கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 289 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்றில் இருந்தே பக்கியைக் காணவில்லை. மாலை ஆறு மணிக்கெல்லாம் தானாகவே வந்து கூட்டில் அடைந்துவிடும் நல்லதொரு கோழிதான் பக்கி. ஆனால் நேற்று எல்லா கோழிகளும் வந்த பின்னும் கூட, பக்கி வரவேயில்லை. 

அம்மாவும் பாட்டியும் ஆளுக்கொரு திசையில் பா… பா…பா…என கத்திக்கொண்டிருக்க, நான் மட்டும் பக்கி கிடைக்கவே கூடாதென வேண்டத் தொடங்கினேன். 

பக்கி எங்கள் வீட்டிற்கு வரும் போது ரொம்பவும் சிறிய குஞ்சாக இருந்தது. வெள்ளையும் மஞ்சளும் கலந்த அழகான பொன் நிறத்தில் குட்டிக் குட்டிக் கால்களும் முட்டைக்கண்ணுமாய்…. முதல் முதலாய் ஒரு கோழிக் குஞ்சை கைகளில் தொட்டு ஸ்பரிசித்தேன். அந்த மிருதுவான உடல், துருதுருத்த விரல்கள், கூரான வாய் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த கோழிக்குஞ்சை சீண்டி விளையாடத் தொடங்கினேன். அதுவும் என்னுடன் ஒட்டிக்கொண்டது. 

கோழிக்குஞ்சுக்கு பெயர் தேடி சலித்துத்தான்போனேன். எந்த பெயருமே பொருந்தி வரவில்லை. 

மீரா…. மீனா….சியா…., ஜோதி.., ம்ஹீம் எந்தப் பெயருமே பிடிக்கவில்லை. 

“சோனி.. சோனி.. சோனி…” கோழி அசையாமல் நின்றது. 

”ப்ரியா….ப்ரியா… ப்ரியா…” பலனே இல்லை. 

“பக்கி… பக்கி….பக்கி…” 

என்ன ஆச்சரியம்! கோழி திரும்பிப்பார்த்து வரத்தொடங்க, எனக்கு பிடிபடாத சந்தோஷம். அன்றிலிருந்தே கோழிக்குஞ்சு பக்கியானது. எனக்கும் நல்லதொரு தோழியானது. 

பக்கியின் வளர்ச்சிப்படிகளைப் பார்த்து பார்த்து இரசிக்கத்தொடங் கினேன். வேண்டுமென்றே தண்ணீர் வைப்பேன். அது தண்ணீர் குடிக்கும் அழகைக் கண்கொட்டாமல் இரசித்துக் கொண்டிருக்கலாம். பாத்திரத்தில் வாயை வைத்து நீரை உறிஞ்சி அப்படியே அண்ணாந்து வாயை ஒரு இருபது பாகை அளவில் விரித்ததும், தொண்டைக்குள் நீர் இறங்குமே! அந்த அழகே தனிதான். 

இப்படியே நானும் பக்கியுமாய் நாட்கள் நகரத் தொடங்கியது. அது ஒரு தனி உலகம். மனித தொடர்புகளற்ற பிஞ்சு பிரபஞ்சம். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு மௌன உறவு இருந்தது. பக்கியினது குரலின் ஒவ்வொரு அர்த்தமும் எனக்கு அத்துப்படி. பக்கியின் பசி, தாகம், தூக்கம், ஒவ்வொன்றையும் என்னால் துல்லியமாகக் கண்டுபிடிக்கமுடியும். மொத்தத்தில் எனக்குள் ஒரு தாய்மை உணர்வு. 

இப்படியிருக்கும் போதுதான் பக்கியை சாமிக்கு நேர்ந்து விட்டிருப்பதாய் அம்மா சொன்னாள். அப்போது எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன். ஆனால் முனியாண்டி சாமி திருவிழா ஆரம்பித்ததிலிருந்தே வீட்டில் ஒரே பரபரப்பு. பக்கியை பலி கொடுக்கப் போவதாய் எல்லோரும் பேசிக்கொள்ள – உறைந்து போய் விட்டேன். கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பக்கியை காப்பாற்ற ஒரு வழியும் தெரியவில்லை. அழுது, மன்றாடி, பட்டினி கிடந்து எல்லாமே தோல்விதான். சாமி குற்றம் வருமாம். அப்பா கண்டிப்பாக சொல்லிவிட்டார். எப்படி காப்பாற்றலாம் என்ற அவஸ்த்தையில் நான் தடுமாறிக் கொண்டிருந்த போதுதான், எந்த கடவுள் புண்ணியமோ பக்கி காணாமல் போய்விட்டது. இருந்தாலும் ஒரு பயம். எங்காவது பதுங்கி இருந்து விட்டு எப்போது வேண்டுமானாலும் பக்கி வரக்கூடும். 

வீட்டைச்சூழ தேயிலைச் செடிகின் குளுமைதான். அடியில் கரும்பச்சை நிறமாயும் நுனிக்குருத்து இளம் பச்சை நிறமுமாய் அடர்ந்து போய் அகல அகலமாய்… ஒரு தனி செடியே இத்தனை அழகென்றால், எத்தனையாயிரம் தேயிலைச் செடிகள்? பார்த்துக்கொண்டே இருக்கலாம், அத்தனை அழகு. இடையிடையே கான்வெட்டப்பட்டு, அழகாய் நிரை பிரிக்கப்பட்டு அப்படியே பரந்து விரிந்து ஒரு வெளியாய் தெரியுமே! அதன் வடிவமைப்பே ஒரு கலைதான் போங்கள். அந்த தேயிலைச் செடிகளுக்குள் ஒளிந்து விளையாடுவது ஒரு பெரிய சாதனை. நான் பக்கியை கைகளில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு பெரிய செடிக்கடியில் ஒளிந்து கொள்வேன். பக்கி நல்ல சமத்து நான் ஒளிந்திருக்கும் போது தவறியும் கத்தாது. ஆடாமல் அசையாமல் என் கைகளுக்குள்ளேயே முடங்கி, அப்படியே என் விரல்களில் தலைசாய்த்துக் கொள்ளும். நானும் மெதுவாக அதன் தலையை வருடிக்கொடுப்பேன். 

தேயிலைச்செடிகளுக்கு இடையிடையே மூன்றடி ஆழத்திற்கு கான் வெட்டப்பட்டிருப்பதால், உள்ளே எங்கு வேண்டுமானாலும் ஓடித்திரியலாம். கான் முழுவதும் இலைகள் விழுந்து குச்சியும் குப்பையுமாய் நிரம்பி நடக்க மெத்துமெத்தென்று சுகமாய் அமுங்கி கொடுக்கும். கூடவே காய்ந்த சருகுகளின் சரசரவெனும் சத்தம் வேறு. அந்த கான் குப்பையை தன் சிறிய விரல்களால் கிளறிக்கிளறி எதையெதையோ தேடி பக்கி சுவைத்துக்கொண்டிருக்கும். நானும் பக்கி வரும்வரை ஒரு நிழலுக்குள் இருந்து ஏதாவது யோசனையில் மூழ்கிப்போய் விடுவேன். 

ஒரு நாள் அப்படித்தான். எங்கிருந்தோ ஒரு நரி சடாரென பாய்ந்து வர, செய்வதறியாது பக்கியைத்தேடி, நான் பதறி எழும்ப முன்னமே ஒரு நிசப்தம். ஒன்றையும் காணவில்லை. எனக்கு முகமெல்லாம் வியர்த்துப்போய், கைகளில் லேசாய் நடுக்கம். நரி கோழியைப் பிடித்திருக்குமோ? பிடித்து தின்றுகொண்டிருக்குமோ? முருகன், பிள்ளையார், பத்திரகாளி, சிவன்…. எல்லாக் கடவுள்களையுமே ஒரே நிமிடத்தில் வேண்டிக்கொள்கின்றேன். பக்கி பக்கி என நா உலர கத்துகிறேன். இருட்டும் வரை தேடித்தேடி ஓய்ந்துபோய், என் அழைப்பு விம்மலாய் மாறி அழுகையில் போய் முடிகிறது. 

“என்ன புள்ள ஆறுமணிப்பட்டு ரோட்டுல என்னா வேல? ஓங்க அம்மா கூப்புடுறாங்க”. 

தொங்கல் வீட்டு தங்கராசு அதட்டிக்கொண்டே போய்விட, நான் அழுதுகொண்டே வீட்டுக்கு போகிறேன். கோழி வந்துவிடுமென எத்தனைபேர் ஆறுதல் சொல்லியும் என்னால் அமைதிப்படவே முடியவில்லை. 

பக்…பக்…பக்… என்ற பக்கியின் குரலில் தான் கண்விழிக்கிறேன். ஐயையோ! இது கனவில்ல.. நிஜமாகவே பக்கி பக்கிதான்…. பக்கியேதான். அப்படியே அணைத்து என் போர்வைக்குள் இழுத்து, முத்தமிட்டு, தடவி, அடித்து, அதட்டி பின் ஒருவாறு சமாதானமாகிறேன். 

“நான் தான் கோழி வந்துருன்னு சொன்னேனே” 

அம்மா பாவம் பக்கியை படுக்கைக்கே கொண்டுவந்து தந்துட்டு முணகிக்கிட்டே போயிட்டாங்க. இன்னொரு தடவையும் அப்படித்தான். காணாமல் போய் ரெண்டு நாளைக்கப்புறம் பக்கி தானாகவே வீட்டுக்கு வந்திடுச்சு. 

இப்போ என் பயமெல்லாம் இதுதான். இதேமாதிரி இன்னைக்கும் பக்கி வந்திட்டா என்ன பண்ணுறது? பலியாயிடுமே! இப்போ அம்மாவும் பாட்டியும் தேயிலைச் செடிகளுக்குள்ள இறங்கி தீவிரமா தேடத்தொடங் கிட்டாங்க. இனியும் பொறுமையா இருந்தா எல்லாமே கையை மீறி போயிடும். நானும் தேட எழும்புகிறேன். இவங்களுக்கு முன் நான் தேடிட்டா எப்படியாவது காப்பாத்தலாமே! 

”பக்கி… பக்கி… பக்கி….” 

இந்தா பா…பா…பா 

ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாக.. 

ரொம்பவே பயமா இருந்தது. போனதடவை ஒரு இருபது கோழிக்கிட்ட பலியா கொடுத்தாங்க. சின்னையா ஒருபடி மேலே போய் தன்னோட ஆட்டையே பலிகொடுத்துட்டானே… கடவுளே நீதான் பக்கியை எப்படிசரி காப்பாத்தணும். எனக்கு உயிரை பலிகொடுன்னு சாமி கேட்டிச்சா என்ன? இந்த மனுசங்களுக்கு ஏன்தான் இந்த கொலைவெறியோ தெரியலையே…? 

நான் பக்கியை தேடிட்டே அம்மா பாட்டிக்கிட்ட இருந்து விலகி தூரமா போயிடுறேன். ஒரு இடத்துல கசிப்பு பானை ஒளியவச்சிருக்கு. கானுக்கு கான் இது ஒரு கருமம். இந்த எழவ எப்பிடித்தான் குடிச்சி தொலைக்கிறாங் களோ! எரிச்சலில் அதை காலால எத்தி விட்டுட்டு திரும்புற நேரம், கடவுளே! பக்கி ஒரு மூலையில் இருந்து வாறது தெரியுது. இப்ப என்ன செய்யிறது…? என்ன செய்யிறது….? அம்மா பார்க்க முதல்ல ஏதாவது செய்யனுமே. ஒன்னுமே புரியலையே… பக்கத்தில இருந்த பெரிய கல்லை கையில் எடுக்கின்றேன். தடார்னு ஒரு சத்தத்தோட, பக்கியும் சேர்ந்து அலறி துடிக்க, 

“என்ன சத்தம்… என்ன சத்தம்?” அம்மா பதறலுடன் ஓடிவாறாங்க.

“கோழி கிடைச்சிருச்சம்மா. பிடிக்கப்போய விழுந்துட்டேன்.” என்கிறேன்.

பாட்டிக்கு பிடிபடாத சந்தோஷம். கோழியை தூக்கிக்கொண்டு,

”மாரியாத்தா! ஒனக்குன்னே வளத்த கோழி… ஒரு கொறையும் வைச்சிறாத தாயீ..” திடீரென ஏதோ உணர்ந்து பேச்சை நிறுத்திய பாட்டி கோழியைப் பார்த்துட்டு கத்திட்டாங்க. 

“ஐயய்யோ ரெத்தம் வருது. காலுல ஒரு விரலை காணமே! எங்கேயோ அடிபட்டிருச்சி போல” 

“அப்ப எப்பிடி மாமி பலி குடுக்கிறது?” 

அம்மா யோசிக்கத் தொடங்க, கோழிய தரையில விட்டுவிட்டு பாட்டியும் யோசிச்சிட்டே போறாங்க. 

ஒரு பக்கியை காப்பாத்திட்டேன். இது போல எத்தனையெத்தனை பக்கியள் பலியாகிறதோ..? எனக்கென்ன போச்சி எப்படியோ என் பக்கி தப்பிச்சிடுத்தே அதுவரைக்கும் போதும். பக்கியிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டபடியே மருந்து கட்டுவதற்காய் மீண்டும் பக்கியை தேடுகிறேன். 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை) 

– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.

– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

பிரமிளா செல்வராஜா (பிரமிளா பிரதீபன்)

மலையகத்தில் ஊவா கட்டவளையைச் சேர்ந்த பிரமிளா செல்வராஜா 1984ல் பிறந்தவர். தற்போது கலைமாணி இரண்டாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கிறார். பகுதிநேர கணனி இயக்குநராகப் பணியாற்றுகிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரது படைப்புகளில் மலையக மண்வாசனை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. முகவரி :- ஊவா கட்டவளை, ஹாலி-எல. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *