நெருப்பில்லாத புகை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 980 
 
 

பல வருடங்களுக்குப்பின் ஊருக்குள் நுழைந்த போதே சொங்கி வீடு, ஹிட்லர் வீடு, மசரன் வீடு ஞாபகம் வந்தது. அவை மட்டும் உள்ள படியே இருபது வருடங்களுக்கு முன் இடிந்த திண்ணைப்படி மாற்றி வைக்காமல் பழைமையைப்பறை சாற்றியது.

பத்து வயதில் எனது படிப்பை முன்னிட்டு வெளியூர் சென்ற எனது குடும்பம் முப்பதாவது வயதில் தான் வயதான பங்காளி ஒருவர் இறப்பைக்கேட்கும் பொருட்டு ஊருக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

எதிரே வயதான, எனக்குப்பரிச்சயமான ஒருவரைப்பார்த்ததும் நான் மட்டும் காரை ஓரமாக மரத்தடியில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினேன். உடனே எனது பெற்றோரும், 

இறங்கி அவர்களுக்குத்தெரிந்த ஒருவருடன் வலியச்சென்று நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்பா மட்டும் எப்போதாவது பூர்வீக தோட்டத்துக்கு வந்து செல்வதுண்டு. ஆனால் விவசாய பணிகள் எதுவும் செய்வதில்லை.

எதிரே வந்த வயதானவர் முன் நின்றேன். தலை முதல் கால் வரை என்னைப்பார்த்தார். அவரை மசரன் என ஊரில் கூப்பிடுவர் என்பது மட்டும்  ஞாபகம் வரத்தெரிந்து கொண்டேன். குறிப்பிட்ட வயதுக்குப்பின் உருவம் பெரிதாக மாறுவதில்லை. ஆனால் என்னுடைய சிறுவயதில் வெளியூர் சென்றதில் மாறியிருந்ததால் அவரால் கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. வயது முதிர்வினால் மறதி வருவதும் காரணமாக இருக்கலாம். 

“ஐயா… எப்படி இருக்கீங்க..‌.?”  எனது பேச்சைக்கேட்டதும் முகம் மாறியது. உன்னிப்பாக கவனித்து கந்துக்கார ரஞ்சனோட பையன் ரவி தானே நீயி….? அடேய்..‌. எப்புடி வளந்திட்டே..‌‌..? உன்ற பேச்சக்கேட்டதும் கண்டு புடிச்சுப்போட்டனில்ல…” சொல்லி குதூகலமாக குனிந்த உடலை சிரமப்பட்டு நிமிர்த்திப்பேசினார். அவிழ்ந்த அழுக்கு படிந்த வேட்டியை எடுத்துக்கட்டும் போது கைத்தடி கீழே விழ, உடனே விரைந்து எடுத்துக்கொடுத்தேன்‌.

“இப்படி வந்து சித்த உக்காரு. உங்கொப்பாரு, பாட்டனெல்லாம் எப்புடி வாழ்ந்தாங்க தெரியுமா? மாடு கறந்தா உன்ற பாட்டிக்காரி கொழந்தைகளுக்கு காசு வாங்காம பால ஊத்துவா. உன்ற அப்பந்தான் தோட்டங்காட்ல பாடு படறதுக்கு சோம்பேறித்தப்பட்டுப்போட்டு, சும்மா சோக்காளியா சுத்திட்டு உன்ற பாட்டிக்காரி ஆடு, மாடு மேய்ச்சு சேத்து வெச்சிருந்த பணத்த கந்து வட்டிக்கு கொடுத்து வசூல் பண்ணினான். உன்ற தாத்தா போனதுக்கப்புறம் உன்ற அப்பங்காரன் சொத்தக்கொறையா போட்டுட்டான். போய் பாரு உங்க தோட்டம் பூரா கல்லாஞ்செடி மெளைச்சு கலையெழந்து போயிருச்சு. நெல்லு, கம்பு, பருத்தின்னு எத்தன வெள்ளாம வெளைஞ்சுது தெரியுமா? காத்துக்கருப்பு அண்டுன மனுசனப்போல இருண்டு கெடக்குது. சொத்தே செத்துப்போன மாதர கெடக்குது. ம்…. காலம் மாறிப்போச்சு. இப்பெல்லாம் தோட்டங்காட்ல பாடு படறதுக்கு ஆளம்புங்கெடைக்கிறதில்லைன்னு ஆருமே காடு வெதைக்கிறத உட்டுப்போட்டு பக்கத்து டவுனுக்கு நெழல்ல சொகுசான வேலைக்கு போயறடறாங்க. அங்கயே குடியிருக்கிற சடையன் சூனியக்காரன மாதர சடைமுடியோட திரியறான். ஒன்னும் பிரையோசனமில்ல போ….” சொன்னவர் கண்களில் கண்ணீர் பெருகியது.

பாக்கெட்டிலிருந்த ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து அவரது கையில் கொடுத்து விட்டு எங்களுடைய தோட்டத்து வீட்டை நோக்கி பெற்றோருடன் காரை இயக்கினேன்.

பெரியவர் சொன்னது போலவே தோட்டம் பாங்காடு போல கலையிழந்து காட்சியளித்தது. பறவைகள் எங்களை வரவேற்பது போலவோ, பயத்திலோ படபடவென இறகுகளை அடித்துக்கொண்டது. துருப்பிடித்த பூட்டைத்திறந்து, வீட்டின் கதவைத்திறந்து பார்த்தபோது எட்டுக்கால் பூச்சிகள் எக்கச்சக்கமாக கூடு கட்டியிருந்ததை காண முடிந்தது. கீழே பல்லிகளின் எச்சங்களின் குப்பைகள் நிறைந்து கால் வைக்கவே கூச்சமாக இருந்தது.

இறந்த குருவிகளின் எலும்புக்கூடுகள், எலிகளின் எலும்புக்கூடுகள், இறந்த பல்லிகள் என கருவாடுகளைப்போல் நிறைந்து கிடந்தன. துர் நாற்றம் வீசியது. எனது தாயார் உள்ளே வர பயந்து வெளியே சென்று விட்டாள். சமையலறைப்பக்கம் போன போது தான்  அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஒரு சிறுமியின் எலும்புக்கூடு….”டேய் சடையா…..” என்னோடு வந்த அப்பா ரஞ்சன் கத்தியது அருகிலிருந்த ஊருக்கே கேட்டிருக்க வேண்டும்.

சடையனுக்கும் கேட்டதால் பக்கத்திலிருந்த குடிசை வீட்டிற்குள்ளிருந்து மார்பளவு தாடியுடன் சடைகளைப்போன்ற வளர்ந்த தலை முடியுடன் ஆடு ஜீவிதம் படத்தில் பாலைவனத்தில் ஆடு மேய்த்த பிருத்விராஜ் போல பார்க்கவே பயங்கர தோற்றத்துடன் சுருட்டு பிடித்து புகையை உருஞ்சி ஊதிவிட்டு “வாங்க எஜமான்…” என உடைந்த குரலில் வார்த்தைகளைக்கக்கினான்.

“ஏண்டா சடையா ஊட்டை என்னடா பண்ணி வெச்சிருக்கே..‌‌.? சுடுகாடாக்கவா உங்கிட்ட சாவியக்கொடுத்துட்டு போனேன்….? ” பதறியபடி பேசிய அப்பாவின் பேச்சை சட்டை செய்யாதது போல மௌனமாக நின்றான்.

அவனது மௌனத்தால் கோபம் கொண்ட என் அப்பா சடையனை ஓங்கி அடிக்கப்போக திடீரென அடித்த அப்பாவின் கையைப்பிடித்து திருகினான். அப்பா “ஐயோ….” என அலறினார்.

அது வரை கவனத்தை வேறு பக்கம் வைத்திருந்த நான் என் அப்பாவின் சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று சடையனைத்தள்ளி விட்டு அப்பாவைத்தாவிப்பிடித்து வேறுபக்கம் நிறுத்தினேன். அப்பாவின் கோபம் இப்போது பல மடங்கு அதிகரிக்க கண்கள் சிவந்து போயின.

“டேய் ரவி. போலீஸ்க்கு போன் பண்ணுடா…” என அப்பா சொன்னவுடன் பண்ணினேன். அதோடு கதவோரம் நின்றிருந்த சடையனை டக்கென வீட்டிற்குள் தள்ளி விட்டு கதவைப்பூட்டினேன். போலீஸ் வர இரண்டு மணி நேரமானது.

வீட்டிற்குள்ளிருந்து கதவு வழியே ரத்தம் வெளிப்பட்டது. தள்ளி விட்டதில் சடையனுக்கு அடி பட்டிருக்க வேண்டும். இது வரை கதவைத்தட்டவுமில்லை‌. ‘ஒரு வேளை உயிர் போயிருந்தால் என்ன செய்வது?’ மனதில் எனக்கு பயம் மேலோங்கியது.

மனம் பட, படவென அடிக்க கை நடுக்கத்துடன் கதவைத்திறந்தேன். தலையில் ரத்தம் வடிய தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தவன் திடீரென எழுந்து ஆக்ரோசமாக கத்திக்கொண்டு உள்ளே நுழைந்த காவலரைத்தள்ளி விட்டு வெளியே ஓடினான்.

வெளியில் நின்றிருந்த ஒரு காவலர் ஓடிச்சென்று அவனது பின் சடை முடியைப்பிடிக்க சரிந்து விழுந்தான். மூச்சடைத்து இறந்தவன் போல் கிடந்தான். கைகளில் விலங்கைப்போட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து விட்டு தடியில் கால் தொடையில் ஓங்கி அடிக்க கண் விழித்து மீண்டும் மூடினான்.

காவலர்கள் சடையனைத்தூக்கி ஜீப்பில் போட்டுக்கொண்டு சென்றனர். அப்பாவும் ஜீப்பிலேயே ஏறிக்கொண்டார். காரில் போகலாம் என கூறியபோது பிடிவாதமாக மறுத்து விட்டார்.

வேறு குறுக்கு வழியில் எனது காரை எடுத்துக்கொண்டு சென்றேன். காவல் நிலையத்தில் திடீரென பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. போலீஸ் ஜீப்பிலிருந்து அப்பா மட்டும் இறங்கினார். என்னருகில் வந்தவர் “திடீர்னு ஜீப்ல இருந்து குதிச்சிட்டான். நிறுத்தி இறங்கிப்பார்த்தோம் உசுரில்லை..” என படபடப்புடன் கூறினார். ‘அநியாயமா செத்துட்டானே….’ ன்னு வருத்தப்பட்டேன்.

அப்பா சிகரெட் பத்த வைத்தார். அவர் மகிழ்ச்சியில் சிகரெட் பத்த வைப்பார். ‘இப்போது துக்கம் மகிழ்ச்சியானதெப்படி….? கெட்டவன் தொலைந்தான் என நினைத்தாரோ…? யோசித்தேன். உடனே எனது காரை எடுத்துக்கொண்டு தோட்டத்து வீட்டிற்கு சென்றேன்.

அம்மா எனது தோளை பின்னாலிருந்து தொட்டாள். திரும்பிப்பார்த்தேன். தேம்பி அழுதாள். “தாயில்லாத பதனைஞ்சு வயசுப்பொண்ணும்…. இப்ப அவ அப்பனும்…. நம்ம குடும்பம் நல்லா இருக்குமான்னு தெரியலை….” என்று கூறிக்கதறினாள். அப்பா மாதம் ஒரு முறை சடையனுக்கு சம்பளம் கொடுக்க தோட்டத்து வீட்டிற்கு வருவார். ஆனால் வீட்டிற்குள் போகமாட்டார்.

சடையனை சிறுமியைக்கொன்ற குற்றவாளி என நினைத்து காவல் துறையிடம் பிடித்துக்கொடுக்க, வீட்டில் நான்  உள்ளே வைத்து அடைத்த போது உள்ளிருந்து “ராணி….ராணி….”என முனகலான சத்தம் அவனிடமிருந்து வெளிப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. சிறுமியான அவனது பெண் ராணியை இழந்த வருத்தம் என நினைத்தேன்.

‘அப்படியானால் சிறுமி தானாக இறந்திருப்பாளா? யாராவது கொன்றிருப்பார்களா? சிறுமியை எதற்காக கொல்ல வேண்டும்? பணத்திற்காகவா? நகைக்காகவா? சொத்துக்காகவா? அப்படியெதுவும் காரணம்  இல்லை. வேறு எது காரணமாக இருந்திருக்கும்? ஒரே காரணம் அவள் வயதுக்கு வந்த பெண் என்பது தான்….. உண்மையான குற்றவாளி யார்?’ இவ்வாறு என் மனம் குழப்பமடைந்தது.

போலீஸ் ஜீப் மறுபடியும் தோட்டத்து வீட்டிற்கு வந்து நின்றது. அதிலிருந்து அப்பா இறங்கினார். கைகளில் விலங்கு மாட்டப்பட்ட விலங்காக என் கண்களுக்குத்தெரிந்தார். அம்மா போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்து ‘சிறுமி இறந்ததற்கு தன் கணவன் காரணமாக இருக்கலாம்’ என சந்தேகிப்பதாக சொல்லி விட்டதனால் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார். 

அப்பாவின் கோபப்பார்வை அம்மாவின் மீது விழுந்தது. எங்களைக்காண வந்திருந்த உறவுகள் கோபத்துடன் திரும்பிச்சென்றனர். சிலர் கேவலமாகப்பேசிச்சென்றனர்.

காவலர் ஒருவர் வீட்டிற்குள் சென்று விட்டு ரத்தக்கரை படிந்த அழுக்கான ஒரு கடிதத்துடன் வெளியே வந்து எங்கள் முன் படித்தார்.

‘முதலாளி ஐயா நான் ராணி எழுதறேன். சடையன் என்னோட சொந்த அப்பா கிடையாது. என்னோட அம்மா சுந்தரியோட இரண்டாவது புருசன். என்னோட சொந்த அப்பா இறந்து போனதால என்னோட அம்மாவ கல்யாணம் பண்ணிகிட்டாலும், அவர் தினமும் அம்மாவ சந்தேகத்துல அடிச்சுட்டே இருப்பாரு. ஒரு நாள் கோபத்துல தள்ளி விட்டதால தலைல அடிபட்டு அம்மா இறந்து போயிட்டாங்க. அப்புறம் வெளில சொல்லக்கூடாதுன்னு சடையன் என்கிட்ட சத்தியம் வாங்கினவரு, ஒரு நாள் குடிச்சிட்டு வந்து நீ என்னோட பொண்ணு இல்லதானே….? அதனால நாம பொண்டாட்டி புருசனா வாழலாம், இந்த ஊர விட்டு தூரமா வேற ஊருக்கு போயிடலாம். பேருக்கேத்தாப்ல ராணி மாதர வெச்சுக்கறேன்னு கையைப்புடிச்சிட்டு சொன்னதக்கேட்டு நான் செத்துப்போகலான்னு முடிவு செஞ்சுட்டேன். ஒரு அப்பாவப்போல வேணுங்கறத வாங்கி கொடுத்தீங்க. நீங்களும், உங்க குடும்பத்துல உள்ளவங்களும் நல்லா இருக்கனம்…. சடையன நீங்க தண்டிச்சு குற்றவாளியாயிடாதீங்க. அவளை கடவுளே தண்டிக்கட்டும். நான் இந்த உலகத்த விட்டே போறேன்….’ என முடிக்கப்பட்டிருந்தது கடிதம்.

காவலர் கடிதத்தைப்படித்ததும் கண் கலங்கினேன். வீணாக அப்பாவை அம்மா சந்தேகப்பட்டு காவல் துறையிடம் சொன்னது தவறு என நினைத்தேன். மருத்துவர்கள் வந்தார்கள். போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள். ரிப்போர்ட் விசம் குடித்து தற்கொலை என தெரிந்ததும் அப்பா கைகளிலிருந்த விலங்கு கழட்டப்பட்டது. அப்பா தோட்டத்து வீட்டிலிருந்து நகரத்திலிருக்கும் வீட்டிற்கு அம்மாவுடன் சேர்ந்து வாழ வர மறுத்து விட்டார். அப்பா பிடிவாதக்காரரர். நான் அழைத்தாலும் வரமாட்டார் என புரிந்து அமைதியானேன்.

‘நெருப்பில்லாமல் எப்படி புகை வரும்?’ என்று, புகையைப்பார்த்ததும் நெருப்பிருக்கும் என நினைத்து விடுகிறோம். அப்படித்தான் அப்பா விசயத்தில் அம்மா அவசரப்பட்டு தவறு செய்து விட்டார். 

‘சில நேரங்களில் பனி கூட நெருப்பின் புகையைப்போல நம் கண்களுக்குத் தெரிவதுண்டு’ என எனது முகநூலில் பதிவிட்டு விட்டு நகரத்திலிருக்கும் வீட்டிற்கு அம்மாவை மட்டும் அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *