பழைய சோறு
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 1,574
(கிருபானந்த வாரியார் சுவாமிகள் சமய சொற்பொழிவில் கூறிய கதை – சிறுவர்கள் படிக்க ஏதுவாக கற்பனைப் பாத்திரங்களுடன் கூடிய கதை வடிவில்)
பூவனம் கிராமத்தில் பெரிய வீட்டின் இளைஞன் ராஜசேகரன். காலை ஒன்பது மணிக்கே அவன் வீட்டுத் திண்ணையில் அவனுடைய நண்பர்கள் குழுமி விடுவார்கள். சீட்டாட்டத்தைத் தொடங்குவார்கள். ராஜசேகரனின் மனைவி அமுதா, காபி பானங்களையும் தின்பண்டங்களையும் கொண்டு வைத்து விடுவாள் . உச்சி வேளை கடந்த மதிய நேரத்தில் ராஜசேகரனுடைய மனைவி வாசற் கதவு அருகே வந்து நின்று ‘பழையது தயாராக இருக்கிறது. சாப்பிட வாங்க’ என்று அழைப்பாள்.
ராஜசேகரன், நீங்களும் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வாங்க என்று நண்பர்களிடம் கூறி விட்டு வீட்டுக்குள்ளே போய் சாப்பிடுவான்.
இது அன்றாட காட்சியாக இருந்து வந்த நிலையில் ராஜசேகரனிடம் அவனுடைய நண்பர்களில் ஒருவன் கேட்டான் – ‘ஏம்பா , உன் மனைவியின் சமையல் எங்கள் மூக்கைத் துளைக்கிறதே தினமும். உன் மனைவி ஏன் பழையது சாப்பிட வாங்க ன்னு சொல்றாங்க உனக்கு மட்டும் பழையதா’ என்று கேட்டான்.
ராஜசேகரன் சொன்னான் – ‘இல்லையே நல்ல அறுசுவை சாப்பாடுதான் என் மனைவி எனக்கு போடுகிறாள். அவள் ஏன் பழையதுன்னு சொல்றா தெரியலையே இன்னிக்கு கேட்கறேன்..’ என்று அவன் விளக்கம் அளித்த தருணத்தில் அவனுடைய மனைவி அமுதா, வழக்கம் போல் ‘ஏங்க பழையது தயாரா இருக்கு சாப்பிட வாங்க’ என்று கணவனை அழைத்தாள்.
நண்பர்கள் கலைந்து சென்றனர். வீட்டின் உள்ளே வந்த ராஜசேகரன், மனைவியிடம் கேட்டான் –
‘விதம் விதமா சூடான சாப்பாடு தானே போடறே… ஏன் நண்பர்கள் எதிரே பழையது சாப்பிட வாங்கன்னு கூப்பிடறீங்க’
பல்வகை உணவு வகைகளை அவனுக்குப் பரிமாற எடுத்து வைத்துக் கொண்டிருந்த அமுதா கணவனின் முகத்தைப் பார்த்துப் பேசினாள் –
‘ஆமாங்க… இது நீங்க சம்பாதிச்சது இல்லையே… ஒங்க அப்பாவும் தாத்தாவும் கொடுத்துட்டுப் போனதுதானே… அதனாலதான் பழையதுன்னு சொன்னேன்.‘
பதில் பேச முடியாமல் தலை குனிந்தான் ராஜசேகரன். தன்னுடைய தவறை உணர்ந்தான். எதுவும் பேசாமல் பொழுதை வீணாக்கமல் பணம் ஈட்ட வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டான்.
(கொன்றை வேந்தனில் ஔவையார் கூறுகிறார் – ‘தேடாது அழிக்கின் பாடாய் முடியும்’)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
