பகை
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குளித்து முடித்து, கண்ணாடி முன் நின்று தலை சீவும்போது எனக்குத் தெரிந்தது.
என் முகம் மாறிப் போய்விட்டது. வாஸ்தவம்தான். அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. பட்டணம் வந்தாயிற்று. எங்கு கெட்டால்தான் என்ன, கிளம்ப வேண்டும். ஏழு மணி பஸ் வந்தது. நான் இல்லையென்றாலும் போய்விடும், அந்த பஸ்ஸைப் பிடித்துப் போய்தான், விதித்திருக்கும் பொய்களைப் பேச வேண்டும். வாயால் மட்டும் சிரிக்க வேண்டும். அங்கீகரமான அயோக்கியத் தனங்களைச் செய்ய வேண்டும். என் முதலாளி இருபத்து ஏழாவது முறையாக ரசித்துக் கூறும் தன் வேட்டை அனுபவங்களை (ஒரு புலி நிஜமான புலிதான் அதுக்கும் அவருக்கும் பத்து அடி தூரம்தான். கூட வந்தவர்கள் அனைவரும் ஓடிவிட தான் மட்டும் அதை அஞ்சாமல் விழித்துப் பார்த்து சுட்டது, காயம்பட்டு அது ஓட அதை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியது. செத்துப்போன அதன் தலையில் காலை வைத்துக் கொண்டு, எடுக்கப்பட்டு, வீட்டுக் கூடத்தில் யேசுநாதர் பக்கத்தில் தொங்க விட்டிருக்கும் நெகடிவ் சாட்சி) முதல் முறையாகக் கேட்பதுபோல, கண்களை விரித்து சுவாரஸ்யமாக ஒரு போலித்தனமான பயத்தோடு கேட்டு விட்டு சாயங்காலம் ஆறு அடித்தால் அவர் உத்தரவு பெற்று, விடுதலையாகி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
நான் வீதியில் இறங்கி நடக்கிறேன். திடீரென்று நான் மறந்திருந்தது என் ஞாபகத்துக்கு வந்தது. என் வீட்டுக்குக் கொஞ்ச தூரத்தில் மெயின் ரோடுக்கும் என் வீட்டுக்கும் இடைப்பட்ட தெரு முனையில் நேற்று ராத்திரி என்னைத் துரத்திய நாயைப் பற்றிய என் ஞாபகம் உசுப்பிக்கொண்டு மேலே வந்தது. துரதிருஷ்டவசமானது அது. வழக்கம்போல கடைசி பஸ்ஸைப் பிடித்து பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்கினேன். தெரு திரும்பி நடந்தேன். எதிரில் இடையூறு இல்லாத வானத்தில் ஒரு முழு நிலா. சுற்றியுள்ள வீட்டுச் சுவர்கள், மரங்கள், புழுதி எல்லாம் அலுமினியம் பூசிக் கிடந்தன. சின்னக் குழந்தைகளின் விரல்களைப் போல ஈரம் கலந்த காற்று. வாழ்க்கையில் எப்போதாவது லபிக்கும் அற்புத க்ஷணங்கள். நான் லயித்து நடப்பது தெரியாது நடக்கிறேன். அப்போதுதான், அந்த நிசப்தத்தைக் கலைப்பது மாதிரி ஒரு நாசக் குரல்:
‘உ.ர்..ர்…ர்’
நான் திடுக்கிட்டு என் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்கிறேன். புரட்டித் தள்ளப்பட்ட முனிசிபாலிட்டியின் குப்பைத் தொட்டி, குவிந்த குப்பைமேடு. அதன் மேல் மிகச் சௌகரியமாக கால்களை நீட்டிப் போட்டு படுத்திருந்தது ஒரு செம்பழுப்பு நாய் எந்த வினாடியிலும் அது பாயலாம் என்பது போல பயம். என் செருப்பில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறுவது எனக்குப் புரிகிறது. செருப்பைச் சத்தம் எழாமலும், என் தோள் பையை இடக்கையால் அணைத்துக்கொண்டும் மிக நிதானமாக நான் நடந்தேன். என் பார்வை நேரே பார்ப்பது போலப் போக்குக் காட்டினாலும் என் வலக்கண்ணும், சகல புலன்களும், அந்தச் செம்பழுப்புப் பிசாசின் மீதே பதிந்திருந்தன.
‘லொள்-லொள்-‘
அதன் குலைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர உயர என் நடையின் வேகமும் கூடுகிறது. நான் என் பகைவனின் ஸ்தானத்தின் தன்மையை நிதானிக்கிறேன். அதுக்கும் எனக்கும் பத்தடி தூரம் இருந்தது. இந்த தூரத்தைத் தக்க வைத்துக்கொள்ள நான் பாடுபட வேண்டியிருந்தது. என் ஒவ்வோர் அடியிலும் வேகத்தை கூட்டி அதை அரை ஓட்டமாக விஸ்தரித்தேன். இதற்குள் ஒற்றைக் குரலாக ஒலித்த அதற்குப் பக்க பலமாய் பல குரல்கள் சேர்ந்து கொண்டன. பௌதீகமாக நாய்களைக் காணாவிடினும் குரல்கள் பலத்தன.
‘நம் பகைவனா விடாதே கடித்துக் குதறு அவனை’ என்பதாக, ரோஷத்தோடு ஒலித்தன அக்குரல்கள். என் மயிர்க் கால்கள் சிலிர்த்தன. குபீரென்று ஓடினால் நாயும் ஓடி வரும் என்பது எனக்குப் புரிந்தது. சடாரென்று திரும்பி, ‘ஹை-ஹை’ என்று கையை வீசினேன். இந்த என் உத்தி பெருத்த பலனை உண்டாக்கவில்லை. அது ஒரு கணம் திகைத்து ஓர் அடி பின் வாங்கியது. இது தற்காலிகமாக உதவும் என்பதை உணர்ந்து அதை மீண்டும் மீண்டும் கடைப்பிடித்தேன். பின் வாங்கின அது மிகுந்த கோபத்தோடு என் மேல் பாய்ந்தது.
நான் ஓடத் தொடங்கினேன். அது விரட்டிக்கொண்டு ஓடி வந்தது. என் தோள் பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் வலது கையால் சில்லறை கொட்டி விடாதபடிக்கு சட்டையைப் பிடித்துக் கொண்டும் ஓடினேன். என் பேண்ட்டையோ தொடை சதையையோ பலி தந்துவிடக் கூடாது என்கிற உணர்வோடு ஓடினேன். என் பள்ளி நாட்களில் கூட அப்படி நான் ஓடி இருக்க வில்லை. சாப்பிட்டு அதிக நேரமாக வில்லையாதலால் வயிறு குலுங்கிய. ‘லொங்கு லொங்கு’ என்று ஓடி வந்து, என் குறியாய் இருந்த என் வீட்டு வாசற்படிக்கு வந்து சேர்ந்ததும் தான் எனக்கு உயிர் மீண்டது. என் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு வந்து விட்ட தைரியத்தில் திரும்பிப் பார்த்தேன்.
நாயைக் காணோம்.
எனக்கு என் பிரதேசம் தெரிவது மாதிரி, அதுக்கு அதன் பிரதேசம் தெரிந்து இருந்தது. எனவே அது அத்துடன் நின்று இருக்கிறது. அல்ல, ‘இன்று பிழைத்துப்போ! நாளைக்கு வா! கவனித்துக் கொள்கிறேன்’ என்கிற இராம மனப்பான்மையாக இருக்கலாம். அல்லது ‘தொலைந்து போ மனுஷப் பயலே!’ என்கிற கருணையாக இருக்கலாம். இதில் இரண்டாவதே சாத்தியம் என்று என் உள்ளுணர்வு கூறியது.
இந்தக் கலக்கத்தில் படபடவென்று நான் கதவைத் தட்டி இருக்கிறேன். எப்போதும் மிக நிதானமாக எழுந்து விளக்கைப் போட்டுப் புரியாத மொழியில் பல சப்தங்களை எழுப்பிக் கொண்டு கதவைத் திறக்கும் என் சகா, திடுக்கிட்டு ஓடி வந்து கதவைத் திறந்தான்.
