பாலைவனத்திலும் புல் முளைக்கும்





(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையிலேயே கொளுத்தும் வெயில். ‘இதென்ன வெக்கையப்பா’ என மனதுள் அலுத்துக்கொண்டேன். தினமும் வேலைக்கு வந்துவிட்டால் இந்த வெயிலையும், வெக்கையையும் சலித்துக்கொள்வது வழக்கமாகப் போய் விட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்னர், குவைத்துக்கு வந்த பொழுதே விமானத்திலிருந்து இறங்குகையில் பெரிய தீச்சுவாலையிலிருந்து அடிக்கிற வெக்கை போல அனல் காற்று முகத்திலடித்த உணர்வை மறக்கமுடியாது. அப்பவே நெஞ்சு திக்கென்று அடித்துக்கொண்டது.
இந்தச் சூட்டிலேயா?… எப்படிக் காலம் தள்ளப் போகிறேன்?
‘ஏன்தான் இலங்கையை விட்டு வந்தோமோ?’ என்ற உணர்வும் கூடவே எழுந்தது. அடுத்த கணமே பிரகாசிக்கும் கண்களுடன் கையசைத்து விடை தந்த எனது சகோதரர்கள் நினைவில் வந்தார்கள். அம்மா நினைவில் வந்தாள். மனது மெல்ல உறுதி பெற்றது. ‘எல்லாம் போகப் போகச் சரியாயிடும்.’
முன்னே பெரிய இரும்புக் குழாய்கள், அவற்றை நிலத்தினூடு பொருத்துவதற்கு இயங்கும் மனிதர்களும், இரையும் மெசின்களும்… எல்லாமே சலிப்புத் தட்டுகிற விஷயங்கள்தான்.
இடையிடையே சலித்துக்கொண்டாலும் எரிக்கிற வெயிலும், புளுதியை அள்ளி வீசும் அனல் காற்றும் இப்பொழுது பழகிப்போன சங்கதிகளாகிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். வெயில் உச்சநிலையை அடைந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிற மாலைவரை இந்தப் பாலைவனச் சூட்டில் தினமும், உடலை உருக்கி வேலை செய்வதே அதற்குச் சான்று. ‘அஹமடி’ என்னும் இடத்திலுள்ள பாரிய எண்ணெய்த் தொழிற்சாலையிலிருந்து ‘சுஐபா’ துறைமுகத்துக்கு நிலத்தூடாக இரும்புக் குழாய் பொருத்தும் வேலையில் சக தொழிலாளர் களுடன் நானும் ஈடுபட வேண்டும்.
முன்பின் அனுபவமில்லாத வேலை. எல்லா வேலை களுக்கும் அனுபவம் கேட்கிறார்கள். இவற்றிற்கு ஒன்றுமே கேட்காமல் கொண்டுவந்து மாட்டிவிடுகிறார்கள் என்று தோன்றியது.
எண்ணெய்த் தொழிற்சாலையில் ‘கிளார்க்’ வேலை என்றதும் கைநிறையச் சம்பாதிக்கிற நம்பிக்கையில் சுகமான நினைவுகளோடுதான் நானும் வந்தேன்.
இலங்கையின் வங்கியொன்றில் ‘கிளார்க்’ வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் செய்தியைக் காதில் போட்டவன் நண்பன் மூர்த்திதான்.
மிடில் ஈஸ்ற்றுக்கு லேபரர்களாகப் போனவர்களே, ஆயிரக்கணக்கில் பணம் அனுப்புவதை ஒரு வங்கி ஊழியன் என்ற வகையிலும் நன்றாக அறிவேன். ரோட்டிலே சும்மா வேலை வெட்டி இல்லாமல் திரிந்த இளைஞர்கள்கூடப் போய் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்! இரண்டு மூன்று வருடங்கள் நின்றுவிட்டு எவ்வளவு பொருட்களை அள்ளிக்கொண்டு வருகிறார்கள். டி.வி. டெக், வீடியோ, காமரா! நண்பனொருவன் போய் மூன்று மாதத்துக்குள்ளே அங்கு சொந்தக் கார்கூட வேண்டியிருக்கிறான். கடிதத்துடன் போட்டோவும் அனுப்பியிருக்கிறான்.
அட, இதெல்லாம் எதுக்கு? வீட்டு நிலைமைகளையும், கடன் தொல்லைகளையும், சமாளிக்கக்கூடியதாய் உழைச்சுக் கொண்டுவந்தாலே… போதும்தானே? ‘இஞ்சையிருந்து உழைச்சு அண்டண்டாடப் பாடுகளைக் கொண்டுபோறதே பெரிய பாடாயிருக்கு?’ என மனது சொன்னது. எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் அக்காவுக்கு மணம் முடித்துக்கொடுத்ததால் பட்ட கடன் பளுவும் இன்னொரு பக்கம் அழுத்துகிறது.
அக்கா காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவள். வீட்டில் எல்லோருக்கும் மூத்தவள். அவள் வேலை செய்த அலுவலகத்திலேயே அத்தானும் வேலை செய்தார். இருவரும் கல்யாணம் செய்துகொள்வதென்ற முடிவுக்கு வந்தபிறகு, அத்தான் பக்கத்திலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அத்தான் ஒரு சாதாரண கிளாக்காக வேலை செய்தாலும், ஓர் உத்தியோகக் காரனென்ற முறையில் யாழ்ப்பாணச் சந்தையில் நல்ல விலை போகக்கூடியவர். அவர் கொஞ்சம் முற்போக்கான கொள்கை யுடைவர் போலிருக்கு. ஒரு உத்தமனைப் போல நியாயம் பேசினார்.
“ஒருத்தியைக் காதலிச்சுப்போட்டு… பிறகு மற்றவைக்குப் பயந்து வேறையொருத்தியைக் கட்டுகிற மொட்டையன் இல்லை. நான்!… கலியாணத்துக்கு அவையள் சம்மதிக்கத்தான் வேணும்… இல்லாட்டியும் செய்யிறதெண்டுதான் முடிவெடுத் திருக்கிறன்…. நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படாதையுங்கோ.”
ஆனால் நாங்கள் அக்காவுக்காகக் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டும். சிறிய வயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள் நாங்கள். பிறகு அக்கா எங்கள் குடும்பத்துக்காகக் கஷ்டப்பட்டது. கொஞ்ச நஞ்சமல்ல. நானறிய, அக்கா உத்தியோகத்துக்குப் போகத் தொடங்கிய பிறகுதான் அன்றாடச் சாப்பாட்டு விஷயத்திலேயே வயிறு நிறைந்திருக் கிறோம். பல தொல்லைகளின் மத்தியிலும் என்னை ஓரளவு படிக்க வைத்தவள்.
அவள் இனியாவது சந்தோஷமாக இருக்கவேண்டும். அதனால் என்ன பாடுபட்டாவது இந்தக் கல்யாணத்தை முடித்து விடுவது என்று தீர்மானித்தேன்.
கல்யாணம் என்றதுமே ‘சீதனம்’ என்ற நினைவும்கூட எழுந்தது. எங்களிடம் என்ன இருக்கு கொடுப்பதற்கு? ஏற்கனவே வீடும் காணியும் ஈட்டிலே இருக்கு!
எனது வங்கி உத்தியோகத்துக்காக அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா அளவில் கொடுக்க வேண்டி யிருந்தது. அப்பொழுது ஈட்டில் வைத்த வீடு வளவு வேலை கிடைத்து இரண்டு வருடமாகியும் மீளமுடியவில்லை. வட்டியும் குட்டி போடுகிறது. உழைப்பு, அன்றாடச் செலவுகளுக்கும், தம்பியவர்களின் படிப்புச் செலவுகளுக்கும்தான் போதுமான தாயிருக்கிறது. ஒருவன் யூனிவசிற்டியில் படிக்கிறான். இருவர் ஏ.எல். முதலாம், இரண்டாம் வருடங்களில் படித்தனர். மற்றவர் களும் எட்டு, ஆறு, ஐந்தாம் வகுப்புகளில், அவர்களது சகல செலவுகளையும் கவனிக்கவேண்டும். இதையெல்லாம் எனது இரண்டாயிரமளவிலான சம்பளத்தை வைத்துக்கொண்டு சமாளிப் பதே பெரிய கஷ்டமான காரியம். இந்த விசித்திரத்தில் எதைப் பிடித்து ‘சீதனம்’ கொடுப்பது?
ஆனால் அத்தானுக்கு ஏற்கனவே எங்கள் வீட்டு நிலைமைகள் தெரிந்திருந்தது நல்லதாகப் போய்விட்டது. இப்படி ஒரு நல்ல மனுஷரை இந்தக் காலத்தில காண்பது அரிது. சீதனத்தை எதிர்பார்த்தா காதலிச்சனான்? நானும் ஆம்பிளைதானே?… எனக்கும் கைகாலிருக்கு உழைக்கிறதுக்கு” என்று ரோசத்துடன் பேசினார். ஒரு சுப நாளில் அவர்களது ‘திருமணம்’ இனிதே நிறைவேறியது. வீட்டிலேயே ஒரு பக்கத்தை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தோம். அதற்குப் பிறகு இரண்டு தங்கைகளையும், நான்கு தம்பிகளையும் கொண்ட குடும்பத்தைச் சுமக்கிற பொறுப்பு முழுதாக என் கைக்கு வந்தது. நான் கல்யாணம் பண்ணாமலே குடும்பஸ்தனானேன்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் நான் இருக்கையில்தான் குவைத்தில் எண்ணெய்க் கம்பெனிக்கு ஆட்கள் எடுக்கிற விஷயத்தை மூர்த்தி சொன்னான்.
ஆட்கள் எடுக்க ஒருவர் வந்து நிற்கிறாராம். நம்பிக்கையான ஆள். குவைத்திலை 6 – 7 வருஷம் வேலை செய்தவர் என்றான். லேபரர் வேலைக்கு இருபதாயிரம்! கிளார்க் வேலைக்கு இருபத்தையாயிரம்!
இருபத்தையாயிரம் ரூபாவுக்கு எங்கே போவது என்ற யோசனை, என்றாலும் ஒரு நப்பாசை; அந்தக் குறிப்பிட்ட ஆளைச் சந்தித்துக் கதைத்துப் பார்க்கலாமே?
அவர், எங்கட பொடியள் அங்கு வந்து உழைக்கிற மாதிரியைப் பற்றி வாயொழுகச் சொன்னார். “நீர் வந்தீ ரெண்டால்… ஐசே!… ஐயாயிரத்துச் சொச்சம் சம்பளம்… உழைக்கலாம்…”
‘அப்படியெண்டால் ரெண்டு மூண்டு மாசத்திலை குடுக்கிற காசை உழைச்சிடலாம்தானே’ என மனம் கணக்குப் போட்டது.
அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். எங்களுக்குள்ள ஒரே வழி வீட்டோடு உள்ள ஒன்றரைப் பரப்பையும் விட மிகுதி மூன்று பரப்பையும் விற்றுவிடுவதுதான், இதனால் ஈட்டுக் காசையும் கொடுத்து, எனது பயணச் செலவுகளையும் கவனிக்கலாம். மற்றைய சில்லறைக் கடன்களையும், கல்யாணத்துக்குப் பட்ட கடனையும் அங்கு போனதும் எடுக்கிற சம்பளத்தைக் கொண்டு முதற் காரியமாகத் தீர்த்து வைப்பது. பிறகு, காணியைப் பூமியை வேண்டித் தங்கைகளின் விடயங்களைக் கவனிப்பது.
ஆனால் எங்களுக்குத் தோன்றுவதுபோல, காணியை விற்கும் துணிவு இலகுவாக அம்மாவுக்கு வருவதாயில்லை. அம்மாவின் பெயரிலிருந்த ஏழரைப் பரப்புக் காணியில், அக்காவுக்கு கல்யாணம் நடந்தபொழுது அத்தான் மறுத்தும் கேட்காமல் அவர்களுக்கு மூன்று பரப்பை எழுதியாயிற்று. இன்னும் இரு பொம்பிளைப் பிள்ளைகள் இருப்பதால் காணியை விற்பது அம்மாவுக்குச் சரியாகப் படவில்லை.
“அதையும் வித்துப்போட்டு, பிறகு…மற்றப் பெடிச்சியளுக்கு என்னடா தம்பி செய்கிறது.”
“எங்களுக்கு ஏனம்மா காணி, எட்டடி நிலம் போதாதோ?”… எனப் பகிடிவிட்டனர் தங்கைகள். எப்படியாவது அண்ணனை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டுமென்ற துடிப்பு அவர்களுக்கு.
“என்னணையம்மா?… தங்கச்சியவையளை நான் கைவிட்டிடுவனே?… அவளவைக்காகத்தானே இப்ப, வெளிநாட்டுக்குப் போகப் போறன்…”
அக்காவும் சொன்னாள் : “எப்படியாவது தம்பி போகட்டும்மா! வெளிநாட்டுக்குப் போன சனங்களெல்லாம் எப்பிடி முன்னேறியிட்டுதுகள்!”
“காணியை விக்கிறதுக்கு விருப்பமில்லையெண்டால்… என்ர இவரும் எங்கேயாவது மாறித் தாறமெண்டு சொன்னார். என்ர நகைகளையும் வைச்சு, ஒரு மாதிரிச் சரிக்கட்டலாம்.”
கடைசியாக அம்மா ஒரு முடிவுக்கு வந்தாள். “என்னவோ தம்பி… நீதான் அதுகளுக்கு எல்லாம்… படிச்சனி… உலக நடப்புக்கள் தெரிஞ்சனி… உனக்குச் சரியெண்டு படுறதைச் செய்!…”
இப்படியாக வீட்டிலுள்ள அனைவரினதும் ஆதரவு பெற்றுக் காணியை விற்று குவைத்திற்கு வந்தாயிற்று!
பாலைவனத்துக்கு மேயவந்த ஓட்டகங்களிற் சில வானத்தைப் பார்த்துக்கொண்டு பேசாமல் நிற்கின்றன. வானத்தையும் வெறும் வெளிகளையும் அவை இப்படி நெடுநேரம் ஏன்தான் பார்த்துக்கொண்டு நிற்கின்றனவோ என அடிக்கடி யோசித்திருக்கிறேன்.
பாலைவனத்து மண்ணில் முளைத்திருக்கும் ஒருவகைப் புல் பூண்டுகளையே இவை மேய வருகின்றன. நல்ல சுவாத்தியமுள்ள குளிர்ந்த மண்ணில் புற்கள் கிசுகிசுவென முளைத்து வளர் வதுண்டு.
ஆனால் கால்களைக்கூடப் பதிக்க முடியாத இந்த மண் சூட்டில் இவை எப்படித்தான் முளைக்கினறன? மண்ணிலே வேரைப் புகுத்தி, ஒரு சொட்டு நீரையாவது எங்கிருந்து உறிஞ்சி எடுக்கும்? இவ்வளவு கஷ்ட நிலையிலும்… அவை செத்துப்போகாமல் வாழவேண்டுமென்ற வைராக்கியத்துடன் நிற்பதைக் காண ஆச்சிரியமாயுமிருக்கிறது! தங்களது சாப்பாட்டுக்கான நீரைத் தேடித் தேடி அவை சலித்துப் போவதில்லையோ தெரியாது. அசையாத உறுதியோடு இந்தச் சூட்டையும், வறட்சியையும் அவை எதிர்த்து வாழும் நெஞ்சுரத்தைப் பார்த்தால்… எங்களுக்கும் ஒரு தெம்பு பிறக்கிறது!
ஓ! அந்த ஒட்டகங்களிற் சில புற்களின் மேல் இரக்கம் கொண்டுதான் அவற்றைச் சாப்பிட்டு ஏப்பம் விடாமல் நிற்கின்றன போலும்.
ஒட்டகங்களைப் பார்த்ததும், அவற்றுக்குப் பக்கத்தில் நின்று ஒரு ‘போட்டோ’ எடுத்து வீட்டுக்கு அனுப்பவேண்டு மென்ற ஆசையும் தோன்றியது. தங்கச்சி அந்தப் படத்தை அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் காட்டி ஒரு கலக்குக் கலக்கி விடுவாள்!
ஒரு லீவு நாளிலென்றால், நல்ல அழகான உடையுடன் வந்து சன்கிளாசும் அடித்துக்கொண்டு நின்று போட்டோ எடுத்து அனுப்பலாம்! இந்தப் பரதேசிக்கோலம் கொஞ்சமென்றாலும் அவர்களுக்குத் தெரியக்கூடாது. அண்ணா பெரிய அலுவல கத்தில் ஏ.சி. அறையில் வேலை என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கதையளந்து எழுதியதே நான்தான். இங்கு வந்து சேர்ந்த மூன்று மாதங்களில் இப்படி எத்தனையோ கதைகளை அளந்தாச்சு!
நாங்களிருக்கும் அறை வசதியைப் பற்றி உள்ளது உள்ளபடி எழுதினாலே அவர்கள் பதறிப்போவார்கள்.
ஒரு ஏழெட்டுப் பேர் வரை இருக்கக்கூடிய அறையில் இருபது பேர் வரை சீவிக்கிற கதை யாருக்குத் தெரியும்? வியர்க்க விறுவிறுக்க வேலை செய்துவிட்டு வந்து புழுதிபடிந்த மேனியுடன் இதனுள் அடைபடுகிறோம்.
தண்ணீர்! ஒரு தனியான கண்ணீர்க் கதை. இலங்கையில் சும்மா கிடைப்பதால் தண்ணீர் பட்ட பாடாகத் தண்ணீருடன் புளங்கிய எங்களுக்கு, இங்கு காசு கொடுத்து வேண்ட வேண்டி உள்ளதால் தண்ணீருக்காகப் பெரிய பாடுபட வேண்டியிருக்கிறது. காசு கொடுத்தாற்றான் பவுசர்காரன் கொண்டுவந்து தாங்கியில் அடித்துவிட்டுப் போவான். இதனால் மிகவும் கட்டுப்பாடாகத் தண்ணீரைப் பாவிக்கவேண்டுமென்று தீர்மானித்து… இந்த வெக்கையிலும் புழுதி, வியர்வையிலும் ஒழுங்காகக் குளிக்கவும் முடியாவிட்டால்…? இப்படியே இந்த ஏ.சி. இல்லாத அறைகளில் புழுங்கி அவிகிறோம்.
