புதுயுகப் பிரவேசம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2025
பார்வையிட்டோர்: 162 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சயிக்கிள் ஸ்டாண்டில் விடுகின்ற சத்தமும், தொடர்ந்து செருமுகின்ற சத்தமும் கேட்டு சந்திரகாந்தா நிமிர்ந்து பார்த்தாள். எதிர்பார்த்த மாதிரி வித்தியாதரன் வந்து கொண்டிருந்தான். ‘வாங்க’ என்றபடி தையல் மெசினிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்து விட்டவள் ‘அண்ணை இல்லை’ என்று சிரித்தாள். ‘நெல்லியடிக்குப் போனவர் வர நேரம்தான்’ 

‘அம்மா…’ என்றிழுத்தான் வித்தியாதரன். 

‘சங்கக்கடைக்குப் போட்டார்’ கதவைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் சந்திரகாந்தா. வித்தியாதரனுக்குச் சங்கடமாக இருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணோடு நிற்பதில் சிறு தயக்கம். அப்ப நான் பேந்து வாறன்…’ என்று திரும்ப நினைத்த வித்தியாதரனைக் கொக்கி போட்டு இழுத்தாள் சந்திர காந்தா. ‘வந்து உள்ளே இருங்கோ…. நான் தேத்தண்ணி போடுறான். இப்ப அண்ணை வந்திடுவர்…… லேஸ் வாங்கி வரத்தான் அனுப்பினனான்….’ 

வித்தியாதரன் தயக்கத்துடன் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான், அவள் தேநீர் கொண்டு வந்து வைத்து விட்டு மறுபடியும் தையல் மெசினில் வந்தமர்ந்து கொண்டாள். 

அவன் தேநீரைப் பருகியபடி நிமிர்ந்து நோக்கினான். அவள் குறையில் விட்டுவந்த பிளவுசை மீண்டும் தைக்க ஆரம்பித்தாள், அவளும் நிமிர்ந்து பார்த்தாள்! எப்படித் தொடர்ந்து பேசுவது? என்ன பேசுவது என்ற தயக்கம் இருவர் முகத்திலும் தெரிந்தது. 

‘நீங்கள் தையல் பழகினனீங்களா?’ அவன் தான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான். 

‘இல்லை’ என்று மெதுவாகத் தலையசைப்பு கூடவே பெருமிதமும் நாணமும் கலந்து ஒரு புன் சிரிப்பு. 

அவள் தலையில் கனகாம்பரச்சரம் இருந்தது. ‘ஷாம்பு’ வைத்து முழுகிய பளபளப்பு கருங் கூந்தலில் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ‘வொயில்’ சாறி அவளது நிறத்துக்குப் பொருத்தமாக இருந்தது. 

‘சேட் எல்லாம் தைப்பீங்களா?’ மீண்டும் அவன் தான் பேச்சைத் தொடர்ந்தான். 

வலது கைப் பக்கமுள்ள வீலில் உள்ளங்கை பதித்து வேகமாக ஓடிக் கொண்டிருந்த மெஷினை மெதுவாக்கி ‘வடிவாகத தைக்கமாட்டன், சின்னப் பொடியளுக் கெண்டால் தைக்கேலும்…..’ 

மீண்டும் மெஷின் வேகமாக ஓடியது. 

‘எனக்கு ஒரு சேட்டுத் தைச்சுத் தருவியளே?’

‘கிளுக்’ என்ற சிரிப்புடன் ஒரு தலை கவிழ்ப்பு. 

மெஷின் மேலும் சிறிது நேரம் ஓடி நின்றது.ஊசியை உயர்த்தி சட்டையை டுத்து தொடர் நூலை வாயால் அறுத்து விட்டு, ‘நான் தைச்ச சேட்டைப் போட்டால் பிறகு உங்களை ஒருத்தரும் பாக்காயினம் அவள் அழகாகச் சிரித்தாள். 

‘இப்ப மட்டும் என்னவாம்? ஆரும் பாக்கினமே? உதட்டைப் பிதுக்கியபடி சொன்னான் வித்தியாதரன். அவள் அவனை ஆழமாகப் பார்த்தாள். அவனும் பார்த் தான். பார்வைகள் ஆயிரம் அர்த்தங்கள் கூறி நின்றன. 

வித்தியாதரன் இந்த வீட்டுக்குப் புதியவனல்ல. மாஸ்டர் – சந்திரகாந்தாவின் அப்பா – உயிருடன் இருந்த காலத்திலேயே அடிக்கடி வந்து போயிருக்கிறான். அவனது அம்மா அரிசியிடிக்க தொட்டாட்டு வேலைகள் செய்ய வருகின்ற காலங்களில் – அப்போது அவன் சின்னக் குழந்தை அவனையும் கொண்டுதான் மாஸ்டர் வீட்டுக்கு வருவாள் 
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் வித்தியாதரனின் உறவினர்கள் மாஸ்டரின் சமூகத்தவர்களின் வீட்டில் தொட்டாட்டு வேலைகள் செய்தார்கள். கலியாணவீடு, செத்த வீடு, திவசம். அந்தியேட்டி இப்படி யா விசேட நாட்களில் சமையல் வேலை இவர்களது பொறுப்புத்தான். ஆனால்கால ஓட்டத்தில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இனி அடிமைத் தொழில் செய்வதில்லை என்று வித்தியாதரனின் சமூகத்தவர்கள் முடிவுகட்டிய பின்னரும் கூட அவனது தாயார் வறுமை காரணமாக தொடர்ந்து குத்தல்,இடியல் வேலைகளை,  கூலி வாங்கிச் செய்து வந்தாள்.வித்தியாதரன் தலையெடுத்து வந்த பின்னர் தான் முற்று முழுதாக குடிமைத் தொழிலைச் செய்யாமல் விட்டாள். 

வித்தியாதரன், மாஸ்டரின் மாணவனாக அவரது மகன் பிரபாகரனுடன் ஒரே வகுப்பில் தொடர்ந்து விக்கினேஸ்வராக் கல்லூரியிலும், பின்னர் பல்கலைக் கழகத்திலும் படித்தவனாதலால் இருவருக்கும் பால்ய பிராயம் தொட்டு சிநேகம் இருந்து வந்தது. அந்த இரு குடும்பத்தவர்களுக்குமிடையில் சாதி ஒரு வேலியாக இருக்கவில்லை. 

மாஸ்டரின் திடீர் மறைவுக்குப் பின்னர் அவரது டும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிவிட்டா லும், பிரபாகரன் பட்டம் பெற்று வெளியேறி ஆசிரிய நியமனம் பெற்ற பின்னர் தலையெடுக்க ஆரம்பித்தது. 

ஐந்து பெண்களைக் கரை சேர்த்தால் அரசனும் ஆண்டி யாவான் என்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரை ஒரு பெண்ணுக்குச் சம்பந்தம் செய்து வைத்தாலே பெற்றோர்கள் துறவறம் பூண வேண்டியது தான்! இந்த லட்சணத்தில் பிரபாகரன் எம்மாத்திரம்?- இரண்டு அக்காமாருக்குத் திருமணம் செய்து வைத்ததி லேயே கடனாளியாகி விட்டான். இப்போது தங்கை சந்திரகாந்தா இருபத்தியெட்டு வயதில் பயமுறுத்திக் கொண்டு நின்றாள். அதற்குப் பின்னர் சிவராசினி- கடைக்குட்டி’. 

மாஸ்டர் குடும்பத்தில் எல்லோரும் நல்ல பிரயாசை. அந்த நாளிலே, மாஸ்டர் வெண்காயம், மிளகாய், ரியூசன் என்று ஒரு நேரம் சும்மா இருக்க மாட்டார். அவரது வாரிசு பிரபாகரனும் அப்படித்தான். பெண்கள் மட்டும் சும்மாவா? தாயார் சந்தை வியாபாரம், சந்திரகாந்தா தையல் வேலை, சிவராசினி கோழிவளர்ப்பு! 

நியமனம் பெற்றுப் பிரிந்து போன பின்னரும் கூட; பிரபாகரனும் வித்தியாதரனும் அடிக்கடி சந்தித்துக் சொள்ளத் தவறுவதில்லை. அப்படியான நேரங்களில் எல்லாம் பிரபாகரன் தங்கையின் திருமணம் பற்றிப் பிரஸ் தாபிப்பான். ‘உனக்குத் தெரிஞ்ச இடங்களில் இருந்தால் பார் வித்தி. சின்னதாயெண்டாலும் ஒரு உத்தியோக மாப்பிளையாய் பார்… மூத்ததுக்களுக்கு உத்தியோகத்திலை செய்து கொடுத்ததால் இவளுக்கும் அப்பிடி ஒரு எதிர் பார்ப்பு. 

அடிக்கடி இப்படிக் கூறினாலும். ‘வித்தி நீ என்ர தங்கச்சியைச் செய்யன்’ என்று ஒருநாள் கூடக் கேட்ட தில்லை. அப்படிக் கேட்டால் இவன் ‘ஓம்’ என்று விடுவாள். 

பிரபாகரன் அப்படிக் கேட்காதற்குக் காரணமும் இருந்தது.இன்றுவரை அந்தக் கிராமத்தில் இவர்களிருவரின் சமூகத்தவர்களும் கலந்து பழகினாலும் திருமணத் தால் ஒன்று சேர்ந்ததில்லை. பரம்பரை பரம்பரையாக வந்த பண்பாட்டுப் போலிகள் இன்னமும் இதயத்துள் நீறுகொண்ட நெருப்பாய் இருந்து சாதி பேதம் பார்க்க வைத்துக் கொண்டிருந்ததுதான் காரணம். 

தனிப்பட்ட முறையில் பிரபாகரனிடமோ, அவனது டும்ப உறுப்பினர்களிடமோ துளியும் துவேசம் கிடையாது. ஆனால் சமுதாய வரம்பை மீற முடியாமல்… 

தைத்து முடித்த சட்டையை எடுத்து மடித்து வைத்து விட்டு சந்திரகாந்தா எழுந்து வந்து ‘லைற்’றைப் போட்டாள். ‘இப்ப போட்டால்தான் ரியூப் பல்ப் பத்தும். ஆறு மணிக்குப் பிறகு கறன் ற் குறைஞ்சு போறதால் பத்த வைக்கேலாது.’ 

‘என்ன பிரபாவை இன்னும் காணேல்லை…’ வித்தியாதரன் சொல்லிக் கொண்டிருக்கும் போது கேற் கிறீச்சிட்டது. 

பிரபாகரன் தான்! 

நண்பர்கள் நீண்ட நேரம் உரையாடினார்கள். வித்தியாதரன் வீட்டிற்குத் திரும்ப எட்டு மணியாகி விட்டது. 

அன்று முழுவதும் அவன் சந்திரகாந்தாவின் நினைவாக இருந்தான். தனது சாதியைப் பற்றி இன்றுதான் எண்ணிக் கவலைப்பட்டான். மனதில் எழுகின்ற நியாய பூர்வமான உணர்ச்சிகளுக்குக் கூட சாதி தடை போடுகிறதோ? 

தினம் தினம் மனதில் புழுக்கம்! சந்திரகாந்தாவும் கிட்டத்தட்ட அந்த நிலைதான். சந்திப்புகள் தொடர்கை உணர்வுகளை மறைக்க முடியாமல் போக. அது காதலாய் அரங்கேறியது. 

பிரபாகரன் இதைக் கேள்விப்பட்டதும் சிறிது ஆடித்தான் போனான். தங்கையின் உறுதியும், அவள் பக்கத்தில் இருந்த நியாயமும் அவனைச் சிந்திக்க வைத்தது. 

முடிவு…… 

திருமண நாளும் குறித்தாகிவிட்டது. 

செய்தி ஊரெல்லாம் பரவ… 

அவனது சமூகத்தவர்கள் வெகுண்டெழுந்தார்கள். 

‘செல்லாச்சி…ஊரைப் பகைக்கிறதெண்டு வெளிக்கிட் டுட்டியோ முற்றத்தில் கேட்ட அட்டகாசமான குரலில் பிரபாகரன் எட்டிப் பார்த்தான்.’தம்பியும் நிக்கிறீரோ. ம்… உமக்குப் புத்தி கெட்டுப் போச்சே?…’ கந்தையர் ஆவேசமாகக் கேட்க, வரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கிசுகிசுத்தனர். 

‘எங்கட குலமென்ன, கோத்திரமென்ன. சாதியிலை இல்லாத மாதிரி புதிசா வெளிக்கிட்டிருக்கிறியள் கந்தையரின் அட்டகாசச் சிரிப்பு அவர் வெறியில் நிற்கீ றார் என்பதைப் பறைசாற்றியது. 

அம்மா பதறிக் கொண்டிருந்தா. உள்ளேயிருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சந்திரகாந்தா விற்கு நெஞ்சை அடைத்தது. பிரபாகரன் முன்னால் வந்து ஏன் மாமா முத்தத்திலை நிண்டு சத்தம் போடுறியள்? உள்ள வந்து ஆறுதலாகக் கதையுங்கோவன்’ என்றான். 

‘சீ… கேடு கெட்டுப்போன உன்ர வீட்டுத் திண்ணை யிலும் இனி மிதிக்கமாட்டம். எங்களுக்கு மானம் ரோசம் இல்லை எண்டு நினைக்கிறயே… சீ… தூ…’

‘மாமா… மரியாதை வேணுமெண்டா மரியாதை கொடுத்துப் பேசுங்கோ. இனியும் நான் பொறுக்க மாட்டன்’ என்று ஆவேசமாகக் குறுக்கிட்டான் பிரபாகரன். 

‘சரி…அப்படியாப் போச்சோ? நீ படிச்சனியெல்லே கொஞ்சம் யோசிச்சுப் பாரன். நாளைக்கு எங்கட ஆக்களை அவர்கள் மதிப்பாங்களே…’ 

‘மாமா கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கோ. என்ர தங்கச்சியை வித்தியாதரனுக்குச் செய்து வைக்கப்போறன் வன் நல்ல பொடியன், ஆயிரம் ரூபாய்க்கு மேலசம்பளம் எடுக்கிறான் தங்கச்சியை விரும்புறான். அதுக்கு மேலை என்ன கண்டறியாத சாதியும் இளவும்’ 

‘ஏன் எங்கட சாதியிலை ஒரு மாப்பிளை உமக்குக் கிடைக்கயில்லையே?’ 

‘ஏன் உங்கட மகனைக் கூட கேட்டுவந்தனாள் தானே? எழுபத்தையாயிரம் சீதனம்; கேட்டனீங்களெல்லே எங்கட குடும்ப நிலை அறிஞ்சும் இப்படிக் கேட்டியள்’ 

‘உத்தியோக மாப்பிளை எண்டால் அப்படித்தான் இப்பமாக்கெற். ஏன் நீ உன்ர பொருளாதார நிலைக்கு ஏற்றமாதிரி பாத்திருக்கலாம் தானே?” 

‘ஏன், கதிராமரின்ர மகன் இல்லையே? இருபதாயிரம் தானே கேட்டவர்’ அருகே நின்ற நல்லதம்பி குறுக்கிட்டார். 

‘அந்தக் குடிகாரனுக்குச் செய்து கொடுக்கிற நேரம் அவள் வீட்டிலேயே இருக்கலாம்’ கோபாவேசத்துடன் கூறிய பிரபாகரனைக் கண்டு கந்தையர் ஒரு கணம் நடுங்கித்தான் போனார். 

பிரபாகரன் தொடர்ந்தான். ‘வித்தியாதரனும் உத்தியோக மாப்பிளைதான். சீதனம் ஒரு சதமும் கேட்க வில்லை. 

கந்தையர் முடிவாகக் கேட்டார். ‘இப்ப நீ முடிவாக என்ன சொல்லுறாய்?’ 

‘நான் அதுதான் அப்பவே சொல்லிவிட்டனே கலியாணம் நிச்சயித்தபடி நடக்கும்’ 

‘உனக்கு அவ்வளவு திமிரோ? ஊரோட ஒத்து நிற்காட்டில் இனி உன்ர வீட்டுக்குச் செத்தவீடு, கலியாண வீட்டுக்கும் ஒருத்தரும் இல்லையெண்டு நினைச்சுக் கொள்’. கந்தையர் முடிவாகச் சொன்னார். 

‘மாமா. உங்கட மூத்தவன் மனோகரன் ஒரு வெளி நாட்டு வெள்ளைக்காரியைச் செய்தது சரியெண்டால், நல்ல தம்பிக்கிளாக்கரின்ர நடுவில் குமாரசாமி சிங்களத்தியைச் செய்தது சரியெண்டால், இப்ப என்ர தங்கச்சி ஒரு ஒரு தமிழனைச் செய்யுறது மட்டும் பிழையே? உங்கட நெஞ்சிலை கை வைச்சுச் சொல்லுங்கோ’ பிரபாகரன் நிதானமாகக் கேட்டான். 

கந்தையரால் பதில் சொல்ல முடியவில்லை. ‘அதுவும் சரியான கேள்விதான்’ கூட வந்த ஒருவர் முணு முணுத்தார். 

– மல்லிகை

– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *