படி





அந்த இளம் பெண்ணின் வலது கண்ணுக்கு மேலுள்ள நெற்றி; வெடித்த காயத்திலிருந்து கசிந்த குருதி அவளின் கண்ணீருடன் சேர்ந்து அந்த இளம்;; கன்னத்தில் கோலம் போட்டது.
விசும்பலைத் தாண்டிய வேதனையும் சோர்வும் அந்த இளம் பெண்ணைத் தாயின் மடியில் சுருண்டு படுக்க பண்ணி விட்டது. அந்த இளம் nபண்ணும் தாய் தகப்பனும் அவர்களுடன் நின்றிருந்த இரு இளம் சிறார்களும் இந்திய அல்லது இலங்கைக் குடும்பத்தினர் போலிருந்தார்கள்.
“எப்படி உங்களுக்கு இந்த காயம் வந்தது?”. நோயாளியைப் பரிசோதிக்க வந்த டாக்டர் உத்தியோக தோரணையில் கேட்டார். விசும்பும் பெண்ணில் அவர் பார்வை கனிவுடன் பதிந்தது.. காயம் பட்ட பெண் அவளின் வாயைத் திறக்க முயல,
“மாடிப்படியால் தடுக்கி விழுந்து விட்டாள்”. தாய் மென்று விழுங்கிக்கொண்டு சொன்னாள். நெற்றி உடைந்த காயத்துக்குத் தையல் போட ஊசியும் நூலும் எடுத்துத் தயாராகிக் கொண்டிருந்த டாக்டர் தன் பார்வையைத் தாயின் மீது பரவினார்.
தாய் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். “உங்கள் மகளுக்கு எத்தனை வயது என்று சொன்னீர்கள்’?
“பத்து வயது முடிந்து விட்டது”.
தகப்பன் மறுமொழி சொன்னார். அந்த தாயும் தகப்பனுடன்; அவர்களை ஒட்டிக் கொண்டு நின்ற இளம் ஆண் பெண் குழந்தைகள் இரண்டும் அங்கு கொண்டு வரப்பட்டுச் சோர்ந்து கிடக்கும் தமக்கையையும் ஊசியும் கையுமாக நிற்கும் டாக்டரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வயதுகள் ஏழும் ஐந்துமாகவிருக்கலாம். அவர்கள் முகத்தில் பயம் பிரதிபலித்தது.
“உங்களின் சிறுகுழந்தைகளுக்கு நான் அவர்களின் சகோதரியின் நெற்றியில் தையல் போடுவது பயத்தைத் தரலாம். யாராவது ஒருத்தர் அந்த குழந்தைகளுடன் வெளியில் கொண்டு போனால் உதவியாகவிருக்கும்”. அவரை ஏதோ திகிலுடன் தங்கள் அகன்ற கண்களால் உறுத்துப் பார்க்கும் அந்த குழந்தைகளை அந்த டாக்டர் பார்த்துக் கொண்டு சொன்னார்.
அந்தக் குழந்தைகளின் அனுபவத்தில் உலகத்தில் ரத்தமும் காயமும் தையல் போடும் ஊசியும் மிகவும் பயங்கர விடயங்களாக இருக்கலாம். தகப்பன் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு வெளியே போனார்.
“அக்காவுக்கு பார்வை இல்லாமலும் போகுமா?” ஏழு வயதுப் பையனின் குரலில் பதட்டம்.
“அக்கா ஹோம்வொர்க் செய்ய முடியுமா?” அவனிடமிருந்து இன்னும் ஒரு கேள்வி.
“அக்காவுக்கு டெலிவிஷன் பார்க்க முடியாதா?” ஐந்து வயதுப் பெண் குரலில் பயம் கலந்த தொனி.
“அக்காவின் கண்களில் ஒரு காயம் இல்ல. நெற்றியிலதான் காயம். அந்த நல்ல டாக்டர் அக்காவின் காயத்திற்குச் சின்ன தையல் போட்டால் எல்லாம் சரியா போகும்”. தகப்பன் ஆறுதலாக சொல்லிக் கொண்டு குழந்தைகளை அணைத்துக் கொண்டு சென்றார்.
“என்னவென்று உங்கள் மகள் நந்தினிபடியால் விழுந்தாள்?”. டாக்டரின் கேள்வி தாயை ஊடுருவியது. அந்த இளம்பெண் விம்மிக் கொண்டிருந்தாள்.
“தெரியாதா டாக்டர் இந்த வயதில் எந்த நேரமும் விளையாட்டுப் புத்திதானே?” தாயின் குரலில் சலிப்பு. தையல் போட்டுக் கொண்டிருந்த டாக்டர் வெள்ளைக்காரன். அவருக்கு உதவி செய்ய ஒரு வெள்ளைக்கார நர்ஸ் வந்தாள். அவள் தான் இந்த குடும்பம் அவசர சிகிச்சைக்கு வந்தவுடன் எல்லா விபரங்களையும் எடுத்துக் கொண்டவள்.
டாக்டர் காயம் பட்ட பெண்ணின் நெற்றியில் படிந்திருந்த குருதியைத் துடைக்கத் தொடங்கியதும் அந்த பெண் அழத் தொடங்கினாள்.
“என்ன சின்ன பிள்ளை மாதிரி அழத் தொடங்குகிறாய். அடங்காமல் ஓடி விளையாடத் தெரியும், ஒழுங்காக இருக்கத் தெரியாதா?” தாயின் குரலில் இருந்த கண்டிப்பு டாக்டரையும் அவருக்கு உதவிக் கொண்டிருக்கும் தாதியையும் ஓருத்தரை ஒருத்தர் பார்க்க பண்ணியது.
“அவளுக்கு அவ்வளவு வயதில்லையே பத்து வயது என்பது சின்ன வயதுதானே?” நர்ஸின் குரலில் வாஞ்சை. “மெல்லிய தசையில் ஊசி படியும் போது உயிர் போகும் நோ வரும்தானே?” அந்த நேர்ஸ் தாயை பார்த்துச் சொன்னாள்.
அந்தத் தாய் அந்த நர்ஸை ஏறிட்டு பார்த்தாள். ‘இவளுக்கு என்ன எங்கள் கலாச்சாரம் தெரிய போகிறது’ என்ற பார்வை அந்த தாயின் முகத்தில் பிரதிபலிப்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
‘பத்து வயதில் நான் சமைக்கப் பழகி விட்டேன்’ என்று அந்தத் தாய் சொல்ல நினைத்தாள்.
“உங்கள் மகளின் முழுப்பெயர் என்னவென்று சொன்னீர்கள்”.
அட்மிஷன் பற்றிய விவரத்தை எழுதும் போது ஞாபகத்தில் இருந்த பெயரை அந்த நர்ஸ் மறந்துவிட்டார் போலும்
“நந்தினி இராமநாதன் வயது பத்து முடிந்து விட்டது”. தாய் இன்னும் ஒரு தரம் அழுத்திச் சொன்னாள்.
“ஹலோ நந்தினி. உங்களின் நெற்றிக்கு மேலுள்ள சின்னதொரு காயத்திற்கு நாங்கள் சில தையல்கள் போட்டால் சீக்கிரம் காயம் ஆறிவிடும். அதன் பின் விளையாடலாம். டெலிவிஷன் பாக்கலாம்” டாக்டர் அன்புடன் சொன்னார். அவர் கையில் காயத்தைத் தைக்கும் தையல் ஊசி ஊசலாடியது.
“தையல் போடும் போது நோ தெரியாமல் இருக்கும்படி சின்ன ஊசி கொண்டு போடட்டுமா?”
“என்ன டாக்டர் அவளை ஏன் கேட்க வேண்டும் செய்ய வேண்டியது செய்வது தானே?” தாயின் குரலில் இருந்த எரிச்சலை டாக்டர் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
‘ஏன் இந்த தாய் இப்படி எரிச்சல் பட்டு கொள்கிறாள். எமர்ஜென்ஸி டிபார்ட்மெண்ட்டில் நீண்ட நேரம் காத்திருந்த அலுப்பா?’ டாக்டரால் அந்தத் தாயின் சலிப்புக்குக் காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.
காயத்திற்குத் தையல் போட்டு முடியும் வரை ஒரு பெரிய நாடகமே நடந்து விட்டது. நந்தினி பயத்தில் அலற அவளின் தாய் நந்தினியை அதட்டி அடக்கிய காட்சி ஒரு பெரிய நாடகம் தான்.
“இந்தத் தையல் போட்டு முடிந்த பின் நந்தினியின் கால் ஏன் வீங்கியிருக்கிது என்று பார்க்க வேண்டும். நந்தினியின் கால்களை பரிசோதிக்க எக்ஸ்ரே எடுத்து பார்த்த பின் தான் காலில் என்ன பிரச்சனை என்று சொல்லலாம்”. டாக்டரின் கைகள் தன் காலில் பட்டதும் நந்தினி வீரிட்டு அழுதாள்.
‘உன்னால் எவ்வளவு கரைச்சல்?’ தாய் மகளை பார்த்து முணுமுணுத்தாள். எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. வலது கண்களுக்கு மேல் அடிப்பட்டது போல் வலது முழங்காலிலும் பலத்த அடி.
எக்ஸ்ரேயில் முழங்காலுக்குக்குள் எலும்பு உடைந்திருப்பது தெரிந்ததும், “கொஞ்ச நாட்கள் ஆஸ்பத்திரியில் நந்தினியை வைத்திருப்பது நல்லது”. டாக்டர் இப்படிச் சொன்ன போது அந்த தாயின் முகத்தில் படர்ந்த உணர்வுகளை டாக்டரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
“நான் வேலைக்கு போகணும்” என்று பட்டென்று சொன்ன நந்தினியின் தாய் மேலும் தொடர முதல் நர்ஸ் இடைமறித்து “நந்தினிக்கு பத்து வயதுக்கு மேலாகிறது. யாரும் அவளுடன் கட்டாயம் ஹாஸ்பிடல் இருக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் வீட்டுக்கு போகலாம். உங்களுக்கு முடியுமான நேரம் வந்து பார்த்துவிட்டுப் போகலாம்.” என்று சொன்னாள்.
அதன்பின் நந்தினிக்குக் காலில் எலும்பு முறிவுக்கு பிளாஸ்டர் போட்டார்கள்.
நந்தினியை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி வார்ட்டில் சேர்க்க அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டது. தாயும் தகப்பனும் அதன்பின் தங்கள் அடுத்த இரு குழந்தைகளுடனும் வீடு திரும்பினார்கள்.
நந்தினி மிகவும் களைப்பில் அன்றெல்லாம் நல்ல நித்திரை. நந்தினி தன் நோ மறந்து எழுந்தபோது தாய் தகப்பன் வந்திருந்தார்கள்.
தாய் தகப்பன் நந்தினிக்குச் சாப்பாடு கொண்டு வந்தார்கள். நந்தினியின் காலில் பிளாஸ்டர் போட்டு இருந்த படியால் நடப்பது சிரமமாக இருந்தது. நர்ஸ் ஒருத்தி நந்தினியின் பக்கத்தில் டெலிவிஷன் கொண்டு வந்து வைத்தாள்.அத்தோடு நிறைய விளையாட்டு சாமான்களையும் ஒரு பெட்டியல் போட்டு கொண்டு வந்தாள்.
“நந்தினி கொஞ்ச நாளைக்கு உன்னால எழுந்து நடக்க முடியாது. சந்தோஷமாக வீடியோ பார்க்கலாம். விளையாட்டு சாமான்கள் இருக்கின்றன விளையாடலாம்’’ அப்படி அந்த நேர்ஸ் சொன்னதும் நந்தினியின் முகத்தில் மகிழ்வு. ஆனால் தாயைக் கண்டதும் நந்தினியின் முகபாவம் பட்டென்று மாறியது.
“சொல் வழி கேட்காம ஓடித் திரிஞ்சு காலை உடைச்சுப் போட்டு கிடக்கிறாய்”. தாய் முணுமுணுத்தாள். தகப்பன் மகளின் கால்களை தடவிக் கொடுத்தான்.
“ஓடித் திரியும் வயதில் உடைந்துவிட்டது கால் மட்டும் தானா?” தகப்பன் கேள்வி தாயைத் தாக்கி இருக்கவேண்டும். கணவனை முறைத்துப் பார்த்தாள்.
“உங்களுக்கு என்ன? ஏதோ அர்த்தம் இல்லாம எதையும் சொல்லுவீங்க. ஆனால் இந்த குழந்தைகளை சரியாக வளர்க்காமல் விட்டால் நாளைக்கு உலகம் எங்களைப் பார்த்து என்ன சொல்லும?”
திருமதி மாலதி இராமநாதன் உலகத்தைப் பற்றி மிகவும் அலட்டிக்கொள்பவள்.
இராமநாதன் பெருமூச்சு விட்டார். முதல் குழந்தை ஆண் குழந்தையாய்ப் பிறந்தால் தங்கத்தால் வேல் செய்து தருவதாகமாலதி லண்டன் முருகன் கோயிலுக்கு நேர்த்தி வைத்தாள்.
“இதைக் கேள் மாலதி கடவுள் என்ன சூப்பர் மார்க்கட் வைத்திருக்கிறாரா? நீ ஷாப்பிங் லிஸ்ட் போட்டு எனக்கு இன்னது வேணும் என்று கேட்டதும் அவர் கொடுக்க முடியுமா?”
அப்படி அவள் கணவர் சொன்னதும் குழந்தை பெண்ணாகப் பிறந்ததும் அவரில் அவளுக்கு ஆத்திரத்தை இன்னும் கூட வரப் பண்ணி விட்டது.
வயது போன காலத்தில் தன்னை காப்பாற்ற ஒரு மகன் பிறந்து பெரிதாகப் படித்து தன்னை பார்க்க வேண்டும் என்ற அவளின் பிரார்த்தனைக்கு முருகன் அருள் செய்யாததற்குத்; தன் கணவனின் ஏனோ தானோ என்ற போக்குத்தான் காரணம் என்று திட்டித் தீர்த்தாள்.
‘கேட்பதெல்லாம் கொடுப்பது கடவுளரின் வேலை என்றால் ஏன் இலங்கைத் தமிழருக்கு ஒரு விடிவு வரவில்லை? ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு ஏழைகள் ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர்?’ திருவாளர் இராமநாதன் இப்படி அறிவியல் கேள்விகள் கேட்டு விட்டுத் தனது திருமதியிடம் திட்டு வாங்கிய சந்தர்ப்பங்கள் அநேகம்.
அவள் வணங்கும் முருகள் அவர்களின் முதற் குழந்தையை ஆண் குழந்தையாய் கொடுக்காத ஆத்திரம் கணவரிலும் குழந்தையிலும் திரும்பியது. எப்படியும் தன்னால் முடிந்தவரை நந்தினியை ஒரு கெட்டிக்கார பிள்ளையான ஒரு லேடி டாக்டராக அல்லது லோயரக வரக்கூடிய படிப்பு படிக்க வேண்டும் என்ற அவளின் நோக்கம் எல்லை கடந்து விட்டதா என்று இராமநாதன் யோசிப்பார்.
அதற்கு காரணம் அவர்களின் சொந்தக்காரரின் இரண்டு பெண்களும் லேடி டாக்டர்ஸ் ஆகிவிட்டதும் ஒரு விதத்தில் பொருந்தும். சொந்தக்கார பெண்களை விடத் தன் மகளைக் கெட்டிக்காரியாக்க நந்தினியின் வாழ்க்கை தாயால் திட்டமிடப்பட்டது. நந்தினி சரியாக நடக்க முதலே அவளின் தாய் நந்தினியைப் படிப்பிக்கத் தொடங்கி விட்டாள். ‘ஏ’ என்றால் ஆப்பிள்; ‘பி’ என்றால் பனானா என்று சொல்லிக் கொடுத்த தனது தாய் மாலதியை ‘ஆ’ என்று விழித்து பார்த்தது. குழந்தைக்கு விளையாட ஆசை. தாய்க்கு சின்னக் குழந்தை படிக்க வேண்டும் என்றஆசை. நந்தினியைத் தமிழ்ப் பாடசாலையில் சேர்த்தாள். அங்கு சத்திய சாயி பாபா பாடல்களுடன் அவளின் இளமைக் கல்வி ஆரம்பிக்கப் பட்டது. அதாவது சில தமிழர்களின் முக்கிய கோட்பாடான தங்கள் குழந்தைகளின் மூளைச் சலவை மிக மிக இளமையில் ஆரம்பிக்கப் பட்டது.
லண்டனிலுள்ளஅவர்களின் அடுத்த வீட்டில் இருந்தவர்கள்ஒரு ஐரிஷ் குடும்பத்தினர். கத்தோலிக்க சமயத்தினர் அவர்களுக்கு ஏழு குழந்தைகள். ஐந்து பெண்களும் இரண்டு ஆண்களும். கணவன் ஏதோ விபத்தில் அகப்பட்டதால் வந்த தாக்கத்தில் வேலைக்குப் போக முடியாதென்றும் அந்த விரக்தியில் அவர் குடிப்பமாகவும் அரசாங்க தயவில் அதாவது அரசு மானியம் பெற்று வாழ்வதாகவும் பக்கத்து வீட்டுப் பெண்மணி திருமதி மார்லின் மேர்பி திருமதி மாலதி இராமநாதனுக்கு அவர்கள் தங்கள் வீட்டு மதில்களுக்கு மேலால் இருவரும் பேசும் போது சொன்னாள்.
இராமநாதன் தம்பதிகளின் அடுத்த வீட்டு ஐரிஷ் பெண்மணி மிகவும் அழகான பெண். நாற்பது வயதைத் தாண்டியவள். இனிய குரல் உள்ளவள். நல்ல பாட்டுக்காரி. சில வேளைகளில் நைட் கிளப்புகளில் பாடுவாள். லண்டனில் உள்ள பக்கத்து வீட்டு வெள்ளையினத்தவர் தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் குடியிருந்தால் அவர்கள் பாகிஸ்தான் பங்களதேஷ் இந்திய அல்லது இலங்கையர்கள் என்றாலும் அவர்களை இந்தியராகத்தான் மதிக்கப்படுகிறார்கள். அதனால் இராமநாதன் வீட்டுக்கு ஐரிஷ் குடும்பம் குடிவந்ததும் மதிலுக்கு மேலால் அவர்கள் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன. ஒரு பரவாயில்லாத உறவும் தொடங்கியது.
‘இந்தியர்கள் படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்ற கேள்விப் பட்டேன்’ என்றாள் அடுத்த வீட்டுத்தலைவி மார்லின் மேர்பி;. தங்களை அவள் இந்தியக் குடும்பமாக அடையாளம் கண்டது மாலதிக்குப் பிடிக்கவில்லை. தாங்கள் இலங்கையர்கள் என்று மாலதி அழுத்திச் சொன்னாள்.
பக்கத்து வீட்டு மேர்பி தம்பதிகளின் குழந்தைகள் ‘பெரிய’படிப்பில் ஆர்வமற்றவர்கள். பெண்களில் மூத்தவள் போலிஸ் வேலையில் தற்போது சேர்ந்திருக்கிறாள்;. அடுத்த பெண் படிப்பு முடிய நேர்ஸிங் செய்ய விருப்பமென்று சொன்னாள். அதற்கடுத்த பையன் தனது படிப்பு முடிய ட்ரெயின் ட்ரைவராக வரப்போவதாகச் சொன்னதாகவும் அதற்கடுத்தவன் மிருகங்கள் பறவைகளில் மிகவும் பற்றுள்ளவனானதால் தான் வளர்ந்;து வந்ததும் மிருகக் காட்சி அமைப்பில் வேலை செய்ய விரும்புவதாகச் சொன்னதாகவும் அவனுக்கடுத்த பெண் தலையலங்கார வேலையில் ஈடுபடப் போவதாகவும்; திருமதி மார்லின் மேர்பி திருமதி இராமநாதனுக்குச் சொன்னாள். மற்றக் குழந்தைகள் சிறியவர்கள். ஒருமகள் நந்தினியின் வயதுடையவள் அவளுக்கு மேரி என்று பெயர்.அவள் தனது தாய்போல இனிமையாக பாடுகிறாள்.அந்தத் துறைசார்ந்த படிப்பை மேரி விரும்புவதாகத் திருமதி மார்லின் மேர்பி மிகவும் பூரிப்புடன் சொன்னாள்.
‘லண்டனில் டாக்டர் எஞ்சினியர் ஆக வரலாமே. ஏன் உன் ஒருமகள் மற்றவர்களின் தலை வெட்டும் வேலைக்கு போக விரும்புவதைத் தடுக்காலிருக்கிறாய்?’ என்று ஒரு நாள் அவர்களின வேலிக்கு மேலால் நடந்த. சம்பாஷணையின் போது நந்தினியின் தாய் மார்லின் மேர்பியைக் கேட்டாள்.
திருமதி மேர்பிக்குத் திருமதி ராமநாதனின் கேள்வி விளங்கவில்லை.
‘இங்கிலாந்தில் எந்த குழந்தைகளும் தான் விருப்பமான படிப்பை படிக்கலாம். டாக்டராகலாம். என்ஜினியராகலாம். நான் ஏன் அவர்கள் விரும்பும் பாதைகளிலிருந்து தடுக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த விடயங்களில் ஈடுபட்டாற் தானே அவர்களுக்கு சந்தோஷம் வரும். எனக்கு பாட விருப்பம் பாடுகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்றாள்.
நந்தினயின் தாய் அதன்பின் வேலிக்கு அப்பால் எந்தப் பேச்சையும் தவிர்க்க விரும்பினாள். தனது மகள் நந்தினி பாட்டுக்காரியாகவோ அல்லது ஒரு ஆட்டக்காரியாகவோ வருவதை திருமதி மாலதி இராமநாதன் விருப்பமில்லை.
‘இஞ்ச பாருங்கோ இந்த பிள்ளயள இப்ப இருந்தே இழுத்துப் பிடிக்காட்டா அவர்கள் எங்கள் தலைக்கு மேல போயிடுவாங்க’மனைவியின் முணுமுணுப்பை இராமநாதன் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
தனது சொந்தவாழ்க்கைப் படிகளில் தனது பாதையை எப்படித் தெரிவு செய்ய வேண்டும் என்று தனது சொந்த தெளிந்த அறிவு வரும்போது வளரும் குழந்தைகள் யோசிக்கிறார்கள்.அவர்களை வேறு யாரும் இப்படித்தான் ஏறவேண்டும் என்று வற்புறுத்தி ஏற்றலாமா? போகும் வழி தெரிந்தால் எப்படிப் படியேறுவது என்று நினைத்தால் யாரும் ஏறலாம் தானே. இழுத்துப் பிடித்து ஏற்றவும் இறக்கவும் மனித ஜென்மம் என்ன மாட்டுக் கூட்டமா? மற்றவர்களை பின்பற்ற அவர்கள் என்ன ஒரு ஆட்டு கூட்டமா? இராமநாதன் தனக்குள் நினைத்தார். மனைவிக்கு அவர் கருத்துக்கள் விளங்காது அவர் கேட்கவில்லை. கேட்டுப் பயனும் இல்லை.
‘குழந்தைகள் களிமண் மாதிரி எங்களுக்கு தேவையான மாதிரி இளமையிலேயே பிடித்து உருவகம் கொடுக்க வேண்டும்’. திருமதி இராமநாதனின் ஒரு சிநேகிதியின் அறிவுரை அது. அந்த சினேகிதியின் மகள் தாய் தகப்பனுக்காக மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு அது தனக்கு பிடிக்கவில்லை என்று இப்போது தனக்கு பிடித்த ஆசிரியையாக வேலை செய்கிறாள்.
‘அது அவளின் என்ன கெட்ட காலம். அந்த பிள்ளைக்கு ஏழரைச் சனி புடிச்சிருக்கு என்று சாஸ்திரி சொன்னான்’ என்று திருமதி இராமநாதனின் சிநேகிதி அங்கலாய்த்தார். நந்தினி வளர்ந்து கொண்டு வரும்போது திருவாளர் இராமநாதனுக்கும் மனைவிக்கும் எத்தனையோ கருத்து போராட்டங்கள் நடந்தன.
‘விளையாடுற வயதில் விளையாட விடு’. நந்தினி விளையாடும் போதும் தாயார் அவளை விளையாட விடாமல் படிக்கச் சொல்லி துன்புறுத்தும் போது அவருக்குத் துக்கமாக இருக்கும். இலங்கையில் அவரின் இளமைக்காலம் ஞாபகம் வரும். அந்தக் காலம் பெரும்பாலான குழந்தைகள் தனக்கு விருப்பமான முறையில் விளையாடினார்கள். விழுந்து உடைந்தார்கள். அதிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டார்கள். அப்படித்தான் எதிர்காலத்தை முகம் கொண்டார்கள்.
‘மூத்த பிள்ளை படிப்பில் பிசகினால் மற்ற பிள்ளைகளும் பிசகிப் போய் விடுங்கள்’ திருமதி இராமநாதன் கண்டிப்பாகவிருந்தாள. கபடமின்றி எந்த மனப் பாரமுமின்றி வளரும் மனநிலையை நந்தினியின் தாயார் எப்போதோ அந்த வளரும் இளம் பெண்ணின் மனதில் இருந்து அகற்றிவிட்டார்.பக்கத்து வீட்டு மேரி நந்தினியின் வயது. ஒன்றாகப் படிப்பவர்கள்.அவள் நந்தினியை ஒன்றாக விளையாடக் கூப்பிடுவாள்.
‘அந்த சனியன்களுடன் பள்ளிக்கூடம் போவதே ஒரு பாவம். அதற்கும் அப்பால் என்ன கூட்டும் கும்மாளமும்?’. தாயாரின் ஆணை நந்தினியை அடக்கி விட்டது.
எப்போது பார்த்தாலும் ‘போசாமல் இருந்துபடி கணக்குப்படி ஆங்கிலம் படி’. என்று நந்தினியின் தாய் தனது மகளை வற்புறுத்தினாள். அதன்பின் நந்தினியின் திறமையை மேம்படுத்த ரியுட்டர்கள் வந்தார்கள். அதற்கு செலவு வேறு. அதனால் திரு இராமநாதன் வார நாட்களில் செய்யும் வேலையுடன் ஞாயிற்றுக்கிழமையில் இன்னொரு பகுதிநேர வேலையும் எடுத்துக் கொண்டார்.
‘பார்த்தாயா உனக்காக அப்பா எவ்வளவு கஷ்டப்படுகிறார். அப்பா பாவம் நீ நல்ல பிள்ளையாகப் படிக்க வேண்டும். எதிர்காலத்தில நீ ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்றுதானே நாங்க கஷ்டப்படுறம்’.
தாயின் சொல்வது நந்தினிக்குக் கண்ணீரை வரவழைத்தது. ‘படி படி. நல்லா படி. என்னுடைய மச்சாளுடைய மகள் லேடி டாக்டர். நீ அதை விட பெரிய டாக்டராக வர வேணும் மகளே’ என்று ஓயாமற் சொன்னாள் தாய். அம்மாவுக்கு என்ன வெறி பிடித்துவிட்டதா என்று கேட்க முடியாத வயது நந்தினிக்கு.
‘மாலதி ஏன் இந்தப் பிள்ளைய இப்படிக் கஷ்டப் படுத்துகிறாய். பிள்ளைக்குப் படிக்க முடிந்தால் படிக்கட்டும’ என்றார் நந்தினியின் அப்பா.
‘நீங்க பேசாம இருங்கோ. அவள் இந்த வீட்டில மூத்த பிள்ளை. அவள் நல்லா படித்தாற் தானே மற்ற பிள்ளைகளும் படிப்பார்கள்’ நந்தினியின் தாய் வழக்கம்போல் தகப்பனின் கேள்விகளை அடக்கி விட்டாள்..
நந்தினிக்கு பத்து வயது முடிந்து விட்டது. உடம்பின் மேற்பாகத்தில் வளர்ச்சி திரண்டு அடிப்பாகத்தில் வளர்ச்சி பரந்து அவள் வயதுக்கு வரப்போகிறாள் என்ற அறிகுறிகளைக் காட்டின. ‘நான் பதின்மூணு வயதில வயதுக்கு வந்தவள். இவள் இந்த வயதிலேயே வயதுக்கு வரப்போகிறாளே’. நந்தினியின் தாய் ஆச்சரியப்பட்டாள்.
‘இதோ பார் மாலதி இதைப் பற்றியெல்லாம் யோசித்துக் குழம்பத் தேவையில்லை. இந்த நாட்டின் சுவாத்தியம் சாப்பாடு என்பன குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டும். அவள் இந்த வயதில’பெரிய பிள்ளையானால் என்ன பிரச்சன?’ தகப்பன் எரிச்சலுடன் கேட்டார்.
‘என்ன பிரச்சனையோ? என்ன ஒன்றும் தெரியாத மாதிரிப் பேசிறியள். சாமர்த்திய வீடு நடத்த எவ்வளவு ஆயிரம் பவுண்ஸ் தேவை என்று தெரியாதோ. எங்கட சொந்தக்காரர் தில்லையின்ர மகளிள் சாமர்த்தியச் சடங்கு எவ்வளவு சிறப்பாக நடந்தது என்று தெரியாதோ?. மிகச் சிறப்பாக நடந்தது’ என்று மாலதி விளக்கியாள்.
‘எங்கள் மகளுக்கு சாமர்த்தியச் சடங்கு ஆடம்பரமாக வைத்து புதினம் காட்டத்தான் வேண்டுமா? வீடியோக்காரன் இந்த இளம் பெண்ணை நனைந்த உடையில் எத்தனையோ கோணத்தில படம் எடுத்து தெரியாத வயதில திருமணப் பெண்போல அலங்காரம் செய்து படமெடுத்து விளம்பரம் செய்வதெல்லாம் தேவையா ஏன் இந்தக் கூத்துகள்?’. இராமநாதன் அழாக் குறையாகக் கேட்டார்.
‘நீங்க சும்மா அலட்ட தொடங்கிவிட்டியள். பெரிய விமரிசையாகச்; செய்து நடத்திய சடங்கு என்ற படியால் ஏராளமான சனங்கள் வந்தார்கள் தில்லையின் மகளுக்கு எவ்வளவு அன்பளிப்பு கிடைத்தது தெரியுமா? எங்களுக்கும் நிறைய சொந்தக்காரர்களும் சினேகிதர்களும் இருக்கிறார்கள்.எங்கள் மகளுக்கு எவ்வளவு அன்பளிபபுகள் கிடைக்கும் தெரியுமா’?
இராமநாதன் தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார். பெண் உடம்பு எத்தனை விதத்தில் விற்பனைப்படுகிறது? அவர் பெருமூச்சு விட்டார்.
இப்போதுதான் நந்தினிக்குப் பத்து வயது முடிந்திருக்கிறது.
‘எங்கள் வீட்டுக்குச் சொந்தக்காரர் அல்லது சினேகிதர்கள் வரும்போது நீ; என்ன படிக்கிறாய் என்று கேட்டால் நான் லேடி டாக்டராக வரப் போகிறேன் என்று தைரியமாகச் சொல்’.
தாயின் ஆணை நந்தினியின் தலையில் ஆணி அடித்து கொண்டது. வேதனையைச் சொல்லத் தெரியாத வயது. அம்மாவின் கடடளைச் சுமையை ஏற்றிய வயது இன்னும் பதினொன்று கூட ஆகவில்லை.
நந்தினியோடு விளையாட அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மேரி வருவதை நந்தினியின் தாய்; மறைமுகமாகத் தடுத்ததால் நந்தினி சில நேரங்களில் தனது தம்பி தங்கையுடன்; விளையாடுவாள். அவர்கள்; அவளை விடக் குறைய வயது. அவர்கள் ஆடி ஓடி ஏறி தாவிப் பாய்ந்தெல்லாம் விளையாடுவார்கள்.
நேற்று குழந்தைகள் மூவரும் மேல் மாடியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். குய்யோ முறையோ என்று சத்தம் போட்ட விளையாட்டு. அந்த நேரம் நந்தினியின் ரியுட்டர் வரும் நேரம். நந்தினியின்; தாய் அப்போதுதான் கடைக்குப் போய் திரும்பி வந்திருந்தாள். நந்தினிக்குத் தாயார் கொடுத்த ஹோம் வோர்க்கை நந்தினி செய்ய வில்லை.
‘இந்த சனியனுக்கு எவ்வளோ கஷ்டப்பட்டு சொன்னாலும் காதுல ஏறாது’ தாயின் வார்த்தைகளில் பொறி.கண்களில் தீ. அவள் மேல்மூச்சு வாங்கி வாங்கி மாடிக்கு போய்ப் பயங்கர கோபத்துடனிருந்ததைப் பார்த்து குழந்தைகள் மிரண்டுவிட்டார்கள்.
‘நந்தினியிற்தான் எல்லா பிழைகளும். நீ பெரியவள். பொறுப்பொன்றும் இல்லாமல் உனக்கு என்ன கண்டறியாத விளையாட்டு. சின்னப் பிள்ளைகளோட சேர்ந்து விளையாடி அவர்களையும் கெடுப்பதுதான் நந்தினியின் வேலை’ தாய் திட்டிக் கொண்டு பிள்ளைகளைத் துரத்தினாள். பளார் பளார் என்று நந்தினியின் கன்னத்திலடித்தாள்.நந்தினி தாயிடமிருந்து தப்பி ஓடிய வேகத்தில் மாடிப்படியில் தடுக்கி விழுந்ததால் நெற்றியிலும் முழங்காலிலும் காயமடைந்து விட்டாள்.
அவளின் காலில் பிளாஸ்ட்டா.; கண்களுக்கு மேல் நெற்றியில்க்கட்டு..நந்தினியின் கண்கள் தாயைப் பயத்துடன் பார்த்தன. ‘படிக்க வேண்டிய காலத்தில் இப்படித் இடறி விழுந்துவிட்டு முட்டாள்தனம் பண்ணி விட்டாயே’. மகளுக்குச் சாப்பாட்டை கொடுத்தபடி நந்தினியின் தாய் மகளைத் திட்டிக்கொண்டிருந்தாள்.
‘ஹலோ’ என்ற குரல் வந்த திசை நோக்கி நந்தினியின் தாய் திரும்பிப் பாத்தாள். ஒரு நேர்ஸ் நின்று கொண்டிருந்தாள்.
‘உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். சாப்பாடு கொடுத்து முடிய நாங்கள் பேச முடியுமா’?
என்று கேட்டுவிட்டு அந்த நேர்ஸ் போய்விட்டாள். தாயின் மனதில் ஒரு குத்தல். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் தன் ஆத்திரத்தில் அவள் நந்தினியின் காதைத் திருக அதன் தடித்த வீக்கம் பாடசாலை டீச்சரின் கண்களில் பட்டு ஒரு விசாரணையும் நடந்தது. ‘பெற்ற தாய் தகப்பனாக நீங்கள் இருந்தாலும் குழந்தைகளை அடிப்பது இந்த நாட்டுச் சட்டத்திற்கு முரணானது. குழந்தைகள் ஒரு தேசியச் சொத்து. நீங்கள் தாய் தகப்பன் என்ற படியால் எதையும் செய்யலாம் எப்படியும் நடத்தலாம் என்று நினைக்க வேண்டாம்’’. அந்த தலைமை ஆசிரியை தெளிவாகச் சொன்னார்.
இப்போது இந்த நேர்ஸ் என்ன சொல்லப்போகிறாள்?.
‘நான் உன்னை அடித்தேன் என்று சொன்னாயா?’ தாய் நந்தினியைக் கேட்டாள். இல்லையென்று தலையாட்டினாள் நந்தினி.
‘அம்மா என்னை அடித்தாள் என்று நீ அவர்களுக்குச் சொன்னால் அம்மாவைச் சிறையில் போட்டு விடுவார்கள். அப்படி நடந்தால் அதன் பின் உங்களை யெல்லாம் யார் பார்ப்பார்கள்? அத்தோட பெற்ற தாயைச் சிறைக்கு அனுப்பிய கொடுமையான பெண் என்று உலகம் உன்னைக் காறித் துப்பும் தெரியுமா?’
தாயின் சொற்களைக் கேட்டு நந்தினி அழுதுவிட்டாள்.
‘நந்தினி மாடிப் படிகளில் தவறி விழுந்ததாகச் சொன்னீர்கள். எப்படி அந்த விபத்து நடந்தது என்று விளக்கிச் சொல்ல முடியுமா?’ அந்த நேர்ஸ் தன் பார்வையைத் தான் வைத்திருக்கும் குறிப்புகளில் பதித்தபடி கேட்டாள்.
அவள் மேலும் தொடர்ந்து,
‘அதாவது சிறு பிள்ளைகள் ஓடி விளையாடும்போது படியில் தவறி விழுந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். குழந்தைகள் சாதாரணமாக ஓடி விiயாடும் வேகத்தில் இடறி விழுந்தால் பெரும்பாலும் சிறிய சிராய்ப்புகள்தான் ஏற்படும். ஆனால் நந்தினியின் காயங்களை பார்த்தால் அவள் ஏதோ மிக அவசரமான வேகத்தில் வந்து அடிபட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது’.
நுந்தினியின் தாய் இப்படியான விசாரணையை எதிர்பார்க்கவில்லை. தாய் தயக்கத்துடன் பதிலளித்தாள்.
‘அது எனக்கு அப்படி தெரியும். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ வீறிட்ட சத்தம் கேட்டு என்ன என்று நான் ஓடிப் போய்ப் பார்த்தபோது நந்தினி விழுந்து கிடப்பது தெரிந்து நந்தினியைக் கேட்டுப் பாருங்களேன்’
தாய் அப்பாவி மாதிரி சொல்லி முடித்தாள்.
‘நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அவளின் காயத்தின் தன்மையை பார்க்கும் போது அவள் எதற்கோ அல்லது யாருக்கோ பயந்து மிக மிக வேகத்தில் ஓடி வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதற்கு ஏதோ அளவிட முடியாத மனப் பயம் அடிப்படையாக இருக்கலாம் இல்லையா’ என்றாள் அந்த நேர்ஸ்.
‘எங்கள் வீட்டில் எங்கள் குழந்தைகளுக்கு அப்படி ஒரு பயமும் கிடையாது. நாங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் உங்களுக்கு புரியாது. குழந்தைகளுக்காக வாழ்பவர்கள் நாங்கள். அதுதான் எங்கள் கலாச்சாரம். எனது கணவர் எங்கள் குழந்தைகளின் திறமையான படிப்புக்காக இரண்டு வேலைகள் செய்கிறார்’
நந்தினியின் தாய் அழ தொடங்கிவிட்டாள். ஆங்கிலேய நேர்ஸ் விக்கி அழும் அந்தத் தாயைக் குழப்பத்துடன் பார்த்தாள்.நந்தினியின் தாய் தகப்பனிடம் கேட்கப் படவேண்டிய எத்தனையோ கேள்விகள் அவள் மனதில் தேங்கி கிடக்கின்றன. நந்தினி படிக்கும் பாடசாலையிலிருந்தும் பல தகவல்களை விசாரிக்க வேண்டும். அதாவது நந்தினி ஏதும் வீக்கம் அல்லது காயங்களுடன் பாடசாலைக்கு வந்தாளா என்று விசாரிக்க வேண்டும் என்பவற்றைச் சொல்ல முதல் நந்தினியின் தாய் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நேர்ஸ் தயங்கி நின்றாள். படியில் தடக்கி விழுந்ததாக இந்தத் தாய் சொல்லும் விபரங்களை உறுதி செய்ய எத்தனை விசாரணை நடக்கும் என்பது இந்தத் தாய்க்குத் தெரியுமா? பிரித்தானிய சட்டத்தில் குழந்தையின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பது இந்தத் தாய்க்குப் புரியுமா?
‘படி படி என்று பல்லவி பாடுகிறாய். உனக்கு ஒன்று மட்டும் விளங்க மாட்டேன் என்கிறது. குழந்தைகள் களங்க மற்றவர்கள் அவர்களை வழிநடத்த வேண்டுமே தவிர வற்புறுத்தக் கூடாது. எங்களால் செய்ய முடியாத விடயங்களை அவர்கள் செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நினைப்பது சுயநலம் இல்லையா? நீ படி படி என்று அவளை அடி அடி என்று பல வித்தில் துன்புறத்துகிறாய். என்றோ ஒரு ஒரு நாளைக்கு ஏதோ தற்செயலான விபத்து நடந்தால் அவளுக்கு ஏன் அந்த விபத்து நடந்தது என்பதைப் பல வழிகளில் விசாரிப்பார்கள். அவர்கள் எங்களில் பிழை கண்டால் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்களை எங்களிடமிருந்துமிருந்து பிரித்து விடுவார்கள். நாங்கள் எங்கள் குழந்தைகளின் பெற்றோர் என்பதால் அவர்களை எப்படியும் நடத்தலாம் என்று கண்டபாட்டுக்கு நடக்காதே மாலதி’
இப்படிப்பல தடவைகள் தன் மனைவிக்கு அந்தத் தந்தை சொல்லிச் விட்டார். ஆனால் அந்தத் தாயின் மனதில் அந்த உண்மை படிய மாட்டேன் என்கிறது.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |