நெக்கு





பெங்களூரு அபர்ணா அபார்ட்மெண்ட்.

நீண்ட நாட்கள் ஆயிற்று. தேவேந்திரன் அந்தக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் நின்று கொண்டிருந்தார். சுடுகாட்டு நிசப்தம்.
எல்லோருக்கும் என்னாயிற்று?
மின் தூக்கி வேண்டாம். சிவப்பு பெயிண்ட் அடித்த இரும்பு கைப்பிடியைப் பற்றியவாறே மெல்ல இறங்கினார்.
இருமருங்கிலும் மரிகோல்டு மலர்களும் பிங்க் நிற ட்ரம்பெட் பூக்களும் சூழ்ந்த நடைபாதையில் காலை வெயிலில் நனைய ஆரம்பித்தார்.
பழைய முகங்கள் சில.வயதைப் பறைசாற்றும் புதிய ஸ்டிக்குகள்.சிறுசுகளின் ஓட்டம்.இளசுகளின் மென்னடை.
ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னர் எதிரே தோன்றிய அந்த நபரைப் பார்த்த நினைவு.கொஞ்சம் நடையில் தளர்வு.கருப்பு நிறத்தில் ஸ்போர்ட்ஸ் டிராக் சூட்.வரிவரியாய்க் கோடிட்ட டீ சர்ட்.தலையில் முன் வழுக்கை.
இரண்டு சுற்றுகள் ஆயிற்று.எதிர் முட்டு முட்டாததுதான் குறை.பார்வையில் ஏதோ ஓர் எதிர் பார்ப்பு.மூன்றாவது சுற்றுக்கு அவரைக் காணவில்லை.
மனுஷன் ப்ளே ஏரியாவில் உள்ள ஒரு சிமெண்ட் பெஞ்சில் தொய்ந்து போய்க் கிடந்தார்.மஞ்சளாய்க் கொட்டும் அவுரியா மரம் அவருக்கு எந்தப் பரவசத்தையும் உண்டு பண்ணவில்லை.
தேவேந்திரனுக்கும் அயர்ச்சியாக இருந்தது.சற்று நேரம் உட்கார்ந்து… ஓய்வெடுத்தாலென்ன… மகள் பிரதிபா இன்றைக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்.பேரனும் பேத்தியும் இந்நேரம் ஸ்கூல் வேனில் போயிருப்பார்கள்.மருமகன் மேகன் ஆஃபீஸ் வேலையாக டிராவலில் இருப்பார்.
தேவேந்திரன் அதே பெஞ்சில் ஓர் ஓரமாய் ஒதுங்கிய போது…
அவர் பேசினார்
“சார்.. நீங்க தமிழா?”
தேவேந்திரன் முறுவலுடன் “ஆம்” என்று தலையையாட்டினார்.மறுகணம் “நீங்க?” என்றார்
“நானும்தான்… காட்பாடி” என்றார் அந்த மனிதர்.
“நீங்க எந்த டிபார்ட்மெண்ட்?”
“ஓ… நான் ஆறுமுகம்..பெருசா ஒண்ணும் இல்லை சார்..ஒரு சின்ன வேலைலே இருந்தேன்..வீணாப் போன கம்பெனி.. பென்சன் கிராஜுட்டி ஒரு எழவும் கிடையாது.. கால் மீ தோட்டி பே மீ ஃபார்ட்டி ங்கற கதைதான்..எப்படியோ காலம் ஓடிப் போச்சு..வீட்டுப் பொம்பிளை வேற இல்லே.. எப்படியோ பொழப்பு ஓடுது பாருங்க!” என்றார் ஆறுமுகம் மெல்லிய சோகத்தில் ஆழ்ந்தவாறே.
“சார்! என்னாச்சு? ஃபேமிலி….?”
தேவேந்திரன் வியப்புடன் கேட்டார்.
“வொய்ஃப் இருக்கா சார்..ஆனா எங்கூட இல்லே!” என்றார் ஆறுமுகம் தாழ்ச்சியுடன்.
அப்போது கார்டனர் அந்தப் பக்கம் ஒரு வாளியில் தண்ணீர் மற்றும் ஈரத் துணியுடன் வந்தான்
“அடச்சே…இவனுக வேற… கொஞ்ச நேரம் உட்கார விட மாட்டாங்க!” – சலித்துக் கொண்டார் தேவேந்திரன்
“விடுங்க சார்… பாவம்… அவங்க வேலையெ அவங்க செய்யறாங்க. இது அவங்க டூட்டி டைம்.. வாங்க அந்தப் பக்கம் போயிரலாம்”
இருவரும் மெல்லத் தவழ்ந்து, எதிர்ப்புறம் குறுக்கு வெட்டாக நீட்டிக் கிடக்கும் பாதையில் நடந்தார்கள்.
“இப்பச் சொல்லுங்க சார்…உங்க வொய்ஃப்க்கு என்னாச்சு?” – தேவேந்திரனுக்கு ஆர்வம் பொறுக்கவில்லை.
“அவ கொஞ்ச வருஷம் தான் என்னோட வாழ்ந்தா..”
“அப்புறம்?”
“அழகு இருக்குதே.. அதுதான் சார் ஆபத்தானது…! நீங்க சொல்லுங்க.. வாழ்க்கைலே எதை வேண்டுமானாலும் மறந்துரலாம்.. துரோகத்தை மறக்க முடியுமா…”
ஆறுமுகம் தத்துவம் பேசினார்.
தேவேந்திரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“ஒரு பெண் குழந்தை… அஞ்சு வயசானதுக்கப்புறம் அதையே எங்கிட்டே விட்டுட்டு அவனோட போயிட்டா!”
“யாரோட?”
“அழகான ஒருத்தனோட!”
அப்போது…
இலைகளையும் சருகுகளையும் குப்பைகளையும் அள்ளுகிற கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் யூனிஃபார்ம் அணிந்த சில பெண்கள் பக்கெட், விளக்குமாறு சகிதம் சுமந்தவாறு வந்து கொண்டிருந்தார்கள்.
ஆறுமுகம் சுதாரித்துக்கொண்டு…
“சார்… வாங்க வெளியே போய் ஒரு காஃபி சாப்பிட்டுட்டு வருவோம்..வடை சூடா போட்டிருப்பான்” என்றவாறு தேவேந்திரனை அழைத்துக்கொண்டு மெயின் கேட் பக்கம் திரும்பினார்.
“நானும் அவளோட அழகிலே மயங்கித்தான் மேரேஜ் பண்ணிட்டேன்..வாழ்க்கைலே நான் பண்ணின மிகப்பெரிய தவறு அதுதான் சார்!”
அவர் குரல் சில்லு சில்லாய் உடைந்தது.
தேவேந்திரன் கழிவிரக்கத்துடன் அவரைப் பார்த்தார்.
இதற்கு என்ன பதில் சொல்வது? அமைதியாக செவிசாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
வடையும் காஃபியும் சாப்பிட்டு விட்டு மீண்டும் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.
“நீங்க எந்த போர்ஷன்லே இருக்கிறீங்க?” என்று ஆறுமுகத்திடம் கேட்டார் தேவேந்திரன்
“நான் வெளிலே பின் கேட்டு தாண்டி ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு..அதுலே இருக்கறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது…
“உங்களை எங்க அப்பா தேடறது ? காலங்காத்தால எங்க போயிட்டீங்க ?” என்றவாறு சற்று முன்னர் குப்பை அள்ளிக்கொண்டிருந்த ஓர் இளம் பெண் அவரை நாடி வந்தாள்.
தேவேந்திரன் ஒரு நிமிடம் அப்படியே அசைவற்று நின்றார்.
Oru pakkam kathai enral abrupt ninru vidum mudikka mattingala ?