பாணோடு போன மனம்
பாணுக்கும் மனதிற்கும் என்ன சம்பந்தம்? கேவலம் வயிற்றுப் பசி அடங்க அது ஒரு வேளை உணவு மட்டுமே. ஆனால் ஓர் ஏழையைப் பொறுத்த வரை, அதைப் பெறுவதில் கூட நிறையச் சவால்கள். .அதை எதிர் கொண்டு அனுபவபூர்வமாக உணரும் போது, வாழ்க்கையே அர்த்தமிழந்த வெற்றுச் சங்கதியாய் நிழல் தட்டிப் போகும். உயிரோடு வாழும் போதே தீக்குளித்து எரிந்து போகிற நிலைமை தான். அப்படி எரிந்து கருகிப் போனால் , பற்றி எரிகிறது உடலல்ல மனமே மிஞ்சாது ஒழிந்து போகுமென்பதை விளக்கவே உங்கள் பார்வைக்கு இப்படியொரு கதை
அவள் பூரணி அவள் அழகு பற்றிய கதை இங்கு வேண்டாம் அதைப் புறம் தள்ளி மறந்து விட்டு அவள் மனதைப் படித்து அறிவுப் பிரக்ஞையாய் இக் கதை தரும் படிப்பினை ஒரு வேத பாடமாக எல்லோருக்கும் பிடிபட வேண்டும் இது நடந்து எவ்வளவு காலக் கணக்கு என்று ஞாபகமில்லை
பூரணிக்கு அப்போது மிகவும் சின்ன வயது பத்தோ பதினொன்றோ இருக்கும் பருவம் முளை விடாத குழந்தைச் சிறுமி அவள் கிராமத்துப் பாடசாலைப் படிப்பை முடித்துப் பெரிய படிப்புப் படிப்பதற்காகக் கல்லூரி வாசலிலே கால் வைத்த நேரம் அவள் படிப்பதற்காகச் சேர்ந்த இந்து மகளிர் கல்லூரி யாழ் அரசடி வீதியில் இருக்கிறது தினமும் பஸ் பயணம் தான் சில வேளைகளில் அதற்கும் சில்லறை கிடையாது அப்பா பொறுப்பற்று இருப்பதால் வீட்டு நிர்வாகம் முழுவதும் அம்மா தலையில் தான் அவளும் தான் என்ன செய்வாள் வாழ்க்கைப்பட்ட இடமும் சுத்த மோசம். கட்டிய கணவனாலும் சுகப்படவில்லை. எல்லா வழிகளாலும் செல்லரித்துப் புரையோடிப் போனாலும் பெற்றுப் போட்ட குழந்தகளுக்காகத் தன்னையே ஆகுதியாக்கி அவள் எரிகின்ற அக்கினிக் குண்டமாய் அவளுடைய இந்த வாழ்க்கை வேள்விக் களம் .எந்நேரமும் கையறு நிலைமை தான். புருஷன் ஒழுங்காகச் சம்பளம் தருவதில்லை பெயருக்கு லட்சணமான அரசாங்க வேலை தான். இருந்துமென்ன அதிலேயும் பல தில்லுமுல்லுகள். அவன் விளையாட்டே தனி குழந்தைகள் தான் பாவம். அம்மா எதற்கென்று தான் ஓடுவாள்? தினமும் ஆறு பிள்ளைகளையும் சமாளிக்க அவள் படும் பாடு> கடவுளுக்கே வெளிச்சம்>
தினமும் பட்டினிப் போராட்டம் தான். நகைகள் இருந்தாலாவது ஓரளவு சமாளிக்கலாம். அவள் தான் மொட்டை மரமாயிற்றே. பட்ட மரம் எதற்கு உதவும்? கை கால் பிடுங்கி அடுப்பில் போடுகிற நிலைமை தான். எனினும் அவள் எரியவில்லை. தூர வெளிச்சமாய் ஒரு தரிசனம் தெரிகிறது.. குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் போது சூழ்ந்து வருத்துகின்ற இருள் விலகி வானம் வெளுக்குமென்று அவள் நம்பினாளே ஆனால் பூரணி விஷயத்தில் அதுவும் பொய்த்தது
ஒரு சமயம் காலை உணவுக்காகக் கையேந்துகின்ற பரிதாப நிலைமை. ஒரு றாத்தல் பாண் கடன் கேட்டு வாங்கி வருமாறு அம்மா பூரணியை அனுப்பினாள்.. அவளுடைய போதாத காலம். விதி அவளை இரை விழுங்க வாய் பிளந்து காத்துக் கொண்டிருந்தது காலைச் சாப்பாடு எப்போதுமே பாண் தான் சிலசமயம் அதுவும் கிடையாது அம்மாவின் கண்ணீரே உயிரை நிறைக்கும்
இந்தப் பாண் குறித்து அவளிடம் எத்தனையோ பழைய ஞாபகச் சுவடுகள். அவள் சிறுமியாய் இருந்த போது, மாலையில் வாசலிலேயே பாணின் தரிசனம் கிடைக்கும். அந்த வயதில் பாணைக் கண்டால் அப்படியொரு சந்தோஷம். பாண் மீது பட்டர் தடவிச் சாப்பிட்டால் நாக்கு இனிக்கும். அப்பா பொறுப்போடு இருப்பதால், வீட்டில் பஞ்சப்பாடு இல்லை. தினமும் பாண்காரன் வருவான் அதுவும் சிங்களவர்கள் தயாரிக்கிற பாண்.. கலகம் தொடங்குமுன் மாத்தறையிலிருந்து வந்த சிங்களவர்களால் சுன்னாகத்தில் ஒரு பேக்கரி இயங்கி வந்தது.. அங்கிருந்து தான் தினமும் மாலை வேளைகளில் அவர்களுக்குப் பாண் வருகிறது. சயிக்கிளில் தான் கொண்டு வருவார்கள் அழகான சிங்கள இளைஞர்கள். அவர்களைக் காணும் போது மனம் தறி கெட்டு ஓடும். அந்த வயது சுகமான நினைவுகள் அப்படி. கலகம் மூண்ட பின் அவர்களெல்லாம் ஓடி விட்டார்கள். இப்போது வெறும் நினைவுப் பொறிகள் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. இப்போது தமிழர்களே பாண் தயாரிக்கிறார்கள்.
அதுவும் கடைகளில் தான் கிடைக்கிறது.. அதை வாங்குவதிலும் பெரிய போராட்டம்.. அவர்கள் வீட்டிற்கு அண்மையில் ஒரேயொரு கடை தான் இருக்கிறது. காந்தன் கடை. அவன் எப்பவும் பெரிய பந்தாவோடு வாட்டசாட்டமாக இருப்பான். ஊர் முழுக்க அவனுக்கு நிறையச் சினேகிதர்கள் அது மட்டுமல்ல அவன் ஒரு சமூக சேவகன் மாதிரி அவனின் நடத்தைகள் பெரிய மனித தோரணையோடு அவன் மேடையேறிப் பேசும் போது பார்க்க வேண்டும் அவனின் சுயமான நடவடிக்கைகளில் தோலுரித்துப் பார்க்கும் போது அவன் ஒரு பாசாங்குத்தனம் மிகுந்த வெறும் மனிதன். எப்போதும் அவன் கடையில் கூட்டம் அலை மோதும். எல்லோரும் கையில் காசோடுதான் வந்து நிற்பார்கள். வெறுங்கையோடு போன பூரணிக்குக் கழுத்தில் மாலை தான் விழுமென்று எப்படி நம்புவது? கடனுக்கு அவன் பாண் கொடுப்பானா மாட்டானா?
“சீ நான் ஒரு பைத்தியக்காரி போயும் போயும் என் குழந்தையை அனுப்பினேனே அங்கை அவள் என்ன பாடுபடுகிறாளோ?”
