படத்திற்குள் படம்
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இளங்கோ ஹலோ… இளங்கோவா? எழுந்திருப்பா! காலையிலே எட்டுமணிக்குச் சாங்கி ஏர்போர்ட் டெர்மினல் ரெண்டுக்கு உன்னால வர முடியுமா!… வரமுடியுமா என்ன வா. நான் அங்கே காத்துக் கிட்டிருக்கிறேன்.”
தயார் செய்திருந்த காலை உணவைத் தங்கைக்கும் தந்தைக்கும் பரிமாறிவிட்டு, அவசரமாக உடை மாற்றம் செய்துகொண்டு, விமான நிலையம் நிலையம் நோக்கிப் புறப்பட்டாள் மங்கை. மணி ஏழரை ஆகிவிட்டதால் வேறுவழியின்றி வாடகை வண்டியிலேயே பயணமானாள்.
இன்று நாற்பதுபேர் கொண்ட குழு ஒன்று டென்மார்க்கிலிருந்து மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சிங்கப்பூர் வருகிறது. அவர்களை நாட்டின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கம் சொல்லுவதற்காகத்தான், வி.ஐ.பி. டிராவல்ஸ் மூலம் விடியற்காலை மங்கைக்குத் தகவல் வந்ததன் அடிப்படையில் விமான நிலையம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர் மங்கையர்க்கரசி, பிறமொழிக் காரர்களுக்கு எளிதில் புரிய வேண்டுமென்பதற்காகத் தன் பெயரை ‘மங்கை’ எனச் சுருக்கிக் கொண்டாள். அவள் கடந்த ஓராண்டாக எங்குச் சென்றாலும் புகைப்படமெடுக்கும் இளங்கோவனையும் அங்கு வரச் சொல்வது வழக்கம்.
மங்கையும் வி.ஐ.பி. பயண முகவர் குழுவும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்க, எழுதிப்பிடித்த தட்டிகளுடன் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் இளங்கோவும் வந்து சேர்ந்து கொண்டான்.
குறித்த நேரத்தில் விமான நிலைய சுங்க மற்றும் குடி நுழைவுத்துறை சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு வெளியில் வந்தனர். ஒருவர்க்கொருவர் அடையாளம் கண்டுகொண்ட பின்பு, வரவேற்று, தயாராய் நின்ற ஆடம்பரமான பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இளங்கோ படமெடுத்தான். பலகோணங்களில், பின்னால் விமான நிலையச் சின்னம் தெரியும்படி வைத்து, சேர்த்தும் பிரித்தும் படமெடுத்தாள். அவர்களில் சிலரும் ஒருவர்க்கொருவர் படமெடுத்துக் கொண்டனர்.
மங்கை தன்னைப் பயண வழிகாட்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சிங்கப்பூர் விமான நிலையப் பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
பேருந்தில் அனைவரும் ஏறியபின், ஓட்டுநர் மொத்தத் தலைகளை எண்ணிக்கொண்டு, அவன் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.
பேருந்து, நியூபார்க் விடுதியை நோக்கிப் புறப்பட்டது. சிறிய கை ஒலிவாங்கியைக் கையில் பிடித்துக்கொண்டு, சிங்கப்பூர் நாடு, அரசு, வளர்ச்சி, போன்றவற்றைச் சொல்லி மூன்று நாள்களில், அவர்களை அழைத்துச் சென்று காட்ட வேண்டிய இடங்களைப் பற்றி ஒரு அட்டவணை போட்டு விளக்கிக் கொண்டே வந்தாள்.
விடுதி வந்தவுடன், அவர்களை இறக்கி உள்ளே போகச் சொல்வதற்கு முன்பு, ‘இதே வண்டி இதே இடத்தில் 10.30க்குத் தங்களுக்காகக் காத்திருக்கும் என மங்கை சொல்லிவிட்டு இளங்கோவை அழைத்துக் கொண்டு, பக்கத்தில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் பசியாறச் சென்றாள்.
உணவகத்தில் நுழைந்தவுடன் அவள் முகமலர்ச்சியில் ஒரு சிறிய மாற்றத்தைக் கண்டான் இளங்கோ. உட்கார்ந்தவுடன்,
“இன்று நீயே ஆர்டர் கொடு.”
“ஏன் உனக்கு என்னாச்சு? மங்கை எப்போதும் நீ தானே ஆர்டர் கொடுப்பாய்?”
“ஆமாம் இன்று ஒரு சேஞ்சுக்காக நீயே ஆர்டர் கொடேன். அவருடன் இங்கே வரும் போதெல்லாம், அவர்தான் ஆர்டர் கொடுப்பார். அந்த நினைவு வந்துவிட்டது இளங்கோ.”
“ஆரம்பிச்சுட்டியா? அவர் உன்னை விட்டுப் போயி நாலாண்டுகள் ஆகியும், வருவார்ங்கிற எதிர்பார்ப்பு இன்னுமா இருக்கு?”
“அப்படியிருக்கிறதனாலதான் நான் அவருக்காக வாழ்ந்து கிட்டிருக்கிறேன். மற்றவங்களைப்போல “இல்லேன்னா உயிரை விட்டுடுவேன்னு” சொல்ல மாட்டேன். இன்னொருத்தனைக் கல்யாணம் செஞ்சிக்காமலிருக்கிறேன். அவ்வளவுதான்.”
“அப்படின்னா ‘அவரு’ வந்துட்டார்ன்னா அவரையே கல்யாணம் செஞ்சிக்குவியா?”
“அது அவர் நிலையைப் பொறுத்தது.”
என்னைப் பொறுத்தவரையிலே, நான் மாறிட்டேன்கிற அவப்பெயரை ஏற்க விரும்பலே. ஆனா அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கிறேன்.”
“எல்லாத்தையும் என்கிட்ட சொன்ன நீ இதைச் சொல்லலியே?”
“சொல்லக்கூடாதுன்னு இல்லே. அதற்கான சந்தர்ப்பம் வரல. எங்கம்மாளோட தோழி ஒருத்தர் இருந்தாங்க. அவங்களோட மகன்; அழகாயிருப்பான்.”
“உன்னைவிடவா…உனக்கு மேச்சிங்கா இருப்பானா?”
“அப்கோர்ஸ்… பெட்டர் சாய்ஸ்தான்… இருந் தாலும் அழகு மட்டுமா குவாலிபிகேஷன்? அவன் விஷயத்திலே நான் மதில்மேல் பூனையாத் தானிருந்தேன். அவனைத்தான் எனக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு எங்கம்மா ஒத்தகால்லே நின்னாங்க, ஆனா இடையிலே ‘இவரு’ குறுக்கிட்டாரு. அவனைவிட அழகு சிறிது குறைவாயிருந்தாலும், கெட்டிக்காரர். எதையும் சாதிக்கணும். முன்னுக்கு வரணும்னு திட்டம் தீட்டிக்கிட்டேயிருப்பார். அவரால முடியும்னு நானும் நெனச்சேன். எங்க எதிர்காலம் ரொம்ப பிரகாசமா இருக்கும்னு எதிர்பார்த்தேன். தமிழ்நாட்லே இருக்கிற தன்னுடைய பெற்றோர்களை அழைச்சிக்கிட்டு இங்கே வந்து, தான் நல்லா வாழ்ந்து காட்டணும்; அதைப் பார்த்து அவங்க பூரிப்படையணும் என்று அடிக்கடி சொல்வார். அது எனக்குப் புடிச்சிருந்தது. எவ்வளவு பாசமா இருந்தார். என்கிட்டேயும் அப்படித்தான் பாசமா இருந்தார். நான் அதை நம்பினேன். என் மனத்தைப் பறி கொடுத்ததனாலதான் எங்கம்மா பார்த்த பையனைக் கல்யாணம் செஞ்சிக்க மறுத்துவிட்டேன். இந்த எதிர்பாராத திருப்பத்தினால தான் எங்கம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டு மறு ஆண்டே இறந்துட்டாங்க. அவுங்க இறந்திட்டதனால் நான் மறுத்தது தவறுன்னு இன்னைக்கும் நினைக்கல. அப்போதைய சூழ்நிலையிலே அப்படி முடிவு எடுக்க வேண்டியதாகி விட்டது.”
“அவர் இனிமே எங்கே வரப்போகிறார். வந்தா என்னமோ ஒரு கேள்வி கேட்கப் போறேன்னியே அது என்ன கேள்வி”
“உங்களால எங்கம்மாவை இழந்தேன். வசதி பத்தாதுன்னு எங்கம்மா சொன்னாங்க. அது தப்பா? ‘வசதியோட வர்றேன்னு’ சொல்லிட்டுப் போயிருக் கலாமல்ல! அப்படிச் சொல்லியிருந்தா, நாலு வருஷம் என்ன? நாற்பது வருஷங்கள்கூட காத்துக்கிட்டி ருப்பேன்” தமிழ்நாட்டுக்குப் போயி பெற்றோர்களைப் பார்த்துட்டு ஒரு மாதத்திலே வர்றேன்னு சொல்லிப் போனவரு. இதுவரை வரல. ஒரு கடிதம்? ஒரு போன்? எவ்வளவு பாசமா, அவர்மேலே எவ்வளவு அன்பா இருந்தேன். எதிர்காலத்தைப் பற்றி எவ்வளவு கனவுகள்? ச்சே…. வந்தா ஏன்யா உங்க ஊர்லே போஸ்டாபீஸோ, டெலிபோன் பூத்தோ இல்லையா? காட்டிலே மிருகங்களோட வாழ்ந்துட்டு வர்றியோ?”
“நான் வேண்டாம்… நீ போயி அந்த மிருகங் களோடவே வாழ்ந்துக்க… என்று கேட்டுட்டு வந்துடப் போறேன். அவ்வளவுதான் இன்னும் ஒரு வருஷம் பார்ப்பேன் இல்லேன்னா ஒன்னப்போல ஒருத்தனைக் கட்டிக்கிட்டு எல்லார் போலவும் குப்பகொட்ட வேண்டியதுதான்.”
“என்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டா… நீ நல்லாவேயிருப்பே. ஏன் அப்படி நினைக்கிறே. நல்லாவே வச்சிப்பேன்” என்று இளங்கோ மனத் துக்குள் நினைத்துக்கொண்டான்.
அவனுக்குள் அப்படியொரு ஆசை எப்படி வந்தது. தன்னுடன் பழகியதற்குப் பின்பு தன் நிலையைப் பார்த்துத் தனக்கு உதவிட மங்கை தன் கையிலிருந்த சிறிது பணத்தைப் போட்டு, மீதியை ஒரு போட்டோ லேப்பைத் திறக்கவைத்ததனால் தன்மீது அவள் காதல் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துவிட்டானா இளங்கோ?
இந்த நாட்டிற்கு வந்த இளங்கோவின் தந்தை, இந்த நாட்டிலேயே பிறந்த அவனுடைய தாயாரைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டு அவன் பிறந்த ஓராண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலே இருக்கிற தம் மூத்த மனைவியைப் பார்க்கப் போவதாகச் சொல்லிப் போனவரு திரும்பவே இல்லே. வரமாட்டாருன்னு முடிவு செய்த அவனோட அம்மா இன்னொருத்தரைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள். இளங்கோ பெரியம்மாவினால் வளர்க்கப்பட்டவன். அந்த அனுதாபத்தில்தன்னை மங்கை விரும்புகிறாள் என நினைத்துவிட்டானா?
வெளிநாட்டுப் பயணிகளோ கூட்ட நெரிசலோ, விழாவோ, பொதுக்கூட்டமோ, விளையாட்டுப் போட்டியோ, எது நடந்தாலும் இளங்கோவிற்குத் தகவல் கொடுத்துப் போகச் சொல்லிவிடுவாள் அவனும் அங்குப் போய், புகைப்படம் எடுத்து வந்து கழுவி, நகல் எடுத்து, தொடர்புடையவர்களுக்குக் கொடுத்து, அதற்குரிய தொகையை வசூலித்துக் கொள்வான். வெளிநாட்டுக்காரர்களாக இருந்து உடனே அவர்கள் புறப்படுவதாக இருந்தால்தான் பொலராய்டு கேமிராவில் படம் எடுத்துக் கொடுப்பான். மறுநாளுக்குப் பிறகு புறப்படுவதாக இருந்தால் லேபுக்கு வந்துதான் கழுவுவான். அப்படி எடுக்கும் புகைப்படம் தான் நன்றாக, நுட்பமாக இருக்கும். பெரிதுபடுத்தியும் கொடுக்கலாம். நெகட்டிவையும் கொடுக்கலாம். அதிகமாகவும் கட்டணம் பெறலாம். இவையெல்லாம் தெரிந்த தானும், பயண வழிகாட்டியாகிய மங்கையும் இணைந்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவன் நினைத்து விட்டானா?
வெளிநாட்டுக்காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது, மங்கையை நடுவில் நிறுத்திப் படம் எடுப்பார்கள். சில ஆண்கள் மங்கைதோள்மீது கைபோட்டுக் கொண்டு காட்சி கொடுப்பார்கள் அந்த நேரத்தில் முகம் சுளித்துக் கொண்டுதான் படமெடுப்பான்.
இரவு அந்த வகையான படங்களைக் கழுவும் போதும்; நகல் எடுக்கும்போதும் எவன் எவனோ தோளிலே கையைப் போடறான். கை குலுக்குகிறான் என்று முணுமுணுத்துக் கொள்வான்.
படங் கழுவும் அவனது கூடம் கணினி வசதிகளுடன் புதிய யுக்திகளைக் கையாண்டு அமைக்கப்பட்டது. இளங்கோ தன் வேலைகளோடு மற்றவர்களுக்கும் கழுவி, நகல் எடுத்துக் கொடுத்துப் பொருளீட்டுகிறான்.
அதனால் வங்கிக் கடனையும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தவணை முறையில் செலுத்திப் பெரும்பகுதி அடைத்துவிட்டான்.
“மணி பத்தரை ஆகப்போவுது. இளங்கோ புறப்படு. பில்லுக்குப் பணம் கட்டிவிட்டு வா சீக்கிரம்.” என்று சொல்லிவிட்டு எழுந்தாள், மங்கை.
“முதல்லே எந்த இடத்திற்குப் போறோம்?”
“செந்தோசவிற்குப் போறோம்.”
“நீ பஸ்ஸுக்குப் பே… நான் பிலிம் வாங்கிக்கிட்டு வர்றேன்.”
சொல்லிவிட்டு இளங்கோ எழுந்தான்.
அன்று செந்தோசாவில் முக்கால் நாள் ஆகிவிட்டது. அதன்பின், குட்டிக் கப்பலில், கடல்பார்வையிலிருந்து சிங்கப்பூரையே சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். விலங்கியல் தோட்டம். இரவு சஃபாரி என்று முடித்துவிட்டு இல்லம் திரும்பினார்கள்.
மங்கை குளித்துவிட்டுத் தொலைக்காட்சி முன் உட்கார்ந்தாள். இருப்புக் கொள்ளாமல், இளங்கோவிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அவன் இருட்டுக் கூடத்தில் படம் கழுவிக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
சிறிது நேரத்தில் அங்கே மங்கை நுழைந்தாள். அவள் வருகை அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அன்றையதினம் எடுத்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்த ஆல்பத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள். தன் படத்தைப் பெரிதுபடுத்தியும், தன் முகத்தை மட்டும் நெருக்கத்தில் பெரிதுபடுத்தியும் பார்த்துக் குழப்பத்திற்குள் தள்ளப் பட்டாள். அடுத்துச் சில பக்கங்களைத் தள்ளிய பின்பு, மங்கை தோள்மீது கைபோட்டுக் கொண்டு நின்ற தென் ஆப்பிரிக்கப் பயணியின் முகத்தை மட்டும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் இளங்கோ முகத்தை வைத்து கம்ப்யூட்டரில் ஜிகினா வேலை செய்யப் பட்டிருந்த படத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால், மனத்தின் ஓர் ஓரத்தில் ‘இளங்கோவிற்கு என்ன வந்தது. ஒருகால் என்னை விரும்புகிறானோ’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
படங்களுக்கிடையே மங்கையின் படத்தையும் தலை மாற்றி எடுத்த படத்தையும் அவள் பார்த்து விட்டதை இளங்கோ ஓரக்கண்ணால் பார்த்து விட்டான். பார்த்ததும் ஒருவகையில் சரிதான். தான் விரும்புவதைத் தெரிவித்தாகிவிட்டதாகவே உணர்ந்தான்.
கழுவி எடுத்த படங்களைக் கொண்டுவந்து மேஜைமீது போட்டு, ஓரத்தை வெட்டிச் சரிசெய்ய ஆரம்பித்தான். அதைக் கவனித்துக் கொண்டிருந்த மங்கை, ஒரு படத்தை மட்டும் உற்று நோக்கினாள்.
தெரிந்த முகமாகப் பழகிய முகமாக இருந்தது. அவசர அவசரமாக அப்படத்தை எடுத்துப் பார்த்தாள். ‘அவர்’தான். அவரேதான்.
“இளங்கோ இந்தப் படம் யாருடையது. எங்கே எடுத்தாய்?”
“நேற்று எஸ்பிளனேடு சிங்கத்துக்கிட்டே எடுத்தது. அவங்கெள்ளாம், ஆஸ்திரேலியக் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆர்சர்டு ரோட்டில் உள்ள கிரேண்ட் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். போட்டோவை நாளைக்குக் காலையிலே தர்றேன்னு சொல்லி யிருக்கிறேன். ஏன் மங்கை கேட்கிறே?”
படத்தை எடுத்துக் காட்டி “இவர்தான்… அவர்… வா இப்பவே போயி அவரைப் பார்த்துட்டு வருவோம். எனக்கு உடனே பார்க்கணும் போல இருக்கு.”
“மங்கை! அவர் யாரையோ பார்க்கப் போகணும். ரூமிலே இருக்க மாட்டேன். காலையிலே கொண்டு வான்னார்.”
“அப்படியா காலையிலே நானும் வர்றேன்” என்று சொல்லிவிட்டு ‘அவர்’ உள்ள அத்தனை படங் களையும் கையில் எடுத்துக்கொண்டு மௌனமாகப் புறப்பட்டாள்.
மறுநாள் கிரேண்ட் விடுதியின் அறை எண் 930இன் கதவு தட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.
அவரேதான்….
இவருக்கும் ஒரே அதிர்ச்சி.
ஆச்சரியமான, இன்பமான அதிர்ச்சி அவருக்கு. ஆனால் அவளுக்கோ குழப்பமான அதிர்ச்சி.
‘அவர்’ இவளை ஏற்றுக் கொள்ளப் போவ தில்லை. அவர் ஏற்கெனவே யாரையோ திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துகிட்டிருப்பார். இவளை மறந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும் இவள் ஏமாற்ற மடைந்து, என்கிட்டேதான் வரப்போறா…’ என்று இங்கோ எண்ணிக்கொண்டே அருகில் நின்றான்.
“ஏன் மங்கை… என்ன ஆச்சுது. உன் அட்ரஸை நேத்து ராத்திரிகூடப் போய்த் தேடிப்பார்த்தேன். பழைய வீடு என்ன ஆனது.
“என்னைத் தேடினீங்களா? மறந்துட்டீங்கன்னு நெனச்சிக் கிட்டிருந்தேன்.”
“ஏன் அப்படி நெனைக்கிறே? நானா மறப்பேன். நான் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா போறப்பகூட. இங்கே தங்கிய நான்கு மணி நேரத்தையும் உன்னைத் தேடுவதிலேயேதான் கழித்தேன். இப்போது வந்தது கூடத் தமிழ் ஆங்கில பேப்பர்கள்ளே விளம்பரம் கொடுக்கத்தான். இந்தப் பாரு… மெல்பர்ன் நகரத்திலே ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாகிறது. நல்லா போவுது.. படத்தைப் பாரு’ என்று சொல்லிவிட்டு அவர் தன் மேஜை மீதிருந்த படங்களை எடுத்துக் காண்பித்தார். அவளும் வாங்கிப் பார்த்தாள்.
“மங்கை மாடர்ன் மெஷனிரிஸ்” என இருந்தது. பெரிய பெயர்ப் பலகை. பெரிய தொழிற்சாலையாகத் தானிருந்தது.
“உங்க அம்மா இறந்த பிறகு வீடு மாறின விஷயம் எனக்குத் தெரியாததனால நான் பழைய வீட்டுக்குப் போயி விசாரிச்சா சரியான பதிலில்லை. நான் எப்படித் துடிச்சிப் போயிருப்பேன். சரி விடு. நடந்தது நடந்திடுச்சி. திடீர்னு புறப்படுன்னா, உனக்கும் சிரமமாக இருக்கும். ஒரு மாதமோ, இரண்டு மாதமோ எடுத்துக்க. குடும்பம், தொழில் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிக்க. கல்யாணத்தை மெல்பர்ன்லேயே வச்சிக்கலாம். ஹலோ டார்லிங்… என்ன யோசனை?”
மங்கையின் கண்களில் நீர் சுரந்து உதிரலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தது. ஓடிப்போய் ‘அவரை’க் கட்டித் தழுவினாள்.
இளங்கோ, அதையும் ஒரு படம் எடுத்துக் கொண்டு, சொல்லிக் கொள்ளாமல் அறையை விட்டு வெளியேறி நடந்தான்.
– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.