பிரமை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 116
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நீங்கள் யார்?”
“நானா?”
“இந்த நேரத்திலே..இந்த இருட்டிலே அதுவும் இந்த மெத்தைக்கு எப்படி..?”
“என்னைத் தெரியவில்லையா? என் பெயர் மயக்கி. அப்படி ஒன்றும் கிழப்பிணம் ஆகிவிடவில்லையே! என்னை எப்படி அவ்வளவு சுத்தமாக மறந்துவிட்டாய்.”
”மயக்கியா? அந்த மாதிரி யாரும் எனக்கு அறிமுக மில்லையே பார்த்தால்.
”நன்றாகப் பார்.”
“உங்களைப் பார்த்தால் இந்த உலகத்து ஸ்திரீயாகவே தோன்றவில்லையே! கையிலிருப்பது எழுதுகோலா, வீணையா?”
“பாவம், உனக்கு உண்மையிலேயே புத்தி பேதலித்து விட்டது. மனத்தின் மடையைத் திறந்து காவியத்தில் புதுமை காட்டிய கவி எங்கே? என்னை யார் என்று கேட்கும் இந்த வறட்டு ஆள் எங்கே? இந்த இரண்டு ஆளும் உனக்குள்ளே இருந்திருக்கிறார்களே – அதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது!”
“என் கவிதையைப் பற்றிப் பேச வந்திருக்கிறீரா? பாவம்! எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்களோ! இளமை யில் சிந்தனை இல்லை. ஆகையால், மேகங்களில் உருவங் களைப் பார்க்கிறோமே, அதைப்போல் எங்கும் கலையைப் பார்க்கிறோம். அது ஒரு போதை என்பது நமக்குத் தெரிவ தில்லை. அந்தப் போதை தெளிய வேண்டும். அதற்குக் கெரஞ்ச காலம் ஆகிவிடுகிறது.
“உனக்கு அந்தப் போதை தெளிந்துவிட்டது என்று சொல்ல வருகிறாய். அதனால்தான் நீ எழுதுவதை விட்டு விட்டாய் என்று சொல்ல வருகிறாய்!”
“நான் ஒன்றையும் விடவுமில்லை; பிடித்துக்கொள் ளவும் இல்லை. விடவும் பிடித்துக்கொள்ளவும் அறிந்து விட்டால் ஞானி ஆகிவிடமாட்டோமா! போதை தெளியாவிட்டால் இரண்டு ஆபத்துக்களுக்கிடையில் கலைஞன் சிதறிப் போகிறான் – ஒன்று வயிறென்னும் பெரும் பாறை; மற்றொன்று – காமமென்னும் பெரும் பள் ளம், நல்ல வேளையாக…”
“நீ உளறுகிறாயா, உண்மை பேசுகிறாயா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று; உனக்குப் பிடித்துக் கொள்ளவும் தெரியாது. விடவும் தெரியாது என்பது மட்டும் உண்மை…நீ நல்ல கருவி என்று நினைத்துத்தான் உன்னை நான் வந்து பிடித்தேன். அழகாக, அற்புதமாகக் காவியம் செய்தாய். நான் பூரித்துப் போனேன். ஏன் நீயும் பூரித்துத்தான் போனாய்.ஆனால் இப்பொழுது என் னைப் பட்டினி போட்டுவிட்டாய். எனக்குத் துரோகம் இழைத்துவிட்டாய். அதுமட்டுமோ? என்னை யார் என்று கேட்கும் எல்லைக்கும் வந்துவிட்டாய்!”
“அந்தக் கதை எல்லாம் எனக்குத் தெரியாது.உன் னைப் பட்டினி போட்டேன் என்கிறாய். இல்லாவிட்டால் நான் பட்டினி கிடக்கவேண்டியதுதான். நான் மட்டுமா? மனைவியும் மக்களும் உள்பட! உன்னைவிடக் கொடியவள் ஒருத்தியின் வசப்பட்டிருக்கிறேன். என் சக்தியையும் சுதந்திரத்தையும் அவள் சிறைப்படுத்தி விட்டாள். பிழைப்புக்கு அடிமையாகி விட்டேன். போர் அடித்த வைக்கோலைப் பார்த்திருக்கிறாயே? உனக்கென்று வாழ்வை ஒதுக்கி வைக்காதவனால் உனக்குப் பயன் உண்டாகாது; பெருமை உண்டாகாது.
“புது உபதேசங்கள் செய்கிறாயே – அதை எழுதுவது தானே!”
“எழுதுவதைவிட எழுதாமை உயர்ந்தது. ஓசையை விட ஒடுக்கம் உயர்ந்தது. மரத்தைவிட விதை உயர்ந்தது. வெளிப்படுவதை விட உட்படுவது உயர்ந்தது. கடனைக் கழிப்பதே கலை. கற்பனையின் சிறகை விரித்தால் மனம் வேண்டுமானால் பறக்குமே ஒழிய, உடல் பறக்காது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி உண்டு…”
“உன் கருத்துப் பிறருக்குப் பயன்தரக் கூடுமே.”
“ஒன்றும் பயனளிக்காது. தற்கால முறையையே ஆக்ஷேபிக்கிறேன். கண், பார்ப்பதற்காக ஏற்பட்டது; கேட்பதற்காக அன்று. கருத்துக்களைக் கண்ணுக்கு விஷய மாக்கினால் கண்காட்சிதான் வியாபாரந்தான் பெருகும். மனம் கனியாது; மண்ணை வலுவடையும்; புஸ்தக விண்ணாக்கமுடியாது. உள்ளொளி இல்லாத எழுத்தை அள்ளிக்கொட்டி உலகை ஏன் குப்பை மேடாக்க வேண்டும்.”
“நீ சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால் ஒப்புக் கொள்ள முடியவில்லையே..’
“முடியாதுதான்.கலை முடியும் இடத்தில் கடவுளின் உலகம் தோன்றும். கடமையின் ஆட்சி புலனாகும்.”
“இனி உன்னிடம் கவிதையை எதிர்பார்க்க முடியாது. அப்படித்தானே?”
“அதுவும் எனக்குத் தெரியாது. நிகழ்காலம் என்ற ஒரே காலத்தைத்தான் நான் அறிவேன். இறந்த காலமும் எதிர்காலமும் எனக்கில்லை. வெறும் பசு கூட எவ்வ ளவோ மேல். புல்லைத் தின்று மர நிழலில் ஒதுங்கிவிட்டு வருந்தாமல் பால் தருகிறது. தன்னைப்பற்றி அது பெருமை பேச வருவதில்லை. பிறர் பெருமைப்படுத்திப் பேசினாலும் துள்ளிக் குதிப்பதில்லை; அவரவர்கள் கடமையை உணர் வது முதல் படி. அதுவே கடைசிப்படியும் ஆகும்.”
“ஆகையால். கனவுலகைவிட்டு கடமையின் உலகில் ஆழ்ந்துவிட்டேன்’ என்கிறாய்?”
“அப்படியே இருக்கட்டும். ஒருவன் ஒருத்தியைத்தான் காதலிக்கலாம்; மணக்கலாம். கனவை மணப்பவன் அத் துடன் நின்றுவிடவேண்டும். கடமைகளை மறக்க வேண்டும். இல்லாவிட்டால் கனவை மறந்து கடமையில் ஆழவேண்டும். இரண்டையும் நடத்திச் செல்வேன் என்றால் முடியா இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை தெரிந்திருக்குமே! இப்பொழுது சட்டம் கூட ஆகிவிட்டது, ‘இருதார மணம் சட்டத்திற்கு விரோத மெ’ன்று. தெரியுமா தெரியாதா?”
“யாரோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் – இந்த நேரத்திலே ! என்ன அதிசயம்! யாரையும் காணோமே! தனக்குத்தானே?”
“யாரையும் காணோமா! இவ்வளவு நேரம் கல்லூரிப் பெண் போல் ஒருத்தி பேசிக்கொண்டிருந்தாளே — அவள் எங்கே?’
“உங்களுக்கு பிரமை முற்றிப் போய்விட்டது. முதல் காரியமாக நாளைக் காலை டாக்டரிடம் போய் வாருங்கள்.”
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.