பாட்டியின் அபிமானம்




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1
சாம்பசிவம் ஒரு பெரிய மிராசுதார். கிராமத்தில் பாதிக்குமேல் அவருடையது. பொன் விளையும் பூமி யென்றால் அவர் நிலங்களுக்கே தகும். இருபோகம் விளைந்து இரண்டு பங்கு வரும்படி இவ்வளவு இருந்தும் சாம்பசிவத்துக்கு மனச் சந்துஷ்டி மட்டும் இல்லை. காரணம், அத்தனை சொத்தையும் ஆள ஒரே ஒரு பிள்ளைக் குழந்தை இல்லாத குறைதான்.
ராமேசுவரம் முதலிய புண்ணிய க்ஷேத்திரங்கள் போய் எத்தனையோ சாந்திகள் செய்து பார்த்தாய் விட்டது. சாம்பசிவத்தின் தாயார், ‘என் சாம்பசிவத்துக்கு ஒரு குழந்தை பிறந்து பார்ப்பேனா?’ என்று சதா சர்வதா அதே கவலையாக இருந்து வந்தாள். பாவம்! ஒரு பேரனில்லாத குறையையாவது பொறுத்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது; ஆஸ்தி பாஸ்திகளைத் தாயாதிகள் கொண்டு போய் விடுவார்களே என்பதை எண்ணிப் பார்த்த போது அவளால் சகிக்க முடியவில்லை. அவள் தன் நாட்டுப்பெண் சாரதாம்பாள் மீது பிராணனா யிருந்தாள். தன் பிள்ளையும் அகமுடையாளிடம் மிகவும் ஆசையா யிருப்பதையும் அவள் அறிவாள். இருந்தாலும் பேரன் வேண்டு மென்ற ஏக்கத்தால் பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணமாவது செய்து பார்க்கலாமா என்று கூட அவள் சில சமயம் எண்ணியதுண்டு.
கடைசியில் தெய்வம் தாயாதிகள் பங்கில் இல்லை என்று தெரிந்தது. சாரதாம்பாள் கர்ப்பவதியானாள். அவள் பிரசவிக்கும் வரையில் அது பெண்ணா யிருக்குமோ பிள்ளையா யிருக்குமோ என்று பாட்டி கவலைப்பட்டது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். நல்ல வேளையாகச் சாரதாம்பாளுக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தது. சாம்ப சிவத்துக்கும் அவர் தாய்க்கும் உண்டான சந்தோஷத்தைச் சொல்ல வேண்டுமா? குழந்தைக்கு ராஜகோபாலன் என்று பெயரிட்டாள் பாட்டி. அவள் இப்பொழுது பாட்டியாய் விட்டதால் நாமும் அப்படியே அவளை அழைப்போம். தொட்டிலிடுவது முதல் ஆண்டு நிறைவு வரையில் ஒவ்வொரு விசேஷமும் தடபுடலாக நடந்த தென்று சொல்ல வேண்டியதில்லை. ‘அடியம்மா! குழந்தை ஆண்டு நிறைவின் போது, பாட்டுக் கச்சேரி என்ன, மேளக் கச்சேரி என்ன, சதிர்க் கச்சேரி என்ன – அது பாட்டிலே ஓயாமல் நடந்துண்டே இருந்துது. நான் சும்மா இருந்தேங்கிறயா? ஸகஸ்ர போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணி அத்தனை பிராமணாளுடைய ஆசீர்வாதமும் குழந்தைக்குக் கிட்டும்படி செய்தேன் என்று பாட்டி அடிக்கடி பெருமையாகக் கூறிக் கொள்வது வழக்கம். மொத்தத்தில் சொத்துக்கு வாரிசு ஒருவன் ஏற்பட்டு விட்டான் என்பதே அவளது மட்டிலடங்கா மகிழ்ச்சிக்குக் காரணம்.
ராஜகோபாலனைப் பார்த்துக் கொள்வதே பாட்டியின் முக்கிய வேலையாகப் போய்விட்டது. அவளுக்கு அவன் மீதிருந்த பாசம் இவ்வளவு அவ்வளவு என்றில்லை. சொத்து முழுவதையும் அவன் ஒருவனே ஏகபோகமாய் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள் பாட்டி. சொத்தைப் பங்கிடும் படியாக இன்னொரு பேரன் பிறக்க வேண்டு மென்று அவள் விரும்பவில்லை. முன்னெல்லாம் சாரதாம்பாளுக்குக் குழந்தை வேண்டுமென்று தெய்வங்களை வரங் கேட்டு வந்தது போக, இப்பொழுது இன்னொரு பிள்ளை பிறக்க வேண்டாம் என்று கூடப் பிரார்த்தித்துக் கொள்ளத் தொடங்கினாள். எல்லாம் ராஜகோபாலன் மீதிருந்த கங்குகரையற்ற ஆசைதான்!
இரண்டு வருடத்திற்கெல்லாம் சாரதாம்பாள் மறுபடியும் கர்ப்பவதியானாள். பாட்டிக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக அவள் என்ன செய்ய முடியும்? ‘பெண்ணாய்ப் பிறக்கட்டுமே? அதனாலே சொத்தைப் பாகம் செய்ய வேண்டியதில்லை. அவனுக்கும் விளையாட ஒத்தாசையா யிருக்கவும் ஒரு தங்கை வேண்டாமா?’ என எண்ணிச் சமாதானம் செய்து கொண்டாள்.
ஆனால் எல்லாம் நம் எண்ணப்படியே நடக்குமா? சாரதாம்பாளுக்கு இப்பொழுதும் ஓர் ஆண் குழந்தையே பிறந்தது. பாட்டியைப் போலவன்றித் தன் இரு குழந்தைகளிடமும் பாரபக்ஷமற்ற அன்பைச் செலுத்தக் கூடிய தாய், பிரசவித்த பதினொன்றாம் நாளே இறந்து போனாள். சாம்பசிவம் மட்டற்ற துக்கம் அடைந்தார். அவர் தம் தாயாரிடம், “அம்மா! நீதான் இனிமேல் இந்தக் குழந்தைகளுக்கு. எனக்கோ ஒன்றும் தெரியாது. இவர்களை வளர்ப்பது உன் பொறுப்பு” என்று சொல்லிக் கண்ணீர் உகுத்தார். அவர் அவ்விதம் சொன்னது மட்டு மன்றி அப்படியே நடக்கவும் நடந்தார். என்றுமே குடும்ப விஷயங்களில் அதிகப் பற்றில்லாத அவர், தம் நாயகியைப் பறி கொடுத்த பிறகு ஒரு யோகி போலவே நடந்து கொள்ளலானார்.
2
பாட்டி தன்னுடைய இரண்டு பேரன்மார்களையும் மிகவும் செல்வமாகவே வளர்த்து வந்தாள் என்றாலும், அவன் பிறந்ததிலிருந்தே சின்னவனிடத்தில் அவளுக்குத் தன்னை அறியாமல் ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவன் ராஜுவின் சொத்துக்குப் பங்காளியாக முளைத்ததுந் தவிரத் தாயையும் உருட்டிவிட்டான் அல்லவா? அவனாலன்றோ ராஜுவும் தாயிழந்தவன் ஆனான்? நடேசுவைப் (இளையவனுக்கு நடராஜன் என்று பெயரிட்டு இவ்விதம் அழைத்தார்கள்) பார்க்கும் போதெல்லாம் பாட்டிக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றும். வீட்டில் எதுவும் ராஜகோபாலனுக்குத் தான் முதலில். அவன் இஷ்டப்பட்டோ, வேண்டாமென்றோ கொடுப்பது தான் நடேசுவுக்கு.
ஒரு சமயம் நடேசு பாட்டியிடம், “ஏன் பாட்டி! மாமா பட்டணத்திலேயிருந்து பொம்மை வாங்கிண்டு வருவாளோன்னோ?” என்று கேட்டான்.
“எல்லாம் நேக்குத்தான்; ஒனக்கொண்ணும் கிடையாது போ!” என்று ராஜு சொன்னான்.
“அங்கே நிறைய இருக்கும். எனக்குந்தான் வாங்கிண்டு வருவா.”
“எல்லாத்தையும் நான் எடுத்துண்டுடுவேன். அப்பறந்தான் ஒனக்குக் கொடுப்பேன்.”
“பாரு பாட்டி, ராஜு சொல்றதெ” என்று நடேசு புகார் செய்தான். குழந்தைகளின் சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டிருந்த பாட்டி, “நடேசு! அவனோடே என்ன தகராறு? அவன் உனக்குப் பெரியவன்; அவன் கொடுக்கிறதை வாங்கிண்டு பேசாதிரு” என்று நடேசுவை அடக்கினாள்.
மாமா ஊரிலிருந்து வந்த போது ஒரு மோட்டார் வண்டி வாங்கி வந்திருந்தார். அதில் ஏறி உட்கார்ந்து தோட்டத்தைச் சுற்றிவர நடேசு எவ்வளவோ ஆசைப் பட்டான். ஆனால் அவனைக் கவனிப்பார் யார்? ராஜு ஓட்டி ஓட்டி அலுத்துப் போய் வண்டியும் முக்கால்வாசி ஒடிந்த பிறகுதான் அது அவனுக்குக் கிடைத்தது. ராஜுவுக்குப் பின் பிறந்ததால் எதுவும் அவனுக்குப் பின் தான் நடேசுவுக்கு என்று ஒருவரும் சொல்லாமலே நடந்து வந்தது.
இருவரையும் சேர்ந்தாற் போலே பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தார்கள். ஆனால் நடேசு தான் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கினான். தன் பாட்டி கொடுத்த அதிகமான செல்லத்தில் மூழ்கி இருந்ததனாலேயோ என்னவோ ராஜு படிப்பில் அவ்வளவு சூடிகையாய் இல்லை. அவன் கொஞ்சம் சிரமப்பட்டுப் படித்தாலும் பாட்டி உடம்புக்காகாது என்று தடுத்து விடுவாள்.
நாளடைவில் சகோதரர்கள் இருவரும் காலேஜில் சேர்ந்து பி.ஏ.பரீக்ஷைக்குப் படித்தார்கள். பரீக்ஷையில் நடேசு ராஜதானிக்கே முதலாகத் தேறினான். ராஜுவுக்குப் ‘பெயில்’ ஆகிவிட்டது. ராஜுவுக்குத் தேறாதிருக்கும் போது, நடேசு உலகத்திலேயே முதலாவதாகத் தேறியிருந்தால் கூடப் பாட்டிக்குச் சந்தோஷம் எங்கேயிருந்து வரப்போகிறது? வீட்டில் ஒருவரும் அதிகச் சந்தோஷத்தைக் காண்பிக்காததால் நடேசுவும் தன் வெற்றியின் பெருமையை அவ்வளவாக அறிந்து கொள்ளவில்லை.
நடேசு மேல்படிப்புக்காகச் சீமைக்குப் போக ஆசைப்பட்டான். அதைப்பற்றி அவன் தன் தந்தையிடம் பிரஸ்தாபித்த போது, “நம் ஆசார விவகாரங்களைக் கெடுத்துக் கொண்டு என்ன படிப்பும் உத்தியோகமும் வேண்டியிருக்கின்றன ?” என்றார் சாம்பசிவம்.
“என்னதான் பணம் இருந்தாலும் ஒரு பெரிய உத்தியோகத்தி லிருந்தால் பெருமை தானே. எனக்கு இரண்டாவதாகப் பாஸ் பண்ணின சுந்தரராஜன் கூடப் போகப் போகிறான். நானும் போய் வருகிறேன். நான் சில பேரைப் போல அங்கே கெட்டுப் போய் வருவேன் என்று நீங்கள் பயப்பட வேண்டாம். நான் எவ்வளவு ஒழுங்காக இருந்து விட்டு வருகிறேன் பாருங்கள் ” என்று நடேசு தந்தைக்குச் சமாதானமாகும்படி கூறினான். சாம்பசிவமும் அவன் சீமை போவதற்கு ஒருவாறு சம்மதித்தார்.
ஆனால் விஷயம் பாட்டியின் காதுக்கு எட்டியதும் அவன் பட்ட சிரமமெல்லாம் வீணாயிற்று. தன் வயது காலத்தில் குழந்தையைத் தூரதேசம் அனுப்பி விட்டுத் தன்னால் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க முடியாதென்று ஒரேயடியாய்ச் சாதித்தாள் பாட்டி. விசாரமும் கவலையும் ஒருபுறம் இருக்க, பணச் செலவு வேறு என்று நினைத்த பொழுது பாட்டிக்குச் சீமைப்படிப்புப் பிடிக்கவே இல்லை.
“பாட்டி! இரண்டு வருஷம் கொட்டைப் பாக்காக ஓடிவிடும். நான் உனக்கு வாரத்துக்கு ஒரு கடிதம் போடுகிறேன். நீ கவலைப் படும்படி நடந்து கொள்ளவே மாட் டேன். பணச்செலவு என்று பயப்படவேண்டாம். என்னோடு படித்த சுந்தரராஜன் போகிறானென்றால் பார்த்துக் கொள்ளேன். அவனென்ன பணக்காரனா? அப்படிச் செலவழிகிற பணத்தைப் போல் நூறு பங்கு நான் உத்தி யோகம் பண்ணிச் சம்பாதிப்பேன். ஏன் பாட்டி! நான் சீமை போய்ப் பாஸ் பண்ணிவிட்டு வந்தால் உனக்குப் பெருமை இல்லையா?” என்று நடேசு பாட்டிக்குப் பல வாறாக எடுத்துக் கூறி அவள் அனுமதியை வேண்டினான்.
பாட்டிக்கும் அவன் போய் விட்டுத்தான் வரட்டுமே என்று தோன்றியது. ஆனால் அதே சமயத்தில் ராஜு விடம் அவளுக்கிருந்த அலாதி அபிமானம் அவளை எச்சரித்தது. ‘குழந்தை ராஜு இப்பொழுதே உத்ஸாக மில்லாமல் இருக்கிறான். நடேசு சீமைக்குப் போய்த் தேறாமல் வந்தாலும் ராஜு, ‘தம்பி தேறவில்லையே’ என்று வருத்தப்படுவான். தேறிவிட்டு வந்தாலும், ‘நாம் மட்டும் ஒன்றுமில்லாமல் இருக்கிறோமே’ என்று எண்ணிக் கஷ்டப் படுவான்’ என்று எண்ணினாள். உடனே, “நடேசு! நான் கிழவி. இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்கிறேன். உன்னை அவ்வளவு தூரத்துக்கு அனுப்பிவிட்டு என்னால் ஒரு நிமிஷங்கூட இருக்க முடியாது” என்று கூறினாள்.
சாம்பசிவம் எப்பொழுதும் தாயார் இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை. ஆகையால் நடேசு சீமை போவதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவன் கனவெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. அவர்கள் சொல்லை மீறிச் சீமை செல்ல அவனுக்கு ஆசையாய் இருப்பினும், குழந்தை முதல் கீழ்ப்படிந்தே நடந்து வழக்கமுள்ள ஒருவனுக்கு அவ்வளவு தீர்மானமும் தைரியமும் எங்கிருந்து வரும்?
3
மேற்படி சம்பவங்கள் நடந்து நான்கு வருஷங்கள் ஆயின. சாம்பசிவம் இறந்துவிட்டார், ராஜுவும் நடேசுவும் தங்கள் கிராமத்தில் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடேசுவுக்குக் கிராம வாழ்க்கையும் பயிர்ச் செலவு வேலையும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ராஜதானிக்கெல்லாம் முதலாகத் தேறியதனால் என்ன பயன் என்று எண்ணி அவன் வருத்தப்பட்டான். ஏதோ ஒரு விதமாக அவன் ஊரில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் அந்த ஊருக்கு ஜில்லா அஸிஸ்டெண்ட் கலெக்டர் விஜயம் செய்வதாயிருந்தார். மிராசுதார்கள் தங்களால் கிஸ்தித் தொகையில் பாதி கூடச் செலுத்த முடியாமல் இருப்பதைப் பற்றிச் சர்க்காருக்கு மனுச் செய்து கொண்டிருந்தார்கள். கிராமவாசிகளின் நிலைமையை நேரில் விசாரித்து அறிந்து வருவதற்காக அந்த உத்தியோகஸ்தர் அனுப்பப்பட்டிருந்தார். கிராமத்தார் நடேசுவையே துரையிடம் தங்கள் குறைகளைப் பற்றி எடுத்துச் சொல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
துரை ஊருக்கு வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் நடேசு ஆச்சரியத்தால் பிரமித்துப் போனான். துரை வேறு யாரும் இல்லை. அவனுடன் காலேஜில் படித்த சுந்தர ராஜன்தான். இப்பொழுது என்.எஸ். ராஜனாக விளங்கினான். நண்பர்களுக்குள் கடிதப் போக்குவரத்து நின்றிருந்தமைால் நடேசுவுக்குச் சுந்தரராஜன் ஐ.ஸி.எஸ். பாஸ் செய்து உத்தியோகமேற்ற விவரம் தெரியாது. அதிகார ஹோதாவில் வந்திருந்த சுந்தரராஜனுக்கு ஏற்பட்டிருக்கும் பெருமையைக் கண்டு மனம் குன்றினான் அவன் தன்னை லக்ஷ்யம் செய்து பேசுவானோ மாட்டானோ என்று எண்ணிக் கொண்டிருந்த போது சுந்தரராஜன் “நடேசு! என்னை மறந்து விட்டாயா?” என்று கேட்டுக் கொண்டே கைகுலுக்கினான். பிறகு நண்பர்கள் இருவரும் சகஜமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சுந்தரராஜன் அன்றே ஊரை விட்டுப் போய்விட்டான். நடேசு அவனைப் பற்றியே எண்ணி மனம் புண்ணா யிருந்தான். இரவு படுக்கையில் படுத்தப் பின்பும் அவனுக்கு அதே நினைவாக இருந்தது. அதிக வயதானதனால் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்த பாட்டியைப் ‘பாட்டி!’ என்று அழைத்தான்.
“என்ன அப்பா, டேசு?”
“இன்று ஊரெல்லாம் அமர்க்களப்பட்டு எதிர் கொண்டழைத் தோமே, கலெக்டர், அவன் யார் தெரியுமா?”
“தெரியாதே.”
“என்னோடு படித்தானே அந்தச் சுந்தரராஜன் தான்”.
“சுந்தரமா?” என்றாள் பாட்டி ஆச்சரியத்துடன். ”ஆமாம். ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிறான். நானும் அவனுடன் போய்ப் பாஸ் செய்து வந்திருந்தால், ஆயிரம் ரூபாய் இப்பொழுது சம்பளம் வாங்கலா மல்லவா பாட்டி?” பாட்டியிடமிருந்து இதற்குப் பதில் இல்லை.
“பாட்டி, நீதானே பிடிவாதமாகக் கூடாதென்று தடுத்தாய். நான் போயிருந்தால்?”
இதற்கும் பதிலில்லை. பாட்டி ஒரே மௌனத்தில் இருந்தாள். அவன் மன நிலையை இப்பொழுதாயினும் உணர்ந்து பச்சாத்தாபப் பட்டாளோ என்னவோ! ஆனால் பாட்டி தூங்கிவிட்டாளென்று கருதி நடேசு மீண்டும் கேட்கவில்லை. தன் அதிருஷ்டக் குறைவிற்காகப் பிறரை நோகும் சுபாவம் அவனிடம் இல்லை. நடேசு இரவெல்லாம் யோசனை செய்து பார்த்தான். தன் சிநேகிதன் கலெக்டர் என்.எஸ்.ராஜன் சொன்னது போல் நிலங்கள் சாகுபடி செய்யும் விதத்தை அறிந்துவரத் தான் அமெரிக்கா சென்றால் என்ன? அங்கு ஒரே அளவு பூமிக்கு நம்முடையதை விடப் பத்து மடங்கு அல்லவா வரும்படி கிடைக்கிறதாம்! “உன்னைப்போல் படித்த மிராசுதார் தான் போக வேண்டும். உனக்கு மட்டுமன்றி உன் தேசத்திற்கே உபகாரம் செய்தவன் ஆவாய்” என்று அவன் சொன்னது காதிலேயே ஒலித்துக் கொண்டிருந்தது. பணத்திற்கு ஆக்ஷேபம் செய்ய இப்பொழுது தந்தை கூட இல்லை. கடைசியில் அமெரிக்கா போவதென்று தீர்மானித்தான். புறப்படும் வரையில் தான் போவதைப் பற்றி எவருக்கும் தெரிவிக்கக் கூடாதென்று எண்ணினான். பிரயாண ஏற்பாடுகளெல்லாம் ரகசியமாகவே செய்து வந்தான்.
புறப்படும் தினத்தன்று பாட்டியிடம் விஷயத்தைத் தெரிவித்தான். பாட்டி அவன் போவதற்குத் தடை யொன்றும் சொல்லவில்லை. நாம் சொல்லி அவன் கேட்கப் போவதும் இல்லை. நம்மால் அவனுக்கு வருத்தமும் வேண்டாம் என்று நினைத்தாள் போலும்.
அவன் அன்று மாலை புறப்படவேண்டும். மூட்டை முடிச்சுகள் கட்டி யாவும் சித்தமாயின. சில நண்பர்களைப் பார்த்து வர வெளியே சென்று திரும்பினான். அவன் வந்த போது வீட்டு வாசலில் ஒரே கூட்டமாகக் கூடியிருப்பதைக் கண்டு ஒன்றும் தோன்றாமல் எல்லோரையும் விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே கூடத்தில் ஒரு படுக்கையில் பாட்டி ஒரு மாதிரியாகப் படுத்திருப்பதைக் கண்டான் நடேசு. கைகால் பதற கண்களில் நீர் பெருக ராஜுவை நோக்கி, “பாட்டிக்கு என்ன?” என்று கேட் டான்.
வைத்தியர் நாடிப் பரீக்ஷை செய்வதை நிறுத்திவிட்டு நடேசு பக்கம் திரும்பினார். “திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. தாங்கவில்லை. வயசும் ஆய்விட்டதோன்னோ” என்று சொல்லித் தலையை அசைத்தார்.
நடேசுவுக்குத் தான் கேட்பது நிஜம் என்று நம்பக் கூடவில்லை. சிறிது நேரம் அவன் திகைத்து நின்றான். தன் பாட்டி சாகக்கூடும் என்கிற எண்ணமே அவன் மனத்தில் இதுவரையில் தோன்றியதில்லை. “பாட்டி போய் விட்டாள்; எனக்கு நீயும், உனக்கு நானுந்தான் இவ்வுலகில்” என்று ராஜு கதறிக் கொண்டே நடேசுவைக் கட்டிக் கொண்டு அழுத பின்பே நடேசுவுக்குத் தன் நினைவு வந்தது. பாட்டி நிஜமாகவே இறந்துவிட்டாள் என்பதை உணர்ந்தான். அப்பொழுது கடிகாரத்தில் மணி ஆறு அடித்தது. அதே சமயந்தான் அவன் புறப்பட இருந்ததும். “பாட்டி, நான் போகக் கூடாதென் பதற்காகவா இந்த உபாயம் தேடினாய்? நீ சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிற பயமா?” என்று புலம்பினான்.
பாட்டிக்கு நடேசு மேல் ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் அவன் எந்த விதத்தில் உயர்வாக வந்தாலும் பட்டிக்காட்டில் மிராசுதாராய் உட்கார்ந்திருக்கும் ராஜு மனவேதனைப் படமாட்டானா? அத்தகைய நிலைமை ஏற்படுவது பாட்டிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இப்பொழுது நடேசுவோ அவளையும் மீறிச் செல்வதாயிருந்தான். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவள் ராஜு மீது வைத்திருந்த தனி அபிமானம் தன்னையும் அறியாமல் அவளை உயிர்விடச் செய்தது போலும்!
– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.
– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.