பகல், இரவுகளைக் கொண்டு வருகிற பறவை





சற்று முன்னர் மின்தடை ஏற்பட்டு அறைக்குள் புழுங்கியதால்தான் வரதராஜன் நாற்காலியோடு வராந்தாவுக்கு வந்திருந்தான், வெளிக் காற்றாவது வீசுமே என்று. ஆனால், இங்கும் அவ்வளவாகக் காற்று வீசக் காணோம். பக்கத்து வீட்டு சப்போட்டா மரம் இவர்களது காம்பௌண்ட்டுக்குள்ளும் நீட்டியிருக்கிற கிளைகள் ஆடாதிருந்தன. உன்னித்தால் மட்டுமே தெரிகிறபடியாக இலைகளில் துல்லிய அசைவுகள். நடமாட்டமற்ற தெருவில் வெக்கையடிக்கிற முற்பகல் வெயில். வீடுகளும் புற அமைதி கொண்டிருந்தன.

வரதராஜன் பனியன் கழுத்தை வெளியே இழுத்து மார்பில் ஊதிக்கொண்டான். சப்போட்டா மரத்தை மீண்டும் பார்க்கையில் யதேச்சையாகத் தட்டுப்பட்டது அந்தக் காகம். மணிக் காக்கைதான். இலைகள் அடர்ந்த சிறு கிளையொன்றில் அமர்ந்திருந்தது. அதை உற்றுப் பார்க்கலானான். காகங்களைப் பார்த்தே வெகு காலமாகிவிட்டதாகத் தோன்றியது. இல்லை, காகங்களைப் பாராமல் அல்ல; அவற்றில் கவனம் கொள்ளவில்லை என்பதே சரி. பல வருடங்களாகவே அவற்றை நினைக்கவும் வாய்ப்பில்லை. தன்னை இந்த நகரத்தோடும் வாழ்வோடும் பொருத்திக்கொள்கிற அவஸ்தையினிடையே காகங்களை நினைக்க ஏது அவகாசம்? அதெல்லாம் அனுப்பூரோடும் அம்மாவோடும் போய்விட்டது.
அம்மாவுக்குக் காகங்களிடம் அப்படியொரு ஈடுபாடு. வீட்டுப் பணிகள் எத்தனை இருந்தாலும் காலையில் குளித்த பிறகே சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தாள் அவள். அதிலும் உணவின் ஒரு கவளத்தை முதலில் காகத்துக்குக் கூரை மீது வைப்பது நியமம்.
ஒரு சில காகங்கள் இதற்கெனவே அந்த நேரத்தில் அங்கே வந்துவிடும். அண்டங்காக்கைகளும் மணிக்காக்கைகளுமாக. குறிப்பிட்ட நேரம் கடந்து தாமதமானால், கூரையிலிருந்தும் திண்ணைக்கு வந்தும் ஓயாமல் கத்தத் தொடங்கிவிடும். “சித்தெ இருங்க, வந்தர்றன்” என்பாள் அம்மா. அவளிடமிருந்து அந்த ஒரு கவளச் சோற்றை ஆகாரமெடுக்காமல் அவை போகாது. காகத்துக்கு வைக்காமல் அம்மாவும் சாப்பிட மாட்டாள்.
இது தவிர அம்மாவுக்குக் காகங்களிடம் வேறு பல நம்பிக்கைகளும் இருந்தன. பொதுவாக அண்டங்காக்கைகள் ஆகாது. நல்லவை மணிக்காக்கைகள்தான். ஒற்றைக் காகம் வீட்டுக்கு வருகிற வழி பார்த்துக் கரைந்தால் விருந்தாளிகள் வரவு. வீட்டுக்கு முன்பாக அவை சண்டையிட்டால் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். மூன்று அண்டங்காக்கைகள் ஒன்றாக வந்து அமர்ந்திருக்கலாகாது. அதை ‘எமன், தூதன், காலன்’ என்று சொல்வாள். அவற்றின் வருகை, அறிந்த இடங்களிலிருந்து இழவு சேதி வருவதற்கான முன்னறிவிப்பு.
ஆனால், காகங்கள் எதுவாக இருப்பினும் அம்மா அவற்றை ஒதுக்கியதில்லை. எல்லாவற்றுக்கும் பொதுவாகத்தான் கூரையில் அவள்
சாதம் வைப்பது. தினந்தோறும் இதைச் செய்வதோடு, இறந்த குடும்பத்தார்களுக்கு அவர்களின் நினைவு நாளில் திதியும் கொடுப்பது வழக்கம். அவளது பெற்றோர், அப்பாவைப் பெற்றவர்கள், அவரது உடன் பிறந்த அண்ணன், பிற நெருங்கிய சொந்தங்கள் ஆகியோரின் இறந்த தினங்களில் அவரவர்க்குப் பிடித்தமான உணவு வகைகள் சமைத்துப் படைக்கப்படும். அதில் வடை, பாயசமும், ஆடு அல்லது கோழி இறைச்சியும் கண்டிப்பாக இடம்பெறக் கூடியவை. அது போக அன்னார்க்குப் பிரத்யேகமாகப் பிடித்த உணவு மற்றும் தின்பண்ட வகையறாக்கள் தனி.
அன்றைய தினங்களில் காலையிலேயே வீட்டை மெழுகி, குளித்து, ஒரு சந்தி இருப்பாள் அம்மா. மதிய வேளையில் படப்புக்கான சமையலை சுவை பாராமல் செய்து முடிப்பாள். வீட்டுக்குள் தலைவாழை இலையில் அவை வைக்கப்படும். ஒரு தட்டில் பூஜைக்குரிய தேங்காய், பழங்கள்; இன்னொன்றில் புது மல்லு வேட்டி, ஈரிழைத் துண்டு அல்லது நூல் சேலை. குத்து விளக்கேற்றி, கற்பூர ஆரத்தியுடன் ஊதுபத்தியும் சாம்பிராணியும் புகைய, துளசித் தீர்த்தம் விளாவி கும்பிடுவார்கள். அப்பா தலைவாழை இலையை பராத்தலில் வைத்து எடுத்துச் சென்று கூரையில் வைப்பார். திதிக்குரிய அந்த மூதாதை அப்போது பித்ருவாக காக வடிவெடுத்து, விண்ணுலகிலிருந்து பூமிக்கு இறங்கும். படப்பில் முதல் கவளத்தைக் கொத்துவது அதுதான். வயிறு நிறைந்த பித்ருக் காகம், சந்ததியர் தம்மை மறக்காதிருந்து அவரது நினைவைப் போற்றுவதில் மனம் நிறைந்து ஆசியளித்துச் செல்லும்.
அங்கே சுற்றுப் பகுதியில் மரங்கள் நிறைய. ஒவ்வொரு வீடுகளிலுமே ஒன்றிரண்டாவது இருக்கும். தவிர தெருவிலும் புறம்போக்கு நிலங்களிலும் உள்ளவை. அதனால் கிளி, மைனா, செம்போத்து, குயில், கொக்கு, கரிச்சான், தவிட்டுக்குருவி, வாழைப்பழத்தான் எனப் பலதரப்பட்ட பறவைகள் அங்கே காணப்படும். கோவில் ஆலமரத்துக்கு வௌவால்களும் இரவில் பழம் தின்ன வரும். இவற்றையெல்லாம்விட அதிகமாகக் காணக் கிடைப்பவை காகங்கள்தான்.
ஊருக்கு வெகு கிழக்கே காக்காத் தோப்பு. தென்னந் தோப்பான அதில் காய்க்கிற தேங்காய்களை விடவும் அதிகமிருப்பது, கூடு கட்டி அடைந்திருக்கிற காகங்களே. அதனால் பேரே அப்படி ஆகிவிட்டது. விடியற் கருக்கலில் காகங்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மேற்கே செல்லும். அந்தி சாய்கிற பொழுதில் கூடடைய கிழக்கே திரும்பும். அதனால், பகலின் எந்த நேரத்திலும் பார்க்க முடியுமென்றாலும், காகங்களுக்குரிய வேளைகள் என காலை, மாலை நேரங்களே மனத்தில் பதிவாகியுள்ளன.
மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது, ஊருக்குப் போகும்போதெல்லாம் இந்தக் காகக் கூட்டங்களைப் பார்க்கையில் வரதராஜனுக்கு வேறுவிதமான கற்பனை எழும்.
வைகறைப் பொழுதில் இந்தக் காகங்கள் பூமியின் கிழக்குக் கோடிக்குச் செல்கின்றன. அங்கிருந்து, விடியும் பகல் பொழுதைத் தம் கால்களில் பற்றியெடுத்துக்கொண்டு, பூமியின் மீது அதை விரித்துப் படரவிட்டபடியே மேற்கே பறந்து செல்கின்றன. இப்படியே பறந்து பறந்து பூமியின் மேற்குக் கோடியை அடையும்போது, கால்களில் பற்றிப் படர விடும் பகல் முடிந்து சாயுங்காலமாகிவிடும். அங்கே உருவாகிற இரவைத் தம் கால்களில் பற்றியெடுத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி பூமியின் மீது அதைப் படரவிட்டபடியே பறந்து செல்கின்றன. கீழ்வானைக் காகங்கள் சென்றடையும்போது இரவு முடிகிறது. அங்கிருந்து மீண்டும் அடுத்த நாளின் பகல் பொழுதை எடுத்தபடி மேற்கு நோக்கிய பயணம்.
ஒரு வகையில் அம்மாவும் இந்தக் காகங்களைப் போலத்தான். இவர்களது வீட்டின் நாட்கள், பகல் இரவென்று அவளாலேயே இயங்கின. பகலின் வெளிச்சம்; இரவின் நிம்மதி. இதன் சூட்சுமத்தை அம்மாதான் வெளியே தெரியாதவாறு தனது பாத்திரக் கரி படிந்த கரிய ரேகைகளின் கைக்குள் அடக்கிப் பாதுகாத்து வைத்திருந்தாள். அப்பாவும் இவர்கள் மூன்று பேரும் அவளது தீர்மானங்களின்படியே இயங்கினர்.
அப்பா சம்பாதித்துக் கொடுப்பதோடு சரி. அந்தக் குறைந்த தொகையிலும் குடும்பத்தைச் சாமர்த்தியமாக நடத்தியது அம்மாதான். இவர்களுடைய தேவைகளுக்கு அவளிடம்தான் போய் நிற்பார்கள். அவள் அதை அப்பாவிடம் தெரிவித்து, ‘என்ன சொல்றது?’ என்று கேட்டு நிற்பாள்.
“ம்…” என்பார் அப்பா.
“ம் – முன்னா?”
“என்ன பண்ணலாம்? நீயே சொல்லு.”
அப்போதும் தனது முடிவை நேரடியாகத் தெரிவிக்காமல், ‘இப்படி செஞ்சா சரியா இருக்குமா?’ என்பதாக அபிப்ராயப்படுவாள். அம்மா சொல்வது சரியாகவே இருக்கும். அதனால் பரிசீலனை ஏதுமின்றி சம்மதித்துவிடுவார் அப்பா.
எத்தனை சிரமங்கள் வந்தாலும் அம்மா அதையெல்லாம் சமாளித்துவிடுவாள். அதற்காக அவள் கஷ்டப்படவும், இழக்கவும் நேர்ந்திருக்கிறது. வரதராஜனின் கல்லூரிப் படிப்புக்கு ஆகும் செலவு பற்றி அப்பா கவலைப்பட்டபோதும்கூட அம்மா தனது கம்மல்களைக் கழற்றித் தந்தாள். படிப்பு முடித்து, வேலைக்குப் போனதும் முதல் மாதமே அம்மாவுக்கு கம்மல் எடுத்துத் தர முனைந்தான் வரதராஜன். அம்மாவோ, “எனக்கு வேண்டாம். மாதீஸுக்கு மோதரமோ செயினோ எடுத்துக் குடு” என்றுவிட்டாள். அப்படியாக மாதீஸ்வரிக்கு நகைகள், அவளது திருமணம், அண்ணன் திருமணம், மாதீஸுக்கு வளைகாப்பு, பிரசவம், குழந்தைக்கு… என செலவுகள் தொடர்ந்ததில், அம்மாவுக்குக் கம்மல் வாங்கித் தர முடியாமலேயே போய்விட்டது.
உத்தியோக நிமித்தமாக வரதராஜன் இங்கே வந்து தங்கியிருந்தான். மாதம் ஒரு முறை ஊருக்குப் போவது. இவனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்ததாக அம்மா சொல்ல, அப்பா எழுதும் கடிதங்களும் இடையிடையே வரும். பெண் பார்க்க எப்போதாவது அவனும் போவான். அப்படியிருந்தபோதுதான் மூன்று அண்டங் காக்கைகளின் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், உடனே புறப்பட்டு வரச் சொல்லும் தந்தியின்படி, இவன் போவதற்குள் உயிர் பிரிந்திருந்தாள் அம்மா.
பதினைந்தாம் நாள் கருமாதி. குழந்தைவேலண்ணன் பேரூர் போய் மொட்டை அடித்து, பிண்டம் கொடுத்து வந்தான். அத்தனை காக்கைகள் இருந்தும் அன்று வீட்டுக் கூரை மேல் வைத்த சாதத்தை எடுக்க எதுவுமே முன்வரவில்லை. மாமரத்திலும் வேம்பிலும் கூரை மீதும் அமர்ந்து வெகு நேரம் கரைந்துகொண்டே இருந்தன. ஆள் கூட்டத்தின் காரணமாக இருக்குமென்று மற்றவர்கள் வீட்டுக்குள் போய்விட்டனர். அப்பாவும் அண்ணனும் மாதீஸ்வரியும் மறு முறை இலையில் தண்ணீர் தெளித்தார்கள். காகங்கள் இறங்கவில்லை. அம்மாவைக் காணாததால்தானாக இருக்குமென்று பட்டது இவனுக்கு.
“மனசுல ஏதோ கொறை. அதனாலதான் லேட் பண்ணுது.”
“நீ போயித் தண்ணி தெளிப்பா வரது.”
இவன் போய் தண்ணீர் தெளித்துவிட்டு வந்து நின்றான். ஒரு குஞ்சுக் காகம் – அதுவும் மணிக்காக்கை – கூரைச் சரிவில் சறுக்கி விழ இருந்து, பின் நிதானித்து அன்னமெடுத்தது. அடுத்தடுத்து மற்ற காகங்களும் வந்து சேர்ந்துகொண்டன.
“உன்னப் பத்தித்தான் அவளுக்கு மனக்கொறை வரது” என்றழுத அப்பாவும் அடுத்த வருடம் அம்மாவின் திதிக்கு இல்லை. அப்பாவுக்குக் கருமாதி முடித்து கூரையில் படப்பு போட்டதோடு அந்த வீட்டையும் விற்றாயிற்று. பிறகு அவரவர் தத்தமது திக்குகளில். மாதீஸ்வரியும் குழந்தைவேலண்ணனும் தனது குடும்பம், தமது போக்கு என்றாகிவிட்டதில் வரதராஜன் தனிப்பட்டான். அல்லாடும் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்வதின் போராட்டம். சொந்த பந்தங்கள், சொந்த ஊர் எல்லாமே அதில் விடுபட்டுவிட்டன. இதனிடையே பெற்றோர்களின் இறந்த தினங்கள் நினைவிருக்குமா? அவர்களின் போட்டோக்களையே பத்திரப்படுத்தத் தவறிவிட்டது.
ஆனால், அம்மாவும் அப்பாவும் தத்தமது திதி நாட்களில் பித்ருக்களாக காக வடிவெடுத்து தவறாமல் வந்திருப்பார்களல்லவா, வருடம்தோறும்? மூன்று மக்களையுமே ‘ஆலாப் பறந்து’ சென்று பார்த்து, அவர்கள் ஏமாந்திருப்பார்கள்.
அடுத்தடுத்த வருடங்களில் மீண்டும் மீண்டும் வந்து பார்த்திருக்கக் கூடும். தினமுமே கூட வரலாம். ஆமாம், நிச்சயமாக அம்மா வருவாள். அவளது மனக்குறையை, இவன் செல்லுமிடமெங்கும் வந்து கரைந்து சொல்லி அழுதிருக்கலாம். தனக்குத்தான் அது புரியவில்லை. அவளது குறை தீரும்படியாகத் தனக்குக் குடும்பம் அமைந்த பிறகு அவள் மகிழ்ந்திருப்பாளல்லவா! நிச்சயமாக…
இருந்தாற்போல காகத்தின் கரைதல் ஒலிகள். வரதராஜன் திரும்பிப் பார்த்தான். அந்த சப்போட்டா மரத்திலிருந்த மணிக்காக்கைதான் கரைந்துகொண்டிருந்தது. தலையைச் சாய்த்துச் சாய்த்து அது இங்கே இவனைப் பார்ப்பதாகவே ஒரு பிரமை. அல்லது அதுதான் நிஜமோ? காகக் கரைதல்கள் சூழல் முழுதும் விரவின. தன்னையே சூழ்வதாகவும் அவனுக்கு உணர்வு. இதுகூட அம்மாவாக இருக்குமோ என்று நினைக்க, அந்த நினைப்பே திளைப்பாக இருந்தது. உடனே எழுந்து வீட்டுக்குள் சென்றான். சமையற்கட்டில் காஸ் அடுப்பெரிய, கை வேலையாக இருந்தாள் பானு.
“சாப்பாடு ஆயிடுச்சா?”
“என்னது, பன்னெண்டுகூட ஆகல. அதுக்குள்ள பசிக்குதா உங்களுக்கு?”
“எனக்கில்ல.”
”வேற யாருக்கு?”
“வேணும்” என்றவன், சமையல் மேடையில் கவனித்தான். பாத்திரங்கள் இன்னும் அடுப்பிலேயே இருந்தன. ”காலைல செஞ்சதாவது இருக்கா…?” என்று அவனே தேடியெடுத்தான். வெண் பொங்கல் கொஞ்சமாக, ஹாட்பாக்ஸில் மீந்திருந்தது. ஒரு தட்டில் போட்டு எடுத்துக்கொண்டான். வெளியே வரும் போது, “எதுக்கு டேடி இது?” என சிந்துஜாவின் விசாரணை.
“வந்து பாரு” என்றதும் உடன் வந்தாள்.
வராந்தாவில் நின்று பார்த்தபோது இன்னும் அந்தக் காகம், விரித்த சிறகுகளை அலகினால் கோதியவாறு அங்கேயே இருந்தது. வரதராஜன் சப்போட்டா மரத்தை நோக்கி நடந்தான். காலடி ஓசைகளில் காகம் சிறகு கோதுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தது. காம்பௌண்ட் சுவர் மீது வெண் பொங்கலைக் கொட்டிவிட்டு, “கா… கா…’ என்றான். கிளையில் இருந்து தலை தாழ்த்தியது காகம். அவன் விலகி, சிறிது தூரம் வந்துவிட்டுத் திரும்பியபோது அது சுவர் மீது அமர்ந்திருந்தது. பொங்கலைக் கொத்தியெடுக்காமல் நாற்புறமும் பார்த்துக் கத்தவும் தொடங்கியது.
அவன் வராந்தாவுக்கு காலித் தட்டோடு வந்ததும், “என்ன டேடி, காக்காய்க்கெல்லாம் சாதம் வெக்கறீங்க?” என்றான் சிந்துஜா,
“அது காக்காயில்லமா. எங்கம்மா” என்றான் வரதராஜன், பூரிப்போடு. சிந்துஜா சிரித்தாள். ”உங்க அம்மாவா…?” கண்கள் சுருங்க, முகத்தை வலித்துக்கொண்டு மேலும் சிரித்தாள். கூடவே, உள்ளே பார்த்து, “மம்மீ… ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்” என்றாள்.
”என்னடி” என்றது பானுவின் குரல். “நான் இங்க வேலையா இருக்கேன்.’
“மம்மீ… ஒரு மெகா ஜோக். வந்த உடனே போயிடுவீங்களாம்.”
பானு சமையற்கட்டு வாசனையோடு வந்து நின்றாள். அவளிடம் காம்பௌண்ட் சுவர் மீதிருக்கிற காகத்தைக் காட்டினான் சிந்துஜா. “டேடி சொல்றாரு, அதுதான் அவங்கம்மாவாம். பாத்தீங்களா உங்க மாமியார?”
பானுவின் முகத்தில் குழப்பம். பிறகு அவளும் சிந்துஜாவுடன் சேர்ந்து புன்னகைத்தாள். வரதராஜன் எரிச்சலும் வேதனையுமாக நிற்கையில் காகம் இங்கே திரும்பிக் கரைந்தது. நிச்சயமாக அது தனது அம்மாவேதான் என அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
சற்று நேரத்தில் சப்போட்டா மரத்தின் மறைந்த கிளைகளிலிருந்தும், இவன் நிற்கிற இடத்துக்கு மேலாக வேறெங்கோ இருந்தும் பறந்து வந்து காம்பௌண்ட் சுவரில் மேலும் சில காகங்கள் அமர்ந்தன. அண்டங்காக்கைகள், மணிக்காக்கைகள் என இப்போது கூடுதலாக சேர்ந்தது ஏழெட்டு இருக்கும். அவை தனது அப்பா, பெரியப்பா, தாத்தாக்கள், பாட்டிகளாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.
காகங்கள் ஒன்றையொன்று நெருக்கியடித்தபடியே வெண்பொங்கலைக் கொத்தித் தின்னத் தொடங்கின.
– கல்கி, தீபாவளி மலர், 1999.
கதாசிரியர் குறிப்பு:
இக் கதை கல்கி – தீபாவளி மலர் 1999-ல் காகங்கள் என தலைப்பு மாற்றப்பட்டு பிரசுரமானது. வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்னும் தலைப்பிலான எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் இக் கதையை இங்குள்ளபடியே பகல், இரவுகளைக் கொண்டுவருகிற பறவை என்னும் எனது அசல் தலைப்பிலேயே வெளியிட்டேன்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |