பரத்தை உபதேசம்




செந்தில்குமாருக்கு வயது ஐம்பத்தி ஒன்பது. கடந்த மார்ச் மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரில் வசிக்கிறார். மிகவும் வசதியானவர். இந்த வயதிலும் துடிப்பானவர். கற்பனை வளத்துடன்கூடிய, ரசனை உணர்வுகள் அவரிடம் அதிகம். குளிப்பது, வக்கணையாகச் சாப்பிடுவது, விதவிதமாக அயல்நாட்டு மதுவகைகளை ருசிப்பது, நிம்மதியாகத் தூங்குவது, நேர்த்தியாக உடையணிவது என்று எப்போதும் எதையும் ரசனையுடந்தான் செய்வார். எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டார். பதட்டப்படவே மாட்டார். எப்போதும் புன்னகையுடன் இருப்பார்.
இது சரி, அது தப்பு என்பதெல்லாம் அவருக்கு கிடையவே கிடையாது. தனக்கு எது சந்தோஷம் தருமோ அதுதான் சரி என்கிற ஜாதி அவர்.
அவருடைய மிகப்பெரிய பலஹீனம் பெண்கள். பெண்கள் என்றால் மனிதர் உருகிவிடுவார். மனைவியைத் தவிர இதுவரை 86 பெண்களை அனுபவித்திருக்கிறார். ஒருமுறை தொட்ட பெண்ணை அடுத்தமுறை, அவள் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் மீண்டும் தொடமாட்டார். அதுமாதிரி அவர் எதிர்கொள்ளும் புதியபெண்கள், எவ்வளவு சுமாராக இருந்தாலும் ஒதுக்கிவிடமாட்டார். அவரைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களும் அழகுதான். தான் இறப்பதற்குள் நூறு என்பது அவரது இலக்கு. இலக்கை நோக்கித்தான் அவரது தற்போதைய பயணம்.
ஆனால் அதில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அதாவது அவர் பணியிலிருந்து ஒய்வு பெற்றதும், ஏராளமான புதிய பெண்கள் செந்தில்குமாரிடம் அறிமுகமாவது இயற்கையாகவே தடைபட்டுப் போனது.
அது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அதனால் அவருடைய வேட்டை 49 திலேயே பல மாதங்களாக நின்று போனபோது அறிமுகமானவள்தான் சுகுணா.
ஒருநாள் மாலைப்பொழுதில் நட்ராஜ் தியேட்டர் எதிரே சாம்ராட் ஹோட்டலில் சாம்பார் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர் இருந்த டேபிளின் எதிரில் வந்து அமர்ந்தாள் சுகுணா. இவரையே குறுகுறுவென பார்த்தாள்.
அவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். மாநிறத்தில் இருந்தாள். வெள்ளை நிறத்தில், சாம்பல்கலர் பூக்களின் தூவலில் பளிச்சென்று புடவையணிந்திருந்தாள். தன்னை மிகவும் இளமையாக காட்டிக்கொள்வதற்காக, தலைக்கு டை அடித்திருந்தாள். கண்களிலும், முகத்திலும், உடம்பிலும் ஏராளமான மராமத்து வேலைகள் செய்திருந்தாள்.
செந்தில்குமார் முடிவு செய்துவிட்டார். இவள்தான் தன் ஐம்பதாவது இலக்கு என்று. அவளை நோக்கி புன்னகைத்தார். அவள் மிகவும் சுவாதீனமாக அவரைப் பார்த்து சிரித்தபடி, “மனே எல்லி?” என்றாள்.
“இல்லி மல்லேஸ்வரம் எய்ட்டீன்த் க்ராஸ்…மனே பர்த்தீரா? ஒப்ரும் இல்ல, நாள சஞ்சை பர்த்தாரே.”
“எஷ்டு கொடுத்தீரா?”
பேச்சின் முடிவில் இருவருக்கும் இணக்கமான புரிதல் உண்டானது. அதைத் தொடர்ந்து செந்தில்குமார் சுகுணாவை தன் காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அவள் கேட்ட தொகையைவிட அதிகமாக பணம் கொடுத்து அவளை சந்தோஷமாக அனுப்பிவைத்தார்.
அவர் அவளுக்கு நிறையப்பணம் கொடுத்ததற்கு இரண்டு காரணங்கள்.
1. அவள் அவரது ஐம்பதாவது இலக்கு;
2. தன்னால் நிறைய பெண்களை அவரின் தேகசுகத்திற்காக ஏற்பாடு
செய்துதர முடியும் என்கிற அவளின் உறுதிமொழி.
