புலி ஆடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 321
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெள்ளிக்கிழமை மத்தியானம் மணி சுமார் மூன்றிருக்கும்.
வீட்டு ரேழியின் ஒரு ஓரத்தில் ஒரு யந்திரம். மற்றொரு மூலையில் கதவோரத்தில் துடைப்பம் மறைவாய் வைக்கப் பட்டிருக்கிறது. இன்னொரு மூலையில் உரல். உலக்கை யைச் சுவரில் சாத்தியிருக்கிறது. கடப்பாரை ஒன்று உரலின் பக்கத்தில் கிடக்கிறது.
ரேழியின் நடுவில் இரண்டு பேர் புலியாடு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு சுமார் பதினைந்து அல்லது பதினாறு வயது தானிருக்கும். வெள்ளிக்கிழமையாதலால், எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து உலருவதற்காக மயிரை ஆற்றி விட்டிருந்தாள். இப்பொழுது அது நன்றாய், அடர்த்தியாய், அவள் தோள், முதுகு, கழுத்து எங்கும் மேகம் படர்ந்த மாதிரி பிசுபிசு’ வென்று படர்ந்திருந்தது.
அப்படி ஒன்றும் அதிகச் சிகப்பு இல்லை. கறுப்பும் இல்லை.மாநிறம். பெரிய அழகு என்று சொல்லுவதற் கில்லை. ஆனால் முகத்தில் மாத்திரம் ஒரு தனி குறுகுறுப்பு. அதுவும் இன்றைக்கு மஞ்சள் அவள் முகத்தில் நன்றாய்ப் பற்றியிருந்தது. சரியாய் ஒரு தம்பிடி அகலத்திற்கு அவள் இட்டுக்கொண்டிருந்த குங்குமப் பொட்டு, அவள் முக வசீகரத்தை எடுத்துக் காட்டிற்று.
வெங்காயக் கலரில் ஓரத்தில் பச்சைக் கரை போட்ட புடவை கட்டிக்கொண்டிருந்தாள். கழுத்தில் மாங்கல்யச் சரட்டையும் ஒரு பவழ மாலையையும் தவிர வேறொரு நகை யும் இல்லை. அவளால் ஒரு நொடிகூடச் சும்மா அசையாமல் இருக்க முடியவில்லை. அப்படியும் இப்படியும் நகருவதினால், அவள் கால் காப்புகள் ஒன்றோடொன்று உராய்ந்தும் மெட்டி கட்டாந்தரையில் தேய்ந்தும் உண்டாக்கும் சப்தம் ரொம்பவும் இனிமையாகயிருந்தது.
அவள் கணவன் ஒரே அட்டைக் கரி. பளபளவென்று பாலிஷ் போட்ட கருங்காலி மரத்தின் கறுப்பு. அப்பளாக் குடுமி, ஜம்மென்று நன்றாய்க் கட்டுவிட்ட தேகம். கரணை கரணையாய் நரம்புகள் விம்மிப் புடைத்து எழும்பி திடகாத் திரத்தைக் காட்டின. புகையிலையை ஒரு பக்கம் அடக்கி யிருந்ததினால், ஒரு கன்னம் ஒரேயடியாய் முண்டிக்கொண் டிருந்தது.இடுப்பில் சுமார் ஒரு முழ அகலமேயுள்ள சிகப்புத் துண்டு ஒன்றைக் கட்டியிருந்தான். அவன் கண்டச்சதையில் முளைத்திருந்த சிறுமயிர்கள் சுருண்டு கொண்டிருந்ததுகூட நன்றாய்த் தெரிந்தது. அவன் முகத்தைப் பார்த்தால், தீனியை நன்றாய் வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, ஆனந்த மாய் அரைக்கண் மூடியவண்ணம், அசைபோட்டுக் கொண் டிருக்கும் எருமை மாட்டின் ஞாபகம் வந்தது. அதுவும், இப்பொழுது அவன் முகத்தில் அசட்டுக்களை இன்னு ம் அதிகம் சொட்டிற்று.
ஏனென்றால், அவள் நாலு ஆடுகள் வெட்டக் கொடுப் பதுபோல் கொடுத்துவிட்டு, பாக்கி எட்டு ஆடுகளைக் கொண்டு அவன் மூன்று புலிகளையும் மடக்கிவிட்டாள். ஆகையால் தான் அவன் இப்பொழுது திறுதிறுவென்று விழித்துக்கொண்டிருந்தான். அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை.
மிகவும் கஷ்டப்பட்டு, இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு தலையைக் குனிந்து அவன் முகத்தைப் பார்த்து விட்டுப் “பக் கென்று சிரித்தான். வேணுமென்று குறும்புத்தனமாய்க் கொக்கரித்தாள். அவளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு ஆனந்தம் பொங்கிற்றோ, அவ்வளவுக்கவ்வளவு அவன் முகத்தில் விகாரம் அதிகரித்தது. திரும்பித் திரும்பி தன் பிடரியையும் முகவாய்க் கட்டையையும் ‘பரபர’ வென்று தேய்த்து திண்டாடிக் கொண்டிருந்தான். இரண்டொரு நிமிஷம் கழிந்தது. அவள் நன்றாகக் கட்டானை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று கையை உதறிக் கொண்டு தலையைத் திருப்பித் திருப்பி ஆட்டிச் சிரித்தாள்.
“என்னா…?” என்று அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான். தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு வெயிலில் கூசுவதுபோல, கண்களை இடுக்கிக் கொண்டு வாயை ஒரு பக்கமாய்க் கோணிக் கோண்டு, அவன் கேட்கும்போதே, அவன் மட்டித்தனம் வெட்ட வெளிச்ச மாய்த் தெரிந்தது.
“என்னாவா? இன்னுங்கூட சமாளிச்சுக்கலாம்! வழி யிருக்கு! நகத்தரத்துக்கு வழியிருக்கு” என்றாள்.
நகர்த்துவதற்கு வழியா? ஆட்டத்தை ஜெயிப்பதற்கு வழியா? மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கவனித்துப் பார்த்தும், அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
“நகத்தரத்துக்கும் இடம் இருக்குன்னா சொல்றே?” என்று சர்வ சாதாரணமாய் அலக்ஷியமாய்க் கேட்பதுபோல் கேட்டான்.
“ஆமா…”
“மெய்யாவா?”
“உனக்குத் தெரியல்லே?” என்றாள் அவள் ஆச்சரியத் துடன். “ஓ, தெரியுது… சும்மாக் கேட்டேன்…'” என்று அவசரமாய்ப் பதிலளித்துவிட்டு, முகத்தை ஒரு பக்கமாய்த் திருப்பிக்கொண்டு, ஆட்டத்தின்மேல் ஊக்கமாய் இருப்பது போல் பாசாங்கு பண்ணினான்.
இரண்டுங்கெட்டானாய் அவன் மாட்டிக்கொண்டு விட் டான். திருப்பித் திருப்பி, புத்தியைச் செருப்பாலே அடிக்கணும்” என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான். அவனுக்குள், தான் இவ்வாட்டத்தில் மிகவும் கெட்டிக்காரன் என்று அபிப்பிராயம். அவனேதான் அவளை ஆட்டம் போடக் கூப்பிட்டது. முதலில் ஆடுகளைத்தான் விளை யாடுவதாகச் சொன்னான். ஆனால் அவள் ஒரே பிடியாய், தான் ஆடாயிருக்கணும் என்று குதித்தாள். கடைசியில் புலி ஆடுவதிலேயே, அவன் பாடு தகராறாய்விட்டது.
திருப்பித் திருப்பி கடைக் கண்ணால் அவளைத் திருட்டுப் பார்வை பார்த்து விழித்துக் கொண்டிருந்தான்
“தே, இன்னும் எம்மாத்தம் நாழியாக்கப் போறே? இன்னும் பல்லே கழுவி ஆவல்லே, செத்தை வாரியாவல்லே, பொழுதோ சாஞ்சூட்டுது, சாணி தெளிக்கணும், மந்தை வர நேரமாச்சு, மத்தவங்களுக்கெல்லாம் வேறே வேலே யில்லைபோலே இருக்குது, நீ குந்திகிட்டு யோசனை பண்றத்தே பாத்தா…?” என்று சிரித்தவண்ணம் அதட்டினாள்.
அவனுக்கு உடம்பெல்லாம் முள் தைப்பதுபோல் இருந்தது. கொழுப்பு கொஞ்சமாயில்லை குட்டிக்கு!” என்று பல்லைக் கடித்தான். ஆனால் அவன் என்ன முக்குச் சக்கரம் போட்டுப் பார்த்தும், அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. ஆட்டத்தில் தோற்றுவிட்டதாக அவ ளிடம் ஒப்புக்கொள்வது கனவிலும் நினைக்க முடியாத விஷயம். ஏனெனில் அவன் ஆண்மகன்! ஆகையால் ஆடும் வழியை, நயமாக அவளிடமிருந்து தெரிந்துகொள்வதுதான் சரியான வழி.
“ஊஹும்,பிரயோசனமில்லை.”
தலையை உதறிக்கொண்டு நிமிர்ந்தான். ஏதோ தனக்கு சிரத்தையில்லாதது போலவும், அவளுக்குத் தயவு பண்ணுவதுபோலவும், “எங்கே பார்க்கலாம்! நீ எப்படி ஆடறேன்னு புலியை நகத்திக் காமி உனக்கு ஆடத் தெரியுதான்னு பார்க்கிறேன்!” என்று வெகு அலக்ஷியமாகச் சொன்னான்.
ஆனால் அவளா ஏமாறுகிறவள்? இல்லேங்க, பரவா யிலலே, எனக்கு ஆடறத்துக்கு நல்லாத் தெரியுங்க. ஒங்ககளுக்கு ஆடிக் காண்பிச்சு நான் கத்துக்க வேண்டியதில் லேங்க… என்று வெகு மரியாதையாய்ப் பதிலளித்து விட்டாள்.
மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான். அவன் எண்ணம் பலிக்கவில்லையென்று கண்டதும், அவனுக்குக் குழப்பமும் லஜ்ஜையும் அதிகமாய்விட்டது. அத்துடன் அசடுக்கு அகங்காரம்” என்கிற மாதிரி, கோபமும் ஜனிக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் அக்கோபத்தின் காரணம், அல்லது காரணமின்மை இரண்டும், அவனுக்கு விளங்கவில்லை. உடம்பில்கூட குறுகுறுவென்று ஒரு உணர்ச்சி ஆரம்பித்து விட்டது.உள்ளே. எலி பிராண்டுவதுபோல் இருந்தது.
“புலியை நகர்த்தறது எப்படி?” அவன் குரல் முன்” போல் சாதுவாயில்லாமல், முரட்டுத்தனமாய்விட்டது.
“இரு அவசரப்படாதே…” அவள் வெகு சாவதான மாய் குறுக்கு விசாரணை செய்யும் வக்கீல் மாதிரி கண்டிப் பாய், அப்படியானால், நீ தோத்துப் பூட்டேன்னு ஒப்புக் கறயா?”
அவனுக்கு வேதனை அதிகமாய்விட்டது. தாங்கவே முடியவில்லை. “என்ன நான் சொல்றது ஒனக்குக் கேக்கல்லே? புலியை எப்படி நகத்தறது?”
அவன் குரலின் கர்ண கடூரமான த்வனி அப்பொழுது தான் அவள் உள்ளத்தில் தைத்தது. அவளுக்கு உண்டான கோபத்தில் உடம்பு சிலிர்ந்தது. “ஓஹோ அப்படியா சமாசாரம்?”
“முடியாது?”
கணீரென்று அவன் குரல் வெண்கலம் மாதிரி, சுத்தமாய் அவ்விடம் முழுவதும் ஒலித்தது.
“என்ன!”
அவன் அப்படியே அயர்ந்துவிட்டான். மூலையில் சாத்தியிருந்த உலக்கை, தானாகவே உயிர்பெற்று தத்தித் தத்தி வந்து, அவன் மண்டையில் இடித்திருந்தால், அவனுக்கு அவ்வளவு திக்பிரமை ஏற்பட்டிருக்காது. திறந்த வாய் மூடவில்லை. கடைவாய் வழியாகப் புகையிலைச் சாறு வடிந்து தாடி மயிர்கள் முனையில் இரத்தத் துளிகள் போல் நின்றது.
அவள் அவனைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை கோபமாய்த் தலையை ஒரு வெட்டு வெட்டி மேலாக்கைச் சரிப்படுத்திக்கொண்டாள்.
அவன் அவளை ஒருமுறை, உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரையில் நெற்றியிலிருக்கும் குங்குமப்பொட்டு, மூக்குத்தியின் வெள்ளைக்கல், கழுத்துப் பவழ மாலை. அவளுடைய மெல்லிய மேலாக்கின் வழியாகத் தெரியும் வெள்ளை ரவிக்கையின் முடிச்சு எல்லாவற்றையும் ஏற இறங்கப் பார்த்தான்.
“காண்பிக்க மாட்டையே?”
“முடியா…”
அவள் பேசி முடியுமுன் அவள் வாயின் பேரிலேயே குத்து விழுந்துவிட்டது.
அவள் கூட அதை எதிர்பார்க்கவில்லை.
மறுபடியும் அவன் கையை ஓங்கினான். கருமான் பட்டரைச் சுத்தி இறங்குவதுபோல் அது இறங்கியது. அவள் தலையைக் குனிந்து கைகளை நீட்டித் தடுத்தாள். குறி தப்பி, அவள் பிடரியில் அந்த அடி விழுந்தது. அவன் கையில் ஒரு வெள்ளி மோதிரம் அணிந்திருந்தான். அவளுடைய ரவிக்கைத்துணி ஸன்னமாயிருந்ததில், பர்ரென்று கிழிந்து விட்டது. அப்படியே மோதிரம். அவள் முதுகில் கீறிக் கொண்டே இறங்கிவிட்டது.
எப்பொழுது முதலடி அடித்தானோ, அத்துடன் அவ னால் நிறுத்த முடியவில்லை. அவனுக்கு இரத்த வெறி மாதிரி பிடித்துவிட்டது. அவன் கண்கள் கிட்டத்தட்டப் பைத்தியக்காரன் கண்கள் போலவே ஜ்வலிக்க ஆரம்பித்து விட்டன.
அடிமேல் அடி! குத்தின்மேல் குத்து!
அவள் மூச்சிற்கே திக்குமுக்காடினாள். அவள் மனதில் உண்டான பயங்கரத்தில் அடிகளின் வலிகூடத் தெரிய வில்லை. பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது. ஐயோ! கொஞ்சம் மூச்சு அகப்பட்டால் போதும்! ஒரு மூச்சு! ஒரே மூச்சு! ஆனால் அதற்குள் ஒரு குத்து!
“இதோ காம்பிக்கிறேன்!”
அப்பா! கடைசியில் வாய் திறந்து சொல்ல முடிந்தது! வாயிலிருந்த ரத்தத்தை வெளியில் துப்பினாள்.
அவள் குரலின் சத்தத்தைக் கேட்டதும், ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றது.
“ஆ!”
சில வினாடிகள் அப்படியே ஓங்கிய கையுடன், வெறி பிடித்த கண்களுடன் அவன் அவளைச் செய்திருக்கும் அலங் கோலத்தைக் கண்டு ஆனந்திப்பதுபோல் வெறித்த வண்ணம் இருந்தான்.
அவளைப் பார்ப்பதற்கு மகா கண்ணறாவியாக யிருந்தது. சற்றுநேரத்திற்கு முன்னால், சுத்தமாய்ச் சிக்கு பிரித்து ஆற்றியிருந்த மயிர், அலங்கோலமாய், முகத்திலும் விழுந்திருந்தது. குங்குமத் திலகம் சிதறி அழிந்திருந்தது. வாயிலும் மூக்கிலும் ரத்தம். கீழ் உதடு அப்படியே அறுந்து விட்டாற்போல் தொங்கிற்று. மார்புத் துணி விலகி… பரிதாபம்! அவன் கை ஏர் பிடித்த கையல்லவா?
தான் இன்னது செய்தாளென்று அவளுக்கே தெரிய வில்லை. ஆத்திரத்தால் இழுக்கப்பட்டதுபோல், அவள் கை உயிரற்று,புலியை நகர்த்திக் காண்பித்தது.
“ஆஹா!”
அவன் சந்தோஷமும், அவன் குரலும், அவன் புன்னகை- யும் ஸ்வாபமாகவேயில்லை. கண்களில் வெறி அதிகமாயிற்று,
நாலு ஆடுகளை வெட்டினான்.
“ஆ! பாத்தையா, இனிமேல் ஆட்டம் என்னுடையது தான், பாத்தையா?”
ஒரு வினாடி திக்பிரமை கொண்ட அவள் கண்கள், அவன் கண்களைச் சந்தித்தன. அவள் மூச்சு அப்படியே, ஒரே இழுப்பாய் கேவிக்கொண்டே போயிற்று. அவ்வளவு தான். முந்தானையை வாயின்மேல் போட்டுக்கொண்டு பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு சமையற் கட்டிற்கு ஓடினாள்.
அவனோ பித்துப் பிடித்தவன்போல், அங்கேயே உட் கார்ந்துகொண்டு “இனிமே ஆட்டம் என்னோடதுதான், ஆட்டம் என்னோடதுதான்!” என்று திருப்பித் திருப்பி அர்த்தமில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆம், ஆட்டத்தை ஜெயித்துவிட்டான்! ஆனால், அவளை…?
– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.