பார்வைகள்

அந்திமந்தாரைப் பூக்கள் மணந்து கிடக்க, காற்றில் வரும் மருதாணிப் பூக்களின் வாசமும் மனதை மயக்க சைந்தவி தனது வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு புழக்கடையின் பின்னாலிருந்து வீட்டுக்குள் வந்தாள். திடீரென்று பக்கத்துத் தெருவிலிருந்த பார்கவியின் ஞாபகம் வந்தது. பார்கவியின் மகளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பார்க்கச் செல்லவேண்டும். வெறுங்கையை எப்படி வீசிக் கொண்டு செல்வது, ஒன்று டிரஸ் எடுக்கணும், இல்லேன்னா பழங்கள் ஏதாவது வாங்கி வரவேண்டும். சைந்தவி தனது கணவன் அமுதனுக்குப் போன் செய்து விசயத்தைச் சொல்லி, குழந்தைக்கு ஆபிசிலிருந்து வரும்போது டிரஸ் எடுத்து வாருங்கள் பார்கவி பேரனைப் பார்க்கப் போகவேண்டும் என்றாள்.
சைந்தவியின் கணவன் வரத் தாமதம் ஆகுமென்பதால் தனக்குத் தெரிந்த நண்பரிடம் டிரஸ்ஸைக் கொடுத்து அனுப்பினான். கணவன் வருவதற்குள் போய் பார்த்துவிட்டு வரலாம் எனக் கிளம்பிய சைந்தவிக்கு வயது நாற்பத்தைந்துக்கு மேலாகிறது. ஆனால் பார்க்க முப்பத்தைந்து மதிப்பிடலாம் போல இன்னும் இளமையாக, எலுமிச்சை நிறத்தில் அடர்த்தியான சுருட்டை முடியுடன் இருந்தாள். பக்கத்து ஊரில் வேலை பார்க்கும் சைந்தவி வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வந்தாள். அவளுடன் ஒத்த வயதுடையவள்தான் பார்கவி. தனது மூத்த மகளுக்குத் திருமணம் செய்து பேரனையும் பார்த்துவிட்டாள்.
பார்கவியின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவளது அம்மாதான் முதலில் வரவேற்றது. வாங்க என்றவர்களைப் பார்த்துத் தலையசைத்துக் கொண்டே சென்ற சைந்தவி, பார்கவி தனது பேரனை மார்பில் படுக்கவைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டாள். பக்கத்தில் அவளது மகள் அபியும் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
“வாங்க வாங்க” என்ற பார்கவி,
“சார்ட்ட போனவாரமே பேரன் பிறந்த செய்தியச் சொன்னேன். சொல்லலையா?” குழந்தை பிறந்தது தெரிந்தும் தாமதமாக வருகிறாயே என்ற நோக்கில் கேட்க,
“அவர் வேலை மும்முரத்துல மறந்துட்டார்போல. என் மாமியாருக்கும் உடல்நிலை சரியில்லாததால் என்னால வரமுடியாமப் போச்சு” என வரமுடியாததற்கான காரணத்தை விளக்கினாள்.
“அபி அக்காக்கு சாக்லேட் எடுத்துட்டு வந்து கொடு” என்று கட்டளையிட்ட பார்கவி பேரனைச் சைந்தவியின் கைகளில் தர குழந்தையை வாங்கிக் கொண்டவள்,
“குழந்தை அப்படியே அபி மாதிரியிருக்கு. அபிக்கு நார்மல் டெலிவரியா” என்று கேட்க,
“இல்லை. ஆப்ரேசன்தான். குழந்தைக்குத் தலை திரும்பவே இல்ல. வேறு வழியில்லாததால் ஆப்ரேசன் பண்ணாங்க” என்றாள்.
“அபி உனக்கு உடம்புக்குப் பரவாயில்லையா?” என்று கேட்ட சைந்தவிக்கு,
“பரவாயில்லை. ஆனா அடுத்தவாரம் எங்க வீட்ல கூப்பிடறாங்க. ஊருக்குப் போகணும்” என்றாள்.
“குழந்தை பிறந்து மாதம் மூணாகி விட்டதால் கூப்பிடறாங்க. அங்க அவளுக்கு வேலையெதுவும் கிடையாது. ஆனா வீட்டுக்காரரும் மாமனாரும் கடைக்குப் போயிடுவாங்க. மாமியாரும் சமையல முடிச்சுட்டுப் போய்டுவாங்க. குழந்தைய அவ மட்டுமே தனியா பார்க்கணும். மத்தபடி ஒண்ணுமில்ல” என்றாள் பார்கவி.
“அபிக்கு மருந்து இதெல்லாம் கொடுக்கறீங்களா?”
“ஆமா. அம்மா எல்லாப் பக்குவமும் பாத்துட்டாங்க” என்று மகிழ்ச்சியாகச் சொன்ன பார்கவியைப் பார்த்த சைந்தவி,
“நானெல்லாம் என்ன செய்யப் போறனோ தெரியல. என் பெண்ணுக்குப் பக்குவம் பார்த்து ஒத்தாசை செய்ய எனக்கு அம்மாவும் கிடையாது” என்று தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. யுடியூப் பார்த்து மருந்து நாமே கொடுத்துடலாம்” என்று சொன்ன பார்கவி,
“நீங்க கல்யாணத்தப்ப எப்படி இருந்தீங்களோ, அப்படியே இருக்கீங்க இன்னும் ஸ்லிம்மா. நான் வெயிட்போட்டு சதபுதன்னு ஆயிட்டேன். என்ன பண்றது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள். அதைக்கேட்ட சைந்தவிக்கு இக்கரைக்கு அக்கறைப் பச்சை என்பது போல எனக்கு உறவுகள் இல்லையே என்று வருத்தம், பார்கவிக்குத் தான் ஸ்லிம்மாக இல்லையே என்று வருத்தம் ஒவ்வொருவருக்கும் பார்வைகள் பலவிதம்தான் என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
ஆனாலும் வீட்டிற்குள் வந்தவுடன் பார்கவி தனது எண்ணங்களைத் தனது மகள் நேத்ராவிடம் “இப்போதே எனக்கு உடம்பில் வேலைப்பழுவால் பிரசரும் சுகரும் ஆரம்பித்திருக்கிறது. என்னைவிட கொஞ்சம் தானே குண்டாக இருக்கிறாள். ஆனால் அந்த நோயெல்லாம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் பார்கவி ஏன் உடல்பருமனைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று கேட்டாள்.
“அவங்களுக்கு நாம இப்படி உன்னை மாதிரி ஸ்லிம்மா இல்லையேன்னு, நினைக்கறாங்க போல, விடும்மா நாம மத்தவங்க பொறாமைப்படுற மாதிரி இருக்கறது கூட பெருமைதான்மா. அத நினைச்சு சந்தோசப்படு” என்றாள். அட நம்ம இப்படி சிந்திக்கவில்லையே என்று நினைத்து இன்றைய இளசுகளின் மனோபாவமும் சரிதான் என்று நினைத்துக்கொண்டாள்.
சுந்தரிமணியன் அவர்கள் மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரி. தமிழில் முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் பேராசிரியராக மூன்றரை ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர். தற்போது ஒரு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் பிறகு சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். உலகத் தமிழ் என்ற இணைய இதழின் துணைஆசிரியராகவும் பணியாற்றியவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த சிறுகதைகள்…மேலும் படிக்க... |