அதைத் தொடர்ந்து அவள் மூலமாக அடுத்தடுத்து மேலும் 36 பெண்களை செந்தில்குமார் இதுவரை தொட்டுவிட்டார்.
இன்று பத்தரைமணிக்கு சுகுணா அவரை சந்தித்து சந்திராநகரில் உள்ள ஒரு வீட்டிற்கு கூட்டிச் செல்வதாக ஏற்பாடு.
அதற்காக அவர் அரைமணிநேரம் முன்னாடியே, மல்லேஸ்வரம் கே.ஸி. ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு சென்று ஆர்வத்துடன் சுகுணாவிற்காக காத்திருந்தார். வந்தவேலை முடிந்ததும் அவர் இன்றுமாலை ஐந்தரைமணிக்கு கேபிஎன் வோல்வோ ஸ்லீப்பர் பஸ்ஸில் அம்மாவைப் பார்க்க திருநெல்வேலி செல்ல வேண்டும். அம்மாவுக்கு எண்பது வயது.
ஆஸ்துமா என்பதால் பெங்களூர் குளிர் ஒத்துக் கொள்ளாது. அடிக்கடி திருநெல்வேலி போய் அம்மாவைப் பார்த்துவிட்டு வருவார். அம்மா என்றால் அவருக்கு உயிர்.
மணி பார்த்தார். 10.20.
கண்டிப்பாக பத்தரை மணிக்கு சுகுணா வந்து விடுவாள். அவள் இதுவரை நேரந்தவறாமையை அவரிடம் கடைப் பிடித்திருருக்கிறாள். அது மட்டுமல்ல. அவள் தொழிலிலும் ரொம்ப நேர்மையானவள். அவள் மூலம் சென்றால் பயம் கிடையாது. போலீஸ் தொந்திரவு கண்டிப்பாக கிடையாது. அவளுடன் போனமா, பணத்தைக் குடுத்தமா, தண்ணியடிச்சமா, அவள் அறிமுகப் படுத்திய பெண்ணுடன் ஒரு அரைநாள் உல்லாசமாக இருந்தமா, காரியத்தை முடிச்சமா என்று பாதுகாப்பாக வீடு திரும்பலாம்.
என்ன கொஞ்சம் காசு ஜாஸ்தி செலவாகும் ….அவ்வளவுதான். சுகுணாவுக்கு சர்வீஸ் சார்ஜ் ஆயிரம் ரூபாய், உல்லாசமாக இருக்க உடம்பை அவுத்துக்காட்டும் பெண்ணுக்கு சுகுணாவுக்குத் தெரிந்து இரண்டாயிரம், தெரியாமல் டிப்ஸ் ஐந்நூறு, அரை நாள் வீட்டு வாடகை ஆயிரம் அது தவிர ட்ரிங்க்ஸ் அதுக்கு சைட்டிஷ் ஒரு ஆயிரம்….என மொத்தமாக குறைந்தபட்ச செலவு ஐயாயிரத்து ஐந்நூறு ஆகிவிடும். இதையே அவர் வீட்டில் முடித்துக்கொண்டால் ஒரு ஆயிரம் மிச்சமாகும். ஆனால் அதற்கு அவர் மனைவி எங்காவது ஊருக்குச் செல்லவேண்டும்.
அனால் பணம் செலவானாலும், அந்தப் புதிய அனுபவங்கள் செந்தில்குமாருக்கு பிடித்திருந்தது. உடம்பு முழுவதும் சுளுக்கெடுத்து விட்டமாதிரி ஒரு சுகம். முன்பின் தெரியாத பெண்களின் அருகாமை, அவர்களின் வித்தியாசமான உடலமைப்புகள், தனக்கு வேண்டுகிறமாதிரி இணங்கும் அவர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் அந்த நேரத்திய பாசம், கவனிப்பு, அன்பான வார்த்தைகள் என்று பல கோணங்களில் ரசனையுடன் மனதாலும், உடம்பாலும் அவர்களை அனுபவிப்பார் செந்தில்குமார்.
பணம் என்ன பெரிய பணம்….ஒரு பெண்ணின் அரவணைப்பு, அருகாமை என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? அதுவும் நூறு விதமான பெண்களுடன் புதுப்புது அனுபவங்கள் எத்தனை பேருக்கு வாய்க்கும்? என்று பெருமையுடன் தனக்குள் சொல்லிக் கொள்வார்.
சரியாக பத்தரை மணிக்கு சுகுணா வந்துவிட்டாள்.
செந்தில்குமாரைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவரது கையைப் பற்றி குலுக்கினாள். இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர்.
“உடுகியா, ஆன்ட்டியா?”
“ஆன்ட்டி.”
“எனக்கு சந்திரா லேஅவுட் எங்க இருக்குன்னு தெரியாது…நீதான் வழி காண்பிக்கணும்.”
“கவலைப் படாதீங்க. எனக்கு அவ வீடு தெரியும். அவ இருப்பது சொந்த வீட்டில். பெரிய பணக்காரி. அவளைப்பற்றி உங்களுக்கு ஒரு பிடிச்ச விஷயம் அவ தமிழ்க்காரி. தமிழும், கன்னடமும் நல்லா பேசுவா. ஆனா அவளுக்கு சட்டுன்னு கோபம் வரும். குடிக்க மாட்டா. நிறைய படிச்சிருக்கா. நிறைய விஷயம் தெரிந்தவள்.”
“அப்ப எதுக்கு இந்தத் தொழிலுக்கு வந்தா?”
“ஒருவேளை உங்களை மாதிரி ஏதாவது இலக்கு வைத்திருக்கிறாளோ என்னவோ? அது எனக்குத் தெரியாது.” சொல்லிவிட்டு பெரிதாக வாய்விட்டுச் சிரித்தாள்.
“அவ எப்படி இருந்தா எனக்கு என்ன? அவ குடிக்கலேன்னா எனக்கு செலவு மிச்சம். இவ எனக்கு 87 வது ஆளு அவ்வளவுதான். . அடுத்ததடவை நான்தான் அவளைப் பார்க்க மாட்டேனே.”
“இல்ல அவளைப்பற்றி உங்களுக்கு அப்டேட் கொடுப்பது என் கடமை.”
அடுத்த அரைமணி நேரத்தில் சுகுணா அவள் வீட்டின்முன் காரை நிறுத்தச்சொன்னதும் இருவரும் இறங்கினர்.
அது பெரிய பங்களா டைப்வீடு. வெளியே இருந்த காலிங்பெல் சுகுணாவால் அழுத்தப்பட்ட ஒரு நிமிடத்தில் அவள் வந்து அகலமான கதவைத் திறந்தாள்.
இவர்கள் உள்ளே நுழைந்ததும், அவள் கதவை உள்புறமாக பூட்டினாள்.
மூவரும் வீட்டினுள் சென்றனர். சுகுணாவும், செந்தில்குமாரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர். வீடு விஸ்தாரமாக கலைநயத்துடன் இருந்தது. ஏராளமான விலையுர்ந்த ஆன்டிக்ஸ் பொருட்கள் காணப்பட்டன.
அவள் பிரிட்ஜைத் திறந்து மூன்று கிளாஸ்களில் பான்டா ஊற்றி கொண்டுவந்தாள். சிவந்த நிறத்தில் உயரமாக, வளப்பமாக பொலிவுடன் ஒரு ரேஸ்குதிரை மாதிரி இருந்தாள். இன்று தனக்கு நல்ல வேட்டைதான் என்று செந்தில்குமார் நினைத்துக்கொண்டு அவளை நிர்வாணமாக்கி தன் மனதில் பார்த்துக் கொண்டார்.
அவளும் சோபாவில் அமர்ந்துகொண்டாள். “நீங்க தமிழர்ன்னு சுகுணா சொன்னா…” என்று பேச்சை ஆரம்பித்தாள்.
“ஆமா என் பெயர் செந்தில்குமார். எனக்கு திருநெல்வேலி. இன்னிக்கு சாயங்காலம் ஊருக்கு போறேன். அம்மாவைப் பாத்துட்டு ஒரு வாரத்தில் திரும்பி விடுவேன்.”
“ஓ எனக்கு கோவில்பட்டி. ஆனா பெங்களூர்லதான் படிச்சு வளர்ந்தேன். என் ஹஸ்பெண்டுக்கு துபாய்ல வேலை. ஆறு மாசத்துக்கு ஒரு முறைதான் என்னைப் பார்க்க வருவாரு. உங்களைப்பற்றி சுகுணா நிறைய சொல்லியிருக்கா.”
“சுகு, யூ கோ டு த பெட்ரூம் அண்ட் டேக் ரெஸ்ட்.” என்று சொல்லிவிட்டு இவரிடம் திரும்பி, “ப்ளீஸ் கம் டு த மாஸ்டர் பெட்ரூம், லெட்ஸ் ரிலாக்ஸ்” இயல்பாக செந்தில்குமாரை பெட்ரூமுக்கு அழைத்தாள்.
சோபாவிலிருந்து எழுந்து நின்று எப்போதும்போல் தன் பர்ஸைத் திறந்து சுகுணாவிடம் ஐயாயிரம் பணம் எண்ணிக் கொடுத்தார் செந்தில்குமார்.
சுகுணா, பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
அவள் செந்தில்குமாரை மாஸ்டர் பெட்ரூமுக்கு கூட்டிச்சென்று, ஏ.ஸி.யை ஆன் செய்துவிட்டு, கட்டியபுடவையுடன் அவரை கட்டியணைத்து ஆலிங்கனம் செய்தாள். வாசனையாக இருந்தாள்.
இதுகாறும் முதல் ஆலிங்கனத்தை செந்தில்குமார் தொடங்கித்தான் பழக்கம். ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக, கிசுகிசுப்பான குரலில் “உங்க பேரென்ன?” என்றார்.
“அன்னபூரணி.”
ஓ மை காட்… ‘அன்னபூரணி’ அவர் அம்மாவின் பெயர்.
செந்தில்குமாருக்கு உடம்பு பதறியது. இவளை நாம் தொடவே கூடாது என்று முடிவெடுத்து, அவளை வேகத்துடன் விலக்கினார். அவசரமாக பெட்ரூம் கதவைத்திறந்து வெளியே வந்து சோபாவில் அமர்ந்தார்.
அன்னபூரணியும் உடனே வெளியேவந்து கோபத்துடன் “ஏன் என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றாள்.
“அன்னபூரணி என் அம்மாவின் பெயர்….அதனால எனக்கு வேண்டாம்” – பவ்யமாகச் சொன்னார்.
“அதெப்பிடிடா என் வீட்டுக்குள்ள வந்துட்டு என்னிய வேண்டாம்னு நீ சொல்லுவ?” அப்படி அம்மா சென்டிமென்ட் இருக்கிறவன் பொண்டாடியைத் தவிர வேறு எவளையும் நெனச்சுக்கூட பார்க்கக்கூடாது….
உன்னோட அம்மா உன்னை வெறுமன பெத்து, வளர்த்து, ஆளாகினவ. உன் அம்மாவிடம் இருக்கிற அன்பும், பாசமும், மரியாதையும் அக்னிசாட்சியா உன்னைக் கைப்பிடித்த மனைவியிடமும் இருக்கணும். அவ உன்னோட ரெண்டாவது அம்மா.”
சத்தம் கேட்டு சுகுணா பெட்ரூம் கதவைத்திறந்து ஹாலுக்கு வந்தாள்.
“இன்பாக்ட் உன் அம்மாவைவிட, உன் மனைவியின் பாசமும், தியாகமும், ஈடுபாடும் அளப்பரியது. அம்மா என்றால் தாய்மை. முதல் அம்மா உன்னை பத்து மாதங்கள் சுமந்து ஈன்றெடுத்தடுதவள். ஆனால் இரண்டாவது அம்மா உன்னுடைய உதிரத்தை, வாரிசை பத்து மாதங்கள் சுமந்து வார்த்தெடுப்பவள்.”
“இந்த பரத்தையர் தொழில் ஒன்றுதாண்டா மனிதன் தோன்றியதும் ஆரம்பித்த முதல் தொழில். ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்கிற எல்லைகளைத் தாண்டியது. காலத்தினால் அழியாதது. ஒண்ணு சென்டிமென்ட் பார்க்காம, கில்டி பீலிங் இல்லாம நீ அனுபவி, இல்லைன்னா சுத்த ஒழுக்கமா, மடியா இரு….ரெண்டுங்கெட்டான் நிலமையில இந்த ஹிப்போக்ரடிக் பம்மாத்து வேலையெல்லாம் காட்டி அசிங்கப்படாத. நான் இப்படித்தான்னு சொல்லி தைரியமா வாழ்ந்தா என்னடா கெட்டுப்போச்சு?
“சுகுணா அவன் குடுத்த பணத்த உடனே அவன் மூஞ்சில விட்டெறி…நான் உனக்கு பத்தாயிரம் தரேன். முதல்ல அவன வெளிய போகச்சொல்லி கதவைச் சாத்து. இனிமே இந்தமாதிரி பேமானிங்களை இங்க கூட்டிவராத.”
செந்தில்குமாருக்கு ஈரச் செருப்பால் அடித்தது போலிருந்தது.