இரவு நெடுநேரமாகிவிட்ட பின்னரும், சூடும், புழுக்கமும் வாட்டியெடுக்கும். உடல் அசதியாக இருந்தாலும் உறக்கம் வந்துவிடாது. உறக்கமுமில்லாவிட்டால் அடுத்த நாள் வேலைக்குப் போகும்பொழுது அடித்து முறித்துப்போட்டது போலிருக்கும். படுக்கையில் உருண்டு பிரண்டு… கடவுளே இதென்ன சோதனை, கைகளை இறைவனிடம் கூப்பிக் கொண்டு…
“மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்…” – திருநாவுக்கரசு நாயனார் கொடுத்து வைச்ச மனுசன்! கடவுள் கருணை இருந்தது. சுண்ணாம்பு அறையிலே வைத்துப் பூட்டியபொழுது அவர் இந்தத் தேவாரத்தைத்தான் பாடினாராம். ஆனால் எங்களுக்கு, பாவம் செய்த சென்மங்களுக்கு கடவுளும் மசியிறாரில்லை!
தண்ணீர், ஏ.சி. போன்ற குறைந்தபட்ச தேவைகளையாவது செய்து தரவில்லையே, எங்களைக் கொண்டு வந்த ஒட்டகம்! மனது புழுங்க மட்டும்தான் முடிகிறது.
வருவதற்கு முதல், சம்பளத்தைவிட, இருப்பிட வசதி, மருத்துவ வசதி, சாப்பாடு எல்லாம் இலவசம் எனச் சொல்லப்பட்டது. இப்பொழுது சாப்பாட்டையும் எங்கள் செலவிலேயே பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை.
அம்மா எழுதுவாள்: “தம்பி… உடம்பைக் கவனிச்சுக் கொள்… சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்…”
வேலை முடிந்து வருகிறபொழுது அம்மா சாப்பாட்டை வைத்துக்கொண்டு காத்திருப்பாள். பக்கத்திலே இருந்து எழுந்துபோக விடாமல் இன்னுமின்னும் போடுவாள். “சாப்பிடு தம்பி… எல்லாரும் சாப்பிட்டாச்சு… இஞ்சை ஒருத்தருக்கும் மிச்சம் பிடிக்க வேண்டாம்!”
அதை நம்பி, சில நாட்களில் ஒரு பிடி பிடித்துவிட்டால்… அம்மா பாவம், பிறகு ஒரு தேத்தண்ணியைப் போட்டுக் குடிச்சிட்டுப் படுப்பாள். “என்னணையம்மா?” என அதிர்ந்தால் “இல்லையப்பு இண்டைக்கு… எனக்கு ஒரே தலைச்சுத்தும் பஞ்சியுமாய்க் கிடக்கு…. சாப்பிடேலாது!”
அக்கா அருமையாக மீன் குழம்பு வைப்பாள். அரைச்சுக் காய்ச்சுகிற குழம்பென்றால் நல்ல ருசியாக இருக்கும். கல்யாணம் முடித்து, அக்கா வேறாகச் சமையல் செய்கிறபோதும் நான் சாப்பிடுகிறபொழுது… மீன் குழம்பு, பொரியல் என்று அன்றைய கறியில் ஏதாவது கொண்டுவந்து கோப்பையில் போடுவாள்.
இப்படி வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?
வாய்க்கு ருசியாகத்தான் இல்லை. வயிற்றுக்கு நிறைவாக என்றாலும் வேண்டாமோ? எங்களுடைய வயிற்றுக்கு நாங்களே வஞ்சகம் செய்கிற சங்கடம்; அறையில் உள்ளவர்கள் சேர்ந்து சமைக்கும் திட்டத்தை ஆரம்பிக்க வெகு நாள் பிடித்தது. வந்து சரியாக இருபத்தேழு நாட்களுக்குப் பிறகுதான் சோற்றைக் கண்ணால் கண்டதே!
சில நாட்களில், ஒருவேளைச் சாப்பாட்டை மிச்சம் பிடித்தாலென்ன என்ற நம்பிக்கை வந்துவிடும். எல்லாம் பணத்தை மிச்சம் பிடிக்கிற நோக்கத்தில்தான். அதனால் ‘சமறி’க்குப் பொறுப்பான நண்பனிடம்… ‘இண்டைக்கு எனக்கு உடம்பு சரியில்லை… சாப்பிடேலாது… மத்தியானம் வேண்டாம்… மாக் பண்ணாதை!’ அதன் பிரதிபலனாக வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது மயக்கம் போட்டு விழுந்ததையும் மறக்க முடியாது. இப்படி மூன்று – நான்கு நாட்கள் நடந்தது. பெரிய களைப்பாக வந்து கைகள் சோர்ந்து… உடல் குளிச்சியடைந்து மயக்கமடைகையில்… காலமையே சென்னான்… ஏதோ சுகமில்லையென்று” என நண்பர்களின் குரல் கேட்கும். பிறகு என்ன? கொம்பனிச் செலவில் ஐயாவுக்கு ஒரு கோப்பி; அன்றைக்கு வேலையிலிருந்து ஓய்வு!
சொன்னபடி ‘கிளார்க்’ வேலையைத் தந்திருந்தாலாவது சமாளித்திருக்கலாம். இங்கு வந்ததும் லேபரர் வேலை தந்தார்கள். முதுகை வளைத்து மண்வெட்டி பிடித்து காய்கறித் தோட்டம் பெய்துகூட எனக்குப் பழக்கமில்லை. எனது நோஞ்சான் உடம்பு அதற்கு இடமும் தராது. இனி என்ன செய்வது? வீட்டு நிலைமைகளையும் நினைவில்கொண்டு ‘எதை வேண்டு மானாலும் செய்யத் தயார். சொன்ன சம்பளத்தையாவது தருவார்களானால்’ என்று நினைத்தேன். ‘சொன்ன வேலையைத் தான் செய்யவேண்டும்… அதுக்கு இதுதான் சம்பளம்’ என்றார்கள். இலங்கை ஏஜென்சியில் நாங்கள் கையெழுத்திட்டு வந்த ஒப்பந்தமும் இங்கு செல்லாது போய்விட்டது!
இலங்கையில் செய்துகொண்டிருந்த உத்தியோகமே எவ்வளவோ மேல்! அங்கே வேலையில்லாதிருப்பவர்கள் இப்படி வந்து ஏதாவது உழைக்கலாம். இருந்த வேலையையும் விட்டு வந்தது எவ்வளவு மடத்தனம் என்று தோன்றியது. உடனே. போனால் முன்னர் செய்த வேலையைத் திரும்ப எடுக்கலாம். ஆனால் இலங்கை திரும்புவதென்றால் எங்கள் செலவிலேயே போக வேண்டுமாம், அந்தச் செலவுக்கு உழைக்கவே நாலு மாதங்கள் வேண்டும். அதனால் அந்த யோசனையையும் கைவிட்டேன்.
கணக்குப் போட்டு பார்த்ததில் செலவான தொகையைத் திரும்ப உழைக்கவே இன்னும் ஒன்றரை வருடமாவது வேண்டும் என்று தெரிகிறது. ஆக, நான் காணியை விற்றதால் பெற்ற பயன் என்ன? இனி உழைக்கப்போகும் உழைப்பையும் இந்த ஒட்டகங்கள் ஏப்பம் விட்டுவிட்டன!
இந்தக் கவலைகளை எப்படி வீட்டுக்கு எழுதுவது? அவர்களது நெஞ்சு எப்படிச் சிதைந்துபோகும்? அதனால் எத்தனை தொல்லைகள் நேர்ந்தாலும் எதையும் வீட்டுக்குத் தெரியப்படுத்துவதில்லை எனத் தீர்மானித்தேன். பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பது; முடிந்தவரை வேலை செய்து இலங்கையில் எடுத்த சம்பளத்திலும் அதிகமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டியது என எண்ணிக்கொண்டேன்.
ஒட்டகங்கள் கடித்துச் சாப்பிட்ட பின்னரும் குருத்துவிட்டு முளைக்கிற பாலைவனத்துப் புற்களைப் போல ஏதோவொரு நம்பிக்கையில் வாழவேண்டியதுதான். பாலைவனத்திலும் புல் முளைக்கும் – ஒட்டகங்கள் சாப்பிட்டு ஏப்பம் விடாவிட்டால்!
“இவ்விடத்தில் நல்ல வசதியாக இருக்கிறேன். அருமையான வேலை… நல்ல சாப்பாடு… உங்களை விட்டுப் பிரிந்த கவலையை விட வேறு ஒரு குறையுமில்லை…” எனக் கடிதங்களில் வீட்டுக்கு கதையளந்து கொண்டிருந்தேன்.
அக்காவும், அம்மாவும் அடிக்கடி கடிதம் எழுதுவார்கள். தம்பி தங்கைகளும் ஏதாவது எழுதி வைத்திருப்பார்கள். “நீயில்லாமல்…இஞ்சை வீடே வெளிச்சுப்போச்சு!”
கடிதங்களும், வீடும் நினைவில் வந்ததும் அழுகை பொங்கிக் கொண்டு வந்து கண்கள் கலங்கின. விதியோ என ஆங்காங்கே வெயில் காய்ந்துகொண்டிருக்கிற பேரீச்ச மரங்களைப்போல மனதைக் கல்லாக்க முயன்றேன்.
ஜோர்ஜ் என்னைக் கவனித்துவிட்டு, “என்ன விஷயம்” எனக் கேட்டார். அவர் எங்கள் சுப்பவைசர், இந்திய நாட்டைச் சேர்ந்தவர். இந்திய ஆங்கிலத்தில் அவர் கதைக்கிறபொழுது கேட்க ஆசையாக இருக்கும். என்னைப் பற்றிய சகல விஷயங்களையும் அவ்வப்போது கதைப்பதன் மூலம் அறிந்து வைத்திருக்கிறார். நல்ல மனுஷன்.
அவர்தான் ஒருமுறை சொன்னார்: “உண்மையிலேயே இங்குள்ள கொம்பனிகள் யாரையும் ஏமாற்றுவதில்லை. கொம்பனியோடு தொடர்புடைய ஆட்கள்தான் கொம் பனியையும் ஏமாத்தி – எங்களையும் ஏமாற்றுகிறார்கள்.” மூன்று மாதமளவில் இங்கு வேலை செய்த பழக்கத்தில் உண்மையும் அதுதான். என்று தெரிகிறது. சில கொம்பனிகளில் வேலை செய்யும் எங்கள் நாட்டு ஆட்கள் நல்லமுறையில் இருக்கிறார்கள். தண்ணீர், ஏ.சி. நல்ல அறை வசதி, சாப்பாட்டு, மருந்து வசதிகள், போக்குவரத்து வசதிகள், வருடத்துக்கு ஒருமுறை கொம்பனிச் செலவில் விடுமுறை அவர்கள் நேரடியாகவே கொம்பனிப் பிரதிநிதிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டு வந்தவர்கள். ஊரிலே காசுக்கு ஆசைப்பட்டு, கொள்ளையாக வேண்டுகிற எங்களுடைய ஆட்கள்தான் இங்கும் கொண்டுவந்து விற்றுவிடுகின்றார்கள்.
“உனக்குச் சுகமில்லையென்றால் ஓய்வு எடு!” என்றார் ஜோர்ஜ்.
“இல்லை… புழுதி கண்ணிலை பட்டிட்டது… அதுதான் கண்ணீர் வருகுது…” எனச் சமாளித்தேன்.
காற்றிலே எழுந்த புழுதி ஒரே பனிமூட்டம் போல எங்கும் சூழ்ந்துகொண்டது. இப்படி அடிக்கடி வீசுகிற மணற் காற்றினால் எங்கும் புழுதிப்படலம் தோன்றிடும். மிக அண்மையில் உள்ளவற்றைத் தவிர, தூர உள்ளவை தெரியாமல் புழுதி படர்ந்துவிடும். அழகான வீடுகள், புதிய கார்கள் எல்லாம் மஞ்சட் புழுதி படிந்துபோயிருப்பதைக் காணப் பரிதாபமாயிருக்கும்.
அனற்காற்றும், வியர்வையோடு ஒட்டுகிற புழுதியும் உடலை அரிப்பெடுத்தன. மண்துணிக்கைகள் பற்களிற்கூட கரகரத்தன. கண் ஓரங்களிலும், முகத்திலும் புழுதி கசிந்து எரிந்து. மூக்கினூடாகச் சுவாசப்பையிலும் போய்ச் சேருகிறதோ என்னவோ என எண்ணிய பொழுது மீண்டும் எரிச்சல்…
மின் விசிறியின் கீழ், கிளீன் சூட்டில் வேலை செய்த நாட்கள் நினைவில் வருகின்றன. அப்போ இருந்த ஆறுதலும் நிம்மதியும் இப்ப இல்லை. வேலை முடிந்து அசதியோடு போனாலும் வீட்டு நிலைமைகளைக் கவனித்து ஒப்பேற்றுவதிலும் ஒரு ஆறுதல் இருக்கவே செய்கிறது.
இப்பொழுது வீட்டில் என்ன செய்வார்களோ? நான் இருந்தால் அன்றாடத் தேவைகளைக் கவனித்துக்கொள்வேன். அம்மா பாவம் என்ன செய்வாளோ?
இங்கு வந்து முதலாவது மாதம் இரண்டாயிரம் ரூபாவும், பின்னர் மூவாயிரம், மூன்றாவது மாதம் மூர்த்தியிடமும் கொஞ்சம் மாறி நாலாயிரம் ரூபாவும் அனுப்பிவைத்தேன்.
இருளும் வரை (மேலதிக நேர) வேலை செய்வது, சிலவேளைகளில் சாப்பாட்டைத் தியாகம் செய்வது, மற்றும் அப்படி இப்படி என்று அஜஸ்ட் செய்வது… போன்ற கைங்கரியங்களினால்தான் அந்தத் தொகைகளை அனுப்ப முடிந்தது. எப்படியோ அவர்களாவது கவலையில்லாமல் இருக்கவேண்டும். பொன்போல இருந்த காணியை விற்றுவிட்டு வந்தது – மனச்சாட்சியையே குடைகிறது. இப்படிப் பணத்தையாவ கூடுமானவரை அனுப்பினாற்தான் கொஞ்சமாவது ஆறுதலடைய முடிகிறது.
மாலையில் அறைக்கு வந்த பொழுது… கடிதம் வந்திருந்தது. இங்கு இதைப் போலச் சந்தோஷமான விஷயம் வேறில்லை. கடித மூலம்தானே வீட்டோடு உறவாட முடிகிறது?
கடிதம் கனதியாக இருந்தது. அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி எல்லாம் ஒவ்வொரு துண்டு எழுதி வைப்பது வழக்கம். கடிதத்தை ஆவலுடன் பிரித்தேன். இன்று அக்கா மட்டும் பெரிய பாரதமாக எழுதியிருந்தாள்.
வீட்டு நிலைமைகளையும் அதைத் தானும் கவனித்துக் கொள்கிற விஷயங்களையும் அக்கா எழுதும்பொழுது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ‘கல்யாணம்’ முடிந்த பிறகும் அவள், தானும் தனது குடும்ப சுகமும் என்று இல்லாமல் இப்படிக் கவனிப்பது எவ்வளவு உதவியாகவும் இருக்கிறது.
அத்தானைப் பற்றியும், அவர் வீட்டில் மற்றவர்களோடு உதவி ஒத்தாசையாக இருப்பதைப் பற்றியும் எழுதியிருந்தாள்… “இப்படி ஒருத்தர் எங்களுக்குக் கிடைத்ததுக்கு நாங்கள் குடுத்து வைத்திருக்க வேணும் தம்பி.”
இது உண்மையும்தான்! நல்ல ‘அண்டஸ்ராண்டிங்’ உள்ள மனுஷன், என ஆறுதல் ஏற்பட்டது. தம்பியவர்களின் படிப்பு விஷயங்களையும் கவனித்துக்கொள்கிறாராம்! நானும் இல்லாத நேரத்தில் வீட்டில் அவர் நிற்பது நல்ல உதவிதான்!
“மேலும், தம்பி அறிவது… ஒரு விஷயம் இவரும் சொன்னார், உனக்கு எழுதிவிடும்படி. நாங்களும் என்னெண்டு நெடுகலும் ஒரே வீட்டிலை இருக்கிறது? உங்களுக்கும் கஷ்டம். எங்களுக்கும் ஒரு வீடு தேவைதானே? எங்களுக்கும் ஒரு பொம்பிளைப் பிள்ளை இருப்பதால், இப்பவே கட்டிறது நல்லதெண்டு இவர் சொல்லுறார். அதனாலை அம்மா எனக்கு எழுதித்தந்த காணியிலை ஒரு வீடு கட்டலாம் எண்டு நினைக்கிறோம். வீட்டுப் பிளான் எல்லாம் கீறி, நாள் பார்த்து வேலையும் தொடங்கியாச்சு. இரண்டு – இரண்டரை இலட்ச மளவில் முடியுமாம். உன்னை நம்பித்தான் தொடங்கியிருக்கிறோம்…”
கடிதத்தை வாசித்து முடிக்க முதலே… கண்கள் கலங்கி உடல் சோர்வடைவது போல இருந்தது.
பெரிதாக மூச்சையிழுத்து, உடல் காற்றை உண்டது. பக்கத்திலிருந்த சுவரில் சாய்ந்துகொண்டேன்…
நண்பன் மூர்த்தி “என்னடா. . . கண்ணா என்ன… வீட்டில் ஏதாவது வில்லங்கமோ?” என ஓடிவருவது தெரிகிறது.
அவனிடத்திலும் எனது பார்வை நிலைக்க முடியாமல்.. எங்கும் புழுதிப் படலமாய், எதையுமே காணமுடியாமல் கண்களில் இருட்சி.
– வீரகேசரி, 1983.
– உயிர்க்கசிவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிட், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |