புலித் தோற்றம்

“முந்தா நாளு கூட நல்லா இருந்தாரு. இதே திண்ணைல உக்காந்து நானும் நம்ம யேவாரி அப்துல்லாவும் அவருகிட்டப் பேசிட்டிருந்தம். பதினொண்ணு – பதினொண்ரை வரைக்கும். காலைல இப்படி ஆகும்னு யாரு கண்டா? மனுசனோட வாள்க்க எப்படி இருக்குது பாருங்க.”
வேலாயுதம் அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் அருகே அப்பாவும், சில உறவினர்களும். கதவு நிலைப்படியின் தெற்குப் புறமாக இருந்த திண்ணையில் தனபால், படியில் கால் வைத்து வடக்கே திரும்பி அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
இழவு வீட்டின் களை இன்னும் மாறியிருக்கவில்லை. முகங்கள் சோகத்தில் இறுகியிருந்தன. உற்சாகமான ஒரு சொல்லோ, புன்னகையோ இல்லை. உரத்துப் பேசுவது கூட நிலையை மாற்றிவிடக் கூடும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒவ்வொருவருமே தம்மைச் சுருக்கிக்கொண்டிருப்பது போலிருந்தது. வீட்டிற்குள்ளும் வெளியிலும் சாவின் அடையாளம் காட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
அவ்வப்போது பெண்கள் யாராவதெல்லாம் நினைத்து நினைத்து விசும்பினார்கள். பெண்களுக்கு என்றைக்குத்தான் அழுது தீரும்? பகலில் துக்கம் விசாரிக்க வந்தவர்களால் ஒப்பாரியும் அழுகையும் கூடியிருந்தது. இப்போது பரவாவில்லை. சாவை விடவும் வேதனை, இந்த அழுகையைப் பார்ப்பதும் கேட்பதும்தான். பிணத்தை எடுக்கும் முன்பாகவே வந்திருந்தால் துக்கம் மிகுந்த இழவுச் சடங்குகளையும், மிகையான அழுகை ஆர்ப்பாட்டங்களையும் எதிர்கொள்ளும்படியாக ஆகியிருக்கும்.
“ஆனா அவுருக்கு நல்ல சாவுங்க. நெறஞ்ச வெள்ளிக் கெளமை. சீக்கு வந்து படுத்தம், மத்தவங்கள ஓவுத்திரிச்சம்னு இல்லாம, பொட்டுனு உசுரு போயிருச்சு” என்றார் குமரவேல்.
அவர் சொல்கிறபடி மற்றவர்களைப் படுத்தாமல் போய்ச் சேர்ந்தது நல்லதுதான். தாத்தா இருந்தபோதும் யாரையும் படுத்தியவர் அல்லர். எழுபதுக்குப் பக்கமாக வயது. கூடுமோ குறையுமோ; அவருக்கே சரியாகத் தெரியாது. கணிக்கவும் முடியாத திடகாத்திரம். காடு தோட்டங்களில் வேலைக்குப் போய், தானே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். எட்டு வருடங்களாக அவர் மட்டும் தனியாக இந்த வீட்டுக்குள் எப்படி இருந்தார் என்பது புரியாத ஒன்று. வீட்டை விட்டு வெளியில் எங்காவது தங்கியிருக்க நேர்ந்தால் கூடுமான வரைக்கும் தவிர்க்கவே பார்ப்பார். குனியமுத்தூருக்கு வந்தாலும், ஆனைமலைக்கு சித்தி வீட்டுக்குப் போனாலும் அதிக பட்சம் இரண்டு ராத் தங்குவார். அதை மீறி அவரை வைத்திருக்க நினைத்தால் முடியாது. போகணும் போகணும் என்று தவிப்பார்.
“எதுக்கு இப்படிப் போகோணும் போகோணும்னு பறவாப் பறக்கறீங்கொ? அப்புடி அந்தூட்டுல என்னதான் இருக்குது?” எனக் கேட்டால் சிரிப்பார். உனக்கு என்ன தெரியும் அதப் பத்தி என்பதாக இருக்கும் அது.
அந்தச் சிரிப்புக்கு இப்போது அர்த்தம் விளங்குகிறாற் போல இருக்கிறது. வீடு என்றால் வீடு மட்டுமல்ல. சுவர்களும், கூரையும், கதவு ஜன்னல்களும், தரையும் மட்டுமா வீடு என்பது? அதில் கண்ணுக்குத் தென்படாத எத்தனையோ இருக்கும். தாத்தாவின் சுய உழைப்பிலான வீடு. ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு அங்குலமும் அவரது உழைப்பு. அதைக் கட்ட அவர் பட்ட பாடுகள் அதில் இருக்கும். கட்டி முடித்த பின் எழுந்த திளைப்பை வீட்டின் சுவரோடும், அவர் உட்கார்ந்திருந்த இந்தத் திண்ணையோடும் பேசியிருக்கலாம். அவரது அந்தரங்கங்களை, ஞாபகார்த்தங்களை அவர் இந்த ஜடப் பொருட்களுக்குள் ஒளித்து வைத்திருக்கலாம். அதனால்தான் வீட்டைப் பிரியாமல் இருந்தார். பாட்டி இறந்த பிறகு அம்மாவும் சித்தியும் எத்தனை அழைத்தும் அவர்களுடன் வந்து தங்க அவர் சம்மதிக்காததும் அதனால்தானாக இருக்க வேண்டும்.
வீதியில் யாரோ போகிற அரவம். வாசலில் படுத்துக் கிடந்த செவலை தலையைத் தூக்கி உறுமிவிட்டு, மீண்டும் தலை சாய்த்துக்கொண்டது. வாசலில் ட்யூப் லைட் வெளிச்சம். அதைத் தாண்டி வீதி வரைக்கும் இருள். வீதிக்கு சற்று தூரம் போக வேண்டும். அங்கே தெரு விளக்குகள் மங்கலான ஒளியுடன் இருக்கும். யாராவது அதில் போகிற நேரங்களில் செவலை பேச்சு சத்தம் கேட்டுத் தலை உயர்த்தவும் உறுமவும் செய்தது. சாப்பிட்டுவிட்டு வந்ததிலிருந்து அவன் காண அது இரண்டு முறை எழுந்து போய் ஒரு பாட்டம் குரைத்துவிட்டு, அதட்டியதும் வந்து படுத்துக்கொண்டிருந்தது. மற்றபடி இந்தத் தலை உயர்த்தலும் வீராப்பான உறுமலும் மட்டும்.
திண்ணையின் பேச்சு தனபாலை நோக்கித் திரும்பியது. குமரவேலுவும் வேலாயுதம் அண்ணனும் அவனது வேலை பற்றியும், சென்னையில் அறை எடுத்துத் தங்கியிருப்பது பற்றியும் கேட்டனர்.
“நம்ம பரம்பரைலயே மெட்ராஸுக்குப் போன மொத ஆளு நீதானப்பா” என்றார், வடசித்தூர் மாமா.
அப்பா சிரித்ததில் பெருமிதம் தெரிந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு கணம் இழவுச் சூழல் மாறி, பின் மீண்டது.
“வயசும் வேற இருவத்தஞ்சுக்குப் பக்கம் ஆச்சுல்லங் மச்சா இவனுக்கு. சட்டுப் புட்டுனு ஒரு கல்யாணத்தப் பண்ணி வெச்சர வேண்டீதுதான. ஓட்டல்ல சாப்டுட்டு ஒடம்புக்குக் கேடு. செலவும் வேற ஜாஸ்தியாகுமே…”
“மொதல்ல புள்ளையத் தாட்டோணுங்க. அதுக்கப்பறம்தான் இவனுக்குச் செய்யோணும்” என்றார் அப்பா.
என்றாலும் அவர் அவனுக்குப் பெண் பார்க்கத் துவங்கியிருப்பதாக அம்மா எழுதியிருந்தாள். பெரிய இடமாகப் பார்க்கிறாராம். குறைந்தது இருபத்தைந்து, முப்பது பவுனாவது போடுகிற இடமாக. பின்னே, நாலாயிரம் சம்பாதிக்கிறவனுக்கு அவ்வளவு கூட இல்லையென்றால் சரியாகுமா? மேலும், அதை வைத்துத்தானே ரேவதியின் கல்யாணத்தையும் நடத்தியாக வேண்டும்!
இருந்தாற்போல செவலை எழுந்துகொண்டு குரைத்தது. ஆட்கள் பாரும் வரவில்லையே என்று பார்த்தபோது செவலை காதுகள் விடைக்க அடுத்திருந்த வேப்பமரத்தடியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு பூனை அங்கிருந்து ஓடி வருவது எரவாரத்தில் கட்டியிருந்த ட்யூப் லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. செவலை ‘ஒர்ர்ர்…’ என உறுமியபடி முன் நகர்ந்தது. பூனை வாசலில் தயங்கி நின்று கத்தியது. பூனையும் நாயும் முறைத்து நின்றன. மஞ்சள் கலந்த பழுப்பு நிறப் பூனை. உடம்பில் பழுப்புக் கோடுகள். நாயின் குரைப்பு மிகுந்தது. பூனையும் அசையாமல் சீறி நின்றது.
“புலியாட்டவே இருக்குது பாருங்…” குமரவேல் பூனையைப் பார்த்தபடி சொன்னார். பார்க்க அப்படித்தான் இருந்தது.
“சூ… செவலை! புடி அதை! பாத்துட்டே நிக்குது பாரு!” சித்தப்பா நாயை ‘உஸ்’படுத்தினார். அது ஒரு எட்டு நகர்ந்து, பூனை கூடுதலாக சீறவும் தயங்கியது.
“ம்… போகாதுங்க. பூனைகிட்ட எந்த நாயும் நெருங்காது. சும்மா ஒளச்சிட்டு நிக்கும். பூனை பாத்தா சின்னதுதான். இருந்தாலும் பெலம் ஜாஸ்தி. ஒறட்டாங் கைல ‘ரை…’யின்னு ஒரு அறை உட்டுதுன்னா எந்த நாயா இருந்தாலும் திருகீட்டு உளுந்துரும்.”
செவலை குரைப்பை நிறுத்தி மௌனமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது பூனை குண்டுறு குண்டுறு என ஓடிவிட்டது. அதைத் துரத்திப் போன செவலை பாதியில் நின்று இருளைப் பார்த்துக்கொண்டிருந்தது. செவலை என்ற பேரானாலும் அதற்கு உடம்பில் பாதி வெள்ளை. இரு நிறங்களும் மாறி மாறிக் கலந்திருக்கும். தலையில் சொட்டை போல வெள்ளை. ஒரு காது செவலை, மற்றது வெள்ளை என
வினோதமாக இருக்கும். அதற்கும் வயதாகிவிட்டது. இனி யார் அதை கவனிக்கப் போகிறார்கள்? எங்காவது கிடைக்கிற இடத்தில் கஞ்சி, வீதி மலம் என்று தின்று கழிய வேண்டியதுதான்.
“நேரம் ரொம்ப ஆயிருச்சு. எல்லாரும் வந்து தூங்குங்க. காலைல வேற நெறைய வேலை இருக்குது.” சித்தி வந்து சொன்னாள்.
சித்தப்பா முதலில் எழுந்தார். அவருடன் இருந்த மகனும் கொட்டாவியோடு நடந்தான். வேலாயுதம் அண்ணன் காலையில் பார்க்கலாம் என்று கிளம்பினார். தனபால் வெளியே தெருவுக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தான். திண்ணையில் அப்பாவுடன் இன்னும் சிலரும் படுத்துக்கொண்டிருந்தனர்.
இன்னும் கதவைத் தாழிடவில்லை. உள்ளே போனான். குத்துவிளக்கு எரிந்த அறை தவிர எல்லா அறைகளிலும் ஜமுக்காளம் அல்லது பந்திக்கு என வண்ணாத்தி கொடுத்த மாத்துச் சேலைகளை விரித்து சுருண்டிருந்தனர். குழந்தைகள் தாறுமாறாக உருண்டிருந்தன. படுக்க வைத்திருந்த வசம் எதுவோ அதில் ஒரு குழந்தையேனும் இப்போது இல்லை. பெண்கள், ஆண்கள், கிழங்கள் என்று ஆளாளுக்கு இடங்களை ஆக்ரமித்திருந்தனர். அடுக்களையாவது இதற்கு மிஞ்சியிருக்குமா என்று சந்தேகம்.
சித்தியைத் தேடினான். அவள் எல்லாருக்கும் இடம் ஒதுக்கிக் கொடுப்பதில் இருந்தாள்.
“செம்பா,… நீ இங்கியே படுத்துக்கறயா? இன்னேரம் உங்க வீட்டுல படுத்திருப்பாங்க. அவுங்களப் போயி எளுப்பணுமா?” என்று செண்பகத்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
செண்பகம் யோசனையில் நின்றாள்.
“பாவம், இந்த அவுதில உனக்கு வேற சிரமம். நீயில்லின்னா இத்தன வேலைல எங்குளுக்குக் கையே ஒடிஞ்சிருக்கும், போ!” என்றாள் சித்தி.
“என்னத்தப் பெரிசா செஞ்சுட்டன், நீங்க வேற!” செண்பகம் முறுவலித்தாள்.
அவளை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான். இழவு வீட்டில் சமைக்கக் கூடாதென்று அவள் வீட்டில்தான் சமையல் செய்திருந்தார்கள். அது இங்கே கொண்டுவந்து பரிமாற்றப்பட்டது. வருகிறவர்களுக்கு டீயோ காஃபியோ கொடுப்பதிலும் இன்று முழுதும் அவளே முன்னின்றாள். எதையும் சலிக்காமல் செய்தாள். அவளுக்கு அலுப்புதான் இருக்குமோ இருக்காதோ!
அவன் வந்ததும் அவனுக்காகப் பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து முடிந்த பின், பலரின் விசாரிப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அப்போது செண்பகம் அங்கிருந்தவர்களை சாப்பிட அழைத்துக்கொண்டிருந்தபோதுதான் அவளைப் பார்த்தான். நாலைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. பாவாடை சட்டையில் நோஞ்சானாகத் திரிந்தவள், இப்போது சதைத் திரட்சியோடு, தாவணி போட்டிருந்தாள். அடிக்கடி அதை ஒதுக்கியும் இறுக்கியும் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவளை வியந்தான். நிறம் வெளுத்துப்போன பழைய உடையிலும் அவள் தனிக்களையுடன் இருந்தாள். உடம்பு நம்பமுடியாதபடி வளர்ந்திருந்தது. அவள் தட்டுப்படும் போதெல்லாம் மற்றவர்கள் அறியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் அப்படிப் பார்ப்பது தெரிந்ததும் குறுகுறுப்பாக இருந்தது.
“என்ன செண்பகம், ஆளு இப்படி பெரிய புள்ளையா வளந்துட்ட! பாத்ததும் எனக்கு அடையாளமே தெரியல” என்றபோது சித்திதான் பதில் சொல்லிருந்தாள்.
“போனா வருசக் கணக்கா அங்கயே இருந்தர்றது. வந்தாலும் அப்படியே குனியமுத்தூரோட திரும்பிர்றது. இப்புடியிருந்தா அடையாளம் தெரியாமத்தான் போகும்.”
அவளுக்கு அந்த மனத்தாங்கலுடன், அவன் மேனேஜராகப் பணி புரிவது பற்றி பெருமையும் இருந்தது. அதை செண்பகத்திடமும் காட்டிக்கொண்டாள்.
“பெரிய ஆளாயிட்டானல்ல! நம்மள மாற ஏளை பாளைங்களையெல்லாம் பாக்க வரமுடியுமா?”
மாலையில் செண்பகத்தோடு தனியே கொஞ்சம் பேச முடிந்தது. அவளது படிப்பு விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். பொள்ளாச்சி, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கிறாளாம்.
“நீ இந்த அளவுக்கு இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா ஊருக்கு வரும்போதெல்லாம் பொன்னாபுரத்துக்கும் வராமப் போயிருக்க மாட்டேன்” என்றதும், நேராகப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தவள் வெட்கித் தலை குனிந்தாள்.
லேசாக சிரிப்பதும், பிறகு உதட்டைக் கடித்து அந்தச் சிரிப்பை மறைக்க முனைவதுமாக அவள் நின்றபோது அவனுக்குள் ஒரு மயக்கம், வெறி, அப்படியே அவளைக் கட்டி இறுக அணைக்க வேண்டுமாய்த் தவிப்பு. அவனை மீண்டும் நிமிர்ந்து ஏறிட்டவள் மறைக்கப்பட்ட சிரிப்பு கண்களில் தெரிய நகர்ந்து போய்விட்டாள். துள்ளலாகக் கொலுசுச் சத்தம் ஒலிக்கிற அந்த நடை அவனுக்குள் எதையோ செய்தது. இப்போது தன் முன் சாதாரணமாக நிற்கிற அவளா அந்தச் சிரிப்பைக் கண்களுக்குள் வைத்திருந்தவள்?
உள்ளுக்குள் வியந்துகொண்டே, “எனக்கு எங்கயாவது ஒரு எடம் ஒதுக்கிக் குடுங்க சித்தி” என்று கேட்டுக்கொண்டான்.
“இரு, பாக்கறன். கால் வெக்க எடமில்லாமப் படுத்திருக்குதுக எல்லாம்.”
சித்தி சொல்லிவிட்டுச் செல்ல, தனபாலும் செண்பகமுமாக நின்றனர். அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு செண்பகத்திடம் திரும்பினான். பக்கவாட்டில் நின்றிருந்த அவளது பார்வை கதவை நோக்கி இருந்தது. உறக்கக் கலக்கமான முகம். சென்னையில் பார்க்கவும், தன் அலுவலகத்தில் பழகவும் முடிகிற பல பெண்களின் அழகை விடவும் அவளது சாதாரண முகம் வசீகரமாக இருந்தது. மாலையில் அவளோடு தனியே இருந்தபோது உண்டான கனலும் தவிப்பும் இப்போது இல்லை. அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமாயிருந்தது. தன்னைத் திரும்பி அவள் பார்க்கக் கூடுமென்று புன்னகையோடு இருந்தான். சித்தி வருகிற வரைக்கும் அவள் திரும்பவேயில்லை. அவனுக்கு ஏமாற்றம்.
“நடு ரூமுல ஒரு பெஞ்சு கெடக்குது தனா. அதுல வேண்ணாப் போயிப் படுத்துக்க. நாம இங்கயே ஒரு ஓரமாப் படுத்துக்கலாம் செம்பா” என்றாள் சித்தி.
போகும் முன்பாக அவனைப் பார்த்து செண்பகம் புன்னகைத்தாள். அது அவனுக்குக் கிளர்ச்சி ஏற்படுத்தியது. கூடவே இன்னொரு நினைப்பு. இழவு வீட்டில் தான் இப்படிச் செய்வதும் உணர்வதும் எத்தனை மோசமானது. அதுவும் செத்தது தன்னுடைய தாத்தா. அவரை வடசித்தூர் மாமா எரித்துவிட்டு வந்து ஒரு பொழுது கழியவில்லை. தாத்தாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவும் தனக்கு வாய்க்கவில்லை. அதையெல்லாம் நினைக்காமல் ஒரு பெண்ணைப் பார்த்ததும் பின்னால் இளித்துக்கொண்டு ஓடுகிறது மனசு. சாவின் வாசனையாகப் புகைந்துகொண்டிருந்த ஊதுபத்திகள் தீர்ந்த பின்பும் அறைகளைச் சுற்றி வருகிற வாடை அவனுள் குமட்டியது.
நடு அறைக்குச் சென்றான். அறைக்குள் மங்கலான இருட்டு. விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. வெளியே எரிகிற ட்யூப் லைட் கசிந்த ஓரளவு வெளிச்சம். நிதானித்துப் பார்த்து அறை விளக்கின் ஸ்விட்ச்சைப் போட்டான். வெளிச்சத்தால் படுத்திருந்தவர்கள் அதிகமில்லை என்று தெரிந்தது. அறையின் ஒரு பக்கம் ரேவதி, அவளை அடுத்து அம்மா, சித்தியின் பெண் குழந்தைகள், அத்தையின் மகன்கள், சின்னப் பாட்டி எல்லோரும் படுத்திருந்தனர். அவர்களின் காலடியில் நிறைய இடம் இருந்தது. அங்கேதான் பெஞ்ச். சட்டையைக் கழற்றி திறந்திருந்த கதவின் மேல் விளிம்பில் மாட்டினான். வாட்ச்சை ஜன்னல் திட்டில் வைத்தான். விளக்கை அணைத்ததில் நிதானமாக நடந்து பெஞ்ச்சிற்குப் போகவேண்டியிருந்தது.
சித்தியிடம் தலையணைக்குக் கேட்டிருக்கலாம். அதில்லாமல் படுப்பது அசௌகரியமாகவே இருந்தது. இந்தக் கூட்டத்தில் ஒரு தலையணை மிஞ்சியிருக்கும் என்று நம்ப முடியாது. மிகச் சிலருக்கு மட்டுமே தலையணை கிடைத்திருந்தது. கைகளை மடித்துத் தலைக்கு வைத்துக்கொண்டான். இதே பெஞ்சில் சிறு வயதில் ஒரு தடவை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது விழுந்தது நினைவுக்கு வந்தது. பகல் நேரம். தூங்க வேண்டும் என்று படுக்கவில்லை. சும்மா படுத்துக்கொண்டிருந்ததுதான். விழுந்து அடிபட்ட பிறகே தூங்கிவிட்டது தெரிந்தது. பாட்டி சத்தம் கேட்டு ஓடி வந்து, தலையில் தேய்த்து விட்டாள். லேசாக வலி இருந்தாலும், அடி ஒன்றும் பலமல்ல.
செவலையின் உறுமலும் மெலிதான குரைப்பும் கேட்டது. எழுந்து ஓடியது போல அதன் காலடி ஓசை. அதைத் தொடர்ந்து கூரையில் தடதடவென்று சத்தம். ‘ம்ம்மிய்ய்யாவ்…’ என்ற பூனைக் குரல். அப்போது பார்த்த, புலி போன்ற அந்தப் பழுப்புப் பூனையாக இருக்குமோ. யாருடையது என்று தெரியவில்லை. அது நாயை முறைத்தபடி சீறி நின்றது ஞாபகம் வந்தது. பூனைக் குரல் ஓட்டுக் கூரையில் காலடிச் சத்துத்துடன் வடக்கே நகர்ந்தது. தோட்டத்தில் தொம்மென்று ஒரு சத்தம். அதை அடுத்து ‘ம்மிய்யாவ்’ மேற்கில் ஓடித் தேய்ந்தது.
நாளைக்கு தாத்தாவுக்கு கருமாதி முடிந்துதான் போக வேண்டும் என நினைத்தான். இன்னும் இரண்டு நாள் கழித்துப் போவதாக இருந்தால் பரவாயில்லை. செண்பகத்துக்காக வேண்டி. அவளுக்கும் அவனைப் பிடித்தே இருக்கிறது. பிடிக்காமல் போகுமா? அவன் என்ன இந்தப் பொன்னாபுரத்து ஆட்களைப் போல சாதாரண ஆளா? அவனது பேச்சும், அவனிடம் இவர்களுக்கு இருக்கிற மதிப்பும் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும்.
இங்கே சூழ்நிலை சரியாக இல்லை. இல்லாவிட்டால் முயன்று பார்த்துவிடலாம். பெண்களைப் பொறுத்தளவு நிறையவே அனுபவிக்கிறவன் அவன்.
“எப்பட்றா பொண்ணுகள இவ்வளவு ஈஸியா மடக்கற?” என்று அவனது நண்பர்கள் ஆச்சரியமும் பொறாமையும் படுவார்கள். அவனைப் பொறுத்தளவு அது சுலபமான காரியம். யாரை எப்படி அணுகினால் விழுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். அதிலும் மேனேஜராக இருப்பதால் அலுவலகப் பெண்களையும் கூட எளிதில் வழிக்குக் கொண்டுவரலாம். இன்னும் ஓரிரு நாட்கள் இருக்க முடிந்தால் செண்பகத்திடம் நெருக்கமாக முடியும். அவளை ஒரு தடவையாவது அனுபவிக்க வேண்டும். பதினைந்து வயதுக் குமரி அமைவது எவ்வளவு பெரிய காரியம். புதிய உடம்பும், புரிந்தும் புரியாத உணர்வுகள் கொண்ட மனசுமாய் இருக்கக் கூடிய வயதுள்ள பெண். தவறவிடக்கூடாது என்கிற எண்ணம் மேலிட்டது.
இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் அது தவறிவிடக் கூடும். இனி இங்கே வருவதற்குத் தேவை இராது. தாத்தாவும் இல்லை எனில் இங்கே எதற்கு வர வேண்டும்? இந்த ஊரோடு உள்ள உறவு தாத்தாவோடு போய்விட்டது. நாளைய காரியம் வரைக்கும்தான் அது மிஞ்சியிருக்கிறது.
நாளைக்குப் பேரூர் போக வேண்டும். தாத்தாவுக்கு கருமாதி. சடங்குகளை வடசித்தூர் மாமாதான் செய்வார். பிள்ளைகள் இல்லாததால் தாத்தாவின் தம்பி மகனான அவர் கொள்ளி வைத்திருக்கிறார். அவர்தானே பேரூர் போய் மொட்டை அடிக்கவும் வேண்டும். பதினைந்து நாள் துக்கம் இருந்து, கருமாதி செய்ய யாருக்கும் நேரமில்லை. மூன்றாம் நாள் வைத்திருக்கிறார்கள். அவரவர் காரியத்தைப் பார்க்கவே நேரம் இல்லாதபோது, இதற்கென்று மீண்டும் அலைய முடியுமா?
கடைசியாக ஒரு முறை தாத்தாவைப் பார்க்க முடியாமல் போய்விட்டதை நினைத்தால் வருத்தமாக இருந்தது. நேற்றைய தந்தியில் இரவில் கிளம்பி இருந்தான். வந்து சேர மதியம் கடந்துவிட்டது. அதற்குள் தாத்தா ஊர் எல்லைச் சுடுகாட்டில் சாம்பலாகியிருந்தார். அவரைக் கிடத்தியிருந்த அறைக்குள் எரிந்துகொண்டிருந்த குத்து விளக்கு, சுவரில் தண்ணீர் நனைத்துக் குழைத்து மூன்று விரல்களில் பூசிய திருநீறு, அதன் நடுவே சந்தன – குங்குமப் பொட்டு, புகையும் மட்ட ரக ஊதுபத்திகளின் காட்டமான நெடி ஆகியவற்றைத்தான் தாத்தாவின் அடையாளமாகப் பார்க்க முடிந்தது.
இனி அவர் வாலிபத்தில் பாட்டியுடன் இருக்கிற புகைப்படத்தைப் பெரிதாக்கி வைத்துக்கொள்ள அம்மா விரும்பலாம். இந்த வீடு – தாத்தா இருந்த வரைக்கும் விட்டுப் பிரிய மனசில்லாமல் இருந்த, அவர் கட்டிய வீடு – இனி என்னாகும்? வேறு யாருக்காவது இதைக் கொடுத்துக் காசாக்குவது என்பது தனபாலுக்கு வருத்தமளித்தது. அவனை மடியில் கிடத்தி, கதையுடன் தூங்க வைத்த பாட்டியின் நடமாட்டமும், தன் வீடு என்ற பெருமிதத்தில் திளைத்த தாத்தாவின் சுவாசமும் இதற்குள் இன்னும் இருக்கும். அதையெல்லாம் விற்கவோ வாங்கவோ இயலுமா?
ஏதேதோ நினைத்தபடி படுத்துக்கொண்டிருந்தனைத் தூக்கம் ஆழ்த்தியது. தூக்கம் முழுதாகவும் இல்லை. இன்னும் சற்றையில் ஆழ்ந்துவிடும் என்பதாக இருந்தது.
இருந்தாற்போல தொண்டையைச் செருமுகிற சத்தம். யாரோ உறக்கம் கலைந்தவர்களாக இருக்கும் என்றிருந்தான். அதையடுத்து உறங்கிக் கொண்டிருக்கிறவர்களிடமிருந்து கொலுசுச் சத்தமும் கேட்டது. உறக்கத்தின் அசைவில் உண்டாகிறதாக இல்லாமல் விட்டு விட்டு, ஒரே மாதிரி சீரான ஓசை. ஒரு சமிக்ஞை போலத் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தது அது.
தலையைத் திருப்பிப் பார்த்தான். அம்மாவையும் ரேவதியையும் அடுத்து சுவர் ஓரத்தில் செண்பகம் போலத் தெரிந்தது. எப்போது இந்த அறைக்குள் வந்து படுத்தாள்? எதற்கு இப்படி சத்தம் எழுப்பிக்கொண்டிருக்கிறாள்? ஒரு வேளை, தனக்காகத்தானோ?
வியப்பும் குறுகுறுத்த உணர்வுமாக, பெஞ்ச்சிலிருந்து ஓசைப்படுத்தாமல் எழுந்து நடந்தான். விட்டு விட்டு அவள் தன் பாதங்களைத் தூக்கி தரையில் மோதுவதில் சத்தம் மெலிதாக எழும்பிக்கொண்டிருந்தது. அவன் வருவது தெரிந்தது போல அது நின்றது. மங்கலான இருள் அடர்ந்த வெளிச்சத்தில் அது செண்பகம்தானா என உறுதிப்படுத்திக் கொண்டான். அவளேதான்! காலடியில் நின்று உற்றுப் பார்த்தான். கண்களை மூடிப் படுத்திருந்தாள். இப்போது கொலுகச் சத்தம் இல்லை. படுத்திருந்த எல்லோரையும் பார்த்தான். அசைவின்றிக் கிடந்தனர்.
சுவருக்கும் செண்பகத்துக்கும் இடையே இருந்த இடைவெளியில் அவன் அமர்ந்தபோது அவள் கண் திறந்து அவனைப் பார்த்தாள். அவனது கை அவளின் இடுப்பைத் தயக்கத்துடன் தொட்டது. அவளிடம் சலனமில்லை. இடுப்பிலிருந்து கையை நகர்த்தினான். கூச்சமாவது போல நெளிந்தாள். கை ஒரு கட்டத்தில் பிடியை இறுக்கியபோது அவளது கைகள் அவனது கையைப் பற்றிக்கொண்டன. பிடியை விடாமல் எழுந்து அமர்ந்தாள். அவசரமாக அவனைப் பற்றினாள். அவன் அவளைத் தன்னிடம் இழுத்து முகத்தை நெருங்கினான். பிடரியில் கை கொடுத்து அவளது உதட்டோடு உதடுகளை வைத்து இறுக்கினான். விலகி, மீண்டும் இறுக்கிச் சுவைத்தான்.
ஒத்துழைக்கும் அவளது வேகம் திகைப்பூட்டியது. தனது பிடியை மேலும் இறுக்க வேண்டியிருந்தது.
அப்போது திளைப்பில் செண்பகம் தன் கால்களை உதறினாள். ரேவதியின் மேல் அவளது உதறல்கள் பட்டு அவள் விழித்துக்கெண்டது இருவருக்கும் தெரியவில்லை. விநாடிகள் உறைந்த ஒரு கணத்திலிருந்து மீண்டபோது, ரேவதி எழுந்து உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
மூச்சு நின்றது போல ஒரு கணம். தனபாலுக்குப் படபடப்பாக இருந்தது. இப்படி மாட்டிக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாதவனாகத் தலை குனிந்தான். செண்பகம் மீண்டும் பழையபடி படுத்துக்கொண்டான்.
“ஏய்… எந்திரிடி மேல!”
ரேவதி அடிக் குரலில் செண்பகத்தை அதட்டினாள். செண்பகம் எழவில்லை. அவளது கண்கள் உணர்வுகளின் மயக்கம் தீராமல் சொருகிக் கிடந்தன. அவள் தனது கிளர்ச்சியை இழக்க விரும்பாதது போலப் பட்டது.
“மரியாதையா எந்திரிச்சுப் போறயா, இல்ல, எங்கம்மாவ எளுப்பட்டுமா?” ரேவதி இப்போது மிரட்டவே செய்தாள்.
அவள் தனபாலை எதுவும் சொல்லவில்லை. அவன் எழுந்து நடந்தான். இதெல்லாம் வெறும் கனவாக இருக்கக் கூடாதா என்ற ஆற்றாமை மேலிட்டது. எப்படி இனி ரேவதியின் முகத்தில் விழிக்க முடியும்? அவனுக்கு இப்போதே செத்துவிடலாமாய் இருந்தது. தங்கையின் முன்பாக மிகவும் கேவலமாகிவிட்டதே! இனி அவள் தன்னை எப்படி மதிப்பாள்? அடுத்து என்ன செய்வாள்? இழவு வீட்டில், இத்தனை பேர் இருக்கிற இடத்தில், அதுவும் அம்மாவும் தங்கையும் இருக்கிறபோதே, இதற்குத் துணிந்தது எவ்வளவு பெரிய மடமை!
அவன் மீண்டும் பெஞ்சில் படுத்துக்கொண்டு தன்னை மிக அருவறுப்பாக உணர்ந்து கொண்டிருந்தான். கொலுசுச் சத்தம் அந்த அறையிலிருந்து விலகி அடுத்த அறைக்குப் போய்க் கொண்டிருந்தது.
– மாலைக் கதிர், நாவல் கதிர், 10.5.1996.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |