பாடுகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2025
பார்வையிட்டோர்: 402 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு பத்து மணி 

ஒரு யூரியா பைக்குள் சில பொருள்கள், கையில் இரண்டு வெடிப் பெட்டிகள் சகிதம் அப்போதுதான் வேதா வீட்டிற்கு வந்தார். 

இன்னும் இரண்டு மணித்தியாலயங்கள் தான் இருக்கின்றன. பன்னிரண்டு மணிக்கு. 

மனுக்குலத்தின் மீட்புக்காக சிலுவையில் மரித்து போன யேசுநாதர் – பிறந்த நேரம் நத்தார். 

“குட்டி…” முற்றத்தில் நின்றபடி தனது பேரனைக் கூப்பிடுகின்றார். அவர் எங்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தாலும், முதலில் பேரனைக் கூப்பிவார். அவனுக்காக ஏதாவது கொண்டும் வருவார். 

”குட்டி'” – இது அவனது செல்லர் பெயர் அவனது பிறப்புச் சாட்சிப்பத்திரத்தில் யூட் என்ற பெயர் குறிக்கப்பட்டிருந்தாலும் இந்த வீட்டிலுள்ள அனைவருமே அவனை ‘குட்டி’ என்று தான் செல்லமாக அழைக்கின்றனர். 

வேதாவுக்கு ஒரேயொரு மகன், அந்த மகனுக்கு மூன்று பிள்ளைகள், அதில் இருவர் பெண்கள், இளையவன் தான் யூட் அதனால் தான் அவன் மிகவும் செல்லமாக இருந்தான். 

“தாத்தா…” உள்ளே நின்ற யூட், வேதாவின் குரல் கேட்டு ஓடி வந்து கதவைத் திறக்கின்றான். 

வேதா அவனுக்காக வாங்கி வந்த வெடிப் பெட்டிகளை அவனிடம் கொடுத்து விட்டு நுழைக்கின்றார். 

வீட்டின் முன் பக்கத்து மூலையில் அவர் கண்ட காட்சி… 

வேதா உண்மையிலேயே திகைத்துப் போய் விட்டார்…! பதினொரு வயதுச் சிறுவனான யூட்டுக்கு இவ்வளவு கலையுணர்வா…? அவரால் மட்டுமல்ல எவராலுமே நம்பவே முடியாது தான்! 

ஆனால் யூட் தான் அதனைச் செய்தான். 

ஒரு மேசையில், புல்லோடு வெட்டி எடுக்கப்பட்டு மண் கட்டிகளை ஒழுங்காக அடுக்கி புற்றரை போலாக்கி, அதன் நடுவே தடிகளால் ஒரு மாட்டுக் கொட்டிலை அமைத்து அதன் மேற்பக்கத்தை வைக்கோலால் மூடி அதன் கீழ் யேசு பாலனின் சிலையையும் அத்தோடு சேர்த்து யேசுவின் தாய், தகப்பன், மூவிராசர்கள், இடையர்கள், சம்மனசுகள் என்பவர்களின் சிலைகளையும் வைத்து அந்தச் சிலைகள் ஐந்தோ ஆறு ஆடுகளின் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. 

யேசு பாலன் மாட்டுக் கொட்டிலில் தான் பிறந்தார். அந்தக் காட்சியைத் தான் யூட் சித்திரித்திருந்தான். 

நத்தார் தினத்தில் அனேகமாக கிறிஸ்தவர்களின் வீடுகளில் காணக்கூடிய காட்சி தான். இருந்தாலும் அந்த அமைப்பிலுள்ள கலையுணர்வு! 

வேதா ஒரு கவிஞன், அவரது கவியுள்ளம்… அந்தக் காட்சியில் ஒன்றிப் போய் விட்டது. 

‘குட்டி…’யூரியா பையை கீழே வைத்தப்படி அழைக்கின்றார். 

“என்ன தாத்தா…? 

“நீங்கள் தான் இதைச் செய்தீங்களா…?” 

“…நான் தான் தாத்தா செய்தன்…” 

…வதனாவும், சோபாவும் உங்களுக்கு உதவி செய்ய வில்லையா…?” யூட்டின் மூத்த சகோதரிகள் இருவரும் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் வேதாவுக்கு. 

“இல்லை தாத்தா…” 

வேதா அங்கிருந்த கதிரையில் அமர,யூட் ஓடி வந்து அவரது மடியில் அமர்ந்து கொள்கிறான். 

“மேரி…”-வேதா தனது மனைவியை அழைக்கின்றார். 

“என்னப்பா…” குசினிக்குள் ஏதோ பலகாரம் செய்து கொண்டிருந்த மேரி குரல் கொடுக்கின்றாள். 

‘குட்டியின்ரை பாலன் பிறப்பு சோடினையை பார்க்கயில்லையா…” 

“எப்படியிருக்கு…” 

“…உங்கடை பேரன் தானே கலையுணர்வு இல்லாமல் போகுமா…? – மேரி யூட்டின் திறமையை பாராட்டிக் கொள்வதுடன் தனது கணவனின் கலையுணர்வையும் சேர்த்துப் பாராட்டிக் கொள்கின்றாள். 

வேதா – 

அவரது முழுப் பெயர் வேதராசா சகலருமே வேதா என்று தான் அமைப்பார்கள். 

சிவந்த – மெலிந்த உடல், கணக்கான உயரம், கவர்ச்சியான தெத்துப்பல், தினசரி ‘ஷேவ்’ செய்து முகம் புனிதமாகவே இருக்கும். மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் விரிந்த காது, வயது எழுபத்தெட்டு இருந்தாலும் இன்றைய இளம் சந்ததியினரை விட மிகவும் கூர்மையான பார்வை… 

இடமறிந்து அளவோடு பேசுகின்ற பண்பு 

இவர் தேசிய தினசரிப் பத்திரிகை நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றாார். 

“தாத்தா…” 

“யேசுபாலன் பிறக்கிற நேரம் வந்த உடன் இந்த வெடிப் பெட்டியை சுடுவமா?…” 

“ஓம்” இது முடிஞ்சாப் பிறகு நாளைக்கும் வெடிப்பெட்டி வாங்கித் தாறிங்களா…’ 

யூட்டின் எந்த வேண்டுகோளும் இதுவரையில் நிராகரிக்கப் பட்டதில்லை! 

யூட் பெரும்பாலும் வேதாவின் தோற்றத்தையே ஒத்திருந்தான் மிகவும் அழகானவன். படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரன். இந்த வருஷம் மூன்றாம் வகுப்பில் முதலாம் பிள்ளையாகச் சித்தியடைந்திருக்கிறான் ஒன்பது வயதுச் சிறுவன். 

“தாத்தா…” 

“என்ன குட்டி” யேசுபாலன் பன்னிரண்டு மணிக்குத் தான் பிறப்பாரெண்டு எங்கடை ரீச்சர் சொன்னவ உண்மையா…” 

‘உண்மைதான்..’ 

”பன்னிரண்டு மணி வந்தவுடன் எனக்குச் சொல்லுறீங்களா…” இரவு நேரம் மணிக்கூட்டைப் பார்த்து நேரத்தைக் கணிப்பிட்டுக் கொள்ள, அவனால் முடியாது. அதனால்தான் இப்படிக் கேட்கிறான். 

”பன்னிரண்டு மணி வந்தவுடன் எங்கடை கோயிலில் மணி கேட்கும்…” 

கோயில் மணி அடிக்கிற சத்தம் கேட்டவுடன் வெடி சுட்டுப் போட்டுக் கோயிலுக்குப் போவம்… யூட் கேட்கிறான். 

“குட்டி…” “என்ன தாத்தா…” 

“உங்கடை ரீச்சர் யேசுபாலனைப் பற்றி வேற என்ன சொல்லித் தந்தவ…? 

யூட் யேசுவைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை அறியவே வேதா இப்படிக் கேட்கின்றார். 

“தாத்தா…” யூட் இப்படித் திடீரென்று அழைத்ததும் ஏதோ ஒரு ஆச்சரியமான கேள்வியை அவன் கேட்கப் போகிறான் என்பதை வேதா தீர்மானித்துக் கொள்கின்றார். 

“என்ன குட்டி…” 

“….யேசுபாலனை வெட்டிக் கொலை செய்யிறதுக்காக ஒரு அரசன் தேடித் திரிஞ்சானாமே உண்மையா…?” 

”உண்மை தான்…” 

“பிறகு எப்படித் தாத்தா யேசு பாலன் தப்பினார்” 

வேதாவின் தாடையைப் பிடித்தபடி யூட் கேட்கிறான். அந்தப் பிஞ்சு முகத்தில் பரிதாபம் கலந்த ஆவல் உணர்வு நிரம்பி வழிகின்றது. 

“அவர் எப்படித் தாத்தா யேசு பாலன் தப்பினார்” 

“அதுக்கிடையில் மணி அடிச்சுப் போட்டுது அதால ரீச்சர் சொல்லயில்லை…” 

யேசு பாலனை கொல்லுறதுக்காக அரசன் தேடித் திரிஞ்சான்… இதையறிந்த யேசுபாலனின் தாயும் தகப்பனும் யேசுபாலனையும் தூக்கிக் கொண்டு ஒழிச்சிட்டினம். அதுக்குப் பிறகு அந்த நாட்டைவிட்டு ஓடி வேறை நாட்டுக்குப் போட்டினம். அந்த அரசனால் யேசு பாலனை கொல்ல முடியாமல் போச்சு…” வேதா, யூட்டுக்கு விளங்கக் கூடிய வகையில் மிகவும் இலகுவாகக் கூறுகின்றார். 

யூட் என்னத்தை நினைத்துக் கொண்டானோ திடீரென்று அவன் முகம் சோர்ந்து… வாடி…. 

பலமாகச் சிந்திக்கின்றான்… 

யூட்டுக்குப் பதில் கூறிய வேதா, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலண்டரைப் பார்க்கின்றார். இதே வருடம், தை மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளாக உதிர்ந்து இப்பொழுது – சில தாள்கள் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. 

அந்தக் கலண்டர் மட்டையிலுள்ள படம்.

அது யேசு நாதரின் உருவம். 

உடலெல்லாம் குருதி வடிகின்ற காயங்கள், ஒட்டிய வயிறு, புடைத்து நிற்கும் மார்பெலும்புகள், தலையிலே இறுக்கப்பட்ட முள்முடி, கைகளும், கால்களும் சிலுவையில் இறுக்கப்பட்ட நிலை.. 

‘மனுக்குலத்தின் மீட்சிக்காகச் சிலுவையில் மரித்த மகான் வேதாவின் இதயம் இரக்க உணர்வினால் கசிகின்றது. 

“தாத்தா”…யேசுவின் படத்தில், தன்னை மறந்திருந்த வேதாவை யூட் அழைக்கின்றான். 

“என்ன குட்டி”… 

“…நீங்கள் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடினது போல் தானே… யேசுபாலனையும் அவற்றை அப்பா தூக்கிக் கொண்டு ஓடியிருப்பார்… 

…நாங்களெல்லாம் காட்டுக்குள்ள ஒழிச்சுக் கிடந்தது மாதிரி தானே அவைகளும் ஒழிச்சுக் கிடந்திருப்பினம்… 

…நாங்கள் அங்கையிருந்து இங்கை ஓடியது போல தானே அவையளும் அந்த நாட்டை விட்டு வேற நாட்டுக்கு ஓடியிருப்பினம்…” 

‘யூட் கரகரத்த குரலில் கேட்கிறான். அவனது ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பிரசவிப்பதை அவன் முகம் கோடிட்டு காட்டுகின்றது. 

யூட் இப்படியயொரு கேள்வியைக் கேட்பானென்று வேதா எதிர்பார்க்கவில்லை. 

வேதாவை அறியாமலே அவனது கைகள் யூட்டை இறுக அணைத்துக் கொள்கின்றன. 

உலகம் புரியாத சிறுவனின் கேள்வி -ஆனால் உலகளாவிய சம்பவத்தை உள்ளடக்கிய கேள்வி. 

…’எங்களைப் போல தான் ஓடியிருப்பார்கள்… 

…’எங்களைப் போல தான் ஒழித்திருப்பார்கள்… 

…’எங்களைப் போல தான் ஓடி வந்திருப்பார்கள் 

கிட்டத்தட்ட பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த யேசுபாலனின் வாழ்க்கைச் சம்பவம்… 

‘கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த நமது வாழ்க்கைச் சம்பவம்… அடக்கப்பட்ட மக்களின் அடிமைப் போக்கும் 

…இன்னமும் அப்படியே தான் இருக்கின்றதா? 

வேதாவின் சிந்தனைத் திரிகையில் இடப்பட்ட பிரச்சினை உழுந்தைப் போல் அரைக்கப்படுகின்றது. 

எண்பத்து மூன்றாம் ஆண்டு, ஜூலை மாதம், இருபத்து மூன்றாம் திகதி… அப்போது யூட்டுக்கு ஐந்து வயது. 

அப்போது – யூட்டின் பெற்றோரும் சகோதரங்களும் யாழ்ப்பாணத்தில் இருக்க, யூட்டும் வேதாவும், அவர் மனைவியும் திருகோணமாலையில் இருந்தனர். 

அந்த நாள் 

அந்த நாளை யாராலுமே மறக்க முடியாது. இரத்தப் பரப்பில் – மனித உயிர்த் தூரிகைளால் வரையப்பட்ட புதியதோர் அத்தியாயம்! 

தும்பிகளின் தலையைக் கிள்ளி விட்டு அந்த உடல்களின் துடிப்பின் வேடிக்கை பார்க்கின்ற சிறுவர்களைப் போல் – விஸ்வரூப மெடுத்த அதிகாரம் நம்மவர்களின் தலையைக் கிள்ளி விட்டு… வேடிக்கை பார்த்தது. 

திருகோணமலை உட்படச் சகல பகுதிகளும் இதே நிலை… 

தேசியத்தின் நாணயக் கயிறு… 

காலனின் பாசக் கயிறாகிய நாள்…! 

வேதாவும் மேரியும் யூட்டை தூக்கிக் கொண்டு காட்டுக்குள் ஓடினர். அவர்களோடு இன்னும் எத்தனையோ பேர்!… 

காட்டுக்குள் வசிக்கும் பயங்கர மிருங்கள் – அனைகளுக்குக் கூட இந்த மக்களின் அவலநிலை புரிந்திருக்க வேண்டும் – இவர்களை அவை தீண்டவில்லை! 

இப்படியே பல நாட்கள் காட்டில் கிடந்து. தவித்து ஒருவாறு, அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துவிட்டன. 

இதைத் தான் யூட் கேட்கிறான்! 

அந்தச் சிறுவனால் கூட அந்தச் சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை! 

யூட்டின் கேள்விக்கு பதில் கூறாமல் வேதா மௌனமாக இருக்கின்றனர். 

‘தாத்தா…’யூட் திரும்பவும் வேதாவை அழைக்கிறான். 

‘என்ன குட்டி…’ கேட்ட கேள்வியை விட்டு இப்போது புதியதொரு கேள்வியை அவன் கேட்கிறான். ‘யேசு எப்படிச் செத்தார்’ இதுதான் அந்தக் கேள்வி. 

வேதா சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலண்டர் மட்டையில் உள்ள படத்தைக் காட்டி ‘உப்பிடித்தான் செத்தார்’ என்று கூறுகின்றார். 

யூட்டினால் அந்தப் படத்தைப் பார்த்துச் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

“யேசுவைப் புடிச்சு, அடிச்சுக் காயப்படுத்தித் தலையிலே முள்ளுகளால் குத்தி, சிலுவையில் கிடத்தி கையையும் காலையும் ஆணியால் இறுக்கித் தான் கொலை செய்தவை…” 

வேதா விளக்கம் கூறுகின்றார். 

யூட் திரும்பவும் அசந்து போயிருக்கின்றான். 

சில வினாடிகள் வேதாவின் மடியின் இருந்தவன் திடீரென இறங்கி ஒரு கதிரையை இழுந்து அதன்மேல் ஏறிநின்று கலண்டரை எடுக்கிறான். 

வேதாவுக்கு எதுவுமே புரியவில்லை 

கலண்டரை எடுத்தவன் கதிரையால் இறங்கி நின்று கலண்டர் மட்டையிலுள்ள படத்தை மிகவும் அவதானமாகப் பார்க்கின்றான். 

“குட்டி…” 

“என்ன தாத்தா…” 

“என்ன பார்க்கிறீங்கள்…” 

‘யேசுவின் கண்கள் தோண்டப்பட்டிருக்கா என்று பார்க்கிறன் தாத்தா…” 

யுட்டின் ஒவ்வொரு வார்த்தையும ஈட்டியால் வேதாவின் செவிப்பறையை குத்துகின்றன. 

எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் இருத்தி மூன்றாம் திகதி… 

…தும்பியின் தலைகளைப் போல்… மனிதத் தலைகள்! றம்புட்டான் பழத்தோலுக்குள்ளிலிருந்து தசை நிறைந்த கொட்டை பிதுங்குவது போல் மனிதக் கண்முழிகள் பிதுங்கி… 

“குட்டி… யேசுவின் கண்களை அவர்கள் தோண்டவில்லை..” வேதாவின் இரத்தம் கசியும நாக்கு வார்த்தைகள் உச்சரிக்கின்றது. 

“அப்ப இருந்த அரசன் கொஞ்சம் நல்லவன் அதுதான் யேசுவின்ரை கண்களைத் தோண்டாமல் விட்டான் இல்லையா தாத்தா…”யூட் பெருமூச்சோடு கேட்கிறான். 

சரியாகப் பன்னிரண்டு மணி 

மனித குலத்தின் மேய்ப்பனான யேசுபாலன் பிறந்த நேரம் – தேவாலய மணியின் நாதக் கூர்கள் இருளின் அமைதியைக் கிளித்து செவிப்பறைகளில் குத்துகின்றன. 

”குட்டி மணியோசையைக் கேட்டு விட்டான் 

நேரம் வரும் வரை 

பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த அவன் நேரம் வந்து விட்டதால் 

பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு விட்டான். 

இனிமேல்? 

வெடி தான். 

– முரசொலி, 21-12.1986.

– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *