பார்க்க வேண்டிய திசை!
ஓர் ஊரில் மாணிக்கம் என்ற உழவன் இருந்தான். அவனுக்கு முத்து என்ற மகன் இருந்தான். சிறுவனாக இருந்தாலும் முத்து நேர்மையும் நற்பண்புகளும் நிறைந்தவனாக விளங்கினான். அந்த ஆண்டு மாணிக்கத்தின் வயலில் சரியான விளைச்சல் இல்லை. மற்றவர்களின் வயல்களில் நல்ல விளைச்சல் இருந்தது.
அறுவடை முடிந்து, எல்லோரும் களத்துமேட்டில் நெல்லைக் கொட்டி வைத்திருந்தனர்.
நள்ளிரவு நேரம் வந்தது. மாணிக்கம், தனது மகனை அழைத்துக் கொண்டு களத்துக்கு வந்தான்.
தனது சாக்கை விரித்து வைத்தான். மற்றொரு உழவனின் நெல்லை எடுத்து வந்து அதில் கொட்டினான். சாக்கு நிறைந்து மூட்டையானது.
மகனிடம், நாலா திசைகளிலும் பார்க்கச் சொன்னான். யாரும் இல்லையென்றால் நெல் மூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று கூறினான்.
மகன் முத்துவோ, “அப்பா! நாலாபக்கமும் பார்த்துவிட்டேன் யாரும் இல்லை. ஆனால் நாம் இருவரும் மேலே பார்க்கவில்லையே! அங்கே நமது செயலை மட்டுமல்லாமல் எல்லோருடைய செயல்களையும் கவனித்துக் கொண்டு ஒருவர் இருக்கிறாரே? அவரிடமிருந்து இந்தத் திருட்டை நம்மால் எப்படி மறைக்க முடியும்?’ என்று கேட்டான்.
மகன் சொன்னதைக் கேட்டதும் மாணிக்கத்துக்கு புத்தி தெளிந்தது. நான் இப்படி யோசிக்கவில்லையே! என்றெண்ணி வருந்தினான்.
உடனே சாக்கிலிருந்து நெல்லையெல்லாம் அது இருந்த இடத்திலேயே பழையபடி கொட்டினான்.
“மகனே, கடவுளின் கண்பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இனிமேல் இதுபோல ஒருநாளும் நடக்க மாட்டேன்’ என்று உறுதி கூறினான்.
-ம.கவிப்பிரியா, 11-ம் வகுப்பு, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி.
பெப்ரவரி 2012