பிராயச்சித்தம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2025
பார்வையிட்டோர்: 492 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குங்குமம் ஆசிரியருக்கு: 

குங்குமம் செப்.1-7 தேதி இதழில் என்னைப்பற்றி ந.சிதம்பர ஸுப்ரஹ்மண்யனின் கட்டுரையைப் படித்ததும் ஆச்சர்யமடைந்தேன். சற்றுப் பொறி கலங்கின மாதிரியே ஆகிவிட்டது. ஏனெனில் முதன் முறையாக நானே இப்பத் தான் படிக்கிறேன். எப்போது, எந்தப் பத்திரிகையில் வெளி யானது? எங்களுக்குள் நெருக்கமான பழக்கமிருந்தும் அவர் என்னிடம் குறிப்பாகக்கூட உணர்த்தவில்லை? காரணம். அவருக்கே இயல்பான சங்கோஜமா? அல்ல, தம்பட்டமற்ற அவருடைய பெருந்தன்மையா? 

இந்தக் கட்டுரை தெளிவுபடுத்தியிருக்கும் அளவுக்கு. அவர் என் எழுத்தின்மேல் வைத்திருந்த அபிப்பிராயத்தை என்னிடம் நேரிடையாகச் சொன்னதில்லை. அவருடைய மனோவிலாஸத்துக்கு, விசாலத்துக்கு இதைவிடச் சான்று வேண்டாம். அந்தக் காலத்தில் எழுத்தாளர்களும் அவர்கள் ஆக்கத்தின் அளவும் குறைவுதான். ஆனால் அவர்கள் கடைப்பிடித்த மரபே தனி. 

கட்டுரையைப் படித்ததும் எனக்குக் கிளறிவிட்ட மாதிரியாகிவிட்டது. 

கடைசியாக அவர், தியாகராய நகர், மோதிலால் தெரு வில் குடியிருந்தபோது, அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகத் தெரிந்து, காணப் போயிருந்தேன். அங்குதான் தெரிந்தது நோயே என்னென்று, சரியாகப் பேச வரவில்லை. நாக்குக்குப் பதிலாகக் சண் பேசிற்று. திரியாகத் திகுதிகுத்தது. நடமாட்டம் இருக்கிறது. பேச்சுத்தான் பாதிக்கப்பட்டிருக் கிறது என் மாமியிடமிருந்து தெரிந்துகொண்டேன். அப்படியும் ஏறக்குறைய ஒரு தலை சம்பாஷணையில் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, வீடு திரும்பினேன். 

போய் வந்த ஒரு மாதத்துள், ஒரு காலை, ஹிந்துவை நடுப்பக்கத்தில் பிரித்ததும் கண்ணில் பட்டது அவர் மரண மான செய்திதான் (Obituary ) அவர் வீட்டிலிருந்தும் தபால் வந்தது. 

ஆனால் நான் உபசாரத்துக்குப் போகவில்லை. காரணம்? என்னென்று சொல்வேன்? ஏதோ ஒரு கூச்சம், ஒதுக்கப்படுவோரின் கண்ணீரைச் சந்திக்க அச்சம், உண்மை யின் தரிசன பயம். கூடவே, கூடுவிட்டு ஆவிதான் போன பின்னர் அங்கே என்ன இருக்கிறது என்ற தத்துவம். ஆனால் இது என் கோழத்தனத்தை நியாயப்படுத்த நொண்டிச்சாக்கு என்று எனக்கே உடனே தெரிந்துவிட்டது. 

ஈமச்சடங்குகள் முடிந்து பத்து நாட்கள் ஆகியிருக்க லாம். நண்பர் மகரத்திடமிருந்து கடிதம் வந்தது. 

சிதம்பர ஸுப்ரஹ்மண்யனின் மனைவியார், எல்லாரும் வந்தார்கள், ஏன் ராமாமிருதம் வரவில்லை! கடிதம்கூடப் போட்டுதே!” என்று மிகவும் வருத்தப்பட்டார் கள். அங்கு நான் இருந்த நேரத்துக்குள், இரண்டு மூன்று தடவை கேட்டுவிட்டார்கள். நீங்கள் உடனே போய் அவரைப் பார்க்க வேண்டும். 

-என்கிற ரீதியில், என் தவறை எனக்கு அச்சுறுத்தும் வகையில். 

நான் சென்றபோது அந்த அம்மா ஏதோ வேலையாய்ச் சமையலறையில் இருந்தார்கள். நேரே போய், காலடியில் நெடுஞ்சாங்கடையாக விழுந்துவிட்டேன். வேறு தோன்ற வில்லை. 

“யாரு . ராமாமிருதமா, எழுந்திரு, ஏம்பா, நீ இப்படிச் செய்யலாமா? மற்றவர்களையெல்லாம் எனக்கு எழுத்தாளர் கள் என்கிற முறையில்தான் தெரியும். ஆனால் உன்னை நான் லா.ச.ரா.வாக நினைக்கவில்லை. எனக்கு ராமாமிருதத் தைத்தான் தெரியும். இன்றைய நேத்தைய பழக்கமா? கலியாணமான கையுடன் நாங்கள் நாகப்பையர் தெருச் சந்து வீட்டு மாடிக்கு குடித்தனம் வந்தபோது, நீ கீழே உன் சித்தப்பாவோடு இருந்தே.அப்போ எஸ் எஸ்.எல்.சி. படி சிண்டிருந்தையா? நீ இப்படிச் செய்யலாமா?” 

அவள் அழுது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஆனால் அப்படி அவள் கேட்கையில், வாயடைத்துப்போய், கண்ணீர் மல்க நின்றேன். 

மகரம் சமயவரமாய், என்னை ஓரளவுக்கு எனக்கு மீட்டுக்கொடுத்தார். ஆனால் இங்கே என் குற்றத்தை ஒப்புக்கொள்வதில் என் பிராயச்சித்தத்தைத் தேடுவதாக நினைத்துக்கொள்கிறேன். 

தவிர, சமயத்தின் கவிநயம் எப்படியெல்லாம் ஒளிந்து கொள்கிறது, சமயத்தின் சத்யம் எப்படியெல்லாம் வெளிப் படுத்திக்கொள்கிறது என்பதையும் தெரிந்துகொண்டே யிருக்கிறேன். 

– குங்குமம்

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *