பாசத்தின் விலை





(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாடி அறையில் கட்டிலில் படுத்திருந்தாள் பிரேமா, அவள் முகம் வெளுத்துச் சோகையாக இருந்தது. கை கால்கள் குச்சியாக உருமாறிப் போயிருந்தன. ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

”மன்னி” என்று உமா அழைக்கும் குரல் கேட்ட பின்பே திரும்பினாள் அவள்.
“வா உமா, நீ மட்டும்தான் வந்திருக்கியா?”
“ஆமாம்;ராஜு எங்கே போயிருக்கான்?”
“டாக்டரைப் பார்த்து விட்டு வரதா சொல்லிட்டுப் போனார், மழையிலே வசமா மாட்டிண்டுட்டார் போல இருக்கு” என்று பதிலளித்த பிரேமாவின் மனதில் ‘என்ன பெண் இவள்’ என்ற கசப்புணர்ச்சி தோன்றியது. உடல்நிலை சரியில்லாதவளிடம் ‘உன் உடம்பு இப்போ எப்படி இருக்கு?’ என்று கேட்க வேண்டும் என்ற நாகரிகம் கூடத் தெரியாதவளாக இருக்கிறாளே என்று நினைத்த போதே அது தெரியாத்தனமா அல்லது அகம்பாவமா என்றும், தோன்றியது.
வரும்பொழுதே தன் கணவனைத் தேடுகிறாள் என்றால், அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். காரணமில்லாமல் தன் கணவனைப் பற்றி விசாரிக்க மாட்டாள் என்று நினைத்துக் கொண்டாள் பிரேமா
“என்ன விஷயம் உமா. அண்ணாவை அவசரமாப் பார்க்கணுமா?”
“ஆமாம் மன்னி” என்ற உமா சிறிது தயக்கம் காட்டினாள், பிறகு “அண்ணா கிட்டச் சொல்லு மன்னி, இவருக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு” என்றாள்.
“அப்படியா ரொம்பச சந்தோஷம் உமா'” என்றாள் பிரேமா.
“ஆனா அதுக்கு டிபாளிட் ஐநூறு ருபாய் கட்டணுமாம். ராஜுவைத்தான் கேட்க வந்தேன்.”
“ஓ. அப்படியா?” என்ற பிரேமா மௌனமானாள்.
“ராஜு கிட்டச் சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணித் தரச் சொல்லு மன்னி, நான் வரட்டுமா?”
திரும்பி மாடியை நோக்கி நடந்தாள் உமா, அப்போதும் பிரேமாவின் உடல்நிலையைப் பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. பிரேமா வருந்தவில்லை. இது அவளுக்குப் பழக்கம்தான். அவளுடைய மாமனார் முதல் கடைசி மைத்துனன் கோபு வரை எல்லோருமே தங்களுக்குத் தேவை ஏதாவதிருந்தால் மட்டுமே மாடிக்கு வருவார்கள். அப்போது ராஜு இருந்து விட்டால் அப்படியே அவனைப் பார்த்துப் பேசிச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள். அறைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
மாமியார் மங்களம் மட்டும் தினமும் காலையில் ஒரு முறை வந்து கடனே என்று பார்த்துவிட்டு, “ராத்திரி தூங்கினியா?” என்று ஒரு முறை ஒப்புக்கு விசாரித்துவிட்டு “கீழே காரியம் அப்படி யப்படியே கிடக்குடி அம்மா, சித்தே இப்படி உட்கார நேரமில்லை” என்று புலம்பி விட்டுப் போவாள். சிறிது நேரத்தில் கீழே ஹாலிலிருந்து கேட்கும் இரைச்சலையும். மகிழ்ச்சியையும், ஆரவாரம் கலந்த பேச்சுக் குரலையும் கேட்டுத் தன்னுள் புழுங்கிப் போவாள் பிரேமா. அவள் ராஜுவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டில் துழைந்தபோது நன்றாகத்தான் இருந்தாள். மாமனார் மாமியார் எல்லோரிடமும் பயபக்தியோடும் மரியாதையோடும் நடந்து கொண்டதால் அவர்களும் திருப்தியை அடைந்தனர். நாத்தனார்கள் உமா, ராதாவிடமும் மைத்துனன் கோபுவிடமும் அன்பைக் கொட்டினாள். ஆனால் எல்லாம் ஆறு மாதம்தான்.
உமாவுக்குத் திருமணம் நடந்தது. பம்பரமாகச் சுழன்றாள் பிரேமா, மாடியில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இறங்கியிருந்தனர். சம்பந்தி வீட்டாரின் தேவைகளைக் கவனித்து விட்டு அவசரமாகக் கீழே இறங்கி வர படியில் கால் வைத்த பிரேமா சம்பந்தி வீட்டாரில் ஏதோ ஒரு குழந்தை உரித்துப் போட்டிருந்த வாழைப் பழத்தோலைக் கவனிக்காமல் காலை வைத்து விட்டாள்.
அவ்வளவுதான். அவள் கண் விழித்தபோது நர்ஸிங் ஹோமில் தான் இருப்பதை உணர்ந்தாள். உடலை அசைக்க முடியவில்லை. எங்கெங்கெல்லாமோ வலித்தது. படுக்கையில் புரண்டு கூடப் படுக்க முடியவில்லை. டாக்டரும் கொஞ்சம் கூட உடல் அசங்கக் கூடாது என்று கடுமையாக உத்தரவு இட்டிருந்தார். அவள் என்றைக்கும் படுக்கையோடே காலம் கழிக்க வேண்டும் என்பது இறைவன் தீர்ப்பு.
ஒரு மாதம் கழித்து ராஜு அவளை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபடி வீட்டுக்குக் கொண்டு வந்தபோதுதான் வீட்டில் மட்டு மல்லாது, எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டிருந்த மாறுதலையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
உமா புக்ககம் போயிருந்தாள்.
மாடி போர்ஷனில் குடியிருந்தவர்கள் காலி செய்து கொண்டு போயிருந்தார்கள். மாடி அறையில் அவளுக்காக ஒரு கட்டில் போடப்பட்டு அவளை ஒரு ‘நீ ஒரு நிரந்தர நோயாளி’ என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. கட்டிலுக்கருகில் அவளுக்குத் தேவையான உடைகள், சாமான்கள் ஒரு சின்ன அலமாரியில் வைத்து அவளுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கப்பட்டிருந்தன.
ராஜு தன்னால் இயன்றவரை அவளது தனிமையைப் போக்க முயற்சி செய்வான். வெளியில் வேலைக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற பொழுதை யெல்லாம் அவன் பிரேமாவுடலேயே கழித்துக் கொண்டிருந்தான். அதனாலேயே அவனுக்குத் தன் தாயாருடனோ சகோதரிகளுடனோ அளவளாவவோ அவர்களுடைய ரசனைகளில் பங்கு கொள்ளவோ முடியாமல் போயிற்று.
மனைவியின் மேல் அவன் காட்டிய இந்த அதிகப்படியான கவனம் மற்றவர்கள் மனதில் ஒரு பொருமையைத் தூண்ட தங்கள் பிள்ளை அடியோடு மாறிவிட்டதாக பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் புலம்பினர். அவனை அவ்வாறு தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு விட்டதாக எண்ணி பிரேமாவின் மேல் அவர்கள் கோபம் திரும்பிற்று.
படுக்கையிலேயே வாழ்ந்து கொண்டிருந்த பிரேமாவுக்கு இரண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லை, லேசான காய்ச்சல் போலத் தான் முதலில் ஆரம்பமாயிற்று. ஆனால் குளிரும் ஜுரமும் அதிகமாகக் கண்கள் ஜுர வேகத்தில் சிவந்து உதடுகள் காய்ந்து போயின. முதலில் அவள் ராஜுவிடம் இதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அன்று இரவு அந்த ஜுரமே அவளை அவனிடம் காட்டிக் கொடுத்தது.
“பிரேமா” என்று ஆர்வத்தோடு அழைத்துக்கொண்டு வந்த ராஜுவின் குரலைப் புரிந்து கொள்ளக்கூட அந்த ஜுரம் அவளை அனுமதிக்கவில்லை. சட்டென்று அருகில் வந்து அவளைத் தொட்டுப் பார்த்த ராஜா திடுக்கிட்டான். உடம்பு நெருப்பாகக் கொதித்தது. அவன் மனமும் அதே போல் கொதிக்க அதன் வெம்மையை அவன் மங்களத்திடம் வாரி வீசினான்.
“மாடியிலேயும் ஒரு மனுஷி இருக்காங்கிறது உங்க எல்லோருக்குமே மறந்து போயிடுத்தா? தன் நினைவு இல்லாம அவ துவண்டு கிடக்கிறது உங்க யாருக்காவது தெரியுமா?”
மங்களம் குத்தலாகப் பேனெள், ”எனக்கு உடம்பு சரியில்லேன்று சொல்லக் கூட உன் பெண்டாட்டியாலே முடியலையா? இடுப்பு தான் ஒடிஞ்சு போச்சு. நாக்குமா போயிடுத்து?”
அவர்களிடம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த ராஜு அடுத்துச் செய்யவேண்டியதை உடனே கவனித்தான். இரண்டு நாட்களாக இரவும் பகலும் கண் விழித்து அவளைக் கவனித்துக் கொண்ட பின் இன்று அவளுக்கு ஜுரம் இல்லை. டாக்டரைப் பார்த்து அவள் உடல்நிலையைச் சொல்லி விட்டு வரப் போயிருந்தான்.
கீழே பேச்சுக் குரல் கேட்டது.
“என்ன ராஜு இந்தக் கொட்டற் மழையிலே எங்கே போயிட்டு வரே?”
உமா தான் கேட்டாள்.
“டாக்டர் கிட்டே போய் பிரேமாவோட உடம்பைப் பத்திச் சொல்லிட்டு வந்தேன்.”
மாடி ஏறப் போனவளை “உமா உன்னைப் பார்க்கத்தான் முக்கியமான விஷயமா வந்திருக்கா” என்ற மங்களத்தின் குரல் தடுத்து நிறுத்தியது.
“என்ன உமா விஷயம்?”
“ஐநூறுரூபா அவசரமா வேணும் ராஜு’ உமா சட்டென்று முன் பீடிகை எதுவுமில்லாமலே கேட்டு விட்டாள்.
சுள்ளென்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான் ராஜு ‘எதற்கு’ என்று கூடக் கேட்காமல், “இப்போ எங்கிட்டே இல்லே உமா” என்று சொல்லிவிட்டுப் படி ஏறினான்.
“நான் அப்போவே சொன்னேனே, அவ்வளவு சட்டுனு சரி தரேன்னு அவன் சொல்லிட முடியுமா? மன்னி கிட்டச் சொல்லி அவ அப்ரூவ் பண்ணி சாங்ஷன் ஆர்டர் வாங்க வேண்டாமா?”
கொஞ்சம் கூடத் தயக்கமோ பயமோ இல்லாமல் தன்னைப் பற்றி விமரிசித்துக் கொண்டிருந்த உமாவுடைய பேச்சு எழுப்பிய கோபத்தில் “உமா யூ ஷட்-அப், பிரேமாவைப் பத்திப் பேச உனக்கு ஒரு தகுதியும் கிடையாது.” என்று எரிந்து விழுந்துவிட்டு மேலே போனான் ராஜு.
“பார்த்தியா அம்மா பார்த்தியா?” என்று உமா பொருமுவதும். “ஏம்மா கூடப் பிறந்த தங்கை மேலே அவனுக்குக் கொஞ்சமாவது பாசம் இருக்கா? ஒரு ஐநாறு ரூபா நான் பெற மாட்டேனா என்னைவிட நேத்து வந்த பெண்டாட்டிதானே அவனுக்கு உசத்தியாப் போயிட்டா” என்று உமா கோபத்துடன் கீச்சுக் குரலில் கத்துவதும் நன்றாவே மேலே கேட்டது.
டாக்டர் கொடுத்த மாத்திரைகளையும். மருந்தையும் எடுத்துக் கொண்டு சோர்வுடன் வந்த கணவனைப் பரிவோடு பார்த்தாள் பிரேமா. ஏற்கனவே மனைவியின் உடல் நிலையால் பாதிக்கப் பட்டிருக்கும் அவனிடம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் கேட்டு விட்டு அவனைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் உமாவின் மேல் அவள் கோபமடையவில்லை.
“என்ன யோசனை பண்ணிக் கொண்டிருக்கே?” என்று கேட்ட ராஜுவின் கனிவான குரல் அவள் சிந்தனையைத் திருப்பிற்று.
“நீங்க ஏன் உமா கேட்ட பணத்தைக் கொடுக்கல்லே?”
“நான் இப்போதுதானே வரேன். என் கிட்டே தற்சமயம் அவ்வளவு பணமும் இல்லே. ஏதாவது புரட்டித் தரணுமானால் கூட ரெண்டு நாள் ஆகும்.”
”உங்களுக்குத் தன் மேலே பாசமே இல்லேன்னு அவ எவ்வளவு வருத்தப்பட்டுக்கிறா கேட்டேளா” என்று உருக்கமாகக் கேட்டாள் பிரேமா.
“ஏன் பிரேமா, நீயும் அப்படித்தான் நினைக்கிறியா? பாசத்தைக் காட்டணுமானா பணத்தாலேதான் காட்டனுமா? என்னுடைய பாசத்துக்கு மதிப்பு ஐநூறு ரூபா தானா?”
ராஜுவின் குரலில் ஒலித்த வேதனை பிரேமாவையும் வருத்தப்பட வைத்தது. அவன் திரும்பியபோது மாடிப் படியருகே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தார் ராமதாதன்.
“என்ன அப்பா வேண்டும்” என்று கேட்டான் ராஜு,
“ராஜு, நீ இந்த வீட்டிலேதான் பிறந்து வளர்ந்தே, உமா, ராதாவோடதான் விளையாடினே. கோபுவைத்தான் தூக்கிச் சுமந்தே. பிரேமா நேத்திக்குத்தான் வந்திருக்கா. அவளையே பார்த்துண்டு அவ பேச்சைக் கேட்டுண்டு உன் கூடப் பிறந்த உமாவுக்கு ஒரு அவசர உதவிக்காக ஐநூறு ரூபாயைக் கொடுக்க மறுக்கறே. அப்புறம் இந்த வீட்டிலே நீ எதுக்காக இருக்கணும். பெண்டாட்டி சொல்லைக் கேட்டுண்டு பெத்தவாளையும் கூடப் பிறந்தவாளையும் அலட்சியம் செய்து அவமானப்படுத்திண்டு இங்கே கண் முன்னாலே இருக்கிறதை விட உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, எனக்கு என் பெண்டாட்டிதான் முக்கியம்னு சொல்லிட்டு அவளையும் அழைச்சுண்டு வீட்டை விட்டுக் கண் மறைவாப் போயிடலாமே. நாங்களும் கோபு ஒருத்தன்தான் எங்க பிள்ளைன்னு நினைச்சுண்டு இருந்துட்டுப்போறோம்” என்று அவனைப் பார்த்துக் கத்தியவர் அதே வேகத்தில் பிரேமாவிடம் வெடித்தார்..
“ஒரு பெண் கல்யாணம் பண்ணிண்டு புருஷன் வீட்டுக்கு வந்தா அவன் தாயார், தகப்பனார், சகோதர சகோதரிகள் எல்லாரோடேயும் அவன் சுமுகமாகவும் சந்தோஷ இருக்கவும் அவாளுக்கு அவன் செய்ய வேண்டிய கடமை, உதவிகளைச் செய்யவும் தடை செய்யக் கூடாது. அது தான் பெண்களோட லட்சணம். அதை விட்டுட்டு உன் கவனக் குறைவாலே மாடிப் படியிலேருந்து கீழே விழுந்து இடுப்பை ஒடிச்சுண்டுட்டுச் சதா காலமும் அவனை உன்னைச் சுத்தியே வரதுக்கும் உனக்கு சிசுருஷை செஞ்சுண்டு இருக்கும்படியாகவும் பண்ணி இருக்கியே அதை நினைச்சாலே என் நெஞ்சு கொதிக்கிறது. புருஷன் கையாலே சிசுருஷை பண்ணிக்கிறதுக்கு ஒரு பெண் வெட்கப்படணும். உனக்கு அந்த வெட்கம் கூட இல்லே.”
நெருப்பைக் கொட்டவே வந்தவர் போல அவர் அதே வேகத்துடன் கீழே இறங்கிச் சென்றார், அந்த வார்த்தைகளின் வெம்மை தாங்காமல் சுருண்டு போனான் பிரேமா.
“இதுக்கெல்லாம் நான் சீக்கிரமா ஒரு முடிவு கட்டிடறேன். கொஞ்சம் பொறுத்துக்கோ” என்ற வார்த்தைகள் அவனிமிருந்து ஆறுதலாக வெளிப்பட்டன.
“கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் வாழ்க்கைத் துணையா இணைஞ்சு இருக்கணும்னு எல்லாரும் ஆசிர்வாதம் பண்றா, நான் இதே போலப் படுத்துண்டா அப்போ நீ எனக்குச் செய்ய மாட்டியா? செஞ்சுக்கறதுக்கு உரிமை இருக்கிறப்போ செய்யறதிலே மட்டும் என்ன அகௌரவம் இருக்கும்? இதெல்லாம் அவாளுக்குப் புரியாது.”
பிரேமாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இரண்டே நாளில் தனி வீடு பார்த்துவிட்டான் ராஜு, தன்னுடையதும் பிரேமாவினுடையதுமான சாமான்களைச் சேகரம் செய்துவிட்டு ஸ்ட்ரெச்சரைக் கொண்டுவந்து அவளையும் அதில் மாற்றி எடுத்துக்கொண்டு கீழே வந்தபோது அப்பா வீட்டிலேயே இல்லை. அம்மா சமையல் அறையிலேயே ஒளிந்து கொண்டிருந்தாள்.
ஆறு மாதங்கள் எப்படியோ ஓடிவிட்டன.
என்னதான் கோபதாபங்கள் இருந்தாலும் மனவேற்றுமைகள் இருந்தாலும் பெற்றோருடன் இருந்தது ராஜுவுக்கு ஒரு வித திருப்தியை அளித்திருந்தது. சிறு மன வேற்றுமை காரணமாக க்ஷண நேரத்தில் அவன் முடிவெடுத்து அவர்களைப் பிரித்து வந்தது முதலில் அவனுக்குச் சரியாகவே தோன்றினாலும் நாளாவட்டத்தில் இந்தத் தனிமையும் படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கும் பிரேமாவும் அவன் மனத்திலும் ஒரு வெறுமையைத் தோற்றுவித்தன.
அவன் அன்று பெற்றோரைச் சந்திக்கப் போயிருந்தபோது ராமநாதன் வீட்டில் இல்லை. மங்களம்தான் பேசினாள்.
“ராஜு, நாங்க கிராமத்துக்குப் போறதா முடிவு பண்ணிட்டோம்” என்று அவள் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டுத்தான் போனான் ராஜு.
”ஏம்மா?” என்ற கேள்வி அவனிடமிருந்து வியப்புடன் வெளிப்பட்டது.
“இந்தப் பட்டணத்திலே எதை நம்பி இருக்கிறது? மூத்த பிள்ளைன்னு பெருமைப் பட்டுண்டு இருந்தேன். நீதான் எங்க பாசத்தையே முறிச்சுண்டு வெளியிலே போயிட்டே. அவரோட பென்ஷனும் வீட்டு வாடகையும் நாங்க சாப்பிடப் போறும். ஆனா ராதாவுக்குக் கல்யாணம் ஆகணும். இருக்கிற நிலத்தை வித்தாவது அவ கல்யாணத்தை செய்யணும். அங்கே இருந்தாத்தான் நிலம் பேசவும் செளகரியமாயிருக்கும்”.
பொருமினாலும் அம்மா மறைமுகமாகத் தன்னைக் குற்றம் சாட்டுவதைப் புரிந்து கொண்டான் ராஜு.
ஆனால் அதைப் பெரிதாகப் பாராட்டாதவன்போல் “என்னம்மா இப்படி யெல்லாம். பேசறே, ராதாவுக்குக் கல்யாணம் செய்ய வேண்டியதுதான். ஆனாலும் செய்ய வேறே யார் இருக்கான்னு நீ போறது சரியாயில்லே, ஏன் நான் இல்லையா? என் தங்கைக்கு நான் பண்ண மாட்டேனா?”
“அதுதான் தெரிஞ்சுதே. உமா தன் புருஷன் வேலைக்கு டிபாசிட் கட்டறதுக்காக உன்னை ஐநூறு ரூபாதான் கேட்டா, அதைக் கொடுக்க உனக்குத்தான் மனசில்லையோ, உன் பெண்டாட்டிதான் தடுத்தாளோ, அதுவே பெரிய ரகளையா மாறிப்போய் நீ பொண்டாட்டிதான் முக்கியம்னு எங்க எல்லாரையும் உதறிட்டுப் போயிட்டே”
ராஜுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“உமா மாப்பிள்ளைக்கு டிபாஸிட் கட்ட பணம் வேணும்னு என்கிட்டே சொல்லவே இல்லையே. அப்படிச் சொல்லியிருந்தா எப்படியாவது முயற்சி பண்ணி வாங்கிக் கொடுத்திருப்பேனே” என்று உண்மையான வருத்தத்துடன் சொன்னான் அவன்.
“ஏன் உனக்கு நிஜமாகவே தெரியாதா? பிரேமாகிட்டக்கூடச் சொன்னாளே உமா: மாடிக்குப் போய் மன்னியைப் பார்த்துச் சொல்லிட்டு வரேன்னுதானே மாடிக்குப் போனா”.
“பிரேமா எங்கிட்டே சொல்லலே இல்லையே.” என்ற வார்த்தைகள் தன்னிச்சை இன்றியே ராஜுவின் வாயிலிருந்து வெளி வந்தன.
இதுவே மங்களத்துக்குப் போதுமானதாக இருந்தது.
“பாத்தியா, இப்போதாவது தெரிஞ்சுக்கோ, தான் இடுப்பொடிஞ்சு கிடக்கோம்கிற அந்தச் சலுகையிலே உன்னோட அனுதாபத்தைப் பூராவாகத் தான் சுவீகரிச்சுண்டு, உன்னை எங்களை விட்டுப் பிரிச்சு அழைச்சுண்டு போயிட்டா. ஆனா நான் இப்போ சொல்றேன். என்னை விட்டு என் பிள்ளையைப் பிரிச்ச பாவத்தை அவ அனுபவிக்காம இருக்கமாட்டா.”
அந்த வார்த்தைகள் எல்லாமாகச் சேர்ந்து எழுப்பிய தீக்கங்குகளின் ஜ்வாலைகள் அவர்களுக்குப் பிரேமாவின் மேல் ஏற்பட்டுள்ள கோபத்துக்கும் துவேஷத்துக்கும் அவனேதான் காரணம் என்ற உண்மையையும் அவன் மனத்திலிருந்து எரித்துவிட அந்த ஜீவாலைகளின் உஷ்ணம் தாங்க முடியாமல் அதனால் வெத்து கருகிய மனத்துடன் வீட்டை அடைத்தான் ராஜு.
கணவன் மனம் சாந்தமடையட்டும் என்று பிரேமா காத்திருந்தது நடக்கவில்லை, சட்டென்று ஒரு வேகத்துடன் அவள் பக்கம் திரும்பிய ராஜு “பிரேமா, உனக்கு உன்னோட சுயநலம்தான் பெரிசா இருக்கும். இல்லையானால் அன்னிக்கு உமா தன் கணவனோட வேலைக்காக டிபாஸிட் கட்டப் பணம் கேட்டதை என்கிட்டச் சொல்லாமல் மறைச்சிருப்பியா?” என்று சீறினாள். அன்று அடுத்தடுத்துக் கேட்க நேர்ந்த வசைச் சொற்களில் அதை ராஜுவிடம் சொல்ல மறந்தது நினைவுக்கு வர “என்ன சொல்றேள்? சுயநலமா? எனக்கா?” என்று கேட்ட பிரேமா விரக்தியோடு சிரித்தாள்.
அவள் அப்படி அப்போது சிரித்தது ராஜு வின் கோபத்தை மேலும் வளர்த்தது.
“என்னடி சிரிக்கிறே? நீ சுத்தமான மனசு உடையவளா இருந்தால் அன்னிக்கே அதைச் சொல்லியிருப்பே. அதைக் கூடச் செய்யாத என்னை என் அப்பா எப்படி நம்புவார்? உன்னை மனைவியா ஏத்துண்ட பாவத்தினாலே நான் என் அப்பா, அம்மா, தங்கை, தம்பி எல்லாரோட பாசத்தையும் இழந்து போய் நிக்கறேன். மறுபடியும் நான் அதை அடையறதுக்கு உன்னாலே என்ன செய்ய முடியும்?” என்று தன் வார்த்தைகளின் கனத்தைக் கோப வெறி அழுத்திவிட பிரேமாவின் உள்ளத்தை வார்த்தைகளையே சாட்டையாக்கி வீசினான் ராஜு.
பிரேமாவுக்கு அந்த நிலைமையில் ஓர் உண்மை தெள்ளெனப் புரிந்தது. ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான். என்னதான் பெண்களைப் போல அவர்கள் நடத்துகொள்ள முயற்சித்தாலும் அந்தப் பொறுமையும் சேவை மனப்பான்மையும் அவர்களிடம் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டாள் அவள்.
இதே நிலைமை ராஜுவுக்கு ஏற்பட்டிருந்தால்… நினைவே நெஞ்சை உலுக்கியது. ஆயினும் நடந்திருக்கக் கூடியதை அவளால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அவள் அவனுக்காக மட்டுமே வாழ்ந்திருப்பாள். அவனுடைய இயலாமையை எவர் தூற்றினாலும் தன் மெலிந்த சிறகுகளைக் கொண்டே அவனை இதமாக மூடி அரவணைத்துக் காத்திருப்பாள். தன் சுற்றம் பந்தம் எல்லாரையும், எல்லாவற்றையும் விட்டு அவனுக்காக மட்டுமே அவனோடு வந்த அவளின் பெண்மையின் பண்பில் அவன் மட்டுமே நிறைந்திருப்பான். அது ஒன்றே அவள் வாழ்க்கையாகி விடும். ஆனால் இன்று…
அவன் ஆண். அவனுக்கு ஒரு பெண்ணின் மனம் இருக்க முடியாது. அவளை ஆதரிப்பது மட்டுமே அவனால் வாழ்க்கையாக நினைக்க முடியாது. அவனுக்குப் பல உறவுகள் வேண்டும். பெற்றேர், சகோதரிகள், சகோதரர்கள் எல்லோருக்கும் பிறகே கடைசியில்தான் மனைவி. மனைவி இறந்துவிட்டாலோ, விலகி விட்டாலோ, வேறு ஒருத்தி அவனுடைய அந்த உறவைப் பூர்த்தி செய்துவிட முடியும். உறவினால் ஏற்பட்ட இந்தப் பாசத்தை விட பாசத்தால் ஏற்பட்ட அந்த உறவுகள் வலிமை யானவை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டுள்ள இந்த வித்தியாசங்கள் நடைமுறையில் கசப்பானவையாக இருந்தாலும் அவற்றின் சத்தியங்கள் பிரத்யட்சமானவை. அவைகளை அவனால் இழக்க முடியாது.
‘உன்னாலே என்ன செய்ய முடியும்’ என்று கேட்ட ராஜுவின் சொற்கள் அவள் மனத்தைத் துளைத்துக் கொண்டே இருந்தது. இரவு வெகு நேரம் அவள் தூங்கவில்லை.
முகத்தைச் சேர்த்துப் போர்த்தியபடி நன்றாக ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அவள். ‘அவளும் நேற்று இரவு சரியாகத் தூங்கவில்லை போல் இருக்கிறது. நேற்று ஏற்பட்ட மன உளைச்சலில் அவளிடம் கடுமையாகப் பேசிவிட்டோம்’ என்று நினைத்து நேற்று அப்படிப் பேரியதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்த ராஜு மெதுவாகவே நடந்து சென்று அவள் முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கினான்.
“பிரேமா” என்று கனிவாக அவளைத் தொட்டவனை அந்த உடலின் சில்லிப்பு அதிர்ச்சி அடையச் செய்ய ஒரு கணம் அதிர்ந்து நின்ற பின்பே அந்த உண்மை அவன் இதயத்துக்குப் புரிந்தது. ஸ்தம்பித்துப் போய் நின்றான் அவன்.
‘உன்னால என்ன செய்யமுடியும்’ அவன் நேற்றுக் கேட்ட கேள்விக்கு அவளால் முடிந்ததைச் செய்துவிட்டுப் போய்விட்டாள் அவள். காலியாகக் கிடந்த தூக்கமாத்திரைகள் அடங்கிய புட்டி அவனைப் பார்த்துச் சிரித்தது.
– மங்கையர் மலர், 1982-10-01.