கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 5,744 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அஞ்சு பெற்றால் அரசனும் ஆண்டி என்பது அப்பாவிற்குப் பொருந்தாது.

ஐந்து பெண்களைப் பெற்றவர்தான். ஆனால் அன்பில் அரசர்! கண்களில்அருளும், உதட்டில் புன்னகையும் வற்றிப் பார்த்ததில்லை. ‘ராஜாத்தி, தங்கம், எம்முத்து, கிளி, பூவு’ என்று தான் வாயார அழைப்பார்.

வெள்ளிக்கிழமைகளில் வீடு திரும்பும் போது கையில் பூக்கட்டு மணக்கும்.

‘அழகும், அறிவும், குணமுமா எம்பொண்ணுங்க அஞ்சும் ரத்தினங்க’ என்று அம்மாவிடம் தோள் விம்மும் அப்பா அரசன்தான்.

“என்ன சின்னக்கிளி தயார்தானே? கிளம்புவோமா?” என்னைத்தான் கேட்கிறார்-

குனிந்து, கண்களை இடுக்கிக் கண்ணாடியில் நெற்றிப் பொட்டைச் சீரான வட்டமாக்கிய அம்மா முகம் சுளித்தாள்-

“இவ எதுக்குங்க? அதை இதைப் பார்த்து வேணும்பா.”

“கல்யாணப் பொண்ணு அவ. அவ ஆசைப்படறதைத்தான் எடுத்துக் கொடேன். இத்தனை நாளாய் பட்ஜெட் போட்டு, பண்டிகைக்கும் கூட நீதானே ராஜம் அதுங்களுக்குத் துணி எடுத்தே?”

“சரி, அப்ப சாவியை எடுங்க. வீட்டைப் பூட்டணும்.”

முதன்முதலாய் எனக்கென்று பட்டு வரப்போகும் மயக்கத்தில் நான்!

என் கனவுகளில் மாப்பிள்ளை வந்த அளவு, டிலைன் டிஸைனாய் புடவைகளும் வந்திருந்தனவே!

ஜவுளிக் கடையின் ஏ.ஸி.கண்ணாடி அறையின் குட்டை முக்காலிகளில் அமர்ந்தோம். எதிரே நயமான ஜமுக்காளம் விரித்து, அதில் ‘டப் டப்பென லாவகமாய் பளபளப்பான புடவைக் கட்டுகள் வீசப்பட, மனம் படபடத்தது.

கண்கள் படபடக்க மறந்து விரிந்தன.

”எல்லாம் நாங்க சொன்ன பட்ஜெட்டுக்குள்ளாரதான?”

“ஐநூறு கூட குறைய இருக்கும்மா”

அம்மா ஏதேதோ விவரங்கள் சொல்ல மேலும் மடித்த ஜரிகைப் பட்டுகள் குவிந்தன.

“ஏதும் ரொம்ப எடுப்பாத் தெரியலியே?” அம்மா சொன்ன போது சந்தோஷமாய் இருந்தது. இதுவரை விழுந்தவை கண்ணைக் கவர்ந்தாலும் மனதைக் கிள்ளவில்லை.

“வைர ஊசி எடுக்கட்டுமா? கூட இரண்டாயிரம் ஆகும்?”

“அது எதுக்கு?” – அம்மா அவசர அலட்சியத்தில் தலையசைத்தான்.

கடைப்பையன், தன் முகம் மறைக்குமளவு மற்றொரு சேலை அடுக்கை ஏந்தி வர, அமர்ந்திருந்த பெரியவர் அதிலிருந்து ஒவ்வொன்றாய் இயந்திரமாய் எடுத்துப் போட்டார். ஒன்றை மறைக்காது – அடுத்தது விசிறி அடுக்காய் விழ…

அதோ… அது..

விழுந்த மறுகணம் புடவை என் கையிலிருந்தது.

“ஆங்… அது முறுக்குப் பட்டும்மா. அபூர்வமான நிறம்.”

சிப்பந்தி சிலாகித்தார்.

தாமரைப் பூவின் இரு இளம் நிறங்களில் முறுக்கி நெய்யப்பட்ட வண்ணம் மயக்கியது. இருபுற அரக்குக் கரையில் வரிசையாய், ஒயிலாய் ஜரிகை அன்னங்கள்.

ஆர்வமாய் பிரித்தேன். கனத்த பட்டு நெகிழ்ந்து பிரிந்தது – உடலெங்கும் மிளகளவு பொன் புள்ளிகளின் ஜொலிப்பு.

‘பிரமாதம்’ என்று உள் மளசு கூவ,

“இது… நல்லாயிருக்காப்பா?” இசுகிசுத்தேன்.

சிறு அலுங்களிலும் குழையும் இதை நேர்த்தியாய் கொசுவி கட்டினால்….

ராணியாய், ரம்பையாய் உணருவேனோ?

இதுவரை அக்காமார் திருமணங்களிலும் கூட எனக்கென்று பாலியஸ்டர் பட்டுதான் கண்ணாடி வேலைப்பாடுள்ள ரவிக்கை, ஜரிகைப் பொட்டு, கண்ணாடி வளையல்கள் என்ற அளவில்தாள் அலங்காரம் சாத்தியம்.

அப்பாவின் சில ஆயிர சம்பாத்தியத்தில் இதற்கு மேல் ஏலாது. ஆசைப்படுவதே தப்பு. பாட்டி விட்டுப் போன இருபது பவுனும் சிறு தோட்டமும் முதல் மூன்று கல்யாணங்களின் போது கைகொடுக்க, நான்காவது கடனிலும் அம்மாவின் சாமர்த்திலுமாய் முடிந்தது – இப்போது நிலைமை மோசந்தான்.

“விலையென்ன?” அம்மா காரியக்கண்ணாய் சேலை விளிம்பை விலக்கிப் பார்த்து,

”பட்ஜெட்டை மீறுதே… அதுவும் ஆயிரத்து முற்றூறுன்னா” முணங்கலுடன் என் கையிலிருந்த ‘என் பரவசத்தை ‘ எடுத்து கீழே வைத்தாள்.

“விரிச்சுப் பாருங்கம்மா”.

பெரியவர் ஜாடை காட்ட, இருவர் அதை உதறி விரித்தனர். விளக்கொளியில் சேலை தங்கத் தாமரையாய் விரிந்தது.

மனம் நிறையப் பார்த்தவள். என் வாய் திறந்திருப்பதை உணர்ந்து, சுதாரித்து மூடிக் கொண்டேன்!

“இந்தச் சிவப்பு சேலை எப்படீ? துணியும் நயந்தான்” அம்மா வேறு ஒன்றின் விலைச்சீட்டைப் பரிசீலனை செய்த பின் தூக்கி நீவினாள்.

சதா வேலை செய்ததில் தேய்ந்த நகங்களும் தடித்த விரல்களும் பட்டின் மீது விகாரமாய் தெரிந்தன

அம்மாவும் பாவந்தான்.

“என்னப்பு உனக்கு எதுடா பிடிச்சிருக்கு?”

அப்பா தோள் தொட்டுக் கேட்டார்.

ஐந்தாவது மகளின் வாழ்வமைக்க ஆண்டியாய் அலைமோதும் அப்பா…

மனதை உலுக்கினேன்… இறுகக் கட்டினேன்…

“அம்மா சொல்றதுதாம்ப்பா…”

“பொண்ணு ஆசைப்பட்ட சேலை அம்சங்க. ஜாக்கெட் துணி கூட அதிலேயே வரும் – பிரிடா பாலு”

பொன் நூலில் வாங்கி வடிவம் இழைத்த அரக்கு ரவிக்கை.

கண்களை இறுக மூடினேன்.

“என்னடா ராணி-எது?”

“சிவப்பு சேலையே… நல்லாத்தாம்மாயிருக்குது?”

“சரி”

அப்பா எழுந்தார்.

”ராஜம், மாடியில பெரிய பொண்ணுங்களுக்கு ரவிக்கை பிட்டும் மாப்பிள்ளைகளுக்கு சட்டைத் துணியும் எடுத்திரு. நா இப்படி இருக்கேன்”

மீதித் துணி வகைகளை (உள்ளதிவேயே மலியானதாய்)த் தேர்ந்தெடுத்து, வெட்டச் செய்து, பில் போடும் வரை உடல் முழுக்க மரத்த உணர்வு.

தொண்டையை அடைத்த இறுக்கம்,

கிளம்பி வந்த போதிருந்த உற்சாகத்தில் சொட்டும் மீதமில்லை.

வீட்டிலேயே இருந்திருக்கலாம் வீட்டைப் பூட்டும் வேலையும் இந்த அவஸ்தையும் மிச்சம்.

முன்புறம் கவுண்ட்டரில் சாய்ந்தபடி அப்பா காத்திருந்தார்.

அவரைப் போலவே தளர்ந்து தொய்ந்த சட்டை,

ஆனால் முகத்தில் மங்காத பிரகாசம்.

“எத்தனை உருப்படி, நம்மதுதானான்னு எண்ணி சரி பார்த்திடும்மா ராஜம்,”

“ஆகட்டுங்க”

புடவையின் அட்டைப் பெட்டி மூடி விலக… நான் மூச்சையிழுத்துப் பிடித்தேன்.

தாமரைப் பூவிதழும், பொடி பொற்காசுகளுமாய் எ.. என்… புடவை. தொண்டையடைப்பு கணத்தில் இளகி மறைந்தது.

ஆனால் பேச்சு வரவில்லை.

அப்பாவை நிமிர்த்து பார்க்க, அவர் விழிகள் மிருதுவாய் வினவின.

‘சந்தோஷந்தானடா?’

அவரை ஓட்டி நின்றேன்.

பணத்தை மீண்டுமாய் எண்ணி நீட்டிய அப்பாவின் கைகள் ஏதோ வித்தியாசமாய் பட்டது. பரவசத்திலிருந்து மனதை மீட்டு உற்று நோக்க… அவர் விரலில் மோதிரமில்லை!

நீல எனாமலில் ‘A ‘போட்ட, சற்று தேய்ந்த மோதிரம்.

அப்பாவிடம் கேட்டதுண்டு.

“ஏம்ப்பா. இதைக் கழட்டவே மாட்டீங்களா?”

“அவுத்தா நெளிஞ்சிரும்மா. அத்தனை சன்னமா போட்டுக்காரு எங்க மாமா”. அம்மாவைப் பார்த்தபடி செல்லமாய் சிரிப்பார். வருடக்கணக்கில் மோதிரம் பதிந்த இடம், சற்றே அழுந்தி வெண்மையாய் வெறிச்சிட்டதைப் பார்க்க, மறுபடி நெஞ்சடைத்தது. மூக்கு நமநமத்தது.

மஞ்சள் பைகளுடன் வெளியேற, கிசுகிசுத்தேன்-

“ஏம்ப்பா?”

“இப்படி மோதிரத்தை வித்தா புடவை எடுப்பாங்க? இது அநியாயச் செல்லம்” – அம்மா சிடுசிடுத்தாள்.

“வாங்கித்தர்ற முதல், ஒரே பட்டு, அதுவும் முகூர்த்தப்புடவை அவ நோக்கம் போல அமையட்டும்மா ராஜம். அப்பப்ப அலங்காரம் பண்ணி ரசிக்கற வசதி இல்லாட்டியும் நம்ப ராஜாத்தியை அவ கல்யாணத்தன்னிக்குத் தங்க ரதமாப் பார்ப்போம்.”

மனதுக்குள்புடவைப்பரவசம்கூட அடங்கி அப்பா மட்டுமே… மட்டுமே நிறைந்திருந்தார்.

அவர் மனதே உன்னதமான பட்டு.

அதைப் போலொரு பட்டு குணம் எனக்கும் அமைந்தால்… அதைவிட வேறு சிறப்பான சீர் எடுத்துப் போக முடியுமா நான்?

சாலையைக் கடக்கும் சாக்கில் அவர் கையைப் பற்றிக் கொண்டேன். மூளி விரலாயிருந்தாலும் கூட எங்கப்பா அரசன்தான்.

– அவள் விகடன்.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *