நீர்மேல் நடந்தவர்
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவன் காட்டுக்குப் போய்த் தவம் செய்தான். இடைவிடாமல் பதினான்கு ஆண்டுகள் தவம் செய்தான். இப்படித்தவம் செய்ததன் பலனாக அவனுக்கு நீர்மேல் நடக்கும் சக்தி வந்தது.
நீர்மேல் நடக்கும் ஆற்றல் வந்தவுடன் அவ னுக்குத் தலைகால் புரியவில்லை. ஒரேமகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லி தன் சக்தியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவனுக்கு ஆவல் உண்டாயிற்று.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/06/ஏழாவது-வாசல்.png)
அவனுக்குக் குரு ஒருவர் இருந்தார். அவர் சிறந்த அறிவாளி. பெரிய மகான் இவரிடம் தான் முதன்முதல் தன் வலிமையைக் காட்ட வேண்டும் என்று ஓடினான். ஆரவாரத் தோடு “சுவாமி, சுவாமி” என்றுகத்திக்கொண்டு ஓடினான். அவர் காலடியில் வீழ்ந்தான். எழுந்தான். கண்களில் ஒளி தவழ. “சுவாமி, நான் சித்தியடைந்து விட்டேன். நீர் மேல் நடக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறேன். பார்க்கிறீர்களா? நடந்து காட்டவா?” என்று பட படவென்று கேட்டான்.
மகானுக்கு அவன் சொன்ன செய்தி மகிழ்ச்சி யளிக்கவில்லை. “சே! பதினான்கு ஆண்டுகள் தவம் செய்து பெற்ற பயன் இது தானா? உண்மையில் நீ பெற்ற சித்தி ஒரு தம்பிடி தான் பெறும். நீ பதினான்கு ஆண்டு கடுந்தவம் செய்து பெற்ற பலனை, சாதாரண மக்கள் ஓடக்காரனுக்கு ஒரு தம்பிடி கொடுத்துப் பெற்று விடுகின்றனர், தெரியுமா?” என்று கேட்டார்.
அந்த மனிதன் தன் தவற்றையுணர்ந்தான். தன் தவம் வீணானதை அறிந்தான். அன்று முதல் அதிசயங்களில் ஆசை வைப்பதை நிறுத்தி விட்டான்.
உண்மையான பெரியார்கள் அதிசயங் களைப் போற்றுவதில்லை. அவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள். அதிசயங்களால் மக்களுக்கு யாதொரு பயனுமில்லை.
– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.