நூலிழை நேசம்…!
கூரை குடிசைக்குள் கூதற்காற்று இறுக்கமாக அடித்தது. போர்த்தியிருந்த போர்வையையும் மீறி உடம்பிற்குள் குளிர் ஊசியாகக் குத்தியது.
மாலினிக்கு…ஏதோ ஒன்று உறுத்த போர்வையை விலக்கி எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
கேசவன் மண் தரையில் வெற்றுடம்போடு படுத்துக் கிடந்தான். ஒரு புழுவைப் போல் சுருண்டு கைகளிரண்டையும் கால்களுக்கிடையில் நுழைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
பார்த்த மாலினிக்கு இதயம் வலித்தது.
இந்த சாதாரண மனிதனுக்குள் எப்பேர்ப்பட்ட உள்ளம்! எப்படி வாழ்ந்து தன்னைக் காப்பாற்றுகிறான்! – நினைக்கப் பொங்கியது.
கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அப்படியே தரையிலமர்ந்தாள்.
இப்படியான இந்த வாழ்க்கைக்கு இவள் தகுதியானவளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவள் இப்படி காப்பாற்றப்பட்டு போற்றப்படவேண்டியவளே இல்லை. வாழத் தகுதி இல்லாதவனிடம் வகையாய் மாட்டி…
ஆமாம்! அப்படித்தான்!! – அவளுக்குள் நினைவுகள் ஓடியது.
ஐந்து வருடங்களுக்கு முன்…
மாலினிக்கு அப்போது பதினாறு, பதினேழு வயது. பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்த சமயம்.
விதவைத் தாயுடன் வாழ்வு, வறுமை, என்றாலும் பருவம்… இவள் உடலில் வயதுக்கேற்ற பசுமை போர்த்தி இருந்தது.
இந்தப் பருவ மண்ணிற்கு எப்போதுமே உரம் அதிகம். அசிங்கமாய் இருப்பவர்களைக்கூட பூசி மெழுகி அற்புதமாய்க் காட்டிவிடும். அது அந்த வயதிற்கே உள்ள இயல்பு. இயற்கை வனப்பு.!
இவள் அழகும் இளமையும் எத்தனைப் பேர்களை உறுத்தியது என்னவோ… இவளால் உறுத்தப்பட்டவன், கவரப்பட்டவன் ஒருவன். அவன் சுகுமாரன்.
மாலினி பள்ளிக்கூடம் போகும் வழியில் அவன் நிற்பான். இவள் பார்வையில் படும்படி, தென்படுவான். தினம் ஒரு உடை, கொஞ்சம் மிடுக்காகவும், எடுப்பாகவும் நிற்பான். அவன் கண்களிருந்து ஒருவித காந்த சக்தி புறப்பட்டு வந்து இவளைக் கவ்வும் , கவரும்.
இவளும் அவனை அடிக்கண்ணால் கவனித்து கர்வப்பட்டு நடப்பாள்.
ஒரு வாரம் இந்த நாடகம் நடந்தது. அடுத்து அவனாகவே துணிச்சலாக வந்து…. புத்தகங்களை மார்போடணைத்து தனித்து வந்த இவளிடம்…
“என்னைப் பிடிச்சிருக்கா…?” நேரடியாகவேக் கேட்டான்.
மாலினிக்குள் உடனே திடீர் குளிர்ச்சி. இனம் புரியாத படபடப்பு. அப்படியே உள்ளம் பூரித்து. கன்னங்கள் சிவந்து, காது மடல்கள் குறுகுறுத்தது. அவளையும் அறியாமல் முகத்தில் வெட்கம், நாணம் வர…. எந்தவிதப் பதிலும் சொல்லாமல் தலையைக் குனிந்து புன்னகையுடன் வேகமாகச் சென்றாள்.
அன்று பள்ளியில் இவளுக்குப் படிப்பு ஓடவில்லை. எதிரில் எதுவும் தெரியாமல் எந்த நேரமும் அவன் இவள் கண்களில் நின்றான்.
“என்னைப் பிடிச்சிருக்கா…?” அடிக்கடி கேட்டான்.
அவ்வளவுதான்! மாலினி விழுந்து விட்டாள்!!
மறுநாள். அவன் அதே இடத்தில் காத்திருந்தான். இவள் அருகில் வர…. அவன் நெருங்கி வந்து…
“நான் சுகுமாரன்! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. காதலிக்கிறேன்!” சொன்னான்.
இது இன்னும் மாலினியைத் தூக்கியது. அவன். சட்டென்று ஒரு தேவகுமாரனாக மாறி அவளை அணைத்துக் கொண்டு வானத்தில் பறந்தான்.
அப்புறம்… அடுத்தடுத்த நாட்கள். அவர்கள் சந்திப்பு தனிமையில் இருந்தது. அவனைப் பற்றி முழு விபரம் தெரியாமலேயே மாலினி அவனோடு பேசினாள். பழகினாள்.
காதலுக்கு அப்படியொரு காந்த சக்தி. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டால் மற்றவைகள் அவர்களுக்கு எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை. இது காந்த சக்தியா, கண் கட்டி வித்தையா புரியவில்லை.
சில நாட்களில் இவர்கள் திருமணத்தைப் பற்றி பேசினார்கள்.
சுகுமாரன்…
“அதை இங்கே நடத்த முடியாது!” என்றான்..
“ஏன்..??..” என்றாள் மாலினி.
“நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. செல்லப்பிள்ளை. வசதிவாய்ப்பு அதிகம். நீயும், நானும் அடிப்படை அந்தஸ்திலேயே மாற்றம். நாம ஏழை பணக்காரன். வித்தியாசம். அடுத்து நமக்குள் சாதிகள் வேறு. திருமணத்திற்கு என் அம்மா, அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. தற்கொலை செய்துப்பேன்னு மிரட்டல் வைத்தால்கூட ‘செய்துக்கோ.’ சொல்லி விடுவாங்க. இறங்கி வரமாட்டாங்க. அவர்களுக்கு சாதி, மதம், அந்தஸ்து முக்கியம்” சொன்னான்.
இவளுக்குள் கலக்கம் வந்தது. அவனைக் கலவரமாகப் பார்த்தாள்.
“அதுக்காக நீ ஒன்னும் கவலைப்படாதே. காதலித்த நாம கலியாணம் முடிக்கிறதுதான் சரி.. என் ஊர் சென்னைக்குப் போவோம். என் அப்பா அம்மா சம்மதம் கிடைக்கும் வரை ஒரு இடத்தில் குடும்பம் நடத்துவோம். சம்மதித்தப்பிறகு உடனே திருமணம். என்ன சொல்றே..? இதுக்குச் சம்மதம்ன்னா உடனே புறப்படு. இல்லே என்னை மறந்துடு” சொன்னான்.
மாலினி நிறைய யோசித்தாள். அதிகம் குழம்பினாள். பின் தெளிந்து சரி சம்மதித்தாள்.
சுகுமாரன் மலர்ந்தான்.
அன்றிரவு ரயில் ஏறினார்கள். சென்னையில் வந்து இறங்கினார்கள்.
அன்றைக்கு விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார்கள்.
உள்ளே…மனசுக்குள் தாலி கட்டி கணவன் மனைவி ஆனார்கள்.
மாலினி காலை கண்விழிக்கும்போது சுகுமாரனைக் காணவில்லை.
எங்கே சென்றிருப்பான்..?! குழம்பினாள். எப்படியும் வருவான்! என்று நம்பினாள்.
யாரோ கதவைத் தட்டினார்கள். அவன்தானென்று நினைத்து ஆவலாகத் திறந்தவளுக்கு அதிர்ச்சி.
கேசவன்!
இவன் மாலினியின் எதிர் வீட்டுப் பையன். இருபத்தைந்து வயது இளைஞன்.
மாலினி வீட்டை விட்டு வரும்போது, போகும்போதும் ஏக்கமாய்ப் பார்ப்பான். கேசவன் அவ்வளவு அழகு கிடையாது. மேலும் அவன் பார்வை இவளுக்குப் பிடிக்காததால் அவன் பார்வையில் பட்டாலே முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.
அதைவிட முக்கியம். சுகுமாரன் – மாலினி காதல் விசயத்தில் இவன் எதிரி. !!
“அவனைக் காதலிக்காதே மாலினி. நல்லவன் மாதிரி தெரியல” இவளிடம் வலிய வந்து அடிக்கடி எச்சரித்தான்.
“நான் மாலினியைக் காதலிக்கிறேன். அவள்தான் என் மனைவி!” ஊர் முழுக்கச் சொன்னான்.
‘தன்னைக் காதலிக்காத வெறுப்பு. இவன் சுகுமாரனைப் பற்றி குறை சொல்கிறான்!’ நினைத்தாள்.
அந்த நினைப்பு…
“இனிமே ஊரெல்லாம் என்னையும் உன்னையும் பத்தி இணைத்துப் பேசாதே! அவரைப் பத்தியும் குறையும் சொல்லாதே!” எச்சரித்தாள்.
அப்படியும் அவன் விடவில்லை.
சுகுமாரனைப் பற்றி ஏதேதோ சொன்னான்.
பொறுக்கமாட்டாத மாலினி ஒருநாள் துச்சமாக பேசி அவனைத் தூக்கி எறிந்தாள். கேசவன் அதன்பிறகு இவளை நெருங்கவில்லை.
இப்போது எதற்கு மோப்பம் பிடித்து வந்திருக்கிறான்!? – இவளுக்கு ஆளைப் பார்த்ததுமே மனம் ஆடியது.
கேசவன் அவசரமாக. உள்ளே நுழைந்தான். கதவைச் சாத்தினான்.
இவள் அரண்டு மிரள்வதற்குள்……….
“அந்தக் கயவாளிப் பயல் காலங்கார்த்தாலேயே ஓடிப்போயிட்டான்!” இடியை இறக்கினான்.
மாலினி அதிர்ந்தாள். நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள்.
“நான் சொல்றது உண்மை மாலினி. நீ தான் அவனைச் சரியாய்த் தெரிஞ்சிக்கலை. ஆனா… அவன் உன்னை சரியாய்த் தெரிந்து மடக்கி இருக்கான். அவன் உன்னிடம் பழக ஆரம்பித்ததுமே அவனைப் பத்தி விசாரிக்கிறதுதான் என் வேலை. ஊர் ஊராய் போய் தங்கி உன் மாதிரி பொண்ணுங்களை மடக்கி, கெடுத்து விக்கிறதுதான் அவன் வேலை. இதையெல்லாம் நான் உன்னிடம் சொல்லியும் நீ கேட்கலை. நான் ஒதுங்கினேன். ஆனாலும் மனசு கேட்கலை. உங்க கண்ணில் படாமல் கண்காணித்தேன். உங்க பின்னாலேயே சென்னைக்கு ரயில் ஏறினேன். நீங்க விடுதிக்கு வர.. எதிர் கடை ஓரம் தங்கினேன்.
“விடியல்காலை அஞ்சு மணிக்கு சுகுமாரன் விடுதி வாசலுக்கு வந்தான். மானேஜர்கிட்ட ஏதோ குசுகுசுத்தான். போனான். திரும்பலை.”
“சந்தேகப்பட்ட நான் கொஞ்ச நேரத்தில் மேனேஜரிடம் போய் அவன் என்ன சொல்லிப் போறான்னு விசாரித்தேன். அறையில் புதுசா ஒரு பொண்ணை விட்டுப் போறேன். யாராவது ஆள் வந்தால் ரெண்டாயிரம் ரேட்டுன்னு சொல்லி அனுப்புங்க சொல்லிப் போறான். புதுசு…! அவனுக்கு அடுத்து நீதான். இப்போ நீ முடியாதுன்னு போனால் அடுத்து அது பழசு! சரின்னு சொல்லி வந்திருக்கேன். ஒரு நிமிசம் தாமதிக்காமல் உடனே புறப்பட்டு!” சொன்னான்.
இப்போதுதான் மாலினிக்குள் பூமி இரண்டாகப் பிளந்தது.
“நாம நிக்கிற ஒவ்வொரு நொடியும் ஆபத்து.! அவன் அதிகம் விலை பேசி ஆட்களை அழைத்து வருவதற்குள் கிளம்பனும். நாம ஊருக்கு போக வேணாம். அவமானம். அங்கே உங்க காதல் தெரியாது. என் காதல் தெரியும். உன்னையும், என்னையும் காணாததுனால நாம ஓடிப் போய்ட்டோம்ன்னு மக்கள் நினைப்பாங்க.. இந்த அசிங்கத்தைவிட அது நமக்குத் பெரிய அவமானமில்லே. நீ கற்போட இருந்தாலும் இல்லைன்னாலும் எனக்குக் கவலை இல்லை. என் காதலுக்கு மரியாதை நான் உசுருள்ளவரை உன்னைக் காபந்து பண்ண வேண்டியது. உன் விருப்பம் இல்லாமல் ஒரு நாளும் என் விரல் நுனிகூட உன் மேல் படாது. இது சத்தியம். என் மேல் நம்பிக்கை இருந்தால் உடனே புறப்படு” துரிதப்படுத்தினான்.
தப்பித்தால் போதும் ! என்று மாலினி மற்ற எதையும் யோசிக்காமல் தாமதிக்காமல் புறப்பட்டாள்.
“எங்கே போறீங்க..?” கேட்ட மேனேஜருக்கு…..
“போலீசுக்குப் போறோம்” பதில் சொல்லி விட்டு குப்பம் வந்தார்கள்.
சொற்ப வாடகைக்கு ஒரு குடிசையைப் பிடித்தார்கள்.
கேசவன் கோயம்பேட்டில் மூட்டைத் தூக்கி சம்பாதிக்கிறான். இருவரும் ஒன்றாக வாழ்ந்தாலும்….படுக்கை அவள் உள்ளே. இவன் வெளியே..!
மாலினி நினைவுகளிலிருந்து மீண்டாள்.
‘கேசவன் தனக்காக இப்படி கஷ்டப்படக் காரணம்…? காதல்…! எந்த நிலையினாலும் நான் உன்னைக் கை விட மாட்டேன் என்கிற துணிவு. இதுதான் உடல் பார்க்காமல், உணர்ச்சிகள் கலக்காமல் உள்ளம் பார்த்து, புரிந்த காதல். இதுதான் நூலிழையாய் நீண்டு இறப்பிற்குப் பிறகும் இருக்கும் காதல்!’ தெளிந்த மாலினி….
“கேசவன்…!” அவனைத் தொட்டு எழுப்பினாள்.
“என்ன மாலினி…?”
“உள்ளே வந்து படுங்க..”
“வேணாம் மாலினி..!”
“கண்ணியமாய் இருந்து கஷ்டப்பட்டது போதும் இந்த நேரத்திலிருந்து நாம கணவன் மனைவியாகி கஷ்டப்படலாம்!” சொன்னாள்..
“தாலி கட்டின பிறகு ஆகலாம் மாலினி..! நாளைக்கே நான் நம்ம பதிவு திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்யறேன். நிம்மதியாய்த் தூங்கு” சொன்னான்.