பிசாசுடன் போட்டியிட்ட ஏழை விவசாயி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 497 
 
 

(செக்கோஸ்லோவாக்கிய நாட்டுப்புறக் கதை)

அவர் ஒரு மீச்சிறு விவசாயி. கிராமத்திற்கு வெளியே அவருக்கு சிறு துண்டு விளைநிலம் இருந்தது. விழுகிற நிலையில் பரிதாபகரமாக உள்ள ஒரு குடிசையில் அவரும் குடும்பத்தாரும் வசித்துக்கொண்டிருந்தனர்.

கந்தல் ஆடை உடுத்திய அவரது குழந்தைகள் எப்போதும் பசியால் வாடிக்கொண்டிருந்தனர். அவரது மனைவி எப்போதும் அந்தக் குழந்தைகளுக்குப் போதுமான அளவு உணவு கூட இல்லையே என்பது பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பாள்.

அந்த விவசாயி புத்திசாலித்தனமும் சூட்சும புத்தியும் உடையவர். தான் வறிய நிலையில் துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோதும் தனது குயுக்திகளால் மக்களை மடையர்களாக்கிச் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். பிசாசைப் பார்த்தால் கூட அதை அவர் முட்டாளாக்கிவிடுவார் என்று மக்கள் சொல்வார்கள்.

ஒரு நாள் அவருக்கு உண்மையாகவே அந்த வாய்ப்புக் கிடைத்தது. அவரது மனைவி அவரை விறகுக்கட்டு கொண்டு வருவதற்காக காட்டிற்குள் அனுப்பியிருந்தாள். திடீரென அவருக்கு முன்பு எந்த முன்னறிவிப்பும் இன்றி, கரிய நிறமும் மின்னுகிற கண்களும் கொண்ட, மனிதனும் மிருகமும் இணைந்தது போன்ற ஓர் உருவம் தோன்றியது. அது ஒரு பிசாசு என்பதை விவசாயி தெரிந்துகொண்டார். ஆனால், அதைப் பார்த்து அவர் பயப்படவில்லை. மாறாக, அதைப் பார்த்து, “இந்த நாள் நன்னாள் ஆகட்டும்!” என்று முகமன் கூறினார்.

எளிமையாக இருந்த அந்தப் பிசாசும் அவருக்கு பதில் முகமன் கூறி, வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு, “இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டது.

அப்போது விவசாயிக்கு அவருடைய பாட்டி சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. பிசாசுகள் எலுமிச்சை மரத்தைக் கண்டு பயப்படும். காரணம், எலுமிச்சை மரப் பட்டை நாரினால் பிசாசுகளின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டால் அவற்றால் அந்தக் கட்டை அவிழ்க்கவோ, அறுக்கவோ முடியாது. அதனால் பிசாசுகளைப் பிடிக்கும் மாந்தரீகர்கள் எலுமிச்சை நாரினால்தான் அதைக் கட்டுவார்கள்.

விவசாயிக்கு அது ஞாபகம் வரவே, “நான் இங்கு எலுமிச்சை மரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அதன் மரப் பட்டைகளை உரித்து நார் எடுத்து பிசாசுகளின் கை – கால்களைக் கட்டுவதற்காக” என்றார்.

அதைச் சொன்னபடியே பிசாசின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதை ஓரக் கண்களால் கவனித்தார். பிசாசின் கன்னங்கரிய சருமம்

வெளிறியது. அது பயந்துவிட்டது என்பது அதன் முகத்திலும் கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. எனவே, இந்தப் பிசாசு ஒரு மங்குணி என்பதை விவசாயி அறிந்துகொண்டார்.

“தயவுசெய்து அதைச் செய்து விடாதே!” எனப் பதறிய பிசாசு, “நாங்கள் உனக்கு என்ன தொல்லை செய்தோம்?” என்று அப்பாவியாகக் கேட்டது.

அது ஒரு பயந்தாங்கோழிப் பிசாசு என்பதை அறிந்துகொண்ட விவசாயி, “அதைக் கண்டிப்பாக செய்யத்தான் போகிறேன். பிசாசுகளின் தொல்லை பூமியில் அதிகமாகிவிட்டது. அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பூமிக்குக் கேடு. இந்தக் காட்டுக்குள்ளும் சில பிசாசுகள் அவ்வப்போது வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் அவற்றில் ஒருவன் என்பது எனக்குத் தெரியும். பிசாசுகளால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினால் அவர்கள் எனக்கு நிறையப் பணம் தருவார்கள்.”

“தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்!” பிசாசு கெஞ்சியது. “நீ எங்களை உன் கட்டுக்குள் கொண்டு வராமல் விட்டுவிடுவதாக இருந்தால், நான் உனக்கு ஒரு மூட்டை தங்கத்தைக் கொண்டு வருகிறேன். அதை வைத்து நீ பணக்காரனாக ஆகிவிடலாம்!”

சூட்சும புத்தி உடைய அந்த விவசாயி உடனடியாக அதற்கு ஒத்துக் கொள்ளாமல், பணத்தாசை இல்லாதவர் போலக் காட்டிக்கொண்டார். பிறகு மெல்ல மெல்ல அந்தப் பிசாசின் கெஞ்சுதலுக்கு ஒத்துக்கொள்ளும் முகபாவத்தைக் காட்டினார்.

“சரி, போனால் போகிறது! உன்னைப் பார்த்தாலும் பாவமாகத் தெரிகிறது. அதனால் உன்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு மணி நேரத்தில் எனக்கு ஒரு மூட்டை தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் உன் இனத்தாரை எலுமிச்சை நாரினால் கட்ட மாட்டேன். ஆனால் நீ தாமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் ஒருவேளை என் மனம் மாறிவிடலாம்!”

மடத்தனம் மிகுந்த அந்த இளம் பிசாசு, “இல்லை, இல்லை! நான் ஒரு மணி நேரத்திற்குள் நிச்சயமாக வந்து விடுவேன். நீ இங்கேயே இரு!” என்று சொல்லிவிட்டு மறைந்தது.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து மூச்சிரைப்போடு திரும்பி வந்தது. ஒரு மூட்டை தங்கத்தை விவசாயியிடம் கொடுத்துவிட்டு, “இது போதுமா?” என்று கேட்டது.

அவர் அதிகப் பணத்தைக் கூட ஒரு முறையேனும் கண்ணால் பார்த்ததும் கிடையாது. அப்படிப்பட்டவருக்கு ஒரு மூட்டை தங்கம் கிடைத்தால் சொல்லவா வேண்டும்! இருந்தாலும் அவர் தனது புளகாங்கிதத்தை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

“எதிர்பார்த்த அளவு இல்லை. மூட்டை சிறிதாக இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை; ஏற்றுக்கொள்கிறேன்!”

மங்குணிப் பிசாசு அவரது சமரசத்தைக் கேட்டு மகிழ்ந்து, நன்றி கூறிவிட்டு நரகத்திற்குத் திரும்பியது. அங்குள்ள சக பிசாசுகள் அனைத்தையும் அழைத்து, எலுமிச்சை நாரினால் பிசாசுகள் அனைத்தின் கைகளையும் கால்களையும் கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த ஒரு விவசாயியிடமிருந்து அவற்றை அது எப்படிக் காப்பாற்றியது என்பது பற்றி சாகச உணர்வோடு கூறியது.

முழுக் கதையையும் கேட்ட மற்ற பிசாசுகள் வெகு நேரம் கெக்கலி கொட்டிச் சிரித்தன.

“நரகத்தில் இருக்கும் பிசாசுகளிலேயே நீ ஒருவன்தான் மடச் சாம்பிராணி! கேவலம், ஒரு மனிதன் உன்னை முட்டாள் ஆக்கிவிட்டான்!” எனப் பரிகசித்தன.

விவசாயியிடம் ஒரு பிசாசு பை நிறையத் தங்கத்தைக் கொடுத்து ஏமாந்த தகவல் வெளியே கசிந்தால் உலகத்திலுள்ள மனிதர்கள் யாரும் பிசாசுகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள். எனவே, மேற்கொண்டு என்ன செய்யலாம் என அந்தப் பிசாசுகள் தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு முடிவு செய்தன.

“நீ அந்த விவசாயிடம் திரும்பிச் சென்று, அவனிடம் மல்யுத்தப் போட்டிக்கு அழை! உங்கள் இருவரில் யார் ஜெயிப்பார்களோ, அவர்களுக்குத்தான் அந்தத் தங்கம் என்று சொல்!” என மங்குணிப் பிசாசிடம் கூறின.

எனவே அது மீண்டும் பூமிக்கு வந்து விவசாயியை மல்யுத்தத்திற்கு அழைத்தது.

விவேகமுள்ள அந்த விவசாயி, “எனது இளம் நண்பனே! நீ என்னுடன் மல்யுத்தம் செய்கிற அளவுக்குத் தகுதி உடையவன் அல்ல. நான் மிகவும் வலுவானவன். உன்னை நண்பனாக நினைக்கிறேன். என்றாலும் மல்யுத்தம் என்று வந்துவிட்டால் நட்பு, உறவு, பாசம், இரக்கம், பரிவு, ஜீவ காருண்யம் எதற்கும் இடம் கொடுக்க மாட்டேன். உன்னை மிகவும் மோசமாகத் தாக்கிவிடுவேன். அது உன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதனால் உன் பலத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு மாற்று ஏற்பாடு சொல்கிறேன். நீ என் கொள்ளுத் தாத்தாவுடன் மல்யுத்தம் செய்! அவருக்கு 99 வயது ஆகிவிட்டது. அவருடைய பலமும் உன்னுடைய பலமும் சமமாக இருக்கும்.”

மங்குணிப் பிசாசு ஒத்துக்கொண்டது. விவசாயி அந்தப் பிசாசை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் உள்ள குகைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பழுப்பு நிறக் கரடி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.

“அதோ எனது கொள்ளுத் தாத்தா! நீ அவரை எழுப்பி அவருடன் மல்யுத்தம் செய்யலாம்!”

மங்குணிப் பிசாசு கரடியைத் தொட்டு உலுக்கியது. “எழுந்திரு கிழவா – எழுந்திரு! நாம் மல்யுத்தம் செய்யலாம்!”

கரடி தனது சிறிய கண்களைத் திறந்து பார்த்தது. பிறகு எழுந்து நின்று மங்குணிப் பிசாசைத் தனது உறுதியான பிடியால் அணைத்து இறுக்கியது. அந்தப் பிடியிலிருந்து பிசாசினால் தப்பவே இயலவில்லை. பிடி மேலும் மேலும் இறுகியது. பிசாசுக்குத் தனது எலும்புகள் நொறுங்கி விடும் போல் தோன்றியது.

“ஐயோ,… என்னுடைய விலா எலும்பு…! என்னுடைய விலா எலும்பு…!” என்று அலறியது. “என்னை விட்டுவிடு! தயவு செய்து விட்டுவிடு!” கெஞ்சி அழுது, ஒரு வழியாக கரடியின் பிடியிலிருந்து தப்பித்து நரகத்திற்கு ஓடியது.

“அந்த விவசாயி பயங்கரமானவன்! அவ்வளவு ஏன், அவனது கொள்ளுத் தாத்தாவான 99 வயதுத் தொண்டு கிழவர் கூட எவ்வளவு வலுவாக இருக்கிறார் தெரியுமா? அவர் என்னை நசுக்கியே கொன்றிருப்பார். நல்ல வேளையாக அவரது கோரப் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன்!”

நடந்த சம்பவங்களை முழுமையாகக் கேட்ட மற்ற பிசாசுகள் மீண்டும் கைகொட்டிச் சிரித்தன.

“மீண்டும் அந்த விவசாயி உன்னை முட்டாளாக்கிவிட்டான். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும்போது அது ஒரு கரடி என்றுதான் தோன்றுகிறது. நிச்சயமாக விவசாயின் தாத்தாவாக இருக்க முடியாது!”

மங்குணிப் பிசாசுக்கு இன்னொரு வாய்ப்புத் தரப்பட்டது.

“இந்த முறை நீ அவனிடம் ஓட்டப் பந்தயத்திற்கு அழை! ஆனால் மறுபடியும் அவனிடம் முட்டாளாகிவிடாதே! கவனமாக இரு!”

“எனது நொறுங்கிய எலும்புகள் சரியான பிறகு போகிறேன்!”

சில தினங்களில் அதன் எலும்புகள் குணமாயிற்று. மங்குணிப் பிசாசு மீண்டும் பூமிக்கு வந்தது.

விவசாயி இப்போது ஒரு பெரிய பண்ணையை விலைக்கு வாங்கியிருந்தார். அவருக்கு ஒரு மாளிகை கட்டுவதற்கான வேலையும் நடந்துகொண்டிருந்தது.

பிசாசு அவரிடம் சென்று, ஓட்டப் பந்தயத்திற்கு சவால் விடுத்தது.

“தாராளமாக பந்தயத்திற்கு சம்மதிக்கிறேன். ஆனால், என்னோடு போட்டியிட்டால் நிச்சயமாக உன்னால் ஜெயிக்க முடியாது. ஏனென்றால், நான் காற்றுப் போல வேகமாகச் செல்வேன். ஆதலால் உனக்கு ஒரு மாற்று ஏற்பாட்டைச் சொல்கிறேன். நீ என்னுடைய குட்டிப் பையனுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளலாம். அவனுக்கு ஒரு வயதுதான் ஆயிற்று. ஒருவேளை நீ அவனை ஜெயிக்கலாம்.”

பேய் பிசாசுகளின் உலகில் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மூடனாக இருந்த அந்த இளம் பிசாசு அதை ஒத்துக்கொண்டது. விவசாயி

அதை ஒரு புல்வெளிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள புதர்களிடையே ஒரு முயல் வளையைப் பிசாசுக்குக் காட்டினார்.

“அதோ என்னுடைய குட்டிப் பையன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனை வெளியே அழைத்து, அவனுடன் ஓட்டப்பந்தயம் செய்!”

“குட்டிப் பயலே, வெளியே வா! என்னுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்!” பிசாசு அழைத்தது.

பிசாசைக் கண்ட முயல், அது தன்னைப் பிடித்துத் தின்ன வந்திருப்பதாக அஞ்சி, உடனடியாக வெளியே பாய்ந்தது. புல்வெளியில் தாவிக் குதித்து அதி விரைவாகக் கடந்து சென்றது. அதன் பின்னே ஓடிய பிசாசினால் முயலைத் தாண்டி ஓட முடியவில்லை. அதற்கு உடல் சோர்ந்து மூச்சு வாங்கியது. முயலோ சளைக்காமல் குதித்துக் குதித்து வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியில் அவை இரண்டும் பள்ளத்தாக்கை அடைந்தன. முயல் ஒரு பாய்ச்சலால் பள்ளத்தாக்கைக் கடந்து அப்பால் சென்றுவிட்டது. பிசாசும் அதே போலத் தாவ முயற்சித்தது. ஆனால், அதனால் முடியாமல் இடையிலே விழுந்து, பாறைகளிலும் முட் புதர்களிலும் பட்டு, கீழே, கீழே, கீழே என உருண்டு, அதல பாதாளத்தில் விழுந்து, இடுப்பெலும்பையும் முறித்துக்கொண்டது. ஆங்காங்கே பலத்த அடியும், ரத்தக் காயங்களும் ஏற்பட்டிருந்தன.

முயல் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. மங்குணிப் பிசாசு ரணகளமான உடலோடு நரகத்திற்குத் திரும்பியது.

“அந்த விவசாயியை ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் வீரர்களால் கூட ஜெயிக்கவே முடியாது! உங்களுக்குத் தெரியுமா; அவனுக்கு ஒரு குட்டிப் பையன் இருக்கிறான். ஒரு வயதுதான் ஆயிற்று. ஆனால் ஓட்டத்தில் அவனை ஜெயிக்க உங்கள் ஒருவராலும் முடியாது. என்னாலும் முடியவில்லை. அந்தச் சின்னஞ்சிறு குழந்தையையே ஜெயிக்க முடியாதபோது, விவசாயியை எப்படி ஜெயிக்கமுடியும்?”

மற்ற பிசாசுகள் முழுக் கதையையும் கேட்டுவிட்டு அந்த அடிமுட்டாள் பிசாசை எள்ளி நகையாடின.

“விவசாயி மீண்டும் தந்திரோபாயமாக உன்னை ஏமாற்றிவிட்டான். அது அவனது மகன் அல்ல. முயல்!”

மங்குணிப் பிசாசின் முகத்தில் அசடு வழிந்தது.

“நீ இன்னொரு முறையும் அவனிடம் திரும்பச் சென்றாக வேண்டும். அதைச் செய்யாவிட்டால் பிசாசுகள் அனைத்தும் முட்டாள்தனமானவை என்று மக்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள். நம் மேல் அவர்களுக்கு உள்ள பயம் போய்விடும்!”

“ஆனால் அவனிடம் மீண்டும் நான் மல்யுத்தத்திற்குச் செல்ல மாட்டேன். ஓட்டப் பந்தயத்திற்கும் என்னால் முடியாது!”

“இந்த முறை சீழ்க்கை அடிக்கும் போட்டியை வைத்துக்கொள். அதில் நீ நிச்சயமாக அவனை வெல்ல முடியும். ஆனால் அதி கவனமாக இரு! மீண்டும் அவன் உன்னை ஏமாற்றிவிடுவதற்கு இடம் கொடுத்து விடாதே!”

பாதாளத்தில் விழுந்து பட்ட அடியும், எலும்புமுறிவும் குணமான பிறகு மங்குணிப் பிசாசு மீண்டும் பூமிக்கு வந்து விவசாயியைச் சந்தித்தது.

இப்போது அவரது மாளிகைக் கட்டுமானப் பணிகள் ஓரளவுக்கு வளர்ந்திருந்தன. அவரது மனைவி பட்டு ஆடைகள், நகைகள் அணிந்து நடமாடிக்கொண்டிருந்தாள். அவரது குழந்தைகளும் உயர் ரகப் புத்தாடைகள் உடுத்தி, உடல் கொழுத்திருந்தனர்.

“இது எல்லாமே என்னுடைய பணம்!” என எண்ணிக் கொண்ட பிசாசு, “நாம் இன்னொரு போட்டியை வைத்துக் கொள்வோம். சீழ்க்கை அடிக்கும் போட்டி. ஆனால் இந்த முறை நான் ஏமாற மாட்டேன். உனக்கு பதிலாக வேறு யாரும் பங்கேற்கக் கூடாது. நேரடியாக நீயும் நானும்தான் மோதிக்கொள்ள வேண்டும்!”

“நல்லது, உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும்!”

இருவரும் காட்டுக்குள் சென்றனர். பிசாசையே முதலில் சீழ்க்கை அடிக்கச் சொன்னார், விவசாயி.

காடே அதிரும்படி பிசாசு கூய் கூய் என சீழ்க்கை அடித்தது. மரங்களில் உள்ள இலைகள் அதிர, விலங்குகள் யாவும் நடுங்கின; பறவைகள் கலவரமாக எழுந்து பறந்தோடின.

பிசாசு இரண்டாவது சீழ்க்கை அடித்தது. கிளைகள் வெடிப்பு விட்டு உடைந்தன. விலங்குகளும் பயந்து கூக்குரல் எழுப்பின.

பிசாசு மூன்றாவது சீழ்க்கை அடித்தது. நிலமே நடுங்கியது. பெரிய கிளைகள் முறிந்து நிலத்தில் விழ, மிருகங்கள் பதறியடித்துப் பதினாறு திக்கிலும் ஓடின. பறக்கும் பறவைகள் கீழே விழுந்து துடிதுடித்தன.

“இதை உன்னால் ஜெயிக்க முடியுமா?”

விவசாயி அரண்டுவிட்டார். ஆனால் அதை வெளிக் காட்டாமல், “அட பிசாசுப் பயலே! இவ்வளவுதானா உன்னால் செய்ய முடியும்?” என்று ஏளனமாகக் கேட்டார்.

“நான் சீழ்க்கை அடிக்கும்போது உன்னுடைய காதுகளை நீ மூடிக்கொள்ளாவிட்டால் கண்டிப்பாக செவிடாகிவிடுவாய்! மரங்கள் முறிந்து உன் மீது விழுந்து உன்னைக் கொன்றாலும் கொன்றுவிடும்! நான் தொடங்கட்டுமா?”

“கொஞ்சம் பொறு!’ எனக் கெஞ்சியது பிசாசு, “நீ சீழ்க்கை அடிப்பதற்கு முன்பாக நான் காதைப் பொத்திக்கொள்ளலாமா? ஏனென்றால், நான் செவிடாக விரும்பவில்லை!”

விவசாயியும் இதைத்தானே எதிர்பார்த்திருந்தார்! எனவே அவர் ஒரு பெரிய கைக்குட்டையை எடுத்து, “அந்தக் காட்சிகளைக் கண்டாலே நீ பயந்துவிடுவாய். எனவே கண்களையும் கட்டிக்கொள்வது நல்லது” என்றபடி பிசாசின் காதுகளோடு கண்களையும் சேர்த்து மூடி இறுக்கிக் கட்டினார்.

“இப்போது நான் ஆரம்பிக்கிறேன். கவனமாக இரு!”

சீழ்க்கை அடித்தபடியே நிலத்தில் கிடந்த தடிமனான மரக் கம்பை எடுத்து பிசாசின் மண்டையில் ஒரு போடு போட்டார்.

“ஐயோ,… என்னுடைய தலை…! என்னுடைய தலை…!” பிசாசு தன் தலைக்கு மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தியபடியே அலறியது.

“இப்போது விழுந்த மரம் உன்னைக் காயப்படுத்தி இருக்காது என்று நம்புகிறேன். நான் அடுத்த சீழ்க்கையை அடிக்கிறேன். நீ இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.”

இந்த முறை விவசாயி சீழ்க்கை அடிக்கும்போது பிசாசின் தலையில் முன்பை விட பலமாகத் தாக்கினார்.

“போதும், போதும்!” பிசாசு சத்தமிட்டது. “இன்னொரு மரம் என் தலைமீது விழுந்துவிட்டது. சீழ்க்கை அடிப்பதை நிறுத்து!”

“இல்லை, நீ மூன்று முறை சீழ்க்கை அடித்திருக்கிறாய். எனவே நானும் மூன்றாவது முறை பூர்த்தி செய்தாக வேண்டும். அப்போதுதான் கணக்கு சரியாகும். தயாராகிக்கொள்!”

இந்த முறை சீழ்க்கை அடித்தபடியே பிசாசின் தலையில் மட்டுமன்றி தோள்பட்டையிலும் உடலிலும் பலமாகத் தாக்கினார். ஒட்டுமொத்தக் காட்டு மரங்களும் தன் மீது விழுந்ததாகப் பிசாசு எண்ணிக்கொண்டது.

“சீழ்க்கை அடிப்பதை நிறுத்து! இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன்!’

விவசாயி நிறுத்தாமல் சீழ்க்கை அடித்தபடியே பிசாசை சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்தார்.

பிறகு நிறுத்திய அவர், “நான் இன்னும் சற்று சீழ்க்கை அடிக்கட்டுமா?” என்று கேட்டார்.

“வேண்டாம், வேண்டாம்! கைக்குட்டையை அவிழ்த்துவிடு! இனிமேல் நான் இந்தப் பக்கம் திரும்பி வரவே மாட்டேன்!”

விவசாயி பிசாசின் காதுகளையும் கண்களையும் கட்டியிருக்கும் கைக்குட்டையை அவிழ்த்தார். இன்னும் திகில் தீராமல் இருந்த பிசாசு,

உண்மையாகவே சுற்றிலும் மரங்கள் விழுந்திருக்கிறதா எனப் பார்க்கக் கூட நிற்கவில்லை. பிடரியில் கால் பட ஓடி மறைந்தது.

அதன் பிறகு அந்த மங்குணிப் பிசாசு பூமிக்குத் திரும்பி வரவேயில்லை. தங்கம் முழுதும் விவசாயிக்கே உடைமையானது.

“நான் இந்த சொத்துகள் விஷயத்தில் எனது பாட்டிக்குக் கடன்பட்டிருக்கிறேன்” என்பார் அந்த விவசாயி. “அவள்தான் எனக்கு எலுமிச்சை நாரில் பிசாசுகளைக் கட்டுவது பற்றிச சொன்னவள்.”

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *