புயலில் சிக்கிய பூக்கள்..!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 200
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

‘‘பக்குவமா நான் சொல்றேம்மா ‘. – டாக்டர் மஞ்சுளா முன் வந்தாள்.
தோழிகளுக்குத் திருப்தியாய் இருந்தது.
‘‘போன் நம்பரைச் சொல்லு?”
சிம்ரன் சொன்னாள்.
டாக்டர் ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்து எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் யாரோ எடுத்தார்கள்.
‘‘ஹலோ! நான் டாக்டர் மஞ்சளா பேசறேன்.‘‘
‘‘நான் தனவள்ளி!‘‘
‘‘சிம்ரன் வீடா?‘‘
‘‘ஆமா. நான் அவ அம்மா.‘‘
‘‘நீங்க உடனே புறப்பட்டு நுங்கம்பாக்கம் லேக் ஏரியா வாங்க.‘‘
“என் பொண்ணுக்கு என்ன டாக்டர்?”- அவள் குரலில் சட்டென்று பதற்றம் தொற்றியது,
“பயப்படாதீங்க. பெரிசா ஒன்னுமில்லே. காலையில விளையாடும் போது உங்க மக கால் தடுமாறி கீழே விழுந்துட்டா. குப்புற விழுந்ததினால வயித்துப்பக்கம் அடி. தோழிங்க கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. சிகிச்சை செய்ஞ்சிருக்கேன். நல்லா இருக்கா. வாங்க.“
“நீங்க இப்புடி குண்டை போடுறீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே சிம்ரனே சுபாஷிணி வீட்டுல இருக்கிறதா போன் பண்ணினா?”
“விசயத்தை உடனே சொன்னா பயந்துடுவீங்கன்னு மெல்ல சொல்லலாம்ன்னு நான்தான் அப்புடி சொல்லச் சொன்னேன்.”
“அடி பலமா டாக்டர்?”
“ரொம்ப சாதாரணம். நீங்க வந்து பார்த்தா தெரிஞ்சுக்குவீங்க.”
“உடனே வர்றேன்.” – தனவள்ளி துண்டித்தாள்
பத்து நிமிடத்தில் பறந்து வந்தாள். மகளைப் படுக்கையில் பார்த்ததும் சொரக்கென்றது,
“என்னடி ஆச்சு?” – தாவினாள்.
“ஒன்னும் ஆகலைம்மா. நீ வேணும்ன்னா டாக்டரை விசாரி.”
தனவள்ளி டாக்டர் அறையை நோக்கி ஓடினாள்.
மஞ்சுளா ரொம்ப பக்குவமாக நடந்ததைச் சொன்னாள்.
தனவள்ளி உறைந்தாள்.
“ஒன்னும் கவலைப்படாதீங்க. இது எதிர்பாராத விபத்து. உங்க மக வாழ்க்கை போச்சு மானம் போச்சு அவமானம் அது இதுன்னு கன்னா பின்னான்னு குழப்பி தற்கொலை முடிவுக்குப் போகாம புத்திசாலித்தனமா உடனே என்கிட்ட வந்தா பாருங்க ரொம்ப பாராட்டனும். வந்ததும் வயித்தைச் சுத்தம் பண்ணிட்டேன். பிரச்சனை இல்லே. நடந்ததைக் நடந்ததைக் கெட்ட கனவா நெனைச்சு மறந்துடுங்க. நீங்க தைரியமா இருந்தாத்தான் உங்க பொண்ணு இன்னும் தைரியமா இருப்பா. உங்க வீட்டுக்காரர் காதிலேயும் பக்குவமா போட்டு வைங்க. வீண் பிரச்சனை வேணாம். நடந்தது நடந்து போச்சு. வீண் கவலை வருத்தம் அபத்தம். பொண்ணுக்கு எதுவும் நடக்கலைன்னு நெனைச்சு எப்போதும் போல அவளைச் சுதந்திரமா விட்டாத்தான். மனம் ஆரோக்கியமா இருக்கும்.” – முடித்தாள்.
தாயுடன் மகளை உடனே அனுப்பி வைத்தாள்.
தனவள்ளி கணவர் தர்மலிங்கத்திடம் சரியான நேரம் காலம் பார்த்து சேதி சொன்னாள். அவருக்கும் அதிர்ச்சி. மகளின் புத்திசாலித்தனம் அவருக்கு வியப்பாய் இருந்தது,
“நீ ஒன்னும் மனசுல வைச்சுக்காதேம்மா” அவரே மகளைத் தேற்றினார்.
விசயம் அத்துடன் முடியவில்லை. ஒருவாரம் கழித்து சிம்ரன் கல்லுாரிக்கு வந்தாள். தோழிகள் ஒன்று கூடினார்கள். அவர்களுக்குள் கொதிப்பு இன்னும் மாறாமல் இருந்தது.
“அவன் ரௌடி தாதா பெரிய கெம்பனா இருந்தா என்ன பொட்டக் காக்கா எட்டிக் கொத்த முடியும்ங்கிறதைக் காட்டனும்!” ஜோதிகா ஆத்திரத்தைக் காண்பித்தாள்.
“நீ ஆளை மட்டும் காட்டு. இந்த ரமேசுப் பய என்ன செய்ஞ்சானோ அதை அப்புடியே நான் செய்யுறேன். பணத்துக்குப் பத்து ஆளைப் புடிச்சு மொதல்ல அந்த கொம்பன் சுலைமான் அடுத்து ஏவி விட்ட அந்த ரமேசு கம்மனாட்டி. நாங்க ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு.” மாலா கொட்டினாள்.
“பணத்துக்கு ஆள் பிடிக்கவேணாம். ஏதாவது சிக்கல் வரும்.. சுலைமான் அந்த ஆட்டோ டிரைவர் துணைக்கு வந்த கொசுறு ரமேஷ். அத்தனைப் பேரையும் தனித்தனியா மாட்டினா நம்ம ஹாக்கி மட்டையாலேயே பொரட்டுப் பொரட்டுன்னு பொரட்டிடலாம். நம்மளால அவனுங்களுக்குப் பாடம் கற்பிக்கனும்.!” மீனா எகிறினாள்.
“ஹாக்கி மட்டை சரியான ஐடியா. அவனுங்களும் போலீசு அது இதுன்னு போக முடியாது. அப்படியே போனாலும் நம்மை ஈவ் டீசிங் பண்ணினாங்கன்னு சொல்லி சமாளிச்சு அவனுங்களையே மாட்ட வைச்சுடலாம்.” – சிம்ரன் முகம் மலர்ந்தாள். திருப்தியாய் தலையாட்டினாள்.
“ஆளை எப்போ காட்டறே?” – மாலா அப்பவே வரிந்து கட்டினாள்.
“தேடிப் போக முடியாது. சமய சந்தர்ப்பம் வாய்க்கும் போது காட்றேன்”. – சிம்ரன் முடித்தாள்.
அப்புறம் அவர்கள் எங்கு சென்றாலும் கண்கொத்தி பாம்பாக இருந்தார்கள். இவர்கள் ஒருமுறை அண்ணா மேம்பாலத்தில் கல்லுாரிவிட்டு பேருந்தில் பயணம் செய்யும் போது சுலைமான் எதிரில் யமஹாவில் வந்தான்.
“இதோ வர்றான். அவன்தான்டி” சிம்ரன் கூவி அவனைக் காட்டி பேரைச் சொன்னாள்.
கவனித்துக் கொண்டார்கள்.
அடுத்து இரண்டு மூன்று நாட்களில் கோஷ்டி தகராறு என்று சுலைமான் படமும் எதிரி தாதா ஏகாம்பரம் படமும் பத்திரிக்கைகளில் பிரசுரமாகி சேதி வெளியாகி இருந்தது. சிம்ரன் அதை தோழிகளிடம் காட்டி வெட்டி ஒட்டி பத்திரப்படுத்திக் கொண்டாள்.
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். கணக்கை முடிச்சுக்கலாம்டி கறுவினார்கள். இன்றைக்கு முடித்துக் கொண்டார்கள்.
ஏறக்குறைய எல்லோருக்குமே திருப்தியாய் இருந்தது.
“இன்னைக்குத்தான்டி நமக்கு நிம்மதியான தூக்கம்.” – ஜோதிகா வெளிப்படையாக சொன்னாள்.
பிரிய வேண்டிய இடம் வந்ததும் “சிம்ரன்! பார்த்துப் போ“ ஆளாளுக்குச் சொல்லி பிரிந்தார்கள்.
“நீங்க பார்த்துப் போங்கடி.” – இவள் சொல்லி சிரித்து சைக்கிளை விட்டாள்.
‘அப்பா அம்மாவிடம் சேதி சொல்லலாமா பூகம்பம் பிறக்குமா?!’ – அவளுக்குள் யோசனை ஓடியது.
அத்தியாயம் – 5
உயிர் பிழைத்தால் போதுமென்று தப்பித்த சுலைமான் நேராக யமஹாவை அப்புராசு மருத்துவமனையை நோக்கி விட்டான். அடிபட்ட இடமெல்லாம் வலி.
டாக்டர் அப்புராசு அவனுக்கு ரொம்ப வேண்டியப்பட்டபவர். அவர் மனைவி பேரிலுள்ள சகாயம் அபார்ட்மென்ட்டில் ஒரு குடித்தனக்காரன் ரொம்ப காலமாக வாடகை கொடுக்காமல் வீட்டையும் காலி செய்யாமல் அவரை ரொம்ப ழுக்கடித்தான். டாக்டர் அவனைக் காலி செய்ய சுலைமானை நாடினார். ஐயாயிரம் பேசி ஆயிரம் முன் பணமும் கொடுத்தார்.
இவன் உடனே உருட்டுக்கட்டை, சைக்கிள் செயின், ஐந்து ஆட்களுடன் புறப்பட்டான். வழியிலேயே சாராயம், மாட்டுக்கறி, முட்டைப் பரோட்டா வாங்கிக் கொண்டார்கள். திறந்திருந்த வீட்டிற்குள் கேள்வி முறையில்லாமல் நுழைந்தார்கள். திறந்திருக்கவில்லையென்றாலும் கதவைத் தட்டி திறக்க ஐடியா.
“ஐயோ ! யாருங்க நீங்க?” – உள்ளிருந்த பெண்மணி அலறினாள்.
இவர்கள் அவளிடம் பேசவில்லை.
நடுக்கூடத்தில் அமர்ந்தார்கள். வாங்கி வந்த சாராயம், மாட்டுக்கறி, முட்டை பரோட்டாக்களைப் பிரித்து பரப்பினார்கள்.
“என்னங்க?” – அவள் பதறி அடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
சிறிது நேரத்தில் அங்கிருந்து, “யோவ் ! யாருய்யா நீங்க?” – கணவன் கோபாவேசமாக வெளியே வந்தான்.
சுலைமானுக்கு ரொம்ப கொழுப்பு.
“ம்ம்… இது என் வீடு. உள்ளே வந்தவ என் பொண்டாட்டி!”
தடாலடி அடித்தான்.
“என்னய்யா சொல்றே?”
”ம்ம்.. சொல்றேன். சொரக்காய்க்கு உப்பில்லேன்னு. த்து! மாட்டுக்கறியில உப்பில்லாம சமைச்சிருக்கானுங்க தேவடியாப் பசங்க”. – என்று வாயிலுள்ளதை அப்படியே கூடத்தில் துப்பினான்
“என்ன அராஜகமா பண்றீங்க?” – வீட்டிலிருந்தவனுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது,
“இன்னும் ஒரு நிமிசத்துல காலி பண்ணலைன்னா இன்னும் என்னென்னமோ நடக்கும்”. என்ற சுலைமான் ஒரு பாட்டில் சாராயத்தை அப்படியே விழுங்கினான்.
“நான் போலிசுக்குப் போன் பண்ணுவேன்.”
“பண்ணு. நான் மாசாமாசம் மாமூல் வெட்றேன். கண்டுக்க மாட்டாங்க.”
“ஐ.ஜிக்குப் பண்ணுவேன்.”
“நீ எவனுக்கு வேணுமோ பண்ணு. இன்னும் அஞ்சே அஞ்சு நிமிசம்தான் உனக்கு டயம். பாத்திரம் பண்டம் பொண்டாட்டி புள்ளைங்களோட வெளிக்கிளம்பனும். எடுடா முட்டை பரோட்டாவை“ சுலைமான் அடுத்திருந்தவனை அதட்டினான்.
குடியிருப்பவனுக்கு ரொம்பபவும் துணிச்சல். “காலி பண்ணலைன்னா?” கேட்டான்.
“எல்லாம் சேதமாகும். எங்க பொருளாகும்.“ சுலைமான் நடுக்கத்துடன் நின்ற அவன் மனைவியைப் பார்த்தான்.
“என்னங்க..”
அவள் மிரண்டு போய் கணவனை அறைக்குள் இழுத்தாள்.
வெளியே வந்த இரண்டாவது நிமிசம். மூட்டை முடிச்சுகள் கட்டினார்கள்.
இது இல்லாமல் டாக்டரை சுலைமான் வேறொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்றினான். ஒரு நோயாளிக்கு டாக்டர் தவறாக அறுவை சிகிச்சை செய்து இறந்துவிட இறந்தவனின் சொந்தக்காரர்கள் பிணத்தை எடுக்க மாட்டோம். போலீஸ், கோர்ட் வழக்குப் போவோம் நஷ்ட ஈடு லட்சம் வேண்டுமென்று விடாப்பிடியாக கோரிக்கை வைக்க டாக்டர் சுலைமானுக்குப் போன் செய்து விபரம் தெரிவித்தார்.
அவன் நான்கு பேர்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினான்
“எந்த டாக்டர்ய்யா சரியா தொழில் செய்யிறான்? குறையில்லாத டாக்டரைச் சொல்லு. உன் ஆளு அல்ப ஆயுசு. போய் சேர்ந்துட்டான். அதுக்கு இவரா பொறுப்பு? உன் உசுரு மட்டும் கெட்டியா. குத்தினா சாகமாட்டியா. மவனே! அந்த ஆள் மண்டையில போடுடா. சாவுறானான்னு பார்ப்போம்.” இப்படி அப்படி மிரட்டி உருட்டுக் கட்டையைக் காட்ட…அவர்கள் பிணத்ததைக் கொடுத்தால் போதுமென்று வாங்கிக் கொண்டு ஓடினார்கள்.
அந்த நன்றி விசுவாசம் இவன் எங்கு போய் வெட்டு குத்துப்பட்டு வந்தாலும் அப்புராசு மருத்துவமமையில் இலவச மருத்துவம். அப்புராசே இல்லையென்றாலும் சிகிச்சை அளித்து அனுப்பி விடுவார்கள் அவ்வளவு செல்வாக்கு.
சுலைமான் மருத்துவமனையில் புகுந்து புகுந்து தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு திரும்பினான்.
“ஆம்பளை! அதுவும் பேட்டை தாதா ! பொட்டச்சிங்க அடிக்கிறதாவது. அடிவாங்கிறதாவது ?” நினைக்க நினைக்க அவமானம். ஆத்திரம் தலைக்கு மேல் போனது,
‘விடமாட்டேன்! அவளுங்களை விடமாட்டேன் !’ – மனசுக்குள் சூ ளுரைத்தான்
பாழ்மண்டபத்தை நோக்கி வண்டியை விட்டான்.
செயின் செயபால், பிளேடு பக்கிரி, பிக்பாக்கெட் ரவி, கொள்ளைக் கும்பல் கோவிந்தன் …..இவன் கோஷ்டி எல்லாரும் அங்கு உட்கார்ந்து மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தார்கள்.
கீழே வண்டியை நிறுத்திவிட்டு வந்த சுலைமானைப் பார்க்க அவர்களுக்கு அதிர்ச்சி.
“என்ன தலைவரே இது தலையில கட்டு. யார் வேலை?” – விளையாட்டை அப்படியே விட்டுவிட்டு பக்கிரி பாய்ந்து வந்து கேட்டான்.
“எதிர் கோஷ்டியா? எவன் அவன் ?”- ரவி அருகில் வந்தான்.
“எடக்கு முடக்கா எந்த வூட்டுலேயாவது மாட்டிக்கினியா?” – கோவிந்தன்.
“போலிஸ்காரனுங்க தொப்பிட்டானுங்களா?“ – ஆளாளுக்குப் பதைபதைத்தார்கள்.
அத்தியாயம் – 6
சுலைமான் அவர்கள் கேட்ட எந்த பதிலும் சொல்லாமல் அருகிலுள்ள கல் மீது அமர்ந்தான்.
“என்ன தலைவரே பதில் சொல்ல மாட்டேங்குறே? உன்னைத் தொட்டவன் எவன்னு சொல்லு போய் கீய்ச்சுடுறேன்”. பக்கிரி ஆவேசம் வந்தவனாய் உதார் விட்டான்.
“மஞ்சா சோத்தை எடுத்துறேன்!“ – செயபால் எழுந்தான்.
”உட்காருங்க சொல்றேன்!”. – சுலைமான்தலையைக் கவிழ்த்துக் கொண்டு நிதானமாக சொன்னான்.
அவர்கள் அமர்ந்தார்கள். தலைவன் முகத்தை ஏறிட்டார்கள்.
“…எ.. என்னை எந்த ஆம்பளையும் தொடலை.” சுலைமான் சொல்லும் போதே கூசி குறுகினான்.
“போலிஸ்காரனா?”
“பொ… பொம்பளைங்க..”
“போலிஸ்காரியா ?”
“பொண்ணுங்க….”
ஆளாளுக்கு விழித்தார்கள்.
“விலாவாரியா சொல் தலைவா!” – கோவிந்தன் ஏறிட்டான்.
“காலையில அண்ணா விளையாட்டரங்கம் பக்கம் போனேன். அங்கே பொட்டச்சிங்களுக்காக ஒரு கடை நடக்குதுன்னு கேள்வி….”
“ஆமா” செயபால் தலையாட்டினான்.
“பொம்பளைங்க கடையில நாலைஞ்சு பொண்ணுங்க உட்கார்ந்திருந்தாளுங்க. பார்க்க நல்லா நல்லா லுக் விடறமாதிரியும் இருந்தாளுங்க. நாமதான் ஊரறிஞ்ச பொறுக்கியாச்சே. ரௌவுசு விடலாம்ன்னு வண்டியை வண்டியை நிறுத்தி நாற்காலியில உட்கார்ந்து டீக்கடைக்காரனை டீ போடச் சொன்னேன். அவன் போடலை. ஆனா பக்கத்துல இருந்து மலையாளிச்சி எழுந்து வந்து டீ இல்லே எழுந்திரின்னா. ஏன்னேன். வாக்குவாதம். உட்கார்ந்திருந்த பொண்ணுங்க நைசா எழுந்திரிச்சாளுங்க. சரி கலாட்டா பண்றான்னு பயந்து இடத்தைக் காலி பண்றாளுங்கன்னு நெனைச்சேன். அவளுங்க சைக்கிள் கேரியர்ல இருந்த ஹாக்கி மட்டைங்களை எடுத்து ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சி மொத அடி நடு மண்டையில பொரி கலங்கிப் போச்சு. அடுத்து நான் அடுத்து நான் சுதாரிக்கிறதுக்குள்ள எழுத்திரிக்கவே விடாம ரௌண்டு கட்டி அடி.” கலங்கினான்..
“நீ கையில ஆயுதம் இல்லாமலா இருந்தே?”- ரவி வியப்பு திகைப்பாய்க் கேட்டான்.
“சின்ன பேனா கத்தி ஒன்னுதான் தற்காப்புக்காக எப்போதும் பாக்கெட்ல இருக்கும். அதை எடுக்க முடியாத அளவுக்கு மழை மாதிரி அடி. எடுத்தாலும் ஆபத்து.”
“ஏன்?”
“கலாட்டாவைப் பார்த்து அடுத்த கடையிலேர்ந்து கூட்டமா பசங்க வந்துட்டானுங்க. ஜொள்ளு பசங்க. பொம்பளைகிட்ட தகராறு பண்ணினேன்னு பொரட்டிடுவானுங்க. தப்பிச்சா போதும்ங்கிறதைத் தவிர வேற வழி இல்லே.”
கேட்வர்களுக்கு வியப்பு திகைப்பாய் இருந்தது, ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை.
“வெளியில விடாதே. தலைவரே. நம்ம எதிர் கோஷ்டி எப்ப எப்பன்னு இருக்கானுங்க. போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவானுங்க. அது நமக்குப் பெரிய அவமானம் வெளியில தலைக் காட்ட முடியாது.“ – பக்கிரி குறையைச் சொன்னான்.
“விடுடா. தலைவரு எக்கத்தப்பாய் அடிவாங்கிக்கிட்டு வந்திருக்காரு. நீ வேற என்னென்னமோ சொல்றே?” – செயின் செயபால் அவனை அடக்கினான்.
“நாம கொஞ்சம் இறங்கினாலும் எதிரி எகிறிப்பூடுவான். அதான் சொல்றேன்!” – பக்கிரிக்கு ஆதங்கமாய் இருந்தது,
“அந்த பொண்ணுங்க யார் யார் தெரியுமா தலைவா?” – கோவிந்தன் கேட்டான்.
“ஏன்?” சுலைமான் அவனைப் பார்த்தான்.
“அவளுங்க கையைக் காலை உடைக்கத்தான். ஏன்…அவளுங்களைக் கொன்னே போடலாம். அப்பத்தான் எல்லாருக்கும் நம்ம மேல் பயம் வரும்.. எதிரியும் மிரளுவான்.அவளுங்க அடையாளம் சொல்லு தலைவா?” – வீராப்பாய்ச் சொன்னான்.
“ஒருத்தியைத்தான் அரசல் புரசலா நினைவிருக்கு.”
“சொல்லு தலைவா?”
“மொகம் மட்டும்தான் ஞாபகமிருக்கு. பேர் விலாசம் மறந்து போச்சு”
“எப்புடி தெரியும்?”
கற்பழிப்பைச் சொன்னான்.
“அந்த பாதிப்புதான் அவ உன்னைக் கோஷ்டி சேர்த்துக்கிட்டு பின்னிட்டாள்ன்னு நெனைக்கிறேன்!”
“படிக்கிற குட்டியா?” – ரவி கேட்டான்.
“ஆமாம்!“ – சுலைமான் தலையாட்டினான்.
“எந்த காலேஜ்?“
யோசித்தான்.
“மறந்து போச்சு.” தலை கவிழ்ந்தான்.
“விடு குட்டிங்க எந்த ஏரியா?”
“தெரியலை கண்டுபிடிக்கலாம்!” – யோசனையுடன் சொன்னான்.
“எப்புடி?“
“கமிசனர் பையன்தான் ஆளைக் காட்டினான்.”
“பையன் போன் நம்பர் தெரியுமா?”
“இரு பார்க்கிறேன்!” – சுலைமான் சொல்லி பாக்கெட்டிலிருந்து சின்ன டைரியை எடுத்தான். பிரித்துப் பார்த்தான். ஒவ்வொரு ஏடாகப் புரட்டினான். கடைசி ஏட்டிற்கும் முதல் ஏட்டைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
“பேர் ரமேசு!” – போன் நம்பர் சொன்னான்.
“குடுடா அந்த செல்லை.” – பக்கிரி கோவிந்தனிடம் கை நீட்டினான்.
“ஒரு நிமிசம்!” – ரவி ஒரு விரலைக் காட்டி அவனை நிறுத்தினான்.
பக்கிரி நீட்டிய கையை மடக்காமல், “என்ன?” – என்றான்.
“பொண்ணுங்க ஆள் தெரிஞ்சும் தாக்கி இருக்காளுங்கன்னா பின்னால அவளுங்களுக்குப் பயங்கர பலம் இருக்குன்னு அர்த்தம்.”
பக்கிரிக்குக் கோபம் வந்தது. “என்ன பெரிய புடுங்கி பலம்? பயந்தாங்கொள்ளி!” என்று அவனை அதட்டிவிட்டு, “செல்லைக் குடுடா.“ – கோவிந்தன் பக்கம் கை நீட்டினான்.
அவன் சட்டைப் பையிலிருந்து எடுத்து சடக்கென்று கொடுத்தான்.
“எதிரியை என்னைக்கும் ஏளனமா நெனைக்க வேணாம்!?” – ரவி மீண்டும் எச்சரித்தான்.
அவன் இவனைச் சட்டை செய்யவே இல்லை. “நம்பர் சொல்லு தலைவா?”- சுலைமானைப் பார்த்தான்.
சொன்னான்.
எண்களை அழுத்தி காதில் வைத்த பக்கிரி “கமிசனர் பேரென்ன?“ கேட்டான்.
“பூவராகவன்!”
‘ஹலோ! போலிஸ் கமிசனர் பூவராகவன் வீடுங்களா?“
“இல்லீங்க. பூக்கடை பொன்னுரங்கம் வீடு”
“சாரி. ராங்க் நம்பர்!” அணைத்த பக்கிரி “தலைவரே! பையன் நம்பரை ராங்கா சொல்லிட்டானா. இல்லே நீங்க சொல்லிட்டீங்களா?” – கேட்டான்.
மீண்டும் ஏட்டை புரட்டிப்பார்த்த சுலைமான், “சரியான நம்பர்தான். குழப்பமா இருக்கு” – என்று குழம்பியவன் “எப்படியும் நாளைக்கு ஆளைக் கண்டுபுடிச்சி அவனைப் புடிச்சிடுறேன்” என்றான்.
“அதைச் செய்யுங்க மொதல்ல. அப்புறம் வைப்போம் அவளுங்களுக்கு வேட்டு” – என்றான் பக்கிரி.
பக்கிரியின் கோபம் ரவிக்கு வயிற்றைக் கலக்கியது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
இதய ஓசைகள்
மா.வீ.தியாகராசன்
September 6, 2026
உறவுகள் ஆயிரம்
ஐ.சாந்தன்
September 6, 2026
