பாப்பாவுக்கு ஒரு பாட்டு




போன வருடம், இதே தீபாவளி விடுமுறைக்கு வந்த அண்ணன்; அவனுடைய நண்பனையும் அழைத்து வந்திருந்தான்.
முதலில் அவர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த அம்மா; அவன் யார் என்பது தெரிந்தவுடன் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டது எனக்குப் பிடிக்கவில்லைதான். ஆனால் எங்கள் ஊர் அப்படிப்பட்டது. அவன் எங்கள் அத்தையின் ஊரான அத்தியூரைச் சேர்ந்தவன். அவனுடைய அப்பா சிவசாமி, நன்றாக ஜாதகம் பார்ப்பார் மூலிகை மருத்துவமும் தெரியும். அவர் கையால் விபூதி மந்திரித்துப் பூசிக்கொண்டால்,நோய்கள் சரியாகும். அப்படிப்பட்ட பெரியவரை, அம்மா, ஒரு நாள்கூட உள்ளே கூப்பிட்டு, சாப்பாடோ , காபியோ கொடுக்கமாட்டர்கள். அந்த பெரியவரும், அதை எல்லாம் எதிர் பார்ப்பவரல்ல. காரியம் ஆனவுடன் பணம் கொடுத்து நன்றாக இனிக்க இனிக்க பேசி அனுப்பும் அம்மாவை குறை சொல்லவும் முடியாது. எல்லாம் ஊர் வழக்கம்தான்.
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவர், காதலித்து போலீஸ்ஸ்டேஷன் சென்று கல்யாணம் செய்து கொண்டாலும்கூட, கொலை, கருணைக்கொலை எல்லாம் நடத்தும் துப்புகெட்ட ஊர்.
சரவணனை அதான் அண்ணனின் நண்பனைப் பார்த்தேன். கிட்டத்தட்ட அண்ணவைப் போலவே இருந்தான். வட இந்தியாவில் வேலை கிடைத்து அங்கு செல்லப் போவதால்,அண்ணனிடம், பிரியாவிடை பெற்றுச் சென்றான்.
அதற்கப்புறம், எங்கள் வீட்டிற்கு அத்தை வந்தார்கள். அம்மா அவர்களுக்கு ஏகமான உபச்சாரங்களை செய்து “மல்லிகா எப்படி இருக்கிறாள்” என அன்புடன் விசாரித்தார்கள்.
“சிவசாமி என்ன சொல்லிச் சென்றார்?” என்று ஆர்வமுடன் அத்தை விசாரித்தார்கள்.
“எல்லாம் நல்ல செய்திதான். மஞ்சுவிற்கு என் சித்தப்பா பேரன் குலசேகரன் ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது” என்றார். என அம்மா மிகுந்த மகிழ்சியுடன் தெரிவித்தார்கள்.
அண்ணனுக்கும், அத்தையின் பெண் மல்லிகாவிற்கும் கூடிய சீக்கிரம் திருமணம் நடக்கப் போகிறது. அத்தைக்கு, நவீன் என்ற மகனும், மஞ்சு, மல்லிகா, என்ற மகள்களும் உள்ளனர். அவர்களுள் இளையவள் மல்லிகாவுக்கும், என் அண்ணனுக்கும் ஜாதகப் பொருத்தம் மிக நன்றாகப் பொருந்தி இருந்ததால், அவர்களுக்கு மணம் முடிப்பதாக பெரியோர்கள் முடிவு செய்திருந்தனர். மஞ்சுவுக்கு அதனால்தான் வரன் தேடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில்தான், அண்ணாவையும்,மஞ்சுவையும் ஒருசேரக் காணாமல் திகைத்தோம். இந்த தீபவளிக்கு அண்ணன் ஞாபகம் மட்டுமே மிஞ்ச அண்ணன் இருக்குமிடம் தெரியவில்லை. போன தீபவளியின் ஞாபகம் மனதைப்பிழிய, “அண்ணா! நீ ஏன் இப்படி செய்துவிட்டாய்? அத்தைப் பெண் மஞ்சுதான் வேண்டும் என நீ கேட்டிருந்தால், அத்தை மகிழ்வோடு உனக்கு அவளை மணம் செய்து கொடுத்திருப்பார்களே” என்று வருத்தம் மேலிட மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தேன்,
மஞ்சு காணாமல் போனதால், பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசி, எனக்கும், அத்தையின் மகன் நவீனுக்கும் அவசரமாக கல்யாணத்தை நடத்தியும் விட்டார்கள்.
நவீனின் மற்றொரு தங்கை மல்லிகா; சிறுவயது முதலே என் இனிய தோழி. நாங்கள் இருவரும் ஒத்த வயதுடையவர்கள்.
அவள், தனக்கு என் அண்ணன் மேலிருந்த காதலை என்னிடம் முன்பே சொல்லி இருந்ததால், அவள் குறித்து இரக்கப்பட்டேன். பாவம். அவளுக்கு தன் அக்கா செய்தது பெரிய ஏமாற்றமாக இருக்கும் என நான் நினைத்தேன்.
அதற்கு மாறாக, அவள் சந்தோஷமாக வீட்டில் வளைய வந்துகொண்டிருந்தாள். இது குறித்து நான் நவீனிடம் கேட்டதற்கு, அவன், “சரி,விடு. ஏதோ அவள் மகிழ்ச்சியாக இருந்து விட்டுப்போகட்டுமே” என்றான்.
அடிக்கடி அவள் தனிமை தேடி மொட்டை மாடிக்கு செல்வதைக் கவனித்த நான்; ஒரு நாள் அவளறியாமல், அவளைப் பின் தொடர்ந்தேன்.
அவளுடைய கைபேசியில்,”போங்கள் ரவி அத்தான்” என்று என் அண்ணன் பெயரைச் சொல்லி கொஞ்சிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்ததும், மாட்டிக்கொண்ட அவள், உண்மையை சொல்லத் துவங்கினாள்.
மஞ்சு ஓடிப்போனது என் அண்ணனுடன் இல்லையாம். அந்த சரவணனுடன்தானாம்
மாடிக்கு வந்து, அவ்வப்போது, என் அண்ணனுடன் செல் போனில் பேசுவது மட்டுமில்லாமல், மஞ்சுவிடமும் , சரவணனுடனும் பேசி நலம் விசாரித்துக் கொள்வாளாம்.
ஊர் வழக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற அண்ணன் செய்த தியாகம் ரொம்பவே பெரிது.
மாடிப்படி மறைவில் நின்ற அத்தையும், மாமாவும், மனம், நெகிழ்ந்து கண்ணீருடன் நின்றிருந்தார்கள்.
அப்புறம் என்ன? “நாம் பார்த்துக்கொள்வோம். ஊருக்கு வரச் சொல் அவர்களை” என மாமா கட்டளை யிட்டார்கள்.
ஊர் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்திவிடலாம் என்று எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது.
எங்கோ தூரத்திலிருந்து,
“சாதிகள் இல்லையடி பாப்பா” பாட்டின் சப்தம், கொஞ்சம் கொஞ்சமாக வந்து, சமீபதில் ஒலித்தது.