அவள் அறியாமல் பூரணி காந்தனின் கடை வாசலில், கூடையும் கையுமாக வெகு நேரமாய் தன் வசமிழந்து நின்று கொண்டிருந்தாள். கால் வேறு உளைந்தது.அந்த வயதிற்கு ஏற்ற வளர்த்தியோ செழிப்போ இல்லாத நோஞ்சான் உடல் வாகு அவளுக்கு காந்தனோடு நேருக்கு நேர் மோத நேர்ந்த இந்தத் தர்ம யுத்தம் அவளை என்ன பாடுபடுத்துமோ தெரியவில்லை. கடையிலே நல்ல கூட்டம். பாண் வாங்கப் போட்டி போட்டுக் கொண்டு கூட்டம் அலை மோதியது. எல்லோர் கைகளிலும் காசு இருந்தது.. பூரணி தான் வெறுங்கையோடு ஜடம் மரத்து நின்று கொண்டிருந்தாள். காந்தன் கடன் கொடுப்பானென்ற நம்பிக்கையில் அவளிடைய இந்த வருகை எதை உத்தரவாதமாக வைத்து நிகழ்ந்ததென்று அவளுக்குப் புரியவில்லை. அதைக் கிரகித்து விளங்கிக் கொள்ளுமளவுக்கு அவளுக்கு இன்னும் புத்தி வளரவில்லை
காந்தனின் மனதில் கொஞ்சமாவது ஈரம் மிஞ்சியிருக்கும் என்று அவள் நம்பினாளோ இல்லையோ.. அம்மா மிகவும் அப்பாவித்தனமாக நம்பினாளே அதில் இடி விழுந்த கணக்காய் இங்கு பூரணியின் நிலைமை பசியொன்றைத் தவிர இப்போது அவளுக்கு வேறு நினைப்பில்லை அதைக் காந்தன் புரிந்து கொள்ள வேண்டுமே
அவள் முறை வந்தது. ஒளி ஊடுருவாத இருள் கனத்த பார்வையோடு அவள் முன்னிலைக்கு வந்து குரலை உயர்த்தி அவன் கேட்டான்
“என்ன வேணும்?
“ஒரு றாத்தல் பாண்”
அவன் உள்ளே போய் எடுத்து வந்து அவள் நீட்டிய கூடையில் இடும் போது மறுபடியும் கேட்டான்
“காசு எங்கை?”
பயந்தபடி குரல் நடுங்க அவள் சொன்னாள்
“அம்மா கடன் கேட்டுத் தான் வாங்கி வ்ரச் சொன்னவ”
“காசி இல்லையென்றால் இஞ்சை வந்து ஏன் கழுத்தறுக்கிறியள்? நான் கடன் கொடுக்கிறேலை “ என்றவன் கூடைக்குள் வைத்த பாணைக் கையோடு எடுத்தது, அவளை அப்படியே குப்புறக் கவிழ்த்து விட்டது ஸ்தம்பித்து அங்கேயே வெகு நேரமாய் தரித்து நின்று விட்டு நிலை குலைந்து மனம் சிதறி அவள் வீடு திரும்பும் போது பொறுமையிழந்து அம்மா வாசலில் முகம் இருண்டு நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அதை முழுவதும் இருள் விழுங்கி ஆக்கிமிப்பது போலப், பூரணி அழுது கொண்டே அவளிடம் வந்து சேர்ந்தாள். அந்த இருளினிடையே வாய் திறந்து பேச முடியாத துயரத்தில் மெளனம் கனத்தது இருவருமே சேர்ந்து அழுவது மேலும் நிலைமையை கொந்தளிக்க வைக்கும் என நினைவு கூர்ந்தவளாய் மனம் சகஜ நிலைக்கு வந்து அம்மா பரிவோடு கேட்டாள்.
“ஏனம்மா இவ்வளவு நேரம்? பிள்ளையள் பசியிலை துடிக்குதுகள் கெதியிலை பாணைக் குடு”
“ஐயோ அம்மா பாண் இருந்தால் தானே நான் தாறதுக்கு”
“என்ன சொல்லுறாய்? பாண் இல்ளையென்றால் இப்ப நான் எங்கை போறது? சமைச்சுப் போட வீட்டிலை ஒரு மண்ணும் இல்லை ஐயோ எனக்குத் தலை வெடிக்குது காந்தன் என்ன சொன்னவன்?”
“அம்மா அவன் கடன் குடுக்கிறேலையாம். கூடைக்குள் வைச்ச பாணையும் எடுத்திட்டான் இப்ப எனக்கு அழுகை அழுகையாய் வருகுது ஒன்றையும் யோசிக்க முடியேலை எந்த முகத்தை வைச்சுக் கொண்டு நான் இனிப் பள்ளிக்கூடம் போறது?” நான் இனிப் படிக்கேலை
“பொறு இதுக்குப் போய்ப் படிப்பை விடுறதா நீ? நீ படிச்சு வந்தால் தான் எங்கடை தரித்திரம் போகும்”
“அதை எப்படியம்மா நம்புறது? இப்படியே பசியிலை கிடந்து உயிர் சாகேக்கை நான் படிச்சு வருவேனா?இவ்வளவும் நடந்த பிறகு எனக்கு ஒரே யோசனையாய் வருகுது தலைக்குள்ளை ஏதோ செய்யுது”
அவள் நின்ற நிலையும் பேசிய வார்த்தைகளும் அம்மாவைப் பயம் காட்டி அலைக்கழிப்பது போல் அவள் வெகுவாகத் துடி துடித்துப் போனாள் படிப்பே உலகமென்று இருந்தவளுக்கா இந்த நிலை என்று யோசிக்கும் போது அவளை இப்படியொரு வறுமைப் பெண்ணாகப் பெற்றுப் போட்ட பாவத்தை எண்ணித் தானே தீக்குளித்துச் சாக வேண்டுமென்று அவளுக்கு ஆவேசம் வந்தது
பூரணியை ஆறுதல்படுத்த என்ன செய்யலாமென்று பிடிபடாமல் அவளே வெகுவாகக் குழம்பிப் போயிருந்தாள் அதற்கான சொற்கள் கிடைத்தாலும் கேட்கிற மனோநிலையில் பூரணி இல்லையென்பது ஒரு பயங்கர செய்தியாகவே அவளுக்கு உறைத்தது
அன்று திருக் கார்த்திகை விரதம் வேறு கோவிலுக்குப் போகவும் மனம் வரவில்லை பூரணி நிலை தரித்து நில்லாமல் வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தாள் இரவு முழுக்க ஒரே சிவராத்திரி தான் அவள் விடியும் வரை தூங்கவேயில்லை இப்படியே இரு நாட்கள் சோகத்திலேயே கழிந்தன அவளைத் தூங்கவைப்பதென்பது முடியாமல் போய் அதற்காக டாக்டரையே நாட வேண்டிய கடைசிக் கட்டம் ஊரில் மன நல வைத்தியர் எவருமே இல்லாததால் ஒரு அப்போதிக்கரி டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது அவர் தூங்குவதற்காகச் சில மாத்திரைகளை கொடுத்து விட்டுச் சொன்னார் “
“ பயப்படாமல் போங்கோவம்மா இனி உங்கள் மகளுக்கு நித்திரை வரும்”
அவர் சொன்னபடி இரவு பூரணிக்கு முழுத் தூக்கமல்ல அரைத் தூக்கம் தான். நடுநிசியில் எழுந்து நிலம் அதிர அவள் ஊழி நடனம் ஆடியதைப் பார்க்கிற போது அம்மாவுக்குப் புரிந்தது. காந்தனுடைய புனித கைங்கரியத்தால் அவள் ஒரு முழுப் பைத்தியமாகவே மாறி விட்டிருந்தாள். அதைக் கண் கொண்டு பார்க்க நேர்ந்த கொடுமையை எண்ணி அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு வாய் விட்டுக் கதறியழுகிற சப்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாகக் கேட்டது
படிப்பே உலகமென்று இருந்த பூரணி இப்போது எல்லாம் ஒழிந்து போன ஒரு நித்தியசிறைக் கைதி போல இருக்கிறாள் ஆங்கில வைத்தியம் செய்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை கேவலம் ஒரு றாத்தல் பாணுக்காக அவள் தீக் குளித்து உயிர் விட்ட கதையல்ல அவள் மனம் போன கதை மறக்கவே முடியாத கண்ணீரை வரவழைக்கும் ஒரு சோக காவியமேயென்பதை இந்தப் பாணைப் பார்க்கிற போதெல்லாம் உணர்வு பூர்வமாய் மனம் தெளிய இது ஒரு பாடம் படிப்பினை வேதவாக்கு
கோதுமை மாவில் தயாராகிற உடலுக்கு உணவாகிற வெறும் பாண் தானென்றாலும் அதன் பொருட்டு மனம் இழந்த ஏன் வாழ்க்கையையே இழந்த கொடிய பாலைவனத்தில் நிழல் தரித்து நிற்கும் அபலைப் பெண் பூரணிக்காக இந்தப் பாணும் ஓர் ஆத்ம சக்தி மிக்க வரலாற்றுப் பாடமாக உயிர் கொண்டு நிலைத்திருப்பது வெறும் கனவல்ல வாழ்க்கை நிதர்ஸன வெளிப்பாடுகளின் உயிர் தரிசனமான விழிப்பு நிலையிலேயே இந்த அனுபவம் கைகூடும் அப்போது புரியும் காந்தன் ஒரு மனிதனல்லன் மனிதத் தோல் போர்த்து வந்த மிருகம் தானென்று