுக்கு பட்டது. சூரிய காந்தி செடி மட்டும் கொஞ்சம் பிரகாசமாய் இருப்பதாக பட்டது.அவனுக்கு இலேசாக உண்மைகள் தொ¢ய ஆரம்பித்தன.
மறு நாள் ஒரு கூட்டம் மலர் செடிகள் இருக்கும் இடத்துக்கு வந்து இரசித்து பார்த்தது. அவகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்குள்ள எல்லா மலர்களும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அதை விட அந்த மலர்களை தாங்கி நிற்கும் செடிகளும் எவ்வளவு கம்பீரமாய் நிற்கிறது. இவ்வளவு பெரிய செடிகளை தாங்கி நிற்கும் இந்த வேர்கள் கூட எவ்வளவு உறுதியாய் இருக்க வேண்டும். என்று பேசிக்கொண்டு சென்றனர்.இதை கேட்ட மலர்களுக்கு அப்பொழுதுதான் உரைத்தது. நம்மை மட்டுமே அழகு என்று நினைத்துக்கொண்டிருந்தோம் நம்மை தாங்கிக்கொண்டிருக்கும் தண்டு, இலை,வேர் இவைகள் கூட அழகுதான். இவைகள் இல்லாவிட்டால் நாம் இல்லை என்று உணர்ந்து கொண்டது.
இப்படி தினமும் பூங்காவை பார்க்க வந்த கூட்டம் எல்லா பூக்களும் செடிகளும் அழகு என்று சொல்லி செல்வதால் எல்லா மலர் செடிகளும் செழிப்பாக இருந்தன. இதற்கு காரணம் முருகன் தான். அவன் மலர் செடிகளை பார்க்க வருபவர்களிடம் முன்ன்ரே நீங்கள் தயவு செய்து எல்லா மலர்களையும் பாராட்டி செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்வான். இதனால் மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டி பொறாமைகளை மறந்தன.
நீங்கள் எப்படி குட்டீஸ், பூங்காவுக்கு சென்றால் அங்குள்ள எல்லாவற்றையும் பாராட்டுவீர்களா?.