பார்வை… – ஒரு பக்கக் கதை





சரவணன் தினமும் தன் வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தன் அம்மாவையும் அழைத்துச் செல்வான். சந்நிதி முன் அமர்த்திவிட்டு, பிரகாரம் சுற்றி, பரிவார தேவதைகளையெல்லாம் வணங்கிவிட்டு பலி பீடத்துக்கு முன் நமஸ்கரித்த பின், அம்மாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்புவான்.

வழக்கம் போல் இன்றும் பலி பீடத்தின் முன் வணங்கி எழுந்தபோது “சரவணா…, நான் ரொம்ப நாளா உன்கிட்டே கேட்க நினைக்கற ஒரு கேள்வி இருக்கு கேட்கவா..?” என்றான் நண்பன்.
“கேளு…”
“நீ கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யறே சரி. கண்பார்வையே இல்லாத உன் அம்மாவை ஏன் தினமும் சிரமப்பட்டு அழைச்சிக்கிட்டு வந்து சந்நிதீல உட்கார வைக்கறையே ஏன்..?”
“ எந்தக் கோவிலா இருந்தாலும் என்னையும் அழைச்சிக்கிட்டுப் போனு கேட்கற அம்மாவின் ஆசையை நிறைவேத்தறதுதானே மகனின் கடமை..அதான்…”
“சரவணா..உன் சிநேகிதனை என்கிட்ட அழைச்சிக்கிட்டு வா… அவன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்..” என்றாள் அம்மா..
‘அம்மாவின் காதுக் கூர்மையை எண்ணி வியந்தபடியே அருகில் சென்றதும் அம்மா சொன்னாள்..
“உங்களுக்கெல்லாம் கண்பார்வை இருக்கு..! ஆத்தாவை கண்குளிரப் பார்க்கறீங்க… கண் பார்வை இல்லாத என்னை ‘ஆத்தா பார்க்கட்டுமே…” என்றாள்.
சிநேகிதனுக்கு மட்டுமல்ல… அம்மாவின் நோக்கம் அறிந்த சரவணனுக்கும் அம்மாவின் ‘பார்வை’ புது வெளிச்சத்தைத் தந்தது.
(கதிர்ஸ்- 1-15 ஜூலை 2022)