புத்துயிர்





(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறுகதை எழுதுவதற்கு முன் அதற்கு நல்லதொரு நிலைக்களம் அமைத்து வேண்டும். அந்தக் களத்தில் உலவும் கதாபாத்திரங்களுடன் வாசகளை ஒன்றிவிடச் செய்ய வேண்டும். இப்படியொரு கதை அமையுமான அதைப் படித்து முடித்தவுடன் இவ்வளவு நேரம் நாம் எங்கிருந்தோ கதையில் வரும் ரகுராமானாகவோ அல்லது தங்கமாகவோ நார் மாறிவிட்டிருந்தோமா என்னும் உணர்ச்சிதான் மேலோங்கி நிற்கும் கதையைப் படித்து முடித்தவுடன் மௌனமாகி விடுவோம். சிந்தனைகள் சுருள் சுருளாக விரியும்.
அந்த மாதிரியான ஓர் அனுபவம் ‘புத்துயிர்’ என்னும் இக்கதையை படித்தவுடன் கட்டாயம் வாசகர்களுக்கு ஏற்படும்.
நிலைக்களம்: கோதாவரி தீரத்திலுள்ள அமலாபுரம் என்னும் கிராமம் கோதாவரியிலோ பெருவெள்ளம். இதன் மத்தியில் இரண்டு கதாபாத்திரங்கள். இடையிடையே ஆசிரியரும் வந்து “அப்படி ஒரு தடவை வெள்ளம் வந்து மக்களுக்குத் தொந்தரவு கொடுத்த சமயம் இந்த கதையில் ஒரு ரகுராமனுக்கும் – தங்கத்துக்கும் மட்டும் சிறிதுநேரம் சொர்க்க இன்பத்தை ஊட்டியது” என்று கட்டியம் கூறும்போதே கதை களைகட்டி விடுகிறது மேலே போ மேலே போ’ என்று படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
பாத்திரங்களே தங்கள் கதையைக் கூறுவதும், கூறிக் கொண்டே கதையை நகர்த்துவதும் ஒரு யுக்தி. அது தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியதன்று ஆனால், படிக்கும்போதே அதே கதாபாத்திரமாக நம்மை மாறச் செய்யும் விக்கிரமனின் மாயா ஜாலச் சக்தியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்
“தங்களைக் கண்டவுடன் பழைய எண்ணங்கள் சக்தி இழந்து நிற்கின்றன என்று தங்கம் கூறும்போது, வார்த்தைகளின் சக்தி இழப்பை நாம் நன்கு காண்கிறோம்.
வளமான சொற்களைச் சிக்கனமாகக் கையாண்டு வாசக அன்பர்களையும் சிறிது நேரம் சொர்க்க இன்பத்தை அடையச் செய்யும் இப்’புத்துயிர்’ பல தடவை படிக்க வேண்டிய ஒரு சிறந்த கதை.
– நா. ராமச்சந்திரன்
புத்துயிர்
பிரபல ஆசிரியர்கள் தங்கள் கதைகளுக்கு முன்னுரையாக எழுதுவதுபோல எழுத எனக்கு நோக்கமில்லை. ஆனாலும் கதாநாயகன் மிஸ்டர் ரகுராமனையும், கதாநாயகி (ஆனால், கதாநாயகனுடைய தாயகியல்லள்) திருமதி தங்கத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்தாக வேண்டும். மேலும் கதை நடக்கும் ஊர் – நடந்த தேதி – கிழமை – நேரம் எல்லாவற்றையும் முன்கூட்டியே கூறாமல் திடுதிப்பென்று கதையை ஆரம்பித்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும் நோக்கமும் எனக்குக் கிடையாது.
எதிர்க்கரை தெரியாத அளவுக்கு அகலமாகக் காட்சி அளிக்கும் கோதாவரி நதிக்கரையை ஒட்டிய ஊர் அமலாபுரம். கோதாவரியில் வெள்ளம் வரும் சமயமெல்லாம் ஊரை ஒரு பார்வை பார்க்காமல் போகாது; அப்படி ஒரு தடவை வெள்ளம் வந்து மக்களுக்குத் தொந்தரவு கொடுத்த சமயம் இந்தக்கதையில் வரும் ரகுராமனுக்கும் – தங்கத்துக்கும் மட்டும் சிறிது நேரம் சொர்க்க இன்பத்தை ஊட்டியது.
அதெப்படி என்கிறீர்களா? கேளுங்கள்…
ரகுராமன் சொல்கிறார்
தமிழ்நாட்டில் உத்தியோகத்துக்கு இடமா இல்லை? பின் எதற்காக பி.டபிள்யூ.டி. இலாகாக்காரர்கள் இங்கு மாற்றித் தொலைக்க வேண்டும்? பாஷை புரியாத ஊர். பரிவாகப் பேசும் மனித சஞ்சாரமற்ற இடம். விதியை எண்ணி மேல் இடத்து அதிகாரியைச் சபித்துக் கொண்டே இங்கே வந்து சேர்ந்தேன். என்னைப் போன்ற அதிர்ஷ்ட மற்றவன் ஒருவரையும் உலகில் பார்க்க முடியாது.
நான்ஏழைக்குடும்பத்தில் பிறந்தவனல்லன். சேர்ந்தநல்லூர் பண்ணை யென்றால் பிரபலமாயிற்றே! பண்ணையார் பாஸ்கரனின் சாக்ஷாத் புதல்வன் நான்தான். பணத்தில் பிறந்த நான்நூறு ரூபாய் சம்பளத்துக்காக இப்படி கஷ்டப்பட வேண்டி வந்திருக்கிறது. புது என்ஜினீயர் ஒருவர் வரப் போகிறாராம். தமிழராம் அவர். ஐயோ பாவம். நான் படும்பாடு போதாதென்று அவர் வேறு வர வேண்டுமா, என்ன!
என்வாழ்க்கையில் இப்பொழுது எனக்கு எவ்வித உற்சாகமுமில்லை. சென்னையை விட்டு எப்பொழுது தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்து சேர்ந்தேனோ அதற்கு முன்பே என் மனக்கோட்டையெல்லாம் இடிந்து விட்டது.
இடிந்த கோட்டைகள் முழுதும் அழிந்து போயிருக்கக் கூடாதா அடிக்கடி தோன்றி என் ஆத்திரத்தைக் கிளப்புகிறது; என் உள்ளத்தை வேதனையுறச் செய்கிறது.
நான் சொல்கிறேன்
மனத்தில் நிம்மதியின்றி முடுக்கிவிட்ட பொம்மைபோல் எல்லா வேலைகளையும் செய்து வந்த ரகுராமனுக்கு, கோதாவரி வெள்ளத்தன்று புத்துயிர் ஏற்பட்டது.
அந்த வாரம் பெய்த பெருமழையால் கோதாவரி கட்டு மீறியது அமலாபுரத்துத் தெருக்களில் வெள்ளம் புகுந்துவிட்டது. அநோ வீடுகள், ஆடு மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வெள்ளக்காடாகக் காட்சி யளித்தது.
ஒரு முக்கியச் செய்தியை எடுத்துக் கொண்டு முழங்கால் அளவு ஜலத்தில் வேகமாக புது என்ஜினீயர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தான் ரகுராமன். என்ஜினீயர் அவ்வூருக்கு வந்து நான்கே நாள்கள்தாம் ஆகியிருந்தன.
ரகுராமன் மெல்லத் தட்டுத் தடுமாறிச் சென்று என்ஜினீயர் வீட்டுக் கதவைத் தட்டினான். பங்களாவைச் சுற்றி முழங்காலளவு நீர் நிரம்பி யிருந்தது. பிசுபிசுவென இன்னும் மழை தூறிக் கொண்டிருந்தது.
உயிருக்கு அஞ்சி மக்கள் பக்கத்து ஊருக்கு ஓடி விட்டதால் ஊர் அமைதியாக இருந்தது. அந்த அமைதியை எடுத்துக்காட்டுவதுபோல் கோதாவரியின் வெள்ளம் ‘ஹோ’வென்று பெரும் இரைச்சலுள் ஓடிக் கொண்டிருந்தது.
மழை நிற்கும் அறிகுறியே காணவில்லை. சிறிது நேரத்துக்கொரு தடவை மின்னல் ஒளி கண்சிமிட்டி வெளிச்சம் காட்டி மழையை மேலும் கூப்பிடுது போலிருந்தது.
“ஸார், ஸார்!” என்று பலமுறை கூப்பிட்டான் ரகுராமன்.
பத்து நிமிஷம் கழித்து, “யாரது?” என்று ஒரு மெல்லிய குரல் வந்தது. தொடர்ந்து கதவும் திறக்கப்பட்டது.
”அவரில்லையே; அவசரமாகக் காலையில் போனவர் வரவில்லையே” என்று அந்தக் குரல் சொல்லிற்று. வீணையின் நாதம் போன்றிருப்பினும் அவளுடைய குரல் மழையால் கம்மிப் போனது போன்றிருந்தது.
“இல்லை… மிக அவசரச் செய்தி. அவரைப் பார்த்துக் கொடுத்தாக வேண்டும்” என்று இழுத்தாற்போல் சொன்னான் ரகுராமன்.
அந்த மழை இருட்டில் ஓர் உருவம் மற்றவருக்குத் தெரியவில்லை.
“ஓ… பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்டரா? ‘அவர்’கூடச்சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். உள்ளே வந்து ஆபீஸ் அறையில் உட்கார்ந்திருங்கள்” என்று அவள் கூறிவிட்டு மின்சார விளக்கைச் சட்டென்று ஏற்றினாள்.
என்ன‘ஷாக்’கா அடித்து விட்டது? ஏன் இருவரும் அப்படி வெறித்துப் பார்க்கிறார்கள்? அசையாப் பொம்மைப் போல் நின்று விட்டார்கள்.
ரகுராமன் சொல்கிறார்
எவ்வளவு நேரம் அப்படியே நின்றேனோ எனக்குத் தெரியாது. சட்டென்று நானே சமாளித்துக் கொண்டேன். முதலில் வெட்கமாகவும், பிறகு சிறிது அச்சமாகவும் போய்விட்டது. என்ஜினீயர் வீட்டில் வந்து அப்படி வெறிச்சென்று அவர் மனைவியைப் பார்த்துக் கொண்டே முருவன் நிற்பதென்றால் எவ்வளவு கேவலம்? நான் வேண்டுமென்றா அப்படி நின்றேன்?
வெளியே ஒரு மின்னல் மின்னியது. அந்தகாரம் சூழ்ந்த என் வாழ்விலும் ஒரு கணம் புத்துயிர் ஏற்பட்டது.
அவள் இப்பொழுது என்ஜினீயர் மனைவியாகி விட்டாள். ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய பெரிய ‘கெஜடட்’ அதிகாரியின் மனைவியாகி விட்டாள். திருமதி பாலகிருஷ்ணனாக ஆகிவிட்டாள். இதெல்லாம் எனக்கு முன்பே தெரியுமா? தெரிந்திருந்தால் இப்படி மரியாதைக் குறைவாக ஸ்தம்பித்து நின்றிருப்பேனா?
போகட்டும்; அவர் இதை மரியாதைக் குறைவாகவோ, வித்தியாச மாகவோ நினைத்துக் கொள்ளவில்லை.
என்னைப் போலவே அவளும் தான் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
தங்கம் சொல்கிறாள்
அமலாபுரத்துக்கு மாற்றல் என்று என் கணவர் கூறினார். ஊர் எப்படியிருக்குமோ என்னும் கவலை வேறு; மேலும் எனக்கு வாழ்க்கையிலேயே ஒருவிதமான பிடிமானமுமில்லாமலிருந்தது எனக்குக் கல்யாணமானதே இருபது வயதில்தான்.
நீங்கள் சிரிக்கலாம். இருபது வயதுக்குக் குறைந்து இப்பொழு தெல்லாம் எங்கே கல்யாணம் நடக்கிறது? என் தந்தை என்னை உயர்நிலைப் பள்ளிப் படிப்பு படிக்க வைக்காமலிருந்தால் ஒன்றும் நேர்ந்திருக்காது.
கல்யாணமாகி இரு வருடங்கள் குதூகலமோ களிப்போ இல்லாதிருந் தேன். என் கணவர் என்னை மகிழ்விக்கப் படாதபாடுபட்டார்.
அவையெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. வேதலை நிறைந்த எண்ணம் உள்ளத்திலிருக்கும் வரை கலகலப்பாக எப்படி இருக்க முடியும்? சில நாள்கள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தேன். சென்றதையெல்லாம் மறந்தேன்.
குதித்தாடிய அந்த நாள். குதூகலம் நிறைந்த அந்தக் காலம் குறும்பாகப் பேசிக் கொட்டமடித்த அந்தத் தினங்கள் மணிக்கணக்காகப் பேசிப் பேசிப் பொழுதுபோக்கிய அந்த வேளைகள் அவ்வளவையும் மறந்து சில ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.
மின்சார விளக்கை ஏற்றி அவர் உருவத்தைக் கண்டு ஸ்தம்பித்த ஒரு கணத்தில் அந்தப் பழைய நினைவுகள் பறந்தோடி வந்தன.
ரகுராமனா என் முன் நின்றவர்? ஆமாம்! அவரேதான்.
என் பழைய சிநேகிதர். இதுபோல் கதவைத் திறந்து ஒரு கணம் அவரை விழுங்கி விடுவதுபோல் பார்த்துச் சிலைபோல் நின்றதை யாராவது பார்த்திருந்தால், ஏன்… தோட்டக்காரனே கண்டிருந்தால் என்ன நினைப்பான்?
‘ஆயிரம் ரூபாய் சம்பளக்காரன் மனைவியைப் பாருடா!’ என்று நினைக்க மாட்டானா?
நல்லவேளை; தோட்டக்காரன் வெள்ளத்தில் தன் வீட்டைக் காப்பாற்றிக் கொள்ளப் போய் விட்டான்.
தனியே வெறிச்சென்று ஜன்னல் வழியே தொலைவில் ஓடும் கோதாவரியின் பெரு வெள்ளத்தில் மனத்தைப் பறி கொடுத்து, பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த எனக்குப் பொழுது போகும் வழி இடைத்து விட்டது.
ரகுராமன் என் சிநேகிதர். துணிச்சலுடன் சொல்கிறேன். உண்மையை மறக்கலாம். உள்ளத்து உணர்ச்சியை மறைக்க முடியுமா?
என் தந்தை காஞ்சிநாதன் பி.ஏ.பி.எல்-ஐ மயிலாப்பூரில் தெரியாதவர்களே கிடையாது. புரட்சியாகப் பேசியும், சீர்திருத்தம் கூறியும் பிரமாதப்படுத்துவார். ஆனால் சொந்த வீட்டிலோ..?
ரகுராமனின் சிநேகிதம் எப்படி ஏற்பட்டது என்று கேட்காதீர்கள். நான்எப்படியென்று கூறுவது? களை பொருந்திய அவர் முகம் கண்டு மயங்கினேன். எப்படியோ எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரையொருவர் நெருங்காமலேயே வளர்ந்து கொண்டு வந்தது.
ரகுராமன் சொல்கிறார்
தங்கத்தை எப்பொழுது முதன்முதலில் சந்தித்தேன் என்பது ஞாபகமில்லையெனினும், அந்தத் துறுதுறுப்பான கண்கள் என்னையே மீண்டும் மீண்டும் திரும்பித் திரும்பிக் கண்டது மட்டும் என்னும் என் நினைவில் உள்ளது.
நானும் அப்பொழுது மயிலாப்பூரில்தான் இருந்தேன். பி.ஏ., பரீட்சைக்குப் படித்து வந்தேன். அப்பா, அம்மா எல்லாரும் பட்டண வாசம்தான் செய்தார்கள்.
தங்கத்துக்கும் எனக்கும் நட்பு வளர ஆரம்பித்தது. நாங்கள் நெருங்கிப் பழகியோ – கடிதம் எழுதியோ காதலை வளர்க்கவில்லை. எங்களை அறியாமல் ஓர் உணர்ச்சி எங்களைப் பிணைத்தது.
என் தந்தை ஒருநாள் என் கல்யாணப் பேச்சை எடுத்தார். நான் விஷயத்தைக் கூறினேன். அப்பா கோபிக்கவில்லை. சரியென்று தங்கத்தின்தந்தையை அணுகி ஜாதகம் கேட்டார். அவர்கள்வட மாகவாம். நாங்கள் வாத்திமர்களாம். ஒருவருக்கொருவர் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்ய மாட்டார்களாம். என் தந்தையும் சாதிப் பிரிவு விட்டு சம்பந்தம செய்யக் துளிக்கூடி இஷ்டப்படவேயில்லை.
தங்கம் சொல்கிறாள்
சமூக சீர்திருத்தவாதியென்று என் அப்பாவுக்குப் பெயர்.
பிராமணர்களுள உப பிரிவினர் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ளச் சம்மதிக்க மாட்டார்கள். அவர் மட்டும் விதிவிலக்கா? அப்பாவிடம் துணிந்து என் விருப்பத்தைக் கூற, விளைவு மறுநாளே பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டேன்.
அடுக்களையை விட்டு அகலக்கூடாதென்ற தடை உத்தரவு பலமாயிருந்தது. ‘குழந்தை! சமையல் வேலையெல்லாம் பழகிக்கோ” என்று பரிவாகப் பேசுவார் தந்தை.
என் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ வரும் வரன்களெல்லாம் சரியில்லாமலே போய்க் கொண்டிருந்தது. ரகுராமனைச் சந்திக்க முடியாதது எனக்குப் பித்துப் பிடித்தது போலவே இருந்தது.
கடைசியில் எனக்கும் இவருக்கும் கல்யாணமும் நடந்தது. கல்யாண மாகி வெகு நாள்கள் என் உன்மத்தத்தைக் கண்டு என் கணவர் பெரிதும் கலக்கமே அடைந்து விட்டார்.
வாழ்க்கையே கசந்து போன எனக்கு இப்பொழுது இவரைக் கண்டவுடன் பழைய நினைவுதான் தோன்றியது. இரு குழந்தைகளுக்குத் தாயான எனக்குப் பழைய விட்டுப்போனசம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்ட இன்று ஒரு நாளாவது சற்றுக் குதூகலமாயிருக்க எண்ணம் அவர் பேசுவாரோ, மாட்டாரோ!
ரகுராமன் சொல்கிறார்
திடீரென்று தங்கத்தைப் பிறகு பார்க்கவே முடியவில்லை. டேடிலேயே அவளுக்குச் சிறைவாசம் என்று அறிந்தேன்.
உள்ளுக்குள் வேதனை. ஆனால், வெளிக்குச் சந்தோஷமாக இருந்தேன். ஒருநாள் சொல்லிக் கொள்ளாமல் கோயமுத்தூர் வந்து சேர்ந்து விவசாயக் கல்லூரியில் சேர்ந்தேன். என் தந்தை என்னைத் தேடிப் படாத பாடுபட்டார். பிறகு ஒரு கடிதம் எழுதிச் செய்தியைத் தெரிவித்தேன்.
விவசாயக் கல்லூரியை விட்ட பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்னை மாற்றினார்கள். பல ஊர்களைச் சுற்றினேன்.
துறுதுறுப்பான முகங்களைக் கண்டால் தங்கத்தின் நினைவுதான் தோன்றும். இன்று எதிர்பாராமல் தங்கத்தைச் சந்தித்து விட்டேன். அவள் என்னை நினைவில் வைத்திருக்கிறாளோ இல்லையோ?
சே! ஞாபகமில்லாவிட்டால் இப்பொழுது நம்மை உள்ளே வந்து உட்காரச் சொல்வாளா?
எனக்குப் பழைய கதையைத் தொடர்ந்தாற்போல் தெரிந்து கொள்ள ஆசைதான். திடீரென ஏற்பட்ட இந்தச் சந்திப்பு சொர்க்கத்தில் கூட நிகழாததுதான்.
தங்கம் பேசுகிறாள்
கண்காணாத காட்டிலே உங்களை மீண்டும் சந்தித்தது தெய்வ சங்கல்பமே. வாழ்க்கையின் ஜீவநாடியான நாள்கள் ஓடிவிட்டன. உங்களைக் கண்டவுடன் பழைய எண்ணங்கள் பீறிட்டு வருகின்றன.
உங்களைச் சந்தித்தது என் வாழ்க்கையில் ஒரு ஜீவ ஒளியைக் கொடுத்தது. நம்மை அந்தக் காலத்தில் ஒரு சக்தி பிணைத்தது; பிரிக்கவும் செய்தது.
இப்பொழுது நானோ என்ஜினீயரின் வாழ்க்கைத் துணைவி. நீங்களோ சிறு உத்தியோகஸ்தர். நான் பெரிய உத்தியோகஸ்தரின் மனைவியென்ற மமதை எனக்கு இல்லை. பழைய பாசம் எப்படிப் போகும்?
உங்கள் கதையைக் கேட்டால்தான் என் நெஞ்சம் ஆறுதலடையும். ஆறாண்டுகளாக அடிக்கடி உங்களைப் பற்றி எண்ணிய என் வறண்டு போன வாழ்வில் இந்த நேரத்தில் உங்களைச் சந்தித்தது சொர்க்க இன்பம்தான்.
நாம் இப்பொழுது குழந்தைகளல்லர். இன்பத்தின் சுழலில் கட்டுப் பட்டு இருந்த வாலிபக் காலமன்று. வாழ்க்கையின் மறுபாதியை நாம் மெதுவாக அணுகிக் கொண்டிருக்கிறோம்.
எவ்வளவோ இன்பங்கள்தான் எனக்கு அளிக்கப்படுகின்றன. பணக் குறைவா? ஆள் குறைவா? கணவரது அன்புக்குக் குறைவா? ஆனால், பாலிய பாசத்தின் மீது வீழ்ந்த ஓர் அடி இருக்கிறதே… அது என் இதயத்தை விட்டு அகலவேயில்லை.
எப்படியோ சமாளித்து மறந்து போகத்தான் பார்த்தேன். வேதனை மறந்தாலும் வேகம் மாறவில்லை.
உங்களுடன் பேசும் இந்த இரண்டு மணி நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கிறேன்.
ரகுராமன் பேசுகிறார்
தங்கம்! நீ கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. நீ என்று உரிமையுடன் சொல்கிறேன். என்ன நினைக்கிறீர்களோ, அதையே தான் நானும் நினைக்கிறேன். என் கதை ஒன்றுமே சுவை இல்லை. உன்னை அடைய முடியாது போன பிறகு கோவைக் கல்லூரியில் சேர்ந்தேன். அரசாங்க அலுவலை அள்ளித் தலைமேல் போட்டுக் கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றுகிறேனே… அதுதான் கதை.
எனக்குப் பேச வார்த்தையே வர மாட்டேன் என்கிறது. பிரிந்தவர் கூடினால் என்ன பேசுவது?
தங்கம் பேசுகிறாள்
அது சரிதான். ‘வளவள’ என்று பேசுவதில் என்ன இருக்கிறது? வார்த்தைகளே மனிதனை வதைக்கின்றன.
உங்களைக் காண முடியாதபடி சமூகம் தடுத்தது. ஆனால், இன்று நீங்கள் வந்ததை இயற்கையால் கூடத் தடுக்க முடியவில்லை.
பின்னுரை
மழை இன்னும் பெய்து கொண்டிருக்கிறது. அதோ அவ்விருவரும் மளனமாக ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மின்சாரமும் நின்று விட்டது.
கோதாவரியில் வெள்ளம் சுழன்று ஓடுகிறது. நிமிடத்திற்கு நிமிடம் அளவு உயர்கிறது. வீட்டை வெள்ளம் சூழ்கிறது. உள்ளே தண்ணீர் புகுந்து விட்டது. மௌனமொழி பேசிக் கொண்டிருக்கும் அவர்கள் இருக்குமிடத்தை வெள்ளம் சூழ்கிறது. அச்சத்துடன் நடுங்கி ஒருவரையொருவர் நெருங்குகின்றனர். மௌனம் கலைகிறது. மின்னல் ஒளியில் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். அவர்கள் இதயம் அதை உ உணர்கிறது.
அவர்கள் மனத்தில் களங்கம் கிடையாது. புத்துயிர் பெற்று பழைய நட்பை எண்ணி ஆனந்தப்படும் அவர்களுடைய அனுபவம் சொர்க்கத்தில் கிடைக்குமா?
– 1947, சுதேசமித்திரன்.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.