நீ எப்படியோ மக்களும் அப்படியே!
ஒரு நகரத்தின் நுழைவாயில் அருகே முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். குதிரை மீது வந்த ஒரு பயணி, அந்த முதியவரிடம், “இந்த நகரம் எப்படிப்பட்டது?” என்று கேட்டார்.

“ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?”
“இதற்கு முன் நான் இருந்த நகரம் மிக மோசமானது. அங்குள்ள மக்கள் அநாகரிகமானவர்கள். அவர்களோடு வாழ்வது மிகக் கடினமான இருந்தது. ஆகவேதான் அங்கிருந்து வெளியேறி, வாழ்வதற்கு ஒரு நல்ல நகரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.”
“இந்த நகரம் அதைவிட மோசமானதாக இருக்கும். இங்குள்ள மக்கள் கயவர்கள், ஏமாற்றுக்காரர்கள், வஞ்சகர்கள்! கடுமையாகவும், கொடூரமாகவும் கூட நடந்துகொள்வார்கள். இந்த நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்கள் அல்லாமல், வெளியூரிலிருந்து வருகிற யாரும் இங்கே வசிப்பது இயலாத காரியம். அதுவும் உங்களைப் போன்ற நாகரிகமான மனிதர்கள் இங்கே ஒரு நாள் கூட தங்கி இருக்க இயலாது. நீங்கள் உங்களுக்குத் தகுந்த, வேறு நகரத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது!”
குதிரையில் வந்த பயணி விலகி, வேறு ஊருக்குச் செல்லும் பாதையில் சென்றுவிட்டார்.
அடுத்ததாக ஒரு மாட்டு வண்டி வந்தது. அதில் இருந்த பயணி, முதியவரைப் பார்த்து, “தாத்தா! இந்த நகரத்திலுள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?” என்று கேட்டார்.
“ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?”
பயணியின் கண்கள் கலங்கின. “நான் முன்பு வசித்து வந்த நகரம் மிக அருமையானது. அங்குள்ள மக்கள் இனியவர்கள். அவர்களிடமிருந்து பிரிவதற்கு எனக்கு மனதே இல்லை. ஆனால், பொருளாதாரத் தேவைகளுக்காக அந்த நகரத்தை விட்டு வர வேண்டியதாகிவிட்டது. அந்த மக்களையும், அவர்களது அன்பையும் என்னால் மறக்க இயலவில்லை. அது போன்ற மனிதர்கள் உள்ள ஊரில்தான் இனியும் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.”
“அப்படியானால் இந்த நகரம் உங்களுக்குத் தகுந்ததுதான்! இங்குள்ள மக்கள் மிக அன்பானவர்கள்; பாசமானவர்கள். அந்நியர்களிடம் கூட, தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் போல உடனே பழகிவிடுவார்கள். அறிமுகமற்றவர்களுக்குக் கூட தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். இந்த நகரத்தில், நீங்கள் உங்கள் சொந்த ஊரில் வாழ்வது போல வாழலாம். இந்த நகரமே உங்கள் வீடாக இருக்கும். நகரவாசிகள் அனைவரும் உங்களது உறவினர்களாகப் பழகுவார்கள்!”
பயணி மகிழ்ச்சியோடு வண்டியை நகரத்திற்குள் ஓட்டிச் சென்றார்.
இந்தக் காட்சிகளைப் பார்த்தபடி அருகில் இருந்தவர் குழம்பினார். முதியவரிடம், “ஏன் அந்த இருவரிடமும் மாறுபட்ட தகவல்களைச் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.
“ஒருவர் எத்தகைய இயல்பு கொண்டவராக இருக்கிறாரோ, அதன்படித்தான் அவர் மற்றவர்களைப் பார்க்கிறார். ஒரு மனிதன் அன்பு மிக்கவனாக இருக்கும்போது, அவனைச் சுற்றி இருப்பவர்களும், இந்த உலகம் மொத்தமும் அன்புமயமானதாகவே அவனுக்குத் தெரியும். ஒருவன் தனது மனதில் வெறுப்பு நிறைந்தவனாக இருக்கும்போது, அவனைச் சுற்றி இருப்பவர்களும், அவனது உறவினர்களும், இந்த உலகம் மொத்தமும் அவனுக்கு வெறுப்புக்குரியதாகவே இருக்கும். நீ எப்படி இருக்கிறாயோ, அப்படித்தான் உலகமும் இருக்கும் அல்லது அப்படித் தோன்றும்! ஆகவேதான் அந்த இருவருக்கும் அவரவர்களுக்குத் தக்க பதிலைச் சொன்னேன்!” என்றார் முதியவர்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |