பிறவிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 408 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பத்தாவது மாடி.

தொட்டிலில் பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தது.

மண்ணெண்ணெய் அடுப்பில் கருவாட்டுக் கறி கொதிக்கிறது.

தைலம்மை சற்று நேரத்தில் போய்விட்டு வந்துவிடலாம் என்று நேர் கீழே ஒன்பதாவது மாடியில் உள்ள செங்கமலத்து வீட்டிற்குச் சென்றாள்.

சென்றதும், “காயா பழமா?” என்று செங்கமலத்திடம் செங்கமல முகத்தோடு கேட்டாள்.

“பழந்தான்” என்றாள் செங்கமலம்.

தைலம்மையின் முகம் செந்தூரமாக மாறியது.

“ஆனா ஒண்ணு, அந்தப் பார்வதி பத்து வெள்ளி தான் கொடுத்தாள். அதுவும் இந்த மாதக் கடைசியிலே வட்டியும் முதலும் சேத்துக் கொடுத்துடணும்னு கண்டிச்சுச் சொல்லிக் கொடுத்தாள்” என்றாள் செங்கமலம்.

“இல்லேனு சொல்லிடாமே அதாகிலும் கொடுத்தாளே. அது சரி இன்னிக்கு நீ எந்தப் புடவையக் கட்டிக்கிட்டு வரப்போறே” என்று தைலம்மை கேட்டாள்.

“நூற்று ஐம்பது வெள்ளிக்குத் தவணையாக எடுத்தம்ல “மறுபிறவி” புடவை. அதைத்தான் நான் கட்டிக்கிட்டு வரப்போறேன். அதான் எனக்கு நல்லா இருக்கு” என்றாள் செங்கமலம்.

“நானும் அதான் கட்டிக்கிட்டு வரப்போறேன். பாக்கிறவங்க நம்மை அக்கா தங்கச்சினு நெனைச்சுக் கிறட்டும்” என்றாள் தைலம்மை.

இருவரும் உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்தவர்களைப்போல் உறவு கொண்டிருந்தனர். குலம் குலத்தோடு; வெள்ளாடு தன்னோடு என்பதைப்போல் அவர்களைப் பாசம் இணைத்து வைத்திருந்தது. நடையுடை பாவனை, உருவம், உள்ளம் எல்லாவற்றிலும் இருவரும் ஒருவராகத் திகழ்ந்தனர். பிறவிக் குணம் என்பார்களே அது அவர்கள் இருவருக்கும் ஒத்திருந்தது.

“மறுபிறவி” படத்தைப் பற்றி பார்த்துவிட்டு வந்தவர்கள் சொல்லியதை அடுக்கிக் கொண்டிருந்தாள் தைலம்மை. அவளுக்குப் பாலியலைப் பற்றிப் பேசுவதென்றால் பால்.

“அப்படி அதுல என்னதான் இருக்குனு இன்னிக்குத் தான் பாத்துடப் போறோம்ல. சொக்கலிங்கம் எப்படியும் டிக்கட் எடுத்துக்கிட்டு வந்துடுவாரு அப்புறம் என்ன” என்றாள் செங்கமலம். அவள் கன்னத்தில் செங்கமலம் பூத்திருந்தது.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது சாரளத்து வழி வெளியே எட்டிப்பார்த்தாள் தைலம்மை.

“இதென்ன கூட்டம்…”

செங்கமலம் சாரள அருகில் ஓடிவந்தாள். இருவரும் பார்த்தனர். அருகில் சென்று பார்க்கவேண்டும் எனும் ஆவல் அவர்களை உந்தித் தள்ளியது. இருவரும் விடுவிடு என்று இறங்கி கீழே வந்தனர். எப்போதும் மின் தூக்கிக்காகக் காத்து நிற்பவர்கள் கூட்டம் அன்று குறைந்திருந்தது.


இமயம் என உள்ளம் பூரித்துவிட்டனர். அவர்கள் மட்டும் மகிழ்ச்சியில் திளைக்கவில்லை. தோ பாயோ புது நகர்த் தமிழர்கள் அனைவருமே இன்பத்தில் மூழ்கிவிட்டிருந்தனர். அனைவர் நெஞ்சமும் ஒன்றையே நினைத்திருந்தது. ஒற்றுமை என்றால் என்ன என்று கேட்கும் தமிழர்கள் மனம் ஒன்றுபட்டிருந்தது. பேச்சும் மூச்சும் எல்லாம் அதைப்பற்றித்தான்.

வண்ண வண்ண உடைகளுடன் இளஞ்சிட்டுகள் பறந்து வந்தன. காளையர் கூட்டம் கட்டவிழ்த்துவிடப் பட்டிருந்ததைப் போல இருந்தது. “வெள்ளம் போல் தமிழர்கூட்டம்” என்று பாடிய பாரதிதாசனார் இதைப் பார்த்திருந்தால் “கடல்போல் தமிழர் கூட்டம்” என்று கூடப் பாடியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது.

நெட்டையர்கள் எட்டி எட்டிப்பார்த்தனர். கட்டையர்கள் கற்களில் ஏறி நின்று கண்குளிரப் பார்த்தனர். பிள்ளைகள் பிள்ளைப்பூச்சிகளை நினைவூட்டினர். அருகில் இருந்த பத்து மாடிக் கட்டிடங்கள் அனைத்தும் மனிதத் தலைகள். கட்டிடங்கள் ஒரு பக்கம் சரிந்து விழுந்துவிடும் போல் இருந்தன.

கூட்ட நடுவில் போலிசாரால் வளைத்துப் பாதுகாக்கப்பட்ட புல் திடல். அத்திடலில் காதல் ஜோடிகள் ஓடி ஆடித்திரிந்தனர்.

“டேய் பாத்தியாடா வயசு அம்பது ஆனாலும் ஆளு வயசுக்குட்டியோட எப்படி ஓடி ஆடறானு. தாத்தா ஆக வேண்டிய ஆளு தங்கச் சிலையப்போல இருக்கிறவளைத் தழுவிக்கிட்டுத் திரியுறாண்டா” என்றான் ஒருவன்.

“வயசு ஆனவன் மாதிரி ஏந்தெரியலே தெரியுமாடா? தங்க பஸ்பம் சாப்பிடுறாண்டா. இல்லேனா உடம்பு இவ்வளவு நல்லா இருக்காதுடா. அப்படி தங்க பஸ்பம் சாப்பிடலேனா அந்தத் தாரகையுடன் கொஞ்சிக் குலாவி நடிக்க முடியுமாடா? இல்லே நாலுபேருதான் பார்த்து ரசிக்க முடியுமா? அரிதாரம் பூசினாலும் அது இவ்வளவு தூரம் எடுப்பா இருக்காதுடா” என்று இன்னொருவன் தான் கண்டுபிடித்த உண்மையை வெளியிட்டான்.

“அப்பாடா என் வாழ் நாளிலேயே முதல் முதலில் இந்த நடிகரைத்தான் கண் குளிர நேரில் பாத்திருக்கேன்” என்று மற்றொருவன் புளகாங்கிதம் அடைந்தான்.

“நான் அந்த நடிக மணியைத் தொட்டுப் பாத்துட்டேன். கைகுலுக்கிப் பேசிட்டும் வந்துட்டேன்” என்று பெருமையால் உள்ளம் பூரித்தான் இன்னொருவன்.

“நானுந்தான்” என்கிறாள் அருகில் நின்ற ஒருத்தி, ஆண் பெண் சமத்துவம் அவள் சொல்லியதில் இழைந் தோடியது.

கூட்டத்தினர், தத்தம் மனநிலையை வெளிக் காட்டிக் கொண்டும், பார்த்துக்கொண்டும் நின்றனர். அவர்கள் பேசிக்கொள்வது தைலம்மை காதுகளிலும், செங்கமலம் காதுகளிலும் தேனாகப் பாய்கிறது.

நடிகருக்குச்சிட்டு ஒன்றும், மாடப்புறாபோல் இருந்த நடிகைக்குக் காளையொருவனும் குடைப்பிடித்துக் கொண்டு நின்றனர். மழைக்காகக் குடைப் பிடிக்க வில்லை; குடையின் கறுப்பு நிறத்துக்குக் காக்காய்கள் நெருங்காது என்றும் குடைப்பிடிக்கவில்லை. நடிகர்கள் மேல் வெயில் படாமல் இருக்கத்தான் சம்பளம் வாங்காமலே குடைப் பிடித்துக்கொண்டு நின்றனர். விசிறிகள் சிலர் நடிகர்கட்கு விசிறிவிட்டு அவர்கட்கு உடலைக்குளிர வைத்துத் தங்கள் உள்ளங்களையும் குளிரவைத்துக் கொண்டிருந்தனர் இக்காட்சி கண்களுக்கு விருந்தாக இருந்தது. படத்தில் இடம் பெறாத இயற்கைக் காட்சி யல்லவா அதுதானோ என்னவோ பார்க்க நன்றாக இருந்தது.

அங்கும் இங்குமாக பறந்து திரியும் கரிச்சான் குருவிகளுக்கு எப்படித்தான் தெரிந்ததோ தெரியவில்லை. பறந்து வந்து ‘கிளிக், கிளிக் ‘ என்று தத்தம் காமிராப் பொத்தான்களை அமுக்கிப் படம் பிடித்தனர். நடிகர்கட்குப் பக்கத்தில் விசிறிக்கொண்டிருப்பவர்களுக்கு, குடைப்பிடித்துக்கொண்டு நிற்பவர்களும் நடிகர்களுடன் சேர்ந்து நிற்பதைப்போல நிற்க நாசுக்காக நகர்ந்து நின்றனர். இந்தப் படத்திலாகிலும் உருவம் தெரிய வேண்டுமே என்றுதான். படம் பிடிப்பவர்கள் காமிராவுக்கும் நடிகைமேல் ஒரு பற்று போலும். அது தன் அகலக்கண்களால் நடிகையையும், நடிகைகளைப்போல் வந்திருந்தவர்களையும் சேர்த்தே தன் சிறைக்குள் அடைத்துக் கொண்டது.

“டேய் சிங்கப்பூர் லதாவும், சிங்கப்பூர் மஞ்சுளாவும் வந்திருக்காங்கடா” என்று பாவையர் பக்கம் பார்வையை ஓடவிட்ட சொக்கலிங்கம் சொன்னான். அவன் சொல்லியது வேறுயாரையும் இல்லை. தைலம்மையையும், செங்கமலத்தையும் பார்த்துவிட்டுத்தான் சொன்னான்.

சொன்னவன் வேறுயாருமில்லை. தைலம்மையின் கணவனுக்குப் பழக்கப்பட்டவன்; அதாவது அவனுக்குத் தம்பி மாதிரியாம்…

“அப்படினா டிக்கட்டைக் கொடுத்துடுடா” என்றான் பக்கத்தில் நின்ற சொக்கலிங்கத்தின் நண்பன்.

“அதுவும் சரிதாண்டா” என்று சொல்லியபடி சட்டைப் பைக்குள் கையைவிட்டு டிக்கட்டை எடுத்தான். நான்கு டிக்கட்களில் இரண்டை வைத்துக்கொண்டு, “இந்தாங்க உங்க ரெண்டுபேரோட டிக்கட். நீங்களே வச்சுக்கங்க. ஐந்தரை மணிக் காட்சிக்கு டிக்கட் கெடைக்கலே எட்டரை மணிக்குத்தான் கிடைச்சது” என்று சொல்லியபடி டிக்கட்டை தைலம்மையிடம் நீட்டினான்.

அவள் புன்னகை பூக்க வாங்கிக்கொண்டே, “நீங்க நடிக மணிக்கிட்டே பேசினீங்களா?” என்று கேட்டாள்.

”யார் நானா? நான் பேசாம இருப்பேனா? அவரைத் தொட்டுக்கூடப் பார்த்துட்டேன். என்னப்பத்தி என்ன நெனைச்சே” என்று நெஞ்சை உயர்த்திப் பெருமையாகச் சொன்னான்.

தைலம்மைக்கும் செங்கமலத்திற்கும் உள்ளம் குளிர்ந்தது.

ஆனால் நேற்று நடந்ததாகக் கேள்விப்பட்ட அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போது முகம் எப்படியோ போய் விட்டது.

“ஏங்க நடிகமணி பொம்பளைங்கக்கிட்டே முகங் கொடுத்து பேசமாட்டேங்கிறானாம்ல. எல்லாரும் அவனை ரொம்ப இறுமாப்புக்காரன் என்கிறாங்களே” தைலம்மை முகஞ்சோர்ந்தபடி கேட்டாள்.

“அதுவா, பொம்பளைங்க முண்டியடிச்சிக்கிட்டு அவரு மேலே போயி விழுந்திருக்காங்க. சிலபேர் அவர் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த புத்தகத்தில் அவருக்கு முன்னாலேயே முத்தம் கொடுத்திருக்கிறாங்க; சிலரு அவர் குடிச்சிட்டு வச்சிருந்த மீத ஆரஞ்சை எடுத்துக் குடிச்சிருக்கிறாங்க. இப்படிப்பட்டவங்களை அவர் பெரிசா ஒண்ணும் நெனைக்கலே. ஆனா ஒருத்தி அவரு கையப் பிடிச்சு இழுத்து… மோதிரம் போடப் போயிருக்கா. அவருக்குக் கோபம் வந்திருக்கு. உடனே ‘இந்தாப் பாரும்மா இதெல்லாம் உன் மாதிரி வயசுப் பொண்ணுங்களுக்கு நல்லது இல்லே. பேசாம போ’னு சொல்லி இருக்கிறாரு இதனாலேதான் எல்லாரும் அவரை அப்படிச் சொல்லுறாங்க. என்கூட நல்லாத்தானே பேசினாரு” என்கிறான் அவன்.

“இருக்கும் இருக்கும்” என்று சொல்லியபடி தை லம்மை டிக்கட்டை செங்கமலத்திடம் கொடுத்தாள்.

“இந்தாப்பாருங்க. நீங்க டிக்கட் காசு போட்டது போல எங்களுக்கு பஸ் காசும் போட்டுடனும், எங்க கையில பத்து வெள்ளிதான் இருக்கு. அதுவும் வட்டிக்கு வாங்கி வச்சிருக்கிறோம். அது நாளைக்குச் செலவுக்கு வச்சுக்கிறலாம்னு நினைக்கிறோம்” என்றாள் தைலம்மை.

செங்கமல் ‘ஆமங்க’ என்று செங்கமலத்தைப்போல் சிரித்தாள்.

காளையர்கள், “சரி சரி வச்சுக்கங்க, நாங்களே பஸ் காசு கொடுத்துடுறோம்” என்று சொல்லிவிட்டு படப் பிடிப்பு முடிந்து சாலை ஓரத்தில் வந்து நின்ற நடிகர் களைப் பார்க்கின்றனர்.

கார் வந்துவிட்டது.

விலையுயர்ந்த ஏர்கண்டிசன் ஊர்தியில் (காரில்) நடி கர்கள் ஏறிக்கொண்டதும் அது புகையைக் கிளப்பிவிட்டுப் பறந்தது. குடைப்பிடித்துக் கொண்டும், விசிறிக் கொண்டும் நின்றவர்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்தனர். இருந்தாலும் கூட்டத்தினரைப் பார்த்து பெருமையோடு புன்முறுவல் பூத்தனர்.

ஊர்தி சற்று தொலைவில் உள்ள சாலைப்போக்கு வரத்து விளக்குக்கருகில் போய் நிற்கும் என்று தெரிந்த காளையர்கள் பாய்ந்தோடினர்; பாரதியார் கேட்ட பெண்ணுரிமை கிடைத்துவிட்டதாலோ என்னவோ சிட்டுகள் முழங்கால்வரை புடவையைத் தூக்கிப் பிடித்துகொண்டு பறந்தனர்.

கூட்டத்தினர் நடிகர்கள் படம் பிடித்த இடத்தை யும், அவர்கள் ஓடிஆடித் திரிந்த புல் திடலையும் பார்த்துக் கொண்டு நின்றனர். அவர்கள் மனக்கண் முன் நடந்து முடிந்த காட்சி தெரிந்திருக்கத்தான் வேண்டும். அதனால்தான் அவர்கள் அத்திடலையும், ஊர்தியில் ஏறிச் சென்ற இடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றனர்.

மனம் பறிகொடுத்துவிட்ட கூட்டம் இருந்தாற் போல் கலைந்து தைலம்மை குடியிருக்கும் பத்துமாடிக் கட்டிடத்தை நோக்கி ஓடியது. அங்கே படம் பிடிக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். வீட்டிற்குள் இருந்து புகை குபுகுபு என்று வந்தது. அதைப் பார்த்ததும் தைலம்மையும், செங்கமலமும் தலைதெறிக்க ஓடினர்.

இவர்கள் போவதற்குள் திறந்துகிடந்த வீட்டிற் குள் சென்றவர்கள் தீயை ஒரு வழியாக அணைத்து விட்டிருந்தனர்.

“நல்லவேளை வீட்டைத் திறந்துபோட்டுட்டுப் போனாளே! இல்லேனா பிள்ளை செத்திருக்கும்” என்று ஒருத்தி சொல்லியது தைலம்மை காதில் விழாமல் இல்லை. விழத் தான் செய்தது.

மாலை மணி ஆறாகிவிட்டது. தைலம்மை கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அவனுக்கு செய்தி எட்டிவிட்டது. விரைந்து வந்தான். தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையைப் பார்த்தான் கையில் கட்டுப்போடப் பட்டிருந்தது. பிள்ளைமேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்த அவன் பிள்ளையைப்போல் அழுதுவிட்டான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பிள்ளையைத் தொட்டுப் பார்த்தான். பார்த்து விட்டு மனைவியைப் பார்த்தான். அவளைக் கண்டிக்க வேண்டும் போல் அவன் மனத்தில் ஓர் ஓரத்தில் ஓடியது. ஆனால் அச்சம் அதைத் தடுத்து நிறுத்தியது. “உலகம் ஒரு நாடகமேடை, அதில் உள்ள நாம் அனைவரும் நடிகர்கள் என்றால் அந்த உலகத்தில் நடைபெறும் காட்சிகளும் நாடகக் காட்சிகள் தானே” என்று என்றோ தன் மனைவி சொல்லியதும் நினைவுக்கு வருகிறது. படம் பார்ப்பதைக் குறைத்துக்கொள் என்று சொல்லியதற்குத்தான் அவள் அப்படி சொல்லியிருந்தாள்.

“திருமணம், கணவன், மனைவி என்பதெல்லாம் உன்னைப் பொருத்த மட்டில் உன் வாழ்க்கை எனும் நாடகத்தில் நடந்த-நடக்கின்ற நாடகக் காட்சிகள்” என்று அவன் உள்மனம் சொல்லுகிறது. அழாக்குறையாகப் பிள்ளையை மீண்டும் தொட்டுப் பார்க்கிறான். தான் கூர் மழுங்கிய கத்தியாக காரணம் இந்தப்பிள்ளை தானே என்று அவன் மனத்தில் மற்றோர் ஓரத்தில் ஓடியது.

“கேஸ் அடுப்பு வாங்குங்கனு சொன்னா மேட்கமாட்டேங்கிறீங்க. மண்ணெண்ணெய் அடுப்பு நான் சொன்ன மாதிரி வெடிச்சுப்போச்சே இப்ப என்ன சொல்லுறீங்க உங்களைக் கட்டிக்கிட்டதுக்கு ஒரு மரத்தைக் கட்டிக்கிட்டாலும் மனத்துக்கு நிம்மதியா இருந்திருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தைலம்மை சமையல் அறைக்குள் சென்றாள்.

செங்கமலம் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த மீன் கறியை அவளிடமே இரவல் வாங்கிய பழைய மண்ணெண்ணெய் அடுப்பில் சுடவைத்தாள்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு. மறுபிறவி புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு தன் கணவனி டம் வந்தாள். அவன் மடியில் பிள்ளை அணத்திக் கொண்டு கிடந்தது. பிள்ளையைப் பார்த்தபடியும், தன் கணவனைப் பார்த்தபடியும், “பிளளையைப் பார்த்துக்கங்க” என்றாள். பிறகு விடுவிடு என்று படிக்கட்டுகளில் இறங்கி ஒன்பதாவது மாடிக்கு ஓடினாள்.

தைலம்மையைக் கண்டதும் வாசலில் நின்றிருந்த செங்கமலம் மானைப்போல் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடிவந்தாள். மானின் சாயல் இருந்தது. ஆனால், மானிடம் உள்ள ‘அது’ இல்லை.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *