பாதை மாறிய பந்தங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சிரித்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2025
பார்வையிட்டோர்: 166 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெயில் உச்சிக்கு வந்துவிட்டது. ஒசட்டி ஒழுங் கையில் தலையில் எண்ணெய்க் கடகத்துடன் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்த நல்லெண்ணெய் விற்கும் எண்ணை ஆச்சி’ வெயிலின் தகிர்ப்புத்தாங்க மாட் டாமல் எட்டி நடக்க முயன்றாள்; முடியவில்லை. வயதுக் கேற்றபடி ஆச்சியின் உடலும் இயக்கமும் தளர்ந்து போயிருந்தது. 

கிழவியாக இருப்பதால் மட்டும் அவளை மற்றவர்கள் ஆச்சியென்று அழைக்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் இந்த ஊருக்கு எண்ணெய் விற்க வந்த காலம்தொட்டு, இப்போது நரை விழுந்து, கூனி, நொடிந்து போனதுவரை அவளை எண்ணை ஆச்சி என்று தான் அழைக்கிறார்கள். ‘எண்ணை ஆச்சி என்ற பெயரை அவளுக்குச் சூட்டியவர்கள் சிறுபராயத் னர்தான். எண்ணை ஆச்சி கொண்டு வரும் எள்ளுப் பாகுக்கு சிறிசுகளிடம் இருக்கும் பிரியம்தான் ஆச்சியை அவர்கள் பால் ஈர்த்தது. 

எண்ணை ஆச்சி பெரிய ஓலைக் கடகத்தில் எண் ணைக்கலனையும் சில எண்ணைப் போத்தல்களையும் எள்ளுப்பாகு நிறைந்த பழைய பால் மா தகரத்தையும் அடுக்கி அதைப் பக்குவமாகத் தலைமேல் வைத்து பின் காய்யாமல்விட்ட லங்கா சேலையுடன் நடந்து வரும் போது பார்க்க வேண்டுமே. 

ஊர் நாய்கள் எல்லாம் ஆச்சிக்குப் பழக்கப்பட்டவை. கேற்றைத் திறந்து கொண்டு நேராக வீட்டுக்குள் வந்து தாவாரத்தில் கடகத்தை இறக்கி, தலையை அமுக்காம லிருப்பதற்காக வைத்திருநத சும்மாட்டையும் இறக்கி அருகே வைத்து, வாயால் காற்றை ஊதி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ”பிள்ளை ஒரு போத்தி கேட்பாள். லாய்த் தரட்டோ?” என்று பக்குவமாகக் எண்ணெய் ஐந்து ரூபாவுக்கு கீழ் விற்ற காலம் தொட்டு, ஐம்பது ரூபாவுக்கு போய்விட்ட இன்றுவரை ஆச்சியுடன் பேரம் பேசி வெல்லுவதென்றால் அபூர்வம்தான். 

ஒரு நாளைக்கு ஒரு குறிச்சி என்று ஆச்சி வியா யாரம் பண்ணுவாள். காலையில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டால், மத்தியானம் வீடு வந்து சேர இரண்டு மணியைத் தாண்டிவிடும். இத்தனைக்கும் அநேக நாட்களில் கொண்டு போகும் எண்ணெயில் பெரும்பகுதியை விற்று விடுவாள். சில நாட்களில் வியாபாரம் மந்தமாகவும் இருக்கும். அப்படியான நாட்களில் முழிவியளத்தில் பழி போய்ச்சேரும். படலையுக்கால வெளிக்கிடயுக்கை வேதாத்தை வெறுங்குடத்தோட வந்தவள்…சமாதானமாகிவிடுவாள். மாலை எண்ணெய் இடித்தல், எள்ளுப்பாகு தயாரித்தல் என்று பொழுது போய்விடும். அயராத உழைப்பினால்தான், மூன்று பிள்ளைகளுடன் முப்பது வயதில் கைம்பெண்டாச்சியான ஆச்சி,பிள்ளைகளை வளர்த்து படிப்பித்து கரை சேர்த்து இனி ஆச்சியின் கடைசி காலம்தான், யாரோ ஒரு பிள்ளையோடு ஒண்டிக் கொண்டு பேசாமல் காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் உழைத்து வாழ்ந்த கட்டை யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் படுக்கையில விழுந்திட்டால் பிறகு பாருங்கோவன்டி என்று சும்மா இருக்கும்படி  கூறும் பிள்ளைகளிடம் கூறிவிடுவாள். 

ஓசட்டி மணல் பாதையைத் தாண்டி, வயல் வரம்பு களில் நடந்து, நாச்சிமார் கோயிலடி வெள்ள வாய்க் காலைக் குறுக்காகத் தாண்டி குடிசனம் நிறைந்த ஒழுங் கைக்கு வந்து கந்தவனம் வாத்தியார் வீட்டுப் படலை யைத் திறந்து கொண்டு பிள்ளோய்… எண்ணை வாங்கல்லையே? என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைய, அவளை அடையாளம் கண்டு கொண்ட ‘லக்கி’ நாய் வாலையாட்டி வரவேற்றது. அது ஆச்சிக்கு மட்டுமல்ல வீட்டுக்குப் புதிதாக வருபவர்களுக்குக் கூட வாலை ஆட்டும் பழக்கமுடையது. 

ஆச்சியின் குரல் கேட்டு வெளியே வந்த செல்லல, “என்ன ஆச்சி கன நாளாய் இந்தப் பக்கம் காணன்… நான் போனகிழமை நெல்லியடியிலை அழகன் கடையிலை காப்போத்தல் வாங்கினனான்,” 

“இருந்தாப்போல ஒரு இருமல் பிடிச்சு மந்திகை ஆசுப்பத்திரியிலை ஒரு கிழமை கிடந்தனான் பிள்ளை… சரி பிள்ளை. இப்ப எவ்வளவு தாறது?…” 

“என்ன விலையணை ஆச்சி? …” 

“போத்தில் ஐம்பதுக்குத்தான் விக்கிறனான் பிள்ளைக்கெண்டபடியால் நாப்பத்தெட்டு ரூவாப்படி தறன்…” 

செல்லம் ஒரு நெளிப்பு நெளித்தாள். “ஆச்சியட்டை வரவர நெருப்பு விலை… நெல்லியடியிலை நாப்பத்தைஞ்சு ரூபா தானே?” 

“பிள்ளை அதுவும் இதுவும் ஒண்டே?…அவங்க எத்தினையைக் கலப்பங்கள் கண்டியோ? இது சுத்தமான நல்லெண்ணை பிள்ளை, இப்ப எள்ளு விக்கிற விலை யிலை இதுக்குக் குறைய விக்கேலாது மோனை. பருத்தித் துறையிலை போத்தல் அறுபது போகுதாம்…” 

“சரியணை ஆச்சி… உன்னோடை கதைச்சு வெல்லேலுமே? ஒரு போத்திலைத் தாவனணை. அதோட ஐஞ்சாறு எள்ளுப்பாவும் தாணை” 

“ஐயோ பிள்ளை….அதை மட்டும் கேட்காதை… அடுத்த முறை கொண்டாறன்… இது போனமுறை ராசம்மா சொல்லிவிட்டவ. மேள் பெரியபிள்ளையாருக் கிறாவெல்லே…?” 

“மூத்த குமர் முத்திப்போய், அதுக்கொரு வக்கில்லாமல் இருக்கினம்… இந்த லட்சணத்திலை அடுத்தவளின்ர சாமத்தியத் தண்ணீவார்வையை வலு எழுப்பமாய் கொண்டாடப் போகினமாம்… ம்…அது சரி, உனக்காச்சி அவையிலை தான் நெருக்கம்…அவைக்கெண்டவுடனை ஒரு தனிச்சலுகை, நாங்கள் தாறது காசிலையே…?” செல்லம் விடுவதாயில்லை. 

“என்ன பிள்ளை உப்படிப் பேசுறாய்?…எங்கை குடுத்தாலும் எனக்குக் காசி தானே?…நான் அதுக்குச் சொல்லயில்லை… வாக்கிலை ஒரு சுத்தம் இருக்க வேண் டாமே?… அது சரி மச்சாளும் மச்சாளும் முந்திச் சரியான வாரப்பாடு… இப்ப வர வர எட்டம் கட்டி நிற்கிறியள். ஏதேனும் பிரச்சினையோ?….அட அட..அந்தத் திருவிழாப் பிரச்சினைக்குப் பிறகு இன்னும் ஒண்டு சேரல்லையே?” 

”காசிருக்கெண்டவுடனை அவைக்குச் சரியான தடிப்பு… இப்ப வாசியசாலை விசயத்திலையும், விளை யாட்டுப் போட்டியிலையும் கூட தாங்கள் தான் முன்ன ணிக்கு நிற்கப் பாக்கினம்… ஏன் எங்களட்டைக் காசில்லையே? எங்கட மேனுக்கு இப்ப நல்ல வரும்படி…” செல்லம் வெடித்தாள். 

“காசென்ன காசு, மனிசர்தானே பெரிசு?… நான் அயர்ந்து போனேன். இப்ப உங்கட மோன் படிப்பு முடிஞ்சு வெளிக்கிட்டுவிட்டு தெல்லே?… எங்கை வேலை?” ஆச்சி அக்கறையோடு விசாரித்தாள். 

“பதுளையிலை உள்ளுக்காய் ஒரு டிஸ்பென்சரியிலை வலை. போய்க் கொஞ்ச நாளையிலேயே கைராசிக்கார –டாக்குத்தர் எண்டு பேரெடுத்திட்டானாம். சம்பளத்தை விட நல்ல பிறைவேற் வரும்படி. அரிசி, தேங்காய், மாங் காய் எண்டு வாற வருத்தக்காறர் கொண்டு வந்து குடுக்குறாங்களாம். அதைவிட வீட்டிலை பிறைவேற்றா யும் வைத்தியம் செய்யுறானாம். எப்பிடிப் பார்த்தாலும் நாளொண்டுக்கு இருநூறு முன்னூறுக்குப் பிளையில்லை யாம்…தம்பி இப்ப பத்து நாள் லீவிலை வந்து நிற்கு தெல்லே?… ஆளும் கொஞ்சம் கொழுத்திருக்கு…” செல்லம் பெருமிதமாக அடுக்கிக் கொண்டே போனாள். 

“காசு பணம் பெரிசில்லைப் பிள்ளை அங்கை சிங்களவரின்ர ஆய்க்கினை ஒண்டுமில்லையே? காசு பணம் எப்பவும் சம்பாதிக்கலாம் .. ஆளுக்கு ஒண்டு வரப்படாதெல்லே?” ஆச்சி பரிவோடு கேட்டாள். 

“அங்கை தம்பிக்கு எந்தவிதக் கரைச்சலுமில்லை… ஊர்ச்சனம் தம்பியைக் கடவுளாய் வச்சிருக்குதுகளாம்… பதுளையிலை இந்த முறைக் கலவரத்திலை சரியான சேதம்… கனபேர் செத்துப் போச்சுதுகளாம். தமிழாக் களின்ரை கடை கண்ணி ஒண்டும் மிச்சமில்லையாம்… எண்டாலும் தம்பிக்குச் சிங்களவரே சரியான பாதுகாப்பு குடுத்தவங்களாம் அதுதான் தம்பி அகதியாயும் வரயில்லை…” செல்லம் பெருமிதத்தோடு கூறினாள். 

“அது சரி பிள்ளை, மோனுக்கு இப்ப சம்மந்தம் செய்து வைக்கவில்லையே?” 

”ஏன் ஆச்சி,உனக்குத் தெரிஞ்ச இடங்களிலை நல்ல பொம்பிளையாய் இருக்கே?..ஆச்சி இப்ப தரகு வேலைக்கும் வெளிக்கிட்டுட்டா போலை?” 

“நான் அதுக்காகக் கேட்கயில்லைப் பிள்ளை… ஒண்டுக்கை ஒண்டாய் இருக்கையுக்கை ஏன் இழுத்தடிப்பான் எண்டதுக்காகத்தான் கேட்டனான்.. கொஞ்சம் குடிக்கத் தண்ணி தாபிள்ளை…” 

செம்பு நிறைந்த தண்ணீருடன் திரும்பிய செல்லம் கேட்டாள், “ஆரையணை சொல்கிறாய்?’ 

“உது என்ன புதுக்கேள்வியாய்க் கிடக்கு! உன்ர மருமோளைத் தான்… ராசம்மாவின் மூத்தவள் பவானி யைத்தான்…!’ ஆச்சி இப்படிச் சொன்னதில் நியாயம் இல்லாமலில்லை. செல்லத்தின் அண்ணன் இராசையா தான் ராசம்மாவின் கணவர். ஒரே வேலி, ஆச்சிக்கு இவர் களோடு இருபது வருடப் பழக்கம். இரண்டு குடும்பங் களும் தேனும் பாலுமாகத்தான் இருந்து வந்தனர். செல்ல மும், இராசம்மாவும் நல்ல அன்னியோன்னியம். கொடுத்து மாறல் எதிலும் குறைவில்லை. கந்தவனமும் இராசையாவும் கூட அப்படித்தான். ஒன்றாகத்தான் தவற ணைக்குப் போவார்கள். ஒரு வீட்டில் கொண்டாட்டம் எண்டால் மற்ற வீட்டவர்களும் தமது வீடுபோல் நின்று ஒத்தாசை புரிவது வழக்கம். பவானியின் பூப்பு நீராட்டு வைபவத்தின் போது கந்தவனம் மாஸ்டர் மகனையும் வைத்துக் கொண்டு சொன்னார். “இவள்தான் என்ர மூத்தமருமோள்… இப்பவே சொல்லிப் போட்டன்.! அந்த வார்த்தைகளில் அனைவருக்கும் பூரிப்பு! 

அந்த இரு குடும்பங்களுக்கிடையேயிருந்த வாரப் பாடு தொடர்ந்து வந்தபோது உச்சிலம்மன் கோவில் திருவிழா வந்தது. வழமைபோல எழுப்பமான திருவிழா சிகரம், சப்பறம்,பிரசங்கம், மேளம், பாட்டுக்கச் சேரி… இப்படி வலு எழுப்பம். 

திருவிழாவின் போது வடக்குவீதியில் சிறு வாக்கு வாதம், இதுதான் அவர்களுக்கிடையிலான முதல் பிளவு: தொடர்ந்து வாசிகசாலை, விளையாட்டுப் போட்டிப் பிரச்சினைகள்… 

இப்போது கந்தவனம் குடும்பமும், இராசையா குடும்பமும் கீரியும் பாம்புமாகிவிட்டன. பொது வேலி யிலேயிருந்த கண்டாயம் அடைக்கப்பட்டுவிட்டது. இராசம்மாவின் கோழி செல்லம் வீட்டு முற்றத்திற்கு போய் விட்டால் ஒப்பாரி ”அறுவாரின்ர கோழிப்பீ அள்ளத்தான் நேரம் சரி…”. செல்லம்வீட்டு ஆட்டுக் குட்டி பொட்டுப் பிரித்துக் கொண்டு இராசம்மா வீட்டுக்கு வந்து விட்டாலோ “அறுவாரின்ர ஆட்டுக்குட்டியாலை பயிரொண்டும் வைக்க முடியேல்லை” என்று தூற்றல். றவு முறிந்தாலும் பரவாயில்லை, அது பகையாய் வளர்ந்து கொண்டு வந்தது. அவர்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற எண்ணை ஆச்சியின் கணிப்பும் தப்பாய்ப் போய்விட்டது. 

ஆச்சி சொன்னதைக் கேட்டதும் செல்லம் சொன்னாள் ‘என்னணை நீ விசர்க்கதை பறையுறாய்? உவையின்ர  பீத்தல் பொம்பிளையை நாங்கள் கடைசி வரைக்கும் செய்யமாட்டம். வெளியிலை எங்கையாவ லட்சம் சீதனம் வாங்கித்தான் செய்வம் வேற பொம்பிளை கிடைக்காமல் உவையின்ற கறுத்தப் பாம்பிை ளையைச் செய்யுறதோ?” 

ஆச்சிக்கு முகம் ஓடிக் கறுத்துவிட்டது. எனினும் மேலும் சிறிதுநேரம் இருந்து கதைத்து விட்டு “நான் வாறன்” என்று எழுந்தாள். ‘அடுத்தமுறை எள்ளுப் பாவை மறந்து போயிடாதையணை ” செல்லம் ஞாபக மூட்டினாள், 

ஆச்சி இராசம்மா வீட்டில் காலடி எடுத்து வைக்க ‘பப்பி’நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் கிடந்து விட்டது. அதற்கும் ஆச்சியைப்போல் வயது போய் விட்டது. புது நாய்க்குட்டி ஒன்று வாங்கவேண்டும். என்று சின்னவள் மேகலாவுக்கு ஆசை. சந்திக்கவில்லை. 

“வாணை ஆச்சி… செல்லம் வீட்டிலை மகாநாடு கூட்டிப் போட்டு வராட்டில் உனக்குப் பத்தியப்படாதே! என்னவாம். மேன்காரன் வந்திருக்கிறார் போலை…” இராசம்மா ஆச்சியின் வாயைக் கிளறினாள். 

“எனக்கு எல்லாரும் ஒண்டுதான். பெரிசுமில்லை, சின்னனுமில்லை எல்லாரும் ஒற்றுமையாய் நல்லாயிருக்க வேணுமெண்டு தான் என்ர எண்ணம்… அது சரி பிள்ளை ஒரு போத்திலாய்த் தரட்டோ?…” 

“எள்ளுப்பாக் கொண்டரேல்லையேணை…”

“மறப்பனே?… பிள்ளை வழிக்குவழி சொல்லி விட்டனியெல்லோ ஆச்சி எள்ளுப்பாவை எடுத்துக் கொடுத்தபடியே கூறினாள். ”அவையின்ரை மோனுக்கு, இப்ப நல்ல வரும்படியாம்… மாசம் ஐயாயிரத்துக்கு மேலை கிடைக்குதாம்…” 

“உதென்ன ஆச்சி விசர்க்கதை பிளக்கிறாய்? போன கிழமையும் சீட்டுக்காக ஐந்நூறு ரூபாவுக்காக ஓடித் திரிஞ்சவை…” இராசம்மாவும் விட்டுக் கொடுப்பதா யில்லை. 

“என்னவோ பிறைவேற் வரும்படியாம்…” ஆச்சி இராசம்மாவைக் கிளறி விட்டாள். 

“லஞ்சம் வாங்கிறார் எண்டு சொல்லணை..” 

“அதுசரி, பிள்ளையின்ரை கலியாண விசயம் என்ன மாதிரி கிடக்கு?… பேந்து ஒரு சிலாவனையும் காணன்…” 

“சில இடங்களிலை பாக்கிறம் காலம் வரட்டுமன்…”

“ஏன் மருமோனைச் செய்யிற எண்ணமில்லையே?” 

“அவை எப்பிடியெண்டாலும் மருமேன் நல்ல போக்குத்தான். நான் ஒருக்கால் வள்ளிப் பிள்ளை யக்கையவையை விட்டுச் செல்லத்திட்டைக் கேட்பிச்சுப் பாத்தனான்… அவள் பெரிய எழுப்பம் விடுறாள்… ஒரு லட்சம் காசும், பதினைஞ்சு தங்கப்பவுண் நகையும் தரட் டாம். வீட்டுக்குச் சீற் அடிக்கவும் வேணுமாம்…” 

“அதுக்கென்ன, உங்களட்டை இல்லாத காசு பணமே? பொம்பிளைப்பிள்ளையை பெத்தனி கொஞ்சம் பணஞ்சு போனால் என்ன?” 

”ஊருலகத்திலை வேற மாப்பிளை இல்லாமல் உவை யளிட்டை போக வேணுமே?… வோச்சட்டம் கதைக் கிறவையோட பிறகென்ன கொண்டாட்டமும் சம்பந்த மும்?… அந்த நாளையிலை இவர் செய்த உதவியை எல்லாம் மறந்துபோட்டு இப்ப லட்சம் வேணுமாம்..” இராசம்மாவின் குரலில் சீற்றம் தெரிந்தது. 

“அண்ணன் தங்கைச்சிக்கு உதவுறதுதானே பிள்ளை? அதையேன் இப்ப சொல்லக் காட்டுறாய்…? ஒண்டுக் கை யொண்டி பந்தம் விட்டுப் போகாமல் அடி தொடரு மெல்லே?… அதோட இந்த நாளையிலை புறோக்கர்மார் கொண்டாற வெளியூர் மாப்பிளையையும் நம்பேலா கண்டியோ?” – ஆச்சிக்கு உலக ஞானம் அதிகம்தான். 

“சரி எண்டாலும் காலம் நேரம் வரட்டுக்கன். நான் தோட்டத்துக்கு போய் மாட்டுக்குத் தண்ணி வச்சுட்டு வாறன். தேத் தண்ணி வாங்கிக் குடிச்சுட்டுப் போணை ஆச்சி, பிள்ளை நிக்கிறாள்…” இராசம்மா விடை பெற்றாள். 

“ஆச்சி… தேத்தண்ணி தரட்டோ, இல்லாட்டில் மோர் தரடோணை?” பவானி அன்புடன் கேட்டதும், இந்த வெய்லுக்கை தேத்தண்ணி என்னத்துக்குப் பிள்ளை? மோரிலை கரைச்சுத்தாவன்…” என்று ஆச்சி அன்புடன் கூறினாள். 

மோருடன் வந்த பவானியின் மலர்ந்த முகத்தைப் பாசத்துடன் பார்த்தாள் ஆச்சி. ‘இவளைப் போய்க் கறுப்பி என்றாளே செல்லம்! என்ன லட்சணமான அடக்க ஒடுக்கமான பெண். என்று மனதில் நினைத்தபடி இவளையும் செல்லத்தின் மகன் குமாரையும் பக்கத்தே நிறுத்திக் கற்பனை பண்ணினாள். “பொருத்தமான சோடிதான்.” ஆச்சியின் நெஞ்சத்திலிருந்து ஆழமான பெருமூச்சு. பந்தங்கள் சொந்தங்கள் எல்லாம் பாதைமாறிப்போகிறதே என்பதால் ஏற்பட்ட பெருமூச்சு! ‘கொத்தான் வந்திருக்கிறார் போலை… காண யில்லையே?” – ஆச்சி இதைக் கேட்கும்போது பவானியின் மூகம் முழுமதியாய் மலர்ந்தது. 

“இப்ப கொஞ்சம் உடம்பும் வைச்சிருக்கு… உத்தி யோகக்களை முகத்திலை தெரியுது…” ஆச்சி தொடந்தாள். 

“ஆளும் கொஞ்சம் சிவத்திருக்கிறார் ஆச்சி”. பவானியின் அபிப்பிராயத்தைக் கேட்ட ஆச்சி சிரித்தாள். “அப்ப நீயும் கண்ணிலை வைச்சிட்டாய் எண்டு சொல்லன் பிள்ளை…” ஆச்சி குறும்போடு சிரித்தாள். “என்னவோபிள்ளை. உங்கட இரண்டு குடும்பமும் பழையபடி ஒண்டு சேர வேணுமென்றுதான் என்றை ஆசை… உங்கட சம்பந்தம் சரி வந்தால் பழையபடி ஒற்றுமையாயிடலாம்… அடிப்படையிலை இரண்டு பகுதி யிலையும் குறையில்லை… புரிஞ்சு கொள்ளாத சுபாவம் தான் பிளவுக்குக் காரணம்…” 

 “நீ சொல்லுறது சரிதான் ஆச்சி… எனக்கும் விளங்குது. ஆனால் பெரியவை புரிஞ்சுகொள்ளுகினமில்லை…” பவானி கவலையோடு கூறினாள். 

“நான் வாறன் பிள்ளை. கடவுள் இருக்கிறார்… எல்லாம் நல்லபடி நடக்கும் பிள்ளை…” ஆச்சி எழுந்து விட்டாள். 

எண்ணெய் ஆச்சி அடுத்தசில நாட்கள் வெவ்வேறு குறிச்சிகளுக்குப் போய் வந்தாள். இடையில் மறுபடி இருமல், இம்முறை ஒரு கலவையோடு கட்டுக்கடங்கி விட்டது.வாட்டில் நிற்கவில்லை. 

மறுபடியும் பத்துப்பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் ஓசட்டிப் பக்கம் வந்தாள். செல்லம் விட்டுப் படலையைத் திறந்தபோதே எள்ளுப்பாகுவின் ஞாபகம். போன தடவை சொல்லி விட்டிருந்ததால் இன்று மறவாமல் கொண்டுவந்திருந்தாள். வயது போய் விட்டாலும் ஆக்சிக்கு ஞாபகசக்தி குறையவில்லை. 

செல்லத்தின் முகத்தில் கலகலப்பில்லை, ஆச்சியைக் கண்டதும் ஏற்படுகின்ற வழமையான உற்சாகமில்லை. அதை அவதானித்த ஆச்சி ஒளிவு மறைவின்றிக் கேட்டாள். ”ஏன் பிள்ளை ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதும் சுகக் குறைவா? மேன் தானே டாக்குத்தர்…” 

“அந்தக் கேடு கேட்டவன்ர கதையைப் பறையாதை ஆச்சி, என்ன பொடி போட்டாளோ, என்ன வசியம் பண்ணினாளோ, எதைக்காட்டி மயக்கினாளோ தெரியாது … அறுதலியைக் கூட்டிக்கொண்டு போய் இந்தச் சுக்கிமேன் பதிவுக் கலியாணம் செய்து போட்டான். இப்ப சோடியாய் பதுளைக்குப் போட்டினமாம்…” என்று பொரிந்து தள்ளினாள் செல்லம். 

“எங்கடமேன் உவள் ராசம்மாவின்ர பொடிச்சி பவானியைக் கூட்டிக் கொண்டோடிட்டான். பெத்து வளர்த்து ஆளாக்கின எங்கடை மரியாதையைக் கெடுத்துப் போட்டான்….” செல்லம் ஒப்பாரி வைத்தாள். 

எண்ணை ஆச்சிக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. 

– சிரித்திரன்

– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *