பழக்கங்கள் பலவிதம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 682
சிறுவயதிலிருந்து கிராமத்து பழக்கவழக்கங்களுடன், வயதான பாட்டி, பாட்டன் வாழும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்ததின் விளைவால் தலை நகரத்தின் பழக்க வழக்கங்களுடன் ஒத்துப்போக முடியாமல் தவித்தாள், மற்றவர்களுடன் பழகுவதையே தவிர்த்தாள் சாதனா.“சினிமாவுல காட்டறதெல்லாம் கற்பனைன்னு தான் இவ்வளவு நாளா நெனைச்சிட்டிருந்தேன். இங்க வந்து பார்த்தா தான் தெரியுது இங்க நடக்கிறதத்தான் சினிமாவா எடுத்திருக்காங்கன்னு” தன்னுடன் ஒரே அறையில் தங்கி ஒரே கல்லூரியில் படிக்கும் ரினாவிடம் ஆச்சர்யமாக, அதே சமயம் ஆதங்கம் மனதில் பொங்கப்பேசினாள்.
“இப்பதானே வந்திருக்கே. வந்து ஒரு வாரத்துல இப்படி புலம்ப ஆரம்பிச்சிட்டே. ஒரு மாசமாகட்டும் பாரு….”
“அதிகமா புலம்புவேன்னு சொல்லறியா?”
“புலம்பறத நிறுத்திடுவே”
“எப்படி…?” புரியாதவளாகக்கேட்டாள்.
“ஏன்னா நீயும் இந்தக்கல்ச்சருக்கு மாறிடுவே…”
“ஐயையோ…. வாய மூடு. நெனைக்கவே கூச்சமா இருக்கு. பயமா இருக்கு. இப்படியிருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா இங்க வந்திருக்கவே மாட்டேன்”
“வேற எங்க போயி படிச்சிருப்பே….?”
“கோயம்புத்தூர்லயே படிச்சிருப்பேன்” இதைக்கேட்டு விழுந்து, விழுந்து சிரித்தாள் ரினா.
“எதுக்கு இப்படி ஏளனமா,கேவலமா சிரிக்கறே….?”
” செல் போன், யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்னு வந்ததுக்கப்புறம் இப்ப எல்லாப்பக்கமுமே கல்ச்சர் ஒரே மாதிரிதான் இருக்கு. சொல்லப்போனா கடைசி கிராமத்துல கூட ஏன் உன்னோட கிராமத்துல கூட இப்படித்தான் இருக்கும் .நீதான் வேற மாதிரி இருக்கே. ஸ்கூல் ஹாஸ்டலா…?”
“ஆமா. பிப்த்துல இருந்து ஹாஸ்டல். லீவுன்னா அம்மாவோட அம்மா வீடு. அவங்க தான் எனக்கு உலகம். போன் தனியா ஸ்கூல்ல தரமாட்டாங்க. வாரத்துக்கு ஒரு தடவை வீட்ல பேச லேண்ட் லைன் மூலமா பேச கொடுப்பாங்க….”
“அதானே பார்த்தேன். பாப்பா ஏன் வெகுளியா இருக்கான்னு”
“பாப்பாவா….?”
“ஆமா. வேற எப்படி சொல்லறது? இப்படியே இருந்தீன்னு வெச்சுக்கோ சீக்கிரத்துல மொத்தமா கதைய முடிச்சுருவானுக”
“அப்படின்னா….?”
“என் கூடவே இரு. வெளில யாரு கூப்பிட்டாலும் போக வேண்டாம். யாரு கூடவும் அதிகமா பேச வேண்டாம். ஒரு மாசத்துல உன்னை டோட்டலா நானே மாத்திடறேன்….” ரினா கூற நல்லது நடக்கப்போகிறதென நம்பியவளாய் தலையை ஆட்டினாள் சாதனா.
“என்னடி…. கிராமத்து பைங்கிளி…. எப்படி போகுது காலேஜ் லைஃப். பிடிச்சிருக்கா…?” ஒரே வகுப்பில் படிக்கும் மிதுளா கேட்டாள்.
“என்ன நடக்கப்போகுதோன்னு பயமா இருக்குடி. ஊரத்தெரிஞ்ச ரினா கூட இருக்கா. அதனால தைரியமா இருக்கேன்”
“ரினா கூட இருக்கறதுனால தான் ஜாக்கிரதையா இருக்கனம்”
“நீ என்ன சொல்லறே…?”
“அவ ஜகஜாலக்கில்லாடி. அவ உன்னை மாத்தினா பரவாயில்லை. ஏமாத்திடுவா…” இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தாள் சாதனா.
“என்ன வேர்த்திடுச்சா…? நீ PG படிக்கத்தானே இங்கே வந்திருக்கே? நான் UGல யும் அவ கூடத்தான். நாலு மாசம் ஒரே ரூம்ல அவ கூட இருந்திருக்கேன். இது வரைக்கும் UGலயே பத்து பிரேக்கப். இப்ப FBLல இருக்கா….”
“அப்படினானா…?”
“ஃபைவ் பாய்ஸ் லவ்னு அர்த்தம். ஒருத்தன காதலிச்சா ஒரே இன்கம். அஞ்சு பேர ஒரே சமயத்துல காதலிச்சா அஞ்சு இன்கம்…”
“என்னது. லவ் பண்ணறது வாழ்க்கைக்காக இல்லையா? வருமானத்துக்காகவா…?”
“அவளப்பொருத்த வரைக்கும் அப்படித்தான். இங்க நெறையப்பேரு அவளப்போலயும் இருக்காங்க. இன்னும் சில பேர் பையன் புடிக்காட்டியும் பணக்காரனா ஆல்இன்ஆல் செலவுக்கு ஒருத்தன். ஏழையா இருந்தாலும் மனசுக்கு புடிச்ச அழகான பையன் ஒருத்தன். ஆனா அவன் கிட்ட நிறைய வேலை வாங்கிடுவாளுக. காருக்கு பஞ்சரானா தேவைப்படும்னு இருக்கிற ஸ்டெப்னி டயர் மாதிரி தேவைப்பட்டா லவ் பண்ணறதுக்கு இன்னொருத்தன பிரண்ட்ஸிப் ரிலேசன்ல வெச்சுக்குவாங்க….” மிதுளா சொல்லச்சொல்ல உடல் நடுங்கியது சாதனாவுக்கு.
“என்னைப்போல ஒரே ஒருத்தன காதலிச்சுட்டு அவன் வேற பொண்ணக்காதலிச்சதால கவலைல கண்ணு வளையம் கருத்துப்போனத மறைக்க கருப்பு கண்ணாடி போட்டிட்டு உலகே மாயம்னு வீட்ல மேட்ரிமோனில பார்க்கிற எந்தப்பையனையும் புடிக்கலேன்னு சொல்லிட்டு, கல்யாணமே வேண்டாம்னு நெனைச்சிட்டு, ஸ்டிரஸ் போக்க விதவிதமா ஒரு நாளைக்கு அஞ்சு தடவ சிக்கன் ஆர்டர் போட்டு திண்ணுட்டு, தொன்னூறு கிலோ சதையத்தூக்கிட்டு திரியற பொண்ணுங்களும் இருக்காங்க”
“லவ் பெயிலியரா….? அதனால தான் நான் யாரையும் இது வரைக்கும் லவ்வே பண்ணுல தெரியுமா….?”
“பால் வடியற முகத்தப்பார்த்தாலே சொல்லிடலாம். மனசுல எதுவுமே இல்லாம எம்ட்டியா இருக்குன்னு. உன்னக்கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன். உன்னை மாத்த முடியாது. நீ, நீயாவே படிப்ப முடிச்சிட்டு திரும்பி பத்திரமா வீட்டுக்கு போயிடுவேன்னு உன்னோட தலைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லறேன். உன்ற கல்யாணத்துக்காச்சும் மறக்காம என்னை கூப்பிடு. வந்து ஒரு கட்டு கட்டணம். கோயம்புத்தூர்ல நடக்கிற கல்யாணத்துல சைவ மட்டன், சைவ சிக்கன், சைவ மீன்னு நூறு அயிட்டம் போடுவாங்கன்னு சொன்னாங்க…” மிதுளா சொல்லச்சொல்ல வாயில் எச்சில் ஊறியது சாதனாவிற்கு. அதே சமயம் ரினாவுடன் தங்குவதை விட்டு தனி அறை எடுத்து தங்க வேண்டும் என மனதில் திட்டமும் உருவானது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