‘என்ன? என்ன ஆச்சு, ஏன் கதவை இப்பிடிப் போட்டு உடைச்சீங்க_?’
‘நாய்-துரத்திக்கிட்டு வந்துச்சு, அதான் ஓடி வந்தேன்.’
‘நாயா – ஓகோ, அந்த சிவப்பு நாய்தானே! அது வெறி நாயாச்சே. பத்திரம், வெறி நாய் கடிச்சா தொப்புளைச் சுத்திப் பதினாறு ஊசி போடுவாங்க.’
நான் அவன் முகத்தைக் கவனித்தேன். இதைச் சொல்லும் போது அவன் உள் மனத்தில் ஒரு சந்தோஷத்தோடு இதை சொல்வதாக எனக்குப் பட்டது. நான் இவனுக்கு என்ன தீங்கு இழைத்தேன் என்று யோசித்தபடி, பாயைப் போட்டுக் கொண்டுப் படுத்தேன். நெஞ்சுத் துடிப்பு நெடு நேரத்துக்கு நீடித்தது-
மறக்கவே கூடாது என்று மனசில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்வது மறந்து போகிறது. அனாவசியமானதுகள் மனதைத் துருத்திக் கொண்டு எம்பி வரும். நாய் கூடத் தன் கோரைப் பற்கள் பிதுங்க வெறித்தனம் மிகுந்த கண்களோடு என்னை எட்டிப் பார்த்தது. கற்பனைதான். என் கண்கள் தூரத்தில் இருந்தே நாயின் பிரதேசத்தை ஆராய்ந்தன. உருட்டி விடப்பட்ட தொட்டி குப்பை நாயைக் காணோம். அப்பா – ஓர் ஆறுதல். சின்ன அல்ப சந்தோஷம். நான் அருகில் நெருங்கும் போதுதான் அதன் தலை தெரிந்தது. சாக்கடைக்குள் இருந்தது. நான் வருவது தெரிந்தே வந்திருக்கிறது. எனக்கு முந்தைய இரவு நிகழ்ச்சிகள் ஞாபகம் வந்தன. அது குப்பையின்மீது ஏறி நின்று ஒரு கர்வம் பிடித்த ராஜகுமார னைப் போல என்னை முறைத்துப் பார்த்தது. ஊகும். என்மேல் அதுக்குப் பகை இன்னும் போகவில்லை. நான் அதனோடு சினேகம் கொள்வதே சரியானது. கண்கள் சிரிக்க புன்னகை செய்தேன். தன் சிவந்த நாக்கைத் தொங்கவிட்டபடி எந்த உணர்வும் இல்லாமல் அது என்னைப் பார்த்தது. இன்னும் அதற்கு என் மேல் நம்பிக்கைப் படவில்லை. நான் என் பண்ண.
‘ச்சு-ச்சு’ என்று வீட்டு நாயைக் கூப்பிடுவது போல கூப்பிட்டு வைத்தேன். கூப்பிட்டால் வீட்டு நாய்கள் வாலை ஆட்டும். இது, அழுத்தமாக கீழ்ஸ்தாயி சட்ஜமத்தில் ‘………’ என்று முனகி, பஞ்சமத்தில் ‘லொள்’ என்றது.
இரவு நடந்த அந்த ஓட்டப் பந்தயம் மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்த்து நான் ஓடத் தயார் ஆனேன். அதுவோ சுபாவமாக நின்று மேற்கிலும் கிழக்கிலும் திரும்பித் திரும்பிப் பார்த்து யாரோ அவசர காரியமாய் ஓடுவது போல ஓடியது. நான் உள்ளூர சந்தோஷத்தோடு அதன் ஓட்டத்தைக் கவனித்தேன், இப்போதைக்கு நான் தப்பினேன்.
அது மிகவும் ஓட்டமாக ஓடிப்போய் முனிசிபாலிட்டி விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று நிதானித்து அதை முகர்ந்து பார்த்தது. அது வெறும் கம்பம்தான். ஒரு காலத்தில் அதில் ‘பல்ப்’ இருந்தி ருக்கும். அதன் அடையாளமாய் ஷேட் இருந்தது. நாய் தன் ஒரு காலைத் தூக்கி அந்த மரத்தை அசிங்கப்படுத்தியது. இது அந்த மரத்துக்குத் தேவைதான். விதிக்கப்பட்ட கடமையை அலட்சியப் படுத்தும் அக்கம்பம் இந்த மாதிரி மரியாதைகளுக்கு உரியது தான். நாய் பிறகு சுவாதீனமாக இடப்பக்கம் திரும்பி நேர்கிழக்காக மெல்ல ஓடிப்போய் ஒரு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் மீதி அசிங்கத்தைப் பூர்த்தி செய்தது. அது உள்ளூர் போலீஸ் அதிகாரியுடையது. பிறகு மூன்றாவது வீட்டாண்டை கிடந்த ஓர் எச்சில் இலையில் போய் மூக்கை வைத்து முகர்ந்து வைத்து பார்த்தது. இது ஆகாது என்பதுபோல சட்டென்று இப்படியும் அப்படியும் வேடிக்கை பார்த்தவாறு நடந்தது. புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்த லாரி ஒன்றுக்கு வழி விடுவதற்காக ஓரம் சென்ற நான், நடந்தேன்.
இன்று தான் அதை முழுதாகப் பார்க்க நேர்ந்தது. உடம் பெல்லாம் காயமும் பற்றை பற்றையாக சொறியுமாக இருந்தது அது.
வாலின் பல இடங்களில் மயிர் இல்லாமல் வெள்ளைத் தோல் தெரிந்தது. வயிறு ஒட்டிப்போய் எலும்புகள் தெரிய இருந்தது. எல்லாவற்றையும் மீறி அதன் கண்களில் வெறி தெரிந்தது. கண்ணில்பட்ட அனைத்தையும் கடித்துக் குதறி எறிந்துவிட அது தீர்மானித்து இந்தது போலும்…
பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இந்த நேரத்தில் கும்பல் இருக்காது. பிரயாணிகளுக்கு நிழல் தர ஏதோ ஒரு பேங்க் குடை கட்டி விட்டிந்தது. மறக்காமல் பேங்கின் பெயர் குடையில் பொறித்திருந்தது. காலை வெயில் குடைக்குள் வியாபித்து இருந்தது. சிமெண்ட் பெஞ்சில் இரண்டு கிழவிகளும், விரைவில் ஆகப்போகும் ஒரு மாமியும் இருந்தார்கள். கிழவிகளின் கையில் உடைத்த தேங்காய் பழக்கூடை இருந்தது. மாமியின் கையில் ஏதோ ஒரு வாரப் பத்திரிகை மடங்கி இருந்தது. பெஞ்சை ஒட்டி ஒரு இளம் பெண் குடை பிடித்துக் கொண்டு நின்றாள். காலை வெயிலுக்கு இந்தக் குடை தாங்காது. குடையை ஒட்டி ஓர் டீக்கடை, வெயில் மறைப்புக்கு சாக்குத்துணி கட்டியிருக்கும். டீ குடிக்காமல் வெறும் வெயில் மறைப்புக்கு மட்டும் ஒதுங்குவோரை அவன் டீக்கடைக் காரன்தான் ஊக்குவிப்பதில்லை. லடலடவென்று டீ கிளாஸ்களைக் கழுவி பக்கமாக ஊற்றுவான். தண்ணீர் மண்ணில் விழுந்து நாலா பக்கமும் தெறிக்கும். இது அவனுக்கு ஓர் உத்தி. தண்ணீர் தம் மேல் படக்கூடாது என்கிற விழிப்புணர்வுள்ளவர்கள் யாரும் கடைப்பக்கம் ஒதுங்குவதில்லை. காலை வெயில் சுள்ளென்று உறைக்க வெயிலி லேயே நிற்க வேண்டும். நான் நின்றேன்…
காலையில் இருந்து என்னால் ஒரு வேலையும் செய்யக் கூடவில்லை. என் சிந்தனைச் செயல்களில் எல்லாம் நாய்களாகவே இருந்தன.
‘நீங்கள் ஏதேனும் நாயைச் சுட்டு இருக்கிறீர்களா’ என்று என் முதலாளியைக் கேட்டேன்.
‘ஆங் என்ன கேட்டீங்க-‘
‘புலியை சுட்ட மாதிரி ஏதேனும் நாயைச் சுட்டு இருக்கீங்களான்னு கேட்டேன்-‘
‘நாயையா-‘
‘ஆமா-‘
‘நாயை போய் யாராவது சுடுவாங்களா- என்ன, பைத்தியக்காரத்தனமா பேசறீங்க-‘
‘ஏன்- நாய் சுடக்கூடாத ஒரு மிருகமா-‘
‘நாய்க்கு வெறி வந்து போறவன் வர்றவனைக் கடிச்சுக் கிட்டு இருந்தா ஒரு வேளை சுடலாம். மற்றபடிக்கு என்னை மாதிரி ஒரு வேட்டக்காரன்…’
நான் நகர்ந்து கொண்டேன். எங்கள் விவகாரம் காலையிலேயே ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். அப்படி வராமல் அல்லவா ‘பிசுக்’கென்று போய்விட்டது. சாக்கடையை விட்டு எழுந்து வந்தது என் மீது பாய்ந்து இருக்க வேண்டும். நான் கல்லை எடுத்து இருக்க வேண்டும். பூனையைப் பார்க்கும் ஒரு யானையின் பார்வையைப் போல அல்லவா இருந்தது அது. என்ன அலட்சியம். என்ன கர்வம். ஆக, ஒன்று எனக்குப் புரிகிறது. இந்த இரவை எனக்காக என்றே ஒதுக்கி இருக்கிறது அது. இன்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம்.
நானும் சிவராமனும் உட்கார்ந்து கொண்டு ஏதோ கணக்கு விவகாரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நான் அவரைப் பார்த்துக் கேட்டேன்.
‘உங்களை நாய் கடிச்சிருக்கா?’
‘என்ன கேட்டே…”
‘உங்களை நாய் கடிச்சிருக்கான்னு-‘
‘இப்ப எங்கப்பா திடீர்னு நாய் வந்தது…’
‘சும்மா சொல்லுங்க- இந்த ஊர்ல உங்களைக் கடிச்சிருக்கா நாய்’
தன் வழுக்கையைத் துடைத்துக் கொண்டு என்னிடம் குனிந்து கிசுகிசுத்த குரலில் அவர் கேட்டார்.
‘கிண்டல் பண்றியா – முதலாளியைப் பத்திக் கேக்கிறியா.’
‘சீச்சீ – நிஜமான நாய் – அசல் நாயாவே பொறந்த நாய், வாலோடும், நாலு காலோடும் கூடிய நாய்-‘
‘ஓகோ-‘ அவர் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். சிவ ராமனிடம் ஆபீஸ் ஃபைல் விஷயங்களைப் பற்றிக் கேட்டால் ‘டக்’கென்று பதில் சொல்வார். இந்த நகரத்து ஆபீஸ் வாடகை வீட்டில் இருந்த காலம் தொட்டு இதன் காற்றையே சுவாசிப்பவர். மனைவியைக் காட்டிலும் அவர்அவருடைய பிரம்பு நாற்காலியை நேசித்தார் என்றால், அது மிகையாகாது. ‘சிவராமன் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்’ என்று யாராவது கேட்டால், ஒரு வேளை அவர் யோசிப்பார்.
‘சிவராமன். நாகராஜராவ் நிலுவை எவ்வளவு’ என்று யாராவது அவரிடம் கேட்டால் வாய் மூடு முன்பே அவர் பதில் சொல்லி முடித்திருப்பார்.
மூன்று நிமிஷ மௌனங்களுக்குப் பிறகு அவர் சொன்னார்.
‘சுமார் பனிரெண்டு வருஷங்களுக்கு முந்தி நடந்துதுப்பா இது – அப்போ நம்ம ஆபீஸ் அமிஞ்சிக்கரையில் இருந்துச்சு. அமிஞ்சிக் கரையில் அப்பல்லாம் சோமாறிப் பசங்க அதிகம். அவனு களைக் காட்டிலும் நாய்ங்க அதிகம். சில நாய்ங்க சைக்கிள், மோட்டார் சைக்கிள்ல போறவன் வர்ரவனோட பேண்ட், வேஷ்டிகளைக் கிழிக்கிறதுக்குன்னே பொறந்தது மாதிரி, காரியம் பண்ணும். ஒரு வெறி நாய் அப்போ இருந்துச்சி. பேட்டைக்கே பிஸ்தா மாதிரி. ஒரு நாள் ராத்திரி வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போய்க்கினு இருந்தனா. வழியில வந்து மறிச்சுக்கிட்டு நின்னுச்சி அது. நாய் எப்பிடி இருக்குங்கற இருட்டுல பார்த்தா நாய்ன்னே சொல்ல மாட்டே. ஜாதி பசுங்கன்னு மாதிரி நிகாவா இருக்கும். மறிச்சுக்கிட்டு ‘உ…ர்’ன்னுச்சு. ‘யார்ரா நீ’ங்கறது அதற்கு அர்த்தம். விசேஷம் என்னான்னா, நம்ப பாஷை அதுக்குப் புரியற மாதிரி, அதுங்க பாஷையும் நமக்குப் புரியும். ஆனா அதுங்க பாஷையில் நாம்பளும் பேச முடியாது. யார்ரா நீன்னு கேட்டுச்சா – என்ன பதில் சொல்றது. நான் ‘பீ அண்டு சி’ கம்பெனி குமாஸ்தான்னு பதில் சொல்ல முடியுமா ஒரு நாய் கேக்கறதுக்கு? நான் பாட்டுக்கு அதை அலட்சியப் படுத்திட்டு நடந்தேன். ‘ஓகோ… உனக்கு- கேவலம் ஒரு மனுஷப் பயலுக்கு – அவ்வளவு தெனாவட்டா’ என்கிற மாதிரிக் குலைச்சுக்கிட்டு வந்து கால் கண்டு சதையில வாயை வைச்சுப் பிடுங்கிச்சி – நான் ஓடி வந்துட்டேன். அப்புறமா ஆஸ்பத்திரிக்குப் போயி தொப்புளைச் சுத்தி பதினாறு ஊசி போட்டுக்கிட்டேன்-‘
‘சரி… சிவராமன் சார் அது என்ன நாய் கடிச்சா மாத்திரம் தொப்புளைச் சுற்றி ஊசி போடறாங்க-‘
‘அதான் – நாய்க்கடி விசேஷம். மாடு, ஆடு, பன்னி, பாம்பு, இதுகள்ளாம் கடிச்சா கை கால்ல ஊசி போடறான். நாய் கடிச்சா மாத்திரம் தொப்புளைச் சுத்திதான் ஊசி போடறான்-‘
‘மாடு கடிக்குமா-‘
‘பல்லு இருக்கில்லே – பல்லு உள்ளது எல்லாம கடிக்கும்’
‘ஓகோ-‘
‘என்ன விஷயம் – காலைலே நாயைப் பத்தி விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கே-‘
‘ஒன்னுமில்லே… சும்மாத்தான்-‘
மதியம் சாப்பிடப் போகும்போது சிவராமன்-
‘என்ன- சாப்பிட வர்லயாப்பா-‘ என்றார்-
‘பசிக்கல்லே-‘ என்றேன்.
எனக்கும் அதுக்கும் அப்படி என்ன விவகாரம். நான் வேலை செய்கிறேன். சம்பாதிக்கிறேன். வயிறு கழுவுகிறேன். அது அதும்பாட்டுக்குப் படுத்து இருக்கிறது. குப்பை மேட்டை சீய்க்கிறது. எச்சில் இலை போட்டுச் சாப்பிடுகிறது. இசைந்த நாய்களோடு இன விருத்தி பண்ணிக் கொள்கிறது. எதனால் என்னை நீ பகைக்கிறாய். உன் ஸ்தானத்துக்கு நானும், என் ஸ்தானத்துக்கு நீயும் ஆசைப்பட நியாயம் இல்லையே-
சாயங்காலம் காலனிப் பக்கம் போய் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
‘நாடகத்தை முடித்து விட்டாயா-‘ என்று ஒரு நண்பன் கேட்டதுக்கு, ‘முடித்து விட்டேன்’ என்று பதில் சொன்னேன்.
‘என்ன தலைப்பு-‘
‘நாய்கள்.’
‘என்ன?’
‘நாய்கள்!’
‘சரிதான்- நல்லாயிருக்கு.’
சுரேஷ்குமாரிடம் கேட்டேன்.
‘நாய் கடிச்சுட்டா தொப்புளைச் சுற்றி ஊசி எப்படி பெரிசா இருக்குமா சின்னதா இருக்குமா ரொம்ப வலிக்குமா?’
‘என்னை இதுவரை தேள்தான் கடிச்சிருக்கு. நாய் கடிச்சதில்லே ஏன் உன்னை கடிச்சிருச்சோ-‘
‘இல்லை. இதுவரையிலும் இல்லை. இன்று ராத்திரி கடிக்கலாம்-‘
‘என்னது—’
‘சும்மா-‘
வழக்கம் போல அன்றைக்கும் கடைசி பஸ்ஸில் தான் வந்து பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்கினேன். தரையில் கால் வைத்ததுமே என் மனசு சில்லிட்டுப் போகிறது. பயமா? இல்லை யென்று தலையைஉதறிக் கொள்கிறேன். எங்கள் தெரு முனை திரும்புகிறேன். அதே குளிர்ந்த மண் ரஸ்தா. நேற்ற இருந்த அதே ஆகாயம். அதே நிலா. அதே கட்டடங்கள். மரங்கள் அதே அலு மினியத்தில் பூசிக்கொண்டு நிற்கும் ராத்திரி. எதிலும் என் மனம் ஒட்டவில்லை. அதே முனிசிபாலிட்டி தொட்டி. அதே குப்பை.
‘உர்ர்ர்’ என்கிற உஷார் சப்தத்தை எந்த நிமிஷத்திலும் கேட்கவும், அதை நேருக்கு நேர் சந்திக்கவும் என்னை நான் தயார் செய்து கொள்கிறேன். உற்று அந்தப் பிரதேசத்தை நோக்குகிறேன். ஊகூம், எந்த சப்தமும் இல்லை, உரே உறங்கிக் கொண்டிருந்தது. நான் நின்றேன். எனக்குள் ஒரு வெறித்தனமான தைரியம் பொங்கி வழிந்தது. நான் அதைக் கூப்பிடுவதற்கு ஆயத்தமானேன்.
‘ஸ்ஸ்’ என்றேன்.
‘ச்சுச்சு ச்சுச்சு…’ என்று வீட்டு நாயை அழைப்பது போல அழைத்தேன்.
அதைக் காணவில்லை. கிட்டே தொட்டியண்டைப் போய்ப் பார்த்தேன். இல்லை. பின் சாக்கடையில் எட்டிப் பார்த்தேன். இல்லை. சுற்றிலும், அது உலவும் இடங்களிலும் சிரம பரிகாரம் செய்து கொள்ளும் இடங்களிலும் எல்லாம் தேடினேன். கிடைக்க வில்லை.
சோர்ந்து விரக்தியோடு வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினேன். என் சகா வந்து கதவைத் திறந்ததும், நான் அவரிடம் கேட்டேன்.
‘அது எங்க போச்சு’
அவர் கண்களைத் துடைத்துக் கொண்டே,
‘அதுன்னா—எது?’ என்றார்.
‘அதான்-அந்த நாய்-முக்கூட்டில், குப்பை மேட்டில் படுத்திருக்குமே – வெறிநாய் – அதுதான்-‘
‘ப்ச்… அதுவா – அது மத்தியானம் இந்தப் பக்கமா போன லாரியில் அடிபட்டு செத்துப் போச்சு-‘
‘செத்தே போச்சா-‘
‘ஆமா-குப்பை வண்டிக்காரன் வந்து தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டான்-‘
எனக்கு ரொம்பவும் வருத்தமாய் இருந்தது.
– 1979